திருக்குறள் செய்திகள்/65
ஆற்றல் பலவற்றுள்ளும் சொல்லாற்றலுக்கு நிகரானது வேறு எதுவும் இருக்க முடியாது. தான் கூறும் சொல்லால் ஆக்கமும் கேடும் உண்டாகிவிடும்; அதனால் சொல்லில் பிழை நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
சொல்வதனைத் தெளிவாகச் சொல்லித் தமக்கு வேண்டிவர்களைக் கவர வேண்டும்; மாறுபட்டவரையும் தாம் சொல்வதை நிதானமாக ஏற்கச் செய்ய வேண்டும். தாம் சொல்வது சரி என்று எத்தகையவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதற்குத் திறம்படப் பேசுதல் மிகவும் அவசியம்.
நீ தேர்ந்து எடுக்கும் சொல் தக்கதாக இருக்க வேண்டும். அதனைவிட வேறுவிதமாகச் சொல்ல முடியாதபடி அஃது அமைய வேண்டும். “சொல்லாட்சி” திறம்பட அமைவது வெற்றி தரும்.
நீ பிறரிடம் பேசும்போது அவர்கள் கேட்கப் பிரியப் பட வேண்டும்; எளிதாக உணர்த்த வேண்டும். மற்றவர்கள் எப்படிப் பேசினாலும் அதனைப் பொறுமையாகக் கேட்டு அறிந்து பயன்பெற வேண்டும்.
சொல்லில் வல்லமை வேண்டும்; சோர்வுபடாமல் இருத்தல் வேண்டும். அவனை யாரும் பேச்சில் வெல்லவே முடியாது.
எதனையும் வரிசைப்படுத்திச் சொல்லப் புகுந்தால் ஞாலத்தினர் அனைவரும் விரைந்து நீ கூறும் ஏவலைக் கேட்டு நடப்பர்.
குறட்பாப் போலச் சில சொற்கள் பேசி அறிவுறுத்தத் தெரியாதவரே மிகைபடப் பேசிக்கொண்டு இருப்பர்; பல சொற்களைத் தேடுவர்.
கற்றது விரித்து உரைக்கத் தெரியாதவர் கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் கமழாத பூவைப் போன்றவர் ஆவர்.