திருக்குறள் செய்திகள்/56
கோல் வளைந்தால் அது கொடுங்கோல் ஆகும். நீதி சில சமயம் வளைந்து கொடுக்கிறது. ஏன்? தனக்கு வேண்டியவர்க்கு நன்மை செய்ய அது தாழ்ந்து விடுகிறது. நேர்மை தவறினால் மக்கள் வாழ்வு சீர்மை கெடுகிறது.
மக்களிடம் ஒருசில விதிகளைக் காட்டி வரிப்பணம் பெறுவது அரச நீதியாகும்.
பொதுவாக ஆறில் ஒரு பகுதி வரிப்பணம் செலுத்தி வந்தார்கள். அவர்கள் வருவாயில் ஒரு பகுதி செலுத்துவது நியாயம் ஆகும். மிகையாகக் கேட்பதும், வற்புறுத்திப் பெறுவதும் மக்களை வாட்டுவனவாகும். அப்பொழுது கொள்ளையனுக்கும் இந்தச் சள்ளையனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது.
அடுத்தது நீதித்துறை; மக்கள் குறைகளை உரைக்கக் கேட்டு உடனுக்குடன் நீதி வழங்க வேண்டும். அவ்வப்பொழுது கேட்டு உடனுக்குடன் நீதி வழங்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு அராஜகம் நடக்காது என்ற நம்பிக்கை ஏற்படும். தண்டிப்பதற்கு ஒருவன் இருக்கிறான் என்றால்தான் மக்கள் கண்டிப்புடன் வாழ்வார்கள்; தவறு செய்ய அஞ்சுவார்கள்.
அரசன் மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சட்டம் ஒழுங்காக இல்லாவிட்டால் களவு, கொலை இந் நிகழ்ச்சிகள் மிகுந்துவிடும்.
அரசன் அநீதிகள் இழைத்துக்கொண்டிருந்தால் மக்கள் எதிர்க்க முடியாது. ஆற்றாது அழும் கண்ணிர் வீண்போகாது. அஃது அவன் அழிவுக்குக் காரணம் ஆகிவிடும். காலம் வரும்போது அவன் ஆட்சி கவிழ்ந்துவிடும்.
மழைத்துளி பயிர்களுக்கு அவசியம்; அதுபோல் அரசனது நற்செய்கைகள் மக்களுக்கு அவசியம். அவன் ஈகைப் பண்பை மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பர்.
நாட்டில் அராஜகம் விளைந்தால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவது இல்லை. செல்வர்கள் தம் உடைமையை இழப்பர்; அவர்கள் சொத்துகளுக்கும் பொருளுக்கும் பாதுகாப்பு இருக்காது. முதற்கண் அரசனே அவர்களை வருத்திப் பொருள் கேட்டுப் பெறுவான். செல்வர்கள் நிம்மதியாக வாழமுடியாது.
ஆட்சி சரி இல்லை என்றால் எந்தத் தொழிலும் சரிவர நடக்காது: பால்வளம் குறையும்; அந்தணர்கள் வேதம் ஓத இயலாது; அறவினைகளும், ஆக்கப் பணிகளும் செம்மையாக நடைபெறா.