திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில். 69.தூது

திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில்
பொருட்பால்
69. தூது



தூது என்னும் அதிகாரம்(69) பொருட்பாலில், ‘அங்கவியல்’ எனும் பகுப்பில் அமைந்துள்ளது. ‘வினைசெயல்வகை’ என்னும் அதிகாரத்தின் பின், ‘அமைச்சு’ எனும் அங்கத்தின் ஒரு பகுதியாக இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.

தூது என்பதனைப் பரிமேலழகர் பின்வருமாறு விளக்குவர். ‘அஃதாவது, சந்தி விக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை’ என்பர். சந்தி என்றால் பொருத்துதல், சேர்த்தல்; விக்கிரகம் என்றால் பிரித்தல் என்று பொருள்.

இருவகைத் தூது: தூது இருவகைப்படும். அவை:

1. தான் வகுத்துக் கூறுவான்,
2. கூறியது கூறுவான் என்பவையாம்.
தான் வகுத்துக் கூறும் தூதன் அமைச்சரோடு ஒப்பான். கூறியது கூறுவான், தான் வகுத்துக் கூறும் தூதனிலும் காற்பங்கு குறைந்தவன் ஆவான்.

வடநூலார் பகுப்பு:

இனி, வடநூலார் தூதர்களை மூன்றுவகையாகப் பகுப்பர். அவர்கள்:
1. தலைத்தூதர்
2. இடைத்தூதர்
3. கடைத்தூதர் எனப்படுவர்.

அவர்களுள் தான் அறிந்து கூறுவான், ‘தலைத்தூதன்’ எனப்படுவான்; அரசன் கூறியதைக் கூறுவான் ‘இடைத்தூதன்’ எனப்படுவான்; அரசன் கொடுத்த ஓலையைக் காட்டுவான் ‘கடைத்தூதன்’ என அழைக்கப்படுவான்.

தூதுரைப்பான் பண்பு: அன்புடைமை, அமைந்த குடிப்பிறப்பு, வேந்தன் விரும்பும் பண்பு - ஆகியவை சிறப்பான தூதனுக்குரிய பண்புகளாம்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்(து)அவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (681)

மேலும், அரசன் இடத்து அன்புடைமையும், அறிவுடைமையும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதர்க்கு மிக இன்றியமையாத மூன்று பண்புகளாம்.

அன்(பு)அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

-என்பது திருக்குறள்.

தான் வகுத்துக் கூறுவான் இயல்பு:

தூதருள் தலையாக விளங்கும் ‘தான் வகுத்துக் கூறுவான்’ இயல்புகளை ஐந்து குறள்களில் பேசுகின்றார் வள்ளுவப் பெருந்தகை.

நீதிநூலை நன்கறிந்த நூல் வல்லாரினும் மிக்க நூல் அறிவு கொண்டவன் தூதன்; மேலும், அறிவு, தோற்றப் பொலிவு, கல்வி - ஆகிய மூன்றையும் கொண்டு விளங்குபவன் தூதன் ஆவான். இதனை,

அறி(வு)உரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

-என்று கூறும் குறள்.

தொகுத்துச் சொல்லுகின்ற திறனும், இனிமையில்லாத காரியங்களைப் பற்றிக் கூறும்போது, கேட்பதற்கு வெய்யதான (கடுமையான) சொற்களை நீக்கிக் கூறும் தன்மையும், கேட்பார் மனமகிழ்ச்சி அடையும் வண்ணம் கூறும் வல்லமையும், தலைவனுக்கு நன்மையைச் செய்யும் இயல்பும் கொண்டவனே நல்ல தூதன் ஆவான்.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது

.

நீதி நூல்களைக் கற்றுப் பகைவேந்தர் மனம் கொள்ளுமாறு சொல்லுதல் வேண்டும். பகைமன்னர் கோபித்து நோக்கினாலும், அந்நோக்கிற்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். மேலும், காலத்தோடு பொருந்த எடுத்த செயலை முடிக்கும் உபாயம் அறிந்தவனே தூதன் ஆவான் என்பர்.

முறைமை அறிந்து, மன்னர்தம் செவ்விபார்த்து, ஏற்ற இடம் அறிந்து, நன்கு விசாரித்து சொல்லுபவன் தூதரில் ‘தலை’ ஆவான்.

கடன்அறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (687)

கூறியது கூறுவான் இயல்பு:

தூய்மை, துணைமை, துணிவுடைமை ஆகிய மூன்று பண்புகளையும் கொண்டிருத்தல், தன் அரசன் கூறிய வார்த்தைகளை அவன் சொல்லியவாறே, வேற்று அரசர்க்குச் சென்று சொல்லுபவனுக்குரிய பண்புகள் ஆகும்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

அரசன் தன்னிடம் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றுநாட்டு அரசர்க்குச் சென்று சொல்லுபவன், தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சி, அரசன் தாழ்வடைதற்கு உரிய சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லமாட்டான்.

உயிர்க்கு இறுதிவரினும் உறுதிகூறும் திறன்:

தான் கூறும் வார்த்தைகள் தன் உயிருக்கே இறுதிதரும் என்றாலும் அஞ்சாது தன் அரசன் சொல்லியவாறே வேற்று அரசனிடம் சொல்லுபவனே தூதன் ஆவான். இதனை,

இறுதி பயப்பினும் எஞ்சாது(து) இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (690)

-என்பர் செந்நாப் போதார் எனச் சிறப்பிக்கப்படும் வள்ளுவப் பெருமான்.

பார்க்க:

தொகு

பரிமேலழகர் எளிய தமிழில்- 39. இறைமாட்சி

பரிமேலழகர் எளிய தமிழில்- 48. வலியறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 49. காலமறிதல்

பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை

பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை


பரிமேலழகர் எளிய தமிழில்- 82. தீநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 83. கூடாநட்பு

பரிமேலழகர் எளிய தமிழில்- 99. சான்றாண்மை

பரிமேலழகர் எளிய தமிழில்- 109. தகையணங்குறுத்தல்


பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை

பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை

[[]]

[[]]

[[]]

[[]] [[]] [[]] [[]]