திருக்குறள் செய்திகள்/96
குடிமை என்பது நாட்டுப்பற்றைக் குறிப்பதாகும்; இந்த நாட்டின் குடிமகன் என்ற தகுதியை உண்டாக்கிக் கொள்வது என்பது ஆகும்.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் வானினும் உயர்ந்தவை” என்று மதிக்க வேண்டும். இதனைச் சிறிய அளவில் குறிப்பிட்டால் குடும்பப் பற்று என்றும் கூறலாம். ஒருவன் பிறந்த வீடு அவன் வளர்ச்சிக்கு உதவுவதாகும்.
நேர்மையும் நாணமும் நற்குடிப் பிறந்தவரிடத்தே தான் அமையும். ஒழுக்கம், வாய்மை இவையும் அவர்களிடம் அமையும். மற்றும் எப்பொழுதும் மலர்ச்சியோடு விளங்குதல், சிரித்த முகம் அவர்களை இனியவர்கள் ஆக்குகின்றன. பேசும் சொல் என்றால் அஃது இனி தாகவே இருக்கும்; பிறரை வருத்தாத சொற்கள் அவை. இல்லை என்று சொல்லாத இயல்பு அவர்கள்தம் ஈகையைக் காட்டுவது ஆகும். பிறரை இகழ்ந்து பேச மாட்டார்கள்.
கோடிப் பொன் கொண்டுவந்து கொட்டித் தந்தாலும் கீழ்மையான செயலுக்கு இவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வறுமை வந்து அவர்களை வாட்டத் தொடங்கினாலும் அவர்கள் ஈதலைத் தவிர்க்கமாட்டார்கள், நற் பண்புகளில் இருந்து நழுவமாட்டார்கள்.
வஞ்சனை, சூது இவற்றை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களிடம் சிறிது குற்றம் காணப்பட்டாலும் மற்றவர்கள் கண்களுக்கு அவை புலப்பட்டுக்கொண்டு இருக்கும்.
ஒருவனிடம் அன்பு ஆகிய நற்பண்பு இல்லை என்றால் அவன் கீழ்மகனாகவே கருதப்படுவான்; உயர்குடிக்குத் தகுதி இருக்காது. நிலத்தில் வெளிப்படும் முளை அதன் இயல்பைக் காட்டிவிடும். அதுபோல நற்குலத்தில் பிறந்தவர் வாய்ச்சொல் அவர்கள் இயல்பை வெளிப்படுத்திவிடும்.
சிறப்பாக அவனிடம் நாணம் உள்ளதா? என்று எதிர்பார்ப்பர்; மேலும் பணிவுடைமையும் எதிர்பார்ப்பர். இவை குடும்பத்தின் வளர்ப்பினால் அமைவன ஆகும். முந்திரிக்கொட்டை மாதிரி எதுவும் தான்தான் என்று தலை காட்ட மாட்டான். அடக்கமும் பணிவும் அவனை ஒளிவிடச் செய்யும்.