திருக்குறள் செய்திகள்/6
குடும்ப வாழ்க்கைக்கு உற்ற துணைவியாக இருப்பவள் மனைவி; அவள் எத்தகையவளாக இருக்க வேண்டும்? குடும்பத்தை நடத்துவதற்கு வேண்டிய நற்குண நற்செயல்கள் அவளிடம் அமைதல் வேண்டும்; முக்கியமாக வரவுக்கு ஏற்பச் செலவு செய்பவளாக இருக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கையே மனைவியால்தான் சிறப்பு அடைகிறது. கோடிப் பணம் கொண்டுவந்து குவித்தாலும் நாடி அதைச் செம்மைப்படுத்திச் சீராக அமைக்கவல்ல மனைவி இருந்தால்தான் அந்த வீடு இன்பம் கொழிக்கும்; அடங்காப் பிடாரி ஒருத்தி மனைவியாக அமைந்தால் அந்த வீடு குட்டிச்சுவர்தான். பணம் இருந்துமட்டும் பயன் இல்லை. குணம் மிக்க மனைவி இருந்தால்தான் இன்பமாக வாழ முடியும்.
மகளிரிடம் எதிர்பார்க்கப்படும் பண்புகளில் தலையாயது கற்பு என்னும் பொற்பு ஆகும். கற்பு என்பது உறுதிபடைத்த நெஞ்சு. அதனை நிறை என்றும் கூறுவர். அத்தகைய பெண் இல்வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கிறாள்.
அவள் தெய்வத்தைத் தொழத் தேவையே இல்லை; கொழுநனைத் தொழுது எழுந்து பின் தன் கடமையில் ஆழ்கிறாள். அத்தகையவள் ‘மழை பெய்க’ என்று கூறினால் வான்மழையும் தானாகப் பெய்யும். தெய்வமும் அவள் ஏவல் கேட்டு அவளுக்குக் காவல் புரியும்.
அவள் முதலில் தன்னைக் கற்பினின்று தவறாமல் காத்துக்கொள்கிறாள்; கணவனுக்கு உற்ற துணையாக நின்று பணி செய்து உதவுகிறாள்; கணவனின் புகழுக்கு உறுதுணையாக நிற்கிறாள்; சோர்வு என்பது அவளிடம் தலை காட்டுவது இல்லை. இந்த நான்கு நற்பண்புகளும் அவளிடம் அமைதல் வேண்டும்.
கற்பு என்று சொல்லி அவளுக்குக் காவல் வைத்தால் அஃது அற்பத்தனமாகும்; அவள்மீது நம்பிக்கை இல்லை என்பதாக அமையும்; அவளை இழிவுபடுத்துவதாகவும் அமையும். அஃது அவள் சொந்தப் பொறுப்பு: பிறர் வற்புறுத்தி அமைவது இல்லை. சிறையிட்டுக் காப்பது அநாகரிகம்; அடிமைப்படுத்துவதும் ஆகும்; அவள் நிறையை அவளே காப்பது அவளுக்கு உயர்வு தரும். நம்பிக்கைதான் இருவரையும் பிணைக்கும் கயிறு.
அன்பை வளர்ப்பது இல்வாழ்க்கை; கணவனிடம் அன்பும் அடக்கமும் காட்டி இன்பம் கொழிக்கச் செய்பவள் வாழ்க்கைத் துணைவி; கணவனின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்று அவள் உயர்வுபெறுகிறாள்; வானவரும் அவளை வாழ்த்தி வரவேற்பர்.
ஒருவன் தன்மானத்தோடு வாழ்கிறான் என்றால் அதற்குத் துணை செய்கிறவள் மனைவி; அவள் உத்தமி என்று. பெயர் வாங்கினால் அதனால் அவனுக்குப் பெருமை சேர்கிறது; பகைவர் முன் பீடுநடை அமைய ஈடு இணையற்ற மனைவியின் மாண்பும் காரணமாக அமைகிறது; நடத்தை கெட்ட மனைவி அமைந்தால் அவன் நாலு பேர் முன் தலைநிமிர்ந்து நடக்க நானுவான்.
ஒரு வீட்டுக்கு மங்கலமாக விளங்குபவள் நற்குண நற்செயல்களுடைய மனைவி; இந்தக் குடும்பத்துக்கு அழகு சேர்ப்பது நன்மக்களைப் பெறுதல். எனவே இல்வாழ்க்கை மக்கட்பேற்றுக்குத் துணை செய்வதாகும். வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியும், தாம் பெறுகின்ற மக்களும் நல்லவர்களாக அமைய வேண்டும். அப்பொழுதே இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக ஒளிவிடும்; பயன்படும்; நிறைவுபெறும்.