திருக்குறள் பாவுரை

திருக்குறள் பாவுரை
21 அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகளுடன்

ஆசிரியர்
முனைவர் செங்கைப் பொதுவன்
2006

  • திருக்குறளுக்குப் பாடலில் உரை
  • இடையில் வரும் எண்கள் எத்தனையாவது திருக்குறளுக்கான உரை இது என்பதைக் குறிக்கும்.

முப்பால் விளக்கம்

தொகு

விருத்தம்


இறைவன்


புரியாத புதிரெல்லாம் இறைவன் தன்மை

புரிகின்ற நெறியெல்லாம் இறையின் மாட்சி

தெரியாத குணமெல்லாம் தெய்வத் தன்மை

தெளிவுதரும் அறிவெல்லாம் தெய்வப் பேறு

கரியாத பொருளெல்லாம் கடவுள் கோட்டம்

காட்டாமல் காட்டுவது கடவுள் நோக்கம்

பரிமாறி மழைநீத்தார் அறத்தின் பாங்காய்ப்

படர்கின்ற இறைவழியைப் பணிந்துள் ஏற்பாம்


அறம்


ஆற்றைப்போல் ஓடுவதை அறமென் பார்கள்

அனைவருக்கும் நீரன்பைப் பாய்ச்சிப் போற்றும்

ஊற்றைப்போல் உலகூட்டும் உள்ளத் தேறும்

உதவாத அழுக்குகளைக் கழுவிப் போக்கும்

ஏற்றத்தால் பெருமைகொளும் இனிய வெல்லாம்

ஈந்தாலும் கைம்மாறு கொள்வ தில்லை

நீற்றுப்போய்த் துறவறமாம் நீர்மை கொண்டு

நிலைத்திருத்தல் இல்லறமாம் நேய வாழ்வாம்


பொருள்


அரசனொடு குடிமக்கள் அவர்தம் செல்வம்

அவர்துணையாய் அவர்வழியில் பணிசெய் வோர்கள்

விரிவடைந்த நன்மனங்கள் வேண்டா வாழ்க்கை

விழைசெல்வம் தேடுமுறை பகைமை நட்பு

கரவிரவு கல்விநலம் மானம் சால்பு

களப்போர்நல் தூதுழவு கள்ளுண் சூது

பெருமைநலம் பண்புடைமை மருந்து நாணம்

பேச்சாற்றல் போல்பலவும் பொருளின் ஈட்டம்


வாழ்வின்பம்


காதலினால் உளமிரண்டு கலந்துள் ஊறும்

காமத்தால் உடற்சுவையைக் கண்ட கற்பின்

பாதியிலே வாழ்பொருட்காய்ப் பிரிந்த காலைப்

பாவைமனம் பலவாறாய் எண்ணிச் சோர்ந்து

வேதனையால் கண்பூத்து விம்மிப் பேச

விட்டகன்றான் வினைமுடித்து மீண்ட போழ்து

தோதாக ஊடுவதும் துனிசெய் யாமல்

தொழுதின்பம் காண்பதுவும் காமப் பாலாம்

அறத்துப்பால்

தொகு

1 கடவுள் வாழ்த்து

தொகு

உலகத்தின் முதல்வனவன் ஓரெழுத்தே அகரம் போல் \1\
பலகலைகள் பயில்வதெலாம் பாலறிவின் தாள் தொழவே \2\
மலர்உளத்தில் வளர்கின்றான் \3\ வாழ்ந்தாலும் விருப்பில்லான் \4
வலையான வல்வினைகள் மறைந்துவிடும் அவன் புகழால் \5\

பொறியவித்த ஒழுக்கமவன் \6\ போன்மையிலா அவன் தாளால்
உறுங்கவலை மாறிவிடும் \7\ உயர்அறம்வாழ் அந்தணனாய்ப்
பிறவி வெல உதவிடுவான் \8\ பேறு தரும் எண்குணத்தான் \9\
பிறவியலை நீந்துகையில் பெறுந்தெப்பம் அவனடிகள் \10\

2 வான் சிறப்பு

தொகு

மழையேதான் நல்லமிழ்தம் \11\ வாழ்விக்கும் வையகத்தை \12\
பிழையாதேல் பசிநீங்கும் \13\ பேருழவர் நமைக்காப்பார் \14\
அழையாது கொடுப்பதுவும் ஆக்குவதும் மழையன்றோ \15\
தழைகின்ற புல்கூடத் தலைகாட்ட மழைவேண்டும் \16\

கடல்நீரும் மழையாலே காப்பாற்றும் முத்துவகை \17\
படையலொடு பூசனைகள் பாவித்தல் மழைபொழிவால் \18\
கொடைநயமும் தவநலமும் கொழித்திருக்கும் மழைவளத்தால் \19\
தடையில்லா நல்லொழுக்கம் தருவதெது வான்சிறப்பே \20\

3 நீத்தார் பெருமை

தொகு

நீத்தாரே ஒழுக்கத்தார் \21\ நினைவடங்காப் பெருமையினார் \22\
வாய்த்திருமை உணர்ந்தவர்கள் \23\ மனத்தாலே பொறிகாப்பார் \24\
மேய்த்தபொறி இந்திரனும் வீழ்ந்தமையைச் சான்றென்போம் \25\
ஊழ்த்தவினை ஓங்கிவர உதவிடுவார் அரியசெயல் \26\

சுவையொலியூ(று) ஓசைமணம் துய்க்காமல் துய்த்திடுவார் \27\
தவச்சிறந்த நிறைமொழியார் சால்மறைகள் புகழ்பேசும் \28\
உவகைகொளும் குணக்குன்றம் ஒருபோதும் வெகுண்டறியார் \29\
இவைஅறமாம் அந்தணராம் எல்லாம்செந் தண்மையினார் \30\

4 அறன்வலியுறுத்தல்

தொகு

சிறப்பினொடு செலவத்தைச் சேர்க்கின்ற அறம் உயிராம் \31\
மறப்பதனால் கேடுவரும் \32\ வாய்ப்பாக்கி அறம்செய்க \33\
அறமென்றால் மனத்தூய்மை \34\ அழுக்கின்மை அவாவின்மை
முறைஇன்சொல் வெகுளாமை மொய்த்திருக்கும் நற்சதுரம் \35\

இன்றுமுதல் அறம்செய்க எப்போதும் துணைநிற்கும் \36\
கன்றுசுமை அறத்தாறாய்க் கருதாதே \37\ நாள்தோறும்
நன்றாற்றில் பிறப்பில்லை \38\ நல்கிவிடும் பேரின்பம் \39\
என்றென்றும் பழிநீக்கி ஏற்றமிகு அறம்செய்க \40\

5 இல்வாழ்க்கை

தொகு

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநிலைக்கும் துணையாகும் \41\
வெல்துறவி துவ்வாதார் விளிநிலைக்கும் நல்துணையாம் \42\
நல்லறிஞர் இறைவிருந்து நாடுறவு தான்ஐந்தும் \43\
பொல்லாத பழியஞ்சிப் புரிந்துதவிக் காத்துவரும். \44\

அன்பறனே பண்புபயன் அறமென்று வாழ்வார்கள் \45\
பின்புபிற அறம்வேண்டார் \46\ பெருமுயற்சித் தலைவரவர் \47\
துன்புற்று நோற்பாரின் துணைநோன்பர் \48\ அறமிதுவே \49\
அன்புற்ற வையகத்தில் ஆள்தெய்வம் இல்லறத்தார் \50\

6 வாழ்க்கைத்துணை நலம்

தொகு

மனைவளத்துள் மாண்புடையாள் வாழ்க்கைக்குத் துணையாவாள் \51\
மனைமாட்சி இல்லாயின் மகிழ்வில்லை பிறசிறப்பால் \52\
மனநிறைவே மனைமாண்பு \53\ மனக்கற்பே பெருந்திண்மை \54\
மனத்தெய்வம் அவள்கணவன் மழைபோன்றாள் அவள்தெய்வம் \55\

கணவருக்குப் புகழ்சேர்க்கும் கருத்துழைப்பில் சோர்வில்லாள் \56\
குணக்குன்றாய் நிறைகாக்கும் \57\ கொண்டவற்கு வான்மகிழ்வு \58\
இணையில்லாள் புகழின்றேல் ஏறுநடை அவற்கேது \59\
கணவற்கு மனைவியணி காண்பேறு நன்மக்கள் \60\

7 மக்கட் பேறு

தொகு

குழந்தைச் செல்வம்

தம்மக்கள் ஆம்செல்வம் தன்பேறாக் கொளல்முறையாம் \61\
எம்மையிலும் தீங்குவரா எப்பழியும் சாராவே \62\
இம்மாட்சி தன்வினையாம் \63\ இனிதவர்கை அளவியகூழ் \64\
தம்மக்கள் சொல்லின்பம் தவழும்மெய் பேரின்பம் \65\

மழலைமொழி வாய்ச்சொல்முன் மகிழிசையோ குழல்யாழ்கள் \66\
அழகுகடன் தந்தைகோள் அவர்மகனை முந்தேற்றல் \67\
தழையறிவு தனைவென்றால் தாரணிக்கே இனிதாகும் \68\
உழைதாயும் உவந்திடுவாள் \69\ ஊர்மெச்சின் மகன்பேறாம் \70\

8 அன்புடைமை

தொகு

அன்பிற்குத் தாழ் இல்லை அன்புடையார் கண்பேசும் \71\
அன்பில்லார் தமக்குதவும் அன்புடையார் பிறர்க்குதவும் \72\
என்புயிர்போல் அன்பியையும் \73\ ஈன் ஆர்வம் நட்புதரும் \74\
இன்புறுதல் அன்பால்தான் எச்சிறப்பும் அதன்விளைவே. \75\

அன்பேதான் அறியாதார் ஆணவம்போ கத்துணையாம் \76\
என்பிலுயிர் வெயில்காயும் இதயமிலார் காய்ந்தெரிவர் \77\
அன்பில்லார் தழைவதிலை \78\ அவருடலால் என்னபயன் \79\
அன்பால்தான் உயிர்வாழும் அன்பின்றேல் உடல்சட்டை. \80\

9 விருந்தோம்பல்

தொகு

விருந்தோம்ப வாழ்கின்றோம் \81\ விருந்தின்றேல் மருந்துணவு \82\
வருவிருந்தை ஓம்புவதால் வாழ்க்கையது பாழ்போமோ \83\
திருவந்து குடியிருக்கும் \84\ செய்யுழவு நல்விளைவாம் \85\
மருவிவரும் வானுலகம் வாழ்க்கையெலாம் இன்பமயம் \86\

விருந்தோம்பும் வேள்வியினால் வேண்டுகின்ற பயன்கிட்டும் \87\
பரிந்தோம்பிப் பற்றறுதல் பாவனைபோல் ஆகிவிடும் \88\
விருந்தோம்பாப் பெருஞ்செல்வம் வீணாக்கும் மடமையினார் \89\
விருந்துள்ளம் வெந்துமுகம் வீசுவதால் நொந்திடுமே. \90\

10 இனியவை கூறல்

தொகு

நெஞ்சீரம் ஊறிவரின் நெருடிவரும் இன்சொற்கள் \91\
வஞ்சனை இல் லாக்கொடையின் மாட்சித்தாம் இன்சொற்கள் \92\
கொஞ்சுமுகம் மன இன்சொல் கூடுவதே அறநெறியாம் \93\
பஞ்சாகப் பசிபறக்கும் \94\ பணிவுடைமை அதற்கணியாம் \95\

நல்லனவே இன்சொல்லாம் நாடுவதால் அறம்பெருகும் \96\
சொல்லுவதால் நயன்நன்றி தோய்ந்துவரும் பண்புச்சொல் \97\
பல்லின்பம் எப்போதும் படுத்தாத இன்சொல்லால் \98\
சொல்லுவரோ வன்சொற்கள் \99\ சுவைகாண்போம் கனிச்சொல்லில் \100\

11 செய்ந்நன்றி அறிதல்

தொகு

உதவாமல் உதவியவர் உலகம் வான் கொடையின் மேல் \101\
உதவி எனல் காலத்தால் உதவுவதே \102\ பயன்தூக்கின்
மதவலியின் கடலைவிட மாப்பெரிது \103\ தினையளவு
உதவிடினும் பனையளவாம் உள்ளபடி பயன்கண்டால் \104\

செய்த அள(வு) அன்(று) உதவி செயப்பட்டார் சால்பளவு \105\
எய்தியநோய் போக்கியவர் எண்ணத்தில் கொளற்பாலார் \106\
உய்தியதாம் எப்போதும் \107\ உளங்கொள்க மறவாதே \108\
செய்ந்நன்றி எண்ணிப்பார் \109\ செய்யாமல் உய்வில்லை. \110\

12 நடுவு நிலைமை

தொகு

பகைநட்பை எண்ணாமல் பாங்கொழுகல் நடுவுநிலைமை 111
தகுதியுடை அவ்வாக்கம் தன்வழியைக் காப்பாற்றும் 112
விகுதிநடு வில்லாக்கம் விட்டொழிக (113) தக்கார்சொல்
பகுதிதரு எச்சத்தால் பளிச்சென்று தெரியவரும் 114

ஆக்கமது வரும்போகும் அகம்கோடார் சான்றவர்கள் 115
போக்காகும் நடுவுகெடின் (116) பொறித்தாழ்வு கேடின்றால் 117
நோக்கமெலாம் சீர்தூக்கல் 118 நுவன்றிடுவார் செப்பமென 119
ஆக்கங்காண் வாணிகர்க்கே அவர்ப்போலப் பிறர்ச்செய்யின் 120

13 அடக்கம் உடைமை

தொகு

அடக்கமது அமரருளும் அடங்காமை இருளுள்ளும்
மடக்கிவிடும் 121 அடக்கத்தை மதித்திடுக உயிராக 122
நடுக்கில்லா அடக்கத்தால் நாடிவரும் சீர்மைநிலை 123
அடக்கமது மலையைவிட அளவில்லாப் பெருமையதாம் 124

பணிவுடைமை செல்வர்க்கே பகட்டுதரும் 125 ஆமைபோல்
மணிப்பொறிகள் அடக்கிடுக 126 வாய்காக்க 127 தீச்சொல்லைக்
கணித்தெறிக 128 தீச்சொல்லின் காயவடு ஆறாதால் 129
தணியுமேல் சினவுணர்வு சார்ந்துவரும் அறத்தெய்வம் 130

14 ஒழுக்கம் உடைமை

தொகு

ஒழுக்கமே உயிரினும்மேல் 131 ஓம்புவதே உற்றதுணை 132
ஒழுக்கமெனும் செல்வத்தால் உயர்பிறப்பு எய்திடலாம் 133
இழுக்கத்தால் பார்ப்பானும் இழிபிறப்பாய் மாறிவிடும் 134
ஒழுக்கமிலார்க்(கு) உயர்வில்லை 135 ஒல்கிடினும் பெருந்துன்பம் 136

வழுக்குவதால் பழிஎய்தும் வழுவாக்கால் மேன்மைவரும் 137
ஒழுக்கமொரு விதையாகும் உதவியெனும் பயன்நல்கும் 138
ஒழுக்கத்தில் வாழ்பவர்கள் உரைதீதில் வழுக்காது 139
ஒழுக்கநெறி உள்ளவரோ(டு) ஒட்டுறவாய் வாழ்வதுமேல் 140

15 பிறன்இல் விழையாமை

தொகு

பிறன்இல் = மற்றவனுடைய மனைவி

பிறன்மனைவி பிறன்பொருளாம் பேணியொழு கார் அறவோர் 141
பிறன்வாயில் நின்றவள்மேல் பித்தாவார் பேதையரே 142
பிறன்நம்பத் தான்பொய்த்துப் பெண்துய்ப்பான் பெரும்பிணமே 143
சிறியவனே பெண்திருடன் `144 செழித்திருக்கும் பழியவன்மேல் 145

பகைபாவம் பழியச்சம் படர்ந்தேறும் அவன்மேலே 146
தகையறமாம் பிறன்மனையைச் சாராமை 147 அந்நடத்தை
நிகரற்ற பேராண்மை 148 நீணிலத்தில் நலக்குரியார் 149
வகையறம்செய் யான் எனினும் மற்றவனின் மனைவிரும்பேல் 150

16 பொறை உடைமை

தொகு

வெட்டிடினும் தாங்குகிற விளைநிலம்போல் பொறைவேண்டும் 151
கொட்டிடினும் தீங்குகளைக் குணங்கொண்டு மறத்தல்மேல் 152
முட்டாதே மடவாரை முழுவலிமை அதுவேயாம் 153
கிட்டவரும் நிறையுடைமை 154 கேடில்லாப் புகழ்சேரும் 155

ஒறுத்தார்க்குச் சிற்றின்பம் உளப்பொறையால் புகழ்நாளும் 156
திறனல்ல பிறர்செய்தால் திருப்பிச்செய் யாமைஅறம் 157
அறனல்ல செய்தாரை ஆள்பொறையால் வெலல்வேண்டும் 158
இறந்தார்சொல் நோற்றிடுக 159 இதுமேலாம் நோன்பின்முன் 160

17 அழுக்காறாமை

தொகு

அழுக்கு + ஆறு = அழுக்காறு மன ஆற்றில் அழுக்கு பாய்தல் பொறாமை கொள்ளாமை

பிறர்உயரின் மனம்புழுங்காப் பெற்றியே ஒழுக்காறு 161
குறைவில்லா விழுப்பேறாக் கொளல்வேண்டும் 162 அழுக்கறுப்பின்
அறனாக்கம் நீங்கிவிடும் 163 அழுக்கறுத்தால் வரும்குற்றம் 164
பிறர்செய்யாக் கேடுவரும் 165 பெருஞ்சுற்றம் உடையூண்போம் 166

நலம்சேர்க்கும் பெண்நீங்கும் நசுக்கவரும் சோம்பல்பெண் 167
அலம்பாட்டுத் தீயிடத்தை எய்துவிக்கும் அழுக்காறு 168
நலம்பெற்றால் தீயவர்கள் நல்லவர்கள் கேடுற்றால்
மலையாமல் எண்ணிடுக 169 மற்றஃ(து)இல் நிகழாதே 170

18 வெஃகாமை

தொகு

பிறர் பொருளைத் தனதாக்குக்கொள்ள ஆசைப்படாமை

நல்லவரின் பொருள்வவ்வ நாடுவதால் குடிவீழும் 171
பொல்லாத பழிசேரும் 172 புகழின்பம் கிட்டாதால் 173
இல்லையெனப் பிறர்பொருளை எடுக்காதே 174 அறிவெதற்காம் 175
வல்லதொரு அருள்வேண்டின் மற்றவர்பால் பறிக்காதே 176

அடுத்தவரின் பொருள்பறித்தால் அதுவிளைவில் கேடுதரும் 177
கொடுத்துவைத்த தன்செல்வம் குறையாது வெஃகாரேல் 178
அடுத்தடுத்து வரும்செல்வம் அதைநல்கத் திருச்சேரும் 179
தொடுத்துவரும் இறல்வெஃகின் தோன்றிவரும் விறல்மாறின் 180

19 புறம் கூறாமை

தொகு

கோள்சொல்லாக் கோட்பாடே கொள்ளறத்தின் மிகவினிது 181
நாள்தோறும் பொய்யாக நடித்திடுதல் தீதாகும் 182
மாள்வதுமேல் வாழ்வதினிம் வக்கணையாய்க் கோள்சொல்வார் 183
தேள்கொட்டுச் சொல்மேலாம் தீங்குய்த்துச் சொல்வதினும் 184

அறநெஞ்சம் அவர்க்கில்லை 185 அவன்பழியைப் பிறர்சொல்வர் 186
உறவினரை அவர்பிரிப்பர் 187 உற்றாரைத் தூற்றிடுவார் 188
அறன்நோக்கி நல்லுலகம் அவர்சுமையைப் பொறுத்திருக்கும் 189
பிறன்குற்றம் காண்பதுபோல் பின்காண்க தன்குற்றம் 190

20 பயனில சொல்லாமை

தொகு

வெட்டிப்பேச்(சு) என்றாலே வெறுத்துலகம் நகையாடும் 191
நட்டார்க்கு நயனில்லை நல்கலினும் இதுதீது 192
பட்டென்று காட்டிவிடும் பயனில்லான் இவனென்றே 193
விட்டொழியும் நன்மையெலாம் 194 விலகிவடும் சீர்சிறப்பு 195

பயனில்சொல் பாராட்டும் பதர்மக்கள் பயனில்லார் 196
நயனில்சொல் சொன்னாலும் நவிலற்க பயனில்சொல் 197
உயரறிவி னார் ஒன்றோ 198 உலகறிந்தா ரும் சொல்லார் 199
அயர்வின்றிப் பயன்படுசொல் அன்றாடம் சொல்வோமே 200

21 தீவினை அச்சம்

தொகு

செருக்காலே தீமைகளைச் செய்திடுவார் அஞ்சுவதில் 201
நெருப்பினிலும் தீயசெயல் நெஞ்சத்தைக் கொளுத்திவிடும் 202
உருத்துவன செய்யாமை உயரறிவு 203 செய்தக்கால்
வருத்திவிடும் அறநெறிகள் 204 வறுமைக்கு வறுமைதரும் 205

தீங்குவர வேண்டாதார் செய்யற்க தீயசெயல் 206
தீங்குபகைக்(கு) உய்வில்லை 207 சேர்நிழல்போல் தீங்குவரும் 208
ஏங்கித்தற் காதலித்தால் எண்ணற்க தீவினைப்பால் 209
ஆங்கில்லை கேடொன்றும் அடுத்தவர்கே(டு) எண்ணார்க்கே 210

22 ஒப்புரவு அறிதல்

தொகு

மழைபோலப் பயன்கருதா வள்ளண்மை ஒப்புரவு 211
உழைப்பெல்லாம் உதவுதற்கே 212 ஒப்புரவே மிகநன்று 213
பிழைப்பதற்காம் ஒத்தபொருள் பிறர்க்குதவார் செத்தவர்கள் 214
விழைநீருண் குளம்போல வேண்டியவர்க்(கு) உதவிடுவோம் 215

ஊருக்குள் பழுத்தமரம் உதவல்போல் பயன்தருவோம் 216
ஆருக்கும் மருந்தாகும் அருமூலி கைப்பொருளை
சீருக்குத் தந்திடுவோம் 217 திரட்டியே நல்கிடுவோம் 218

பாருக்குள் ஒப்புரவால் பழுதுண்டோ 219 வரின்கொள்வோம் 220

23 ஈகை

தொகு

இல்லார்க்குக் கொடுப்பதுவே ஈகை 221 பெறல் ஆறன்று
தொல்லையே என்றாலும் சுகம்காண்க நற்கொடையால் 222
இல்லைதர என்றுரையார் என்றுமே நற்குலத்தார் 223
நல்லீகை யும் இன்னா நாடினார் மலராக்கால் 224

பசிதாங்கல் பெரித்தெனின் பசிபோக்கல் மிகப்பெரிது 225
பசித்தொல்லை போக்குவதே பணம்சேர்க்கும் கருவூலம் 226
பசிபோக்கிப் பகுத்துண்க 227 பதுக்கினால் செல்வம்போம் 228
பசிக்கென்று பதுக்காதே 229 பாத்துண்ணார் சாதல்மேல் 230

24 புகழ்

தொகு

உயிருக்(கு) ஆம் ஊதியம்தான் உவந்(து)ஈதல் 231 இரப்பவர்க்கும்
அயராமல் அளித்திடுவார் அவர்மேலே புகழ்நிற்கும் 232
மயலின்றி உலகத்தில் மலர்வ(து)எது புகழ்அல்லால் 233
இயல்பாகப் புகழ்வந்தால் எவ்வுலகும் போற்றிடுமே 234

சுட்டாலும் சங்குநிறம் தொலையாது புகழ் அற்றாம் 235
கொட்டுபுகழ் கொண்டுயர்க 236 கூறுபழிக்(கு) ஆர்பொறுப்பு 237
வட்டமிடும் புகழ்தேடார் மற்றவரை நோவ(து)எவன்? 238
பட்டநிலம் ஆம்வசையால் 239 பாழ்வாழ்வு புகழின்றேல் 240

துறவறம் \ 25 அருள் உடைமை

தொகு

பொருள் அற் பர்க்கும் போய்ச்சேரும் பூக்கும் அருளே பெருஞ்செல்வம் 241
அருள் ஒன் றேதான் அரியதுணை 242 அருள்பெற் றார்க்கில் இருள் உலகம் 243
அருளை ஆள்வார் உயிர்கண்டால் அஞ்சும் வினைகள் விட்டொழியும் 244
உருள்காற்(று) உலகின் அருள்சான்றாம் உலவும் அல்லல் அருட்(கு)இல்லை 246

பொச்சாந்(து) இழிவர் அருளற்றார் 246 பொருளி னால்மேல் உலகுண்டோ? 247
மெச்சும் உலகம் தருவ(து)அருள் மீண்டும் பொருள்மேல் அருள்வருமோ 248
நச்சு மயக்கம் மெய்மறைக்கும் நலியும் அறமும் அருளின்றேல் 249
விச்சை வலியார் முன்தன்னை விரவி நினைத்தால் அருள்பெருகும் (250)

26 புலால் மறுத்தல்

தொகு

ஒன்றைக் கொன்றே உண்டுடலை ஓம்புவார்க்கும் அருள் உண்டோ 251
நன்றாய்ப் போற்றின் பொருள் உதவும் நாடார் அருளை ஊன்தின்பார் 252
வென்றிப் போரில் கொல்வான்போல் விரும்பிப் புலையன் உயிர்கொல்லும் 253
என்றும் கொல்வார்க்(கு) அருளில்லை இசையில் பொருளே ஊன்தின்னல் 254

ஊனை உண்பார்க்(கு) இருட்சேறு 255 உண்பார் இன்றேல் விற்பாரோ 256
ஊனை உயிரின் புண்ணென்க 257 உயிரை விட்ட பிணம் உணவோ 258
வானோர் வேள்வி ஆயிரத்தின் மறுத்தல் புலவு நன்றென்க 259
தானே தொழுமால் உயிரெல்லாம் தன் ஊன் வேண்டாச் சான்றோரை 260

27 தவம்

தொகு

துன்பம் தாங்கி எவ்வுயிர்க்கும் தொல்லை செய்யா மை தவமாம் 261
முன்பே தவப்பே(று) உடையார்க்கே மூளும் தவமல் லார்க்(கு) அவமாம் 262
தன்பே(று) ஆக்கித் தவம்செய்யார் தவம்செய் வாரைத் தாங்குதற்கோ 263
முன்பின் தவத்தால் நலம்கேடு 264 மூட்ட வல்லார் வேண்டியதை 265

தனது கடமை தவமாகும் தள்ளி வைத்தல் அவமாகும் 266
மனதைச் சுட்டால் தவமோங்கும் 267 மன்னும் உயிர்கள் தொழுதேத்தும் 268
நனவில் ஏமன் நலிவில்லை 269 நாடும் அருளேன் பலர்க்கில்லை?
முனைந்து நோற்பார் சிலராகி முயலாப் பலபேர் வாழ்வதுவே 270

28 கூடா ஒழுக்கம்

தொகு

போலித் துறவை அவன்மனத்துப் பூதம் ஐந்தும் நகுமன்றோ 271
கோலம் கொண்டால் அவன்நெஞ்சு குற்றம் செய்யும் 272 எருதொன்று
வாலைப் புலித்தோல் மேல்போர்த்தி வயலில் மேயும் நிலைபோலாம் 273
பாலை வேடன் புதல்மறைந்து பறவை எய்தல் போன்றதது 274

பற்றுக் கொண்ட படிற்றொழுக்கம் பல்லாற்றானும் தொல்லைதரும் 275
எற்றே கல்நெஞ் சுளம்துறவார் 276 இருட்டுப் புள்ளிக் குன்றிமணி
பெற்ற மனத்தர் 277 மாசுமனப் பேயாத் திரிவர் 278 கணையாழை 279
மற்றை மொட்டை தாடியினை வழங்கும் செயலால் மதிப்போமே 280

29 கள்ளாமை

தொகு

எண்ணம் திருட்டில் பாயாதேல் எவரும் எள்ள மாட்டார்கள் 281
நண்ணிப் பிறர்தம் பொருள்வௌவேல் 282 நலித்த செல்வம் வளராது 283
திண்ணம் விளைவில் நீநாகும் 284 செல்வ அருளன்(பு) அவர்க்கில்லை 285
மண்ணில் ஆசைக்(கு) அளவில்லை மனத்தில் திருட்டு குடியிருந்தால் 286

களவு நெஞ்சே காரறிவு காணார் அளவின் ஆற்றலினை 287
அளவு நெஞ்சில் அறம்நிற்கும் ஆரா நெஞ்சில் களவேறும் 288
அளவில் லாத பொருள்திருடி அழிவர் அளவில் வாழாதார் 289
களவாம் திருட்டு உயிர்வாங்கும் கள்ளார் நல்லார் உலகுய்வர் 290

30 வாய்மை

தொகு

தீமை தாராச் சொல்வாய்மை 291 செயலில் நன்மை விளைவித்தால்
வாய்மை என்க 292 என்றாலும் மனத்தை மறைக்கின் பொய்கணாடாய் 293
தூய்மை உளம்சொல் ஒன்றானால் தோய்வர் உலகின் நெஞ்செல்லாம் 294
ஏமத் தானம் தவம்செய்வார் இரண்டாம் நிலையர் வாய்மைமுன் 295

பொய்யா திருந்தால் அறமெல்லாம் போற்றிப் புகழை உண்டாக்கும் 296
செய்யா அறமெல் லாம்சேர்க்கும் 297 தெண்ணீர் கழுவும் உடலைப்போல்
மெய்யாம் வாய்மை அகம்கழுவும் 298 விளக்காய் உதவும் சான்றோர்க்குப்
பொய்யா விளக்கை 299 யாம்கண்டோம் புகலும் வாய்மைக்(கு) ஈடில்லை 300

31 வெகுளாமை

தொகு

செல்லும் இடத்தில் காப்பதுவே சினத்தைக் காக்கும் முறையாகும் 301
செல்லா இடத்துச் சினம்தீது செல்லும் இடத்தும் பெருந்தீது 302
வல்லார் வெகுளி மடந்திடுக 303 வளர்க்கும் பகையை முகம்கொல்லும் 304
வல்லாய்த் தன்னைத் தான்காக்கில் வளரும் சினத்தை விட்டொழிக 305

சேர்ந்தார்க் கொன்று இனம்சுட்டு செல்லும் நெறியைச் சீரழிக்கும் 306
வாய்ந்த நிலத்தை அறைந்தால்கை வலிக்கும் சினத்தின் விளைவற்றே 307
தோய்ந்து வந்தால் முன்செய்த துன்பம் எண்ணி வெகுளற்க 308
மாய்ந்தால் வெகுளி வருமெல்லாம் 309 வந்தால் சினத்தால் செத்தாரே 310

32 இன்னா செய்யாமை

தொகு

சிறப்பாம் செல்வம் பிறர்க்கின்னா செய்யா திருந்தால் சேர்ந்துவரும் 311
கறுத்துத் துன்பம் செய்தாலும் கருதித் துன்பம் செய்யற்க 312
திறத்தால் துன்பம் செய்யார்மேல் செற்றா லும்மே மன்னிக்க 313
குறித்துச் செயினும் பொறுத்தவர்க்குக் கூடும் நன்மை செய்திடுக 314

பிறர்தம் துன்பம் தனதென்று பேணா அறிவால் என்னபயன் 315
அறிந்த துன்பம் செய்யற்க 316 ஆர்க்கும் என்றும் எண்ணற்க 317
செறிந்துள் உணர்ந்தும் மன்னுயிர்க்குச் செய்தல் என்கொல்? 318 முன்செய்யின்
மறிந்து திரும்பும் நோயெல்லாம் 319 மற்று முன்னைச் செய்தார்க்கே 320

33 கொல்லாமை

தொகு

கொல்லான் உயிரை அறநெறியான் 321 கொடுத்துப் பகுத்துண்(டு) உயிர்காப்பான் 322
கொல்லா மைக்குப் பின்னைஅறம் கூறல் வாய்மை எனக்கொள்க 323
நல்லா(று) என்ப கொல்லாமை 324 நாடும் நீத்தார்க்(கு) அதுதலைக்கோள் 325
கொல்லா(து) இருப்பான் வாழ்நாள்மேல் கூற்றின் கொடுமை செல்லாதாம் 326

தன்னைக் கொல்வான் வந்தாலும் தான்முன் உயிரைக் கொல்லற்க327
மன்னும் செல்வம் கொலைதந்தால் வாழாக் கடையாம் சான்றோர்க்கே 328
துன்னும் கொலையே புலைவினையாம் தோன்றும் பயனைத் தெரியுங்கால் 329
இன்னும் கொலைஞர்க் குடலுயிர்ஏன் இருப்பின் எதற்கோ கொலைத்தொழிற்கோ 330

34 நிலையாமை

தொகு

நில்லாப் பொருளை நிலையென்பான் நினைவில் இருக்கும் புல்லறிவு 331
பல்லார் கூத்தைக் காணவரும் பாங்கில் செல்வம் வரும்போகும் 332
நில்லா இயல்பின் செல்வத்தால் நெஞ்சில் நிலைக்கும் செயல்புரிக 333
எல்லா நாளும் வாழ்நாளை ஈர்த்துள் அறுக்கும் வாள்கண்டோம் 334

சாகும் முன்னர் நல்வினைசெய் 335 சாவு வருநாள் தெரியாதே 336
போகும் முன்னர் மனம்கோடி பூக்க நாளைப் போக்காதே 337
ஏகும் உயிரும் உடம்பிருக்கும் எழும்பும் முட்டைக் குஞ்சைப்போல் 338
நோகா உறக்கம் விழிப்பைப்போல் 339 நொடிக்கும் வாழ்க்கைக்(கு) எதுபுக்கில்? 340

35 துறவு

தொகு

விட்டு விட்ட எதனாலும் மேவும் துன்பம் இல்லாகும் 341
எட்ட வேண்டின் பயனெல்லாம் இன்னே துறவு பூண்டிடுக 342
சுட்டுப் போடு ஐம்புலனை 343 தூய நோன்பாம் துறந்திடுதல் 344
கட்டை உடம்பும் மிகையாகும் காணும் பிறவி அறுப்பார்க்கே 345

யான்மேல் எனதாம் என்னாமை எந்த உலகும் புகழ்கோளாம் 346
மேன்மேல் இடும்பை துறவாமை 347 வேண்டும் என்னும் வலைப்பட்டால் 348
தான்மேல் பிறவா நிலைமைவரும் சார்ந்தால் நிலையா மை தெரியும் 349
வான்மேல் பற்றை வைத்திடுக வந்து சேரும் பற்றின்மை 350

36 மெய்யுணர்தல்

தொகு

பொய்யாம் பிறப்பை மெய்யென்றால் பூக்கும் மாணாப் பிறப்பென்க 351
மெய்யாம் உணர்வால் மருளிருள்கள் விலகும் மாசில் காட்சிவரும் 352
மெய்யாய் ஐய நிலைநீங்கின் மேலாம் வானம் நண்ணிவரும் 353
மெய்யை உணர்க ஐயுணர்வால் 354 விளங்கிக் கொள்வ(து) அறிவாகும் 355

கற்றா ரெல்லாம் பிறவிநெறி களைய வாழ்வில் முயல்வார்கள் 356
உற்றுள் உணர்ந்தால் பிறப்பில்லை 357 உணர்ந்து கொள்க செம்பொருளை 358
பெற்ற சார்பு கண்டுணர்ந்து பேசா திருந்தால் நோயில்லை 359
மற்றைக் காமம் சினம்மயக்கம் வாரா திருந்தால் நோவில்லை 360

37 அவா அறுத்தல்

தொகு

ஆசை விதையால் பிறவிவரும் 361 அதனைப் போக்க ஆசைவிடு 362
பேசில் சிறந்த செல்வமது பேரா ஆசை விட்டொழித்தல் 363
மாசில் தூய்மை அவாஇன்மை மலரும் வாய்மை வேண்டுவதால் 364
நேச ஆசை இல்லாமை நெறியில் தலைமை நிலையினதாம் 365

அஞ்சி அறத்தில் நின்றாலும் ஆசை வந்து கழுத்தறுக்கும் 366
பிஞ்சில் அறுத்தால் ஆசைபோம் 367 பேசும் துன்பம் அவர்க்கில்லை 368
மிஞ்சி இன்பம் தொடர்ந்துவரும் மேன்மேல் விரும்பின் துன்பந்தான் 369
விஞ்சும் ஆரா ஆசையினை வென்றால் பேரா இயற்கைநிலை 370

38 ஊழ்

தொகு

நல்லூழ் ஊக்கம் உண்டாக்கும் நலியூழ் சோம்பல் தோன்றவரும் 371
செல்லூழ் அறிவைச் செவிடாக்கும் 372 தேடும் அறிவும் உள் அறிவே 373
செல்வம் தெளிவு நேர்கோட்டைச் சேர்க்கும் இரண்டு புள்ளிமுனை 374
நல்ல செயலும் தீதாகும் நன்றாம் நீநும் ஊழ்வலியால் 375

உள்ளே இருப்ப(து) ஊழ் ஆட்சி ஒதுக்கி வைத்தால் போகாது 376
அள்ளிக் கோடி தொகுத்தாலும் ஆகூழ் இன்றேல் துய்ப்பில்லை 377
துள்ளும் துப்பு இல்லாமல் துறப்பர் ஊட்டா ஊழாலே 378
கள்ளம் ஊழ்க்குக் கலங்காதே 379 காண்க ஊழின் பெருவலியை 380

பொருட்பால்

தொகு

39 இறைமாட்சி

தொகு

படைகுடி கூழமைச்சு நட்பால்

பாதுகாப்(பு) உடையான் வேந்தன் 381

உடையாநெஞ்(சு) ஈகை ஊக்கம்

உற்றறிவு தானே பெற்றான் 382

உடையானாம் துணிவு கல்வி

ஒருபோதும் சோரா தாள்வான் 383

உடையாத தறமா னத்தால்

ஓங்கற அரசே மாட்சி 384


பெருக்கியே கூட்டிக் காத்துப்

பிரித்தலும் 385 எளிமை 386 இன்சொல்

உருக்கியே உதவல் 387 நீதி

உடையவன் இறைவன் மன்னன் 388

நெருக்கியே திட்டினாலும்

நெஞ்சினால் நிழலை நேர்வான் 389

கருக்கல்போல் கொடையும் அன்பும்

காப்பாற்றும் குடியும் செங்கோல் 390

40 கல்வி

தொகு

நல்லவற்றைத் தெளிவாய்க் கற்க

நடந்திடுக நல்ல பாங்கில் 391

வெல்லும்கண் எழுத்தும் எண்ணும் 392

விளக்காகும் முகத்தின் கண்ணில் 393

வல்லவர்கள் புலவர் கூடில்

மனங்கொண்டு பிரிதல் கல்வி 394

இல்லார்முன் உடையார் போல

இரந்தேற்க கல்விச் செல்வம் 395


கல்வியது பெருக்கம் மென்மேல்

கற்கின்ற அளவு மட்டே 396

கல்வியில் வல்லார்க் கெங்கும்

காப்புண்டு 397 கற்றால் என்றும்

செல்வுழிச் சிறப்பு சேரும் 398

சேர்ந்தவர் இன்பம் காண்பர் 399

கல்வியே கேடில் செல்வம்

கருதிப்பார் மற்ற வற்றை 400


41 கல்லாமை

தொகு

அவையேறக் கல்வி வேண்டும்401

அழகிக்கு மார்பு போலே 402

அவையினிது கல்லா ருக்கும்

அறிந்தார்முன் சொல்லா டாரேல் 403

தவநுட்பம் கல்லார் சொல்லில்

தாம்கண்டால் கற்றார் கொள்ளார் 404

உவந்துரை யாடும் கல்லார்

உரைசோர்வு தானே எய்தும் 405


கல்லாரால் பயன்தான் என்ன

களர்நிலம் விளையப் போமோ 406

நல்லசொல் நுட்பம் காணார்

நடக்கின்ற பொம்மை போல்வார் 407

கல்லாதார் செல்வம் துன்பம் 408

கல்வியே பிறப்பின் மேன்மை 409

கல்லாதார் விலங்கு போல்வர்

கற்றவர் மனிதர் ஆனால். 410

42 கேள்வி

தொகு

செவிச்செல்வம் தலைமைச் செல்வம் 411

செவியுண வின்றேல் வாய்க்குள்

சுவையுண வுண்ணத் தோன்றும் 412

சொல்வதைக் கேட்கும் ஆன்றோர்

அவியுணாத் தேவர் ஒப்பார் 413

அமர்ந்துகேள் கல்லா ரேனும் 414

தவவொழுங் குடை யார் வாய்சொல்

தளர்ச்சியில் ஊன்றுகோலாம் 415


நல்லவை கேட்கக் கேட்க

நலந்தரு பெருமை சேரும்416

வல்லவை பிழைத்து ணர்ந்தால்

மாறிடும் பின்னும் கேட்டால் 417

சொல்வதைக் கேளாக் காது

தொளைவளை போலாம் 418 கேளார்

சொல்லிலே வணக்கம் கொள்ளார் 419

தோன்றினால் செத்தால் என்ன 420

43 அறிவுடைமை

தொகு

அறிவினால் அழிவு நீங்கும்

அறிவரண் கருவி யாகும் 421

அறிவினை நன்மை யின்பால்

ஆளுக 422 மெய்மை காண்க 423

மறையின்றி எளிதாய்ச் சொல்க

மற்றவர் நுட்பம் கொள்க 424

குறையிலா உலகம் சார்ந்தால்

கூர்மையாம் அறிவின் தன்மை 425


உலகினைச் சார்ந்து வாழ்தல்

ஒப்பிலா அறிவு 426 ஆகும்

நிலையினை அறிய லாகும் 427

நிறுத்துணர்ந்(து) அஞ்சல் வேண்டும் 428

வலைபடு துன்பம் இல்லை

வருவதை அறிவால் காத்தால் 429

இலையொன்றும் அறிவில் லார்பால்

எல்லாமே அறிவால் உண்டால். 430

44 குற்றம் கடிதல்

தொகு

செருக்குசினம் சிறுமை குற்றம் 431

சேர்கஞ்சத் தனம்வீண் மானம்

பெருக்குவகை தலைமைக் கேதம் 432

பெரிதென்க சிறிய குற்றம் 433

உருக்குகிற பொருளாம் குற்றம்

உண்டாக்கும் பகையை என்றும் 434

எரித்துவிடும் தன்னைக் குற்றம்

எழுமுன்னே காத்தால் வாழ்வாம் 435


தன்குற்றம் முதலில் காக்க

சாற்றுமுன் பிறர்குற் றத்தை 436

நன்மைசெய் யாத கஞ்சம்

நாடாது கெடும் தன் னாலே 437

என்பொருள் கஞ்சன் தேட்டம் 438

இருந்தலைக் கனமே வேண்டா

நன்பொருள் நயக்க நன்றாம் 439

நாடிச்செய் பகைநால் தோற்கும். 440

45 பெரியாரைத் துணைக்கோடல்

தொகு

அறன்றிந்து அறிவில் மூத்த

ஆற்றலில் பெரியார் நட்க 441

உறுநோயை முன்னும் பின்னும்

ஓட்டுவார் பேணிக் கொள்க 442

பெறுமரிய பேறு நல்ல

பெருமையார்த் தமராக் கொண்டால் 443

திறமுடைய பெரியார் சுற்றம்

சேர்தலே சிறந்த வன்மை 444


சூழுவார்த் துணையாய்க் கொள்க 445

சுடுபகை வன்மை போகும் 446

வாழநன் கிடித்துச் சொல்லும்

வன்மையார் 447 அவரில் லாக்கால்

வீழுவார் பகையில் லாமல் 448

மேவுதூண் பெரியார் தாங்கும் 449

சூழும்பல் பகையின் கேடாம்

துணையுள் பெரியார் நீங்கல் 450

46 சிற்றினம் சேராமை

தொகு

சிற்றினம் பெரியார் அஞ்சச்

சிறியவர் சுற்றம் கொள்ளும் 451

பெற்றமண் தன்மை நீர்க்காம்

பிறங்கறி வினத்தின் பாங்காம் 452

நற்றவ உணர்ச்சி எண்ணம்

நலிவுறும் சிற்றி னத்தால் 453

மற்றவர் அறிவு நம்மை

வளைத்துழு தாட்டி வைக்கும் 454


மனஞ்செயல் இனத்தால் நன்றாம் 455

மனநலம் மக்கட் காகும்

இனந்தூய்மை ஈயும் இன்பம் 456

எவ்விதப் புகழும் நல்கும் 457

மனநலம் இருந்தால் கூட

வல்லதாம் இனத்தின் சூழல் 458

இனநலம் மறுமைக் கேமாப்(பு) 459

இருந்துணை இனமே என்க 460

47 தெரிந்து செயல் வகை

தொகு

விளைவினை அறிந்து செய்க 461

விளைவறிந் தாலைச் சேர்க 462

களைக முன் முதலைப் போக்கும்

கருமங்கள் அறிவைப் பெற்றார் 463

தெளிவிலாச் செயலைத் தொட்டால்

சேர்ந்திடும் இளிவாம் துன்பம் 464

தெளிவதில் குறைவு பட்டால்

தெவ்வரை அழைத்தல் போலாம் 465


செய்தகாச் செயலால் கேடு

செய்தக்க செய்யாமைக் கேடு 466

செய்வினை எண்ணிச் செய்க

செய்தபின் இரங்கின் யாதாம் 467

செய்கையில் வருத்தம் பாரேல் 468

செயல்விளை வேற்பார் பண்பை

மெய்வகை கண்டு செய்க 469

மேலவர் எள்ளாச் செய்கை 470

48 வலி அறிதல்

தொகு

செயல்பகை தன்வல் லாண்மை

சீர்தூக்கிச் செயலைச் செய்க 471

முயலுக முழுத்தி றத்தால் 472

முரிந்திடும் முடியாச் செய்கை 473

இயலாத தருக்கி னாலும்

இருந்துசெய் யாமை யாலும்

பயனது கேடாம் 474 பீலி

பாரமும் வலிதாம் அன்றோ 475


நுனிக்கொம்பு தாங்கின் ஏறு

நோன்செயல் வலிமை காண்போம் 476

இனித்திடும் ஈகைத் தன்மை

இருப்பினை அளந்து செய்தால் 477

தனக்குள வருவாய்க் குள்ளே

தந்திடு 478 இன்றேல் வாழ்க்கை

மினுக்கியே கெட்டுப் போகும் 479

மிகுகொடை விளைவில் கேடாம் 480


49 காலம் அறிதல்

தொகு

பகலிலே காக்கை வெல்லும்

பலமுள்ள கூகை தன்னை 481

இகல்வெல்லத் திருவைக் காக்க

ஏந்தாகும் பருவம் காலம் 482

வகைபெறக் கருவி காலம் 483

வாய்ப்பிடம் 484 கருதின் வெற்றி

அகத்தினில் காலம் நோக்கின்

அடையாளம் உலகைக் கூட 485


ஆடுபோல் பின்னே வாங்கி

ஆற்றுக ஊக்கம் பாய்ந்து 486

நாடுக காலம் தன்னை

நம்பற்க ஆர வாரம் 487

ஆடுவார் ஆடின் பாய்க

அடுவார்முன் ஒதுங்கிக் கொள்க 488

கூடிடும் காலத் தாற்றிக் 489

கொக்கைப் போல் கூர்த்துச் செய்க 490

50 இடன் அறிதல்

தொகு

வாய்ப்பிடம் அறிந்து செய்க 491

வலிமையாம் தம்மார் சூழல் 492

தீய்க்கலாம் பகையைத் தம்மார்

சேர்ந்துவாழ் இடத்தில் 493 துன்னார்த்

தேய்க்கலாம் தம்மார் ஊரில் 494

திறமுள்ள முதலை கூடச்

சாய்த்திடும் இரைநீர் மட்டே

தரைவரின் பிறவெல் லும்மே 495


ஓடமோ நிலத்தில் ஓடா

ஓங்குதேர் நீரில் ஓடா 496

நாடிடம் துணிவு போதும் 497

நமதிடச் சிலர்பல் லாரை

வாடிட வைத்தல் சாலும் 498

வல்லரண் இல்லாக் காலும்

கூடிடம் தனதால் வெற்றி 499

கொன்றிடும் நரிவே ழத்தை 500

51 தெரிந்து தெளிதல்

தொகு

அறம்பொருள் உயிர்மேல் இன்ப

ஆசையைத் தெரிந்து கொள்க 501

நெறிபடு குடிகுற் றத்தின்

நீங்குதல் வடுவில் நாணல்

உறைவிடம் தெளிக 502 முற்றும்

உடையவர் உலகில் இல்லை

நிறைகுணம் குற்றம் கொள்க 504

நெடுஞ்செயல் உரைகல் லாகும் 505


நலமிலார் பழிக்கு நாணார் 506

நம்மவர் என்று தேறேல் 507

பலமுறை தேரா தேற்றால்

படுதுன்பம் வழியி னோர்க்கும் 508

நலமுறத் தெரிந்தன் னாரை

நம்பித்தன் ஆளாய்க் கொள்க 509

நிலைகொளத் தெளிந்த பின்னர்

நினைவினில் ஐயம் துன்பம் 510

52தெரிந்து வினையாடல்

தொகு

நன்மையுடன் தீமை நாடி

நன்மையால் ஆண்டு கொள்க 511

தன்வரு வாய்பெ ருக்கித்

தங்கிடும் செயலைச் செய்க 512

அன்பறிவு தேற்றம் கொண்டுள்

ஆசையில் லாதான் கொள்க 513

பின்பவர் மாறல் உண்டு 514

பெருஞ்சுமை ஆள்வான் மேலோன் 515


செய்வானும் செயலும் காலம்

சேர்த்துணர்ந் தாளச் செய்க 516

செய்வினை முற்றச் செய்யும்

திறமுளான் செய்யச் செய்க 517

செய்வகை குறுக்கி டாதே 518

செயலாளன் கேண்மை மாறின்

செய்யவள் நீங்கும் 519 ஆள்வான்

திரும்புக கண்கா ணிப்பில் 520

53 சுற்றம் தழால்

தொகு

பற்றற்ற கண்ணும் சுற்றம்

பழவுற வதனைப் பேசும் 521

சுற்றத்தார் விருப்பம் சுற்றின்

துணைவரும் பல்லாக் கங்கள் 522

சுற்றத்தோ டைவ ளாவின்

சூழ்ந்தவர் காப்பர் 523 செல்வம்

பெற்றத்தால் பெற்ற பேறாம் 524

பேணுக கொடையின் சொல்லால் 525


கொடைதந்து வெகுளான் சுற்றம்

குலவிடும் 526 காக்கைக் கூட்டம்

அடைந்ததைக் கூடி உண்ணும்

அதுபோல்க 527 ஆள்வான் செற்றம்

மிடைந்தவர்ச் சிறப்பித் தோங்கல் 528

விழைபொருள் சுற்றம் கொண்டால்

படையெனச் சூழும் 529 சின்னாள்

பகைக்கினும் வந்தால் கொள்க 530

54 பொச்சாவாமை

தொகு

மகிழ்ச்சியில் மறந்து சோர்தல்

மாப்பெருந் தீதாம் 531 அஃதுள்

புகழினைக் கொல்லும் 532 நூல்கள்

புகன்றிடும் தெளிந்த உண்மை 533

வகையரண் சோர்வில் போகும் 534

மறந்துபின் இரங்கல் வீணே 535

மிகையினால் வழுக்கிச் சோரேல்

வீறதற் கொப்பே இல்லை 536


சோர்வினால் மறதி இன்றிச்

சுழற்றினால் கரும வெற்றி 537

ஆர்வத்தில் அயர்ந்துபோனால்

அழிந்திடும் எம்மை வாழ்வும் 538

சோர்வினில் கெட்டார் எண்ணிச்

சுறுசுறுப் பாகச் செய்க 539

தீர்வினில் எளிதாய் வெல்லச்

செயலதில் கருத்தை ஊன்றே 540

55 செங்கோன்மை

தொகு

ஈவிரக்கம் காட்டா நீதி

இறைவனுக்கு முறையென் றாகும் 541

மேவிய மழையால் வையம்

வேந்தாட்சி தன்னால் மக்கள் 542

நாவரு நூலும் வாழ்வின்

நல்லறத் தாறும் கோலால் 543

ஆவியாய்க் குடிய ணைத்தால்

அவனடி மக்கள் வாழ்வர் 544


பெயல்மழை விளைச்சல் நாடிப்

பேணுவான் 545 வளையாக் கோலால்

நயனுடை வெற்றி கொள்வான் 546

நல்லிறை வையம் காக்க

இயல்முறை அவனைக் காக்கும் 547

எளிமையும் ஆய்வும் கொள்வான் 548

உயச்செயும் தண்டம் ஆறாம் 549

உழவன்கொல் களையைப் போலாம் 550

56 கொடுங்கோன்மை

தொகு

குடியலைக்கும் வேந்தன் பொல்லாக்

கொலைஞனின் கொடியன் 551 கோலோ(டு)

இடுவென இரத்தல் ஆணை 552

எப்போது முறைகெட் டாலும்

இடிநிலை நாட்டிற் கெய்தும் 553

ஏர்குடிச் செல்வம் மாளும் 554

வடிகின்ற மக்கள் கண்ணீர்

மன்னவன் செல்வம் தேக்கும் 555


செங்கோலே புகழைச் சேர்க்கும் (556)

செல்மழை இன்றேல் பாலை

மங்கிடும் மக்கள் வாழ்வு

மன்னவன் கொடுங்கோ லாலே (557)

சங்கடம் கொடுங்கோல் ஆட்சி (558)

தடைபடும் மழையும் பொய்க்கும் (559)

பொங்குதல் விளைச்சல் குன்றும்

புகன்றநூல் கொடுங்கோல் சாய்க்கும் (560)

57 வெருவந்த செய்யாமை

தொகு

தண்டித்தல் தகாச்செ யற்கே

தலைக்கன்று 561 கடுமை தோன்றும்

தண்டனை சிறிதா கட்டும் 562

தண்டனை வெறுப்புண் டாக்கில்

தண்டித்தான் கெடுவான் ஒல்லை 563

சால்குடி வெறுப்பச் செய்யேல் 564

அண்டவிடா அரசன் செல்வம்

அலகைபோல் அஞ்சச் செய்யும் 565


கடுஞ்சொல்லோ டிரக்கம் இன்மை

கைப்பெருஞ் செல்வம் போக்கும் 566

அடுந்தண்டம் ஆங்குச் சேர்ந்தால்

ஆற்றலை அரம்போல் தேய்க்கும் 567

அடுத்துளார் வெறுப்பச் செய்தால்

அருந்திரு குறைந்து போகும் 568

கடுப்பினைக் காக்க வேண்டும் 569

கல்லார்மாட் டொதுங்க வேண்டும் 570

58 கண்ணோட்டம்

தொகு

ஈவிரக்கம் என்னும் பெண்ணால்

இவ்வுல கியங்கக் கண்டோம் 571

மேவிக்கண் ணோடா மக்கள்

வீண்சுமை 572 இயையாப் பண்போல்

பாவிநல் லிரக்க மில்லாப்

பார்வையால் பயனொன் றுண்டோ 573

நோவுசெய் முகத்தில் கண் ஏன் 574

நுவலுக புண்ணாம் என்றே 575


கண்ணினுக் கணி கண் ணோட்டம் 576

கண்ணோட்டம் இல்லாக் கண்ணர்

மண்ணினில் மரத்தைப் போன்றார்

வழங்குவர் இரக்கம் கண்ணில் 577

கண்ணிய செயல்கே டில்லாக்

கண்ணோட்டம் உலகை ஆளும் 578

பண்ணிய பகைக்கும் கண்கொள் 579

படைநஞ்சும் உண்க கண்ணார் 580

59 ஒற்றாடல்

தொகு

மன்னனின் கண்கள் நூலில்

வல்லமை ஒற்றர் மாட்சி 581

தன்னுடைய குடிகள் செய்கை 582

தகுந்தவா றொற்றிக் காணல் 583

துன்னிய சுற்றம் ஆளும்

தொழிலினார் மாட்டும் ஒற்றல் 584

பின்னிக்கேட் டறிதல் தோற்றம்

பிறன்மறைத் திடுதல் ஒற்று 585


பற்றிலன் போலக் கேட்டல் 586

பழநிகழ்(வு) ஐயம் போக்கல் 587

மற்றொற்றால் ஒற்றின் செய்தி

வாய்மையைக் காணல் 588 மூன்றாம்

ஒற்றினால் கண்டு தேர்தல் 589

ஒருவரை ஒருவர் காணா

ஒற்றதே ஒற்றின் சூழ்ச்சி

உணர்வரேல் ஒற்றர் பொய்ப்பர் 590

60 ஊக்கம் உடைமை

தொகு

ஊக்கமே உடைமை யாகும்

உதவாது மற்றைச் செல்வம் 591

ஊக்கம(து) உணர்வில் வேண்டும்

உறுபொருள் அதனால் சேரும் 592

ஆக்கம(து) இழப்ப ரேனும்

அயர்வரோ ஊக்கம் கொண்டார் 593

ஆக்கமே தேடிச் செல்லும்

அயர்விலா ஊக்கத் தான்பின் 594


நீரள(வு) உயரும் பூப்போல்

நீண்டிடும் உயர்வூக் கத்தால் 595

பேரள(வு) உயர்வே உள்ளல் 596

பெருங்களிறு சாயா தம்பால் 597

சீருள கொடையை ஊக்கம்

தெம்பாக்கும் 598 பெரிய யானை

வீரியப் புலிகண் டஞ்சும் 599

வெறுமரம் உரமி லாதார் 600

61 மடியின்மை

தொகு

மடியெனும் சோம்பல் வந்தால்

வளர்கின்ற குடும்பம் சாயும் 601

மடியதை மடியச் செய்க 602

மடிமிகில் குடிகே டாகும் 603

மடிமடிந்(து) உஞற்றி லாதார்

வான்குடி குற்றம் எய்தும் 604

மடிநெடுநீர் மறவி தூக்கம் 605

மாண்பயன் குன்றச் செய்யும் 606


சோம்பலை யுடையார் வாழ்வில்

சொல்லிடித் தெள்ளப் பட்டார் 607

தேம்புவார் பகைக்கீழ்ப் பட்டுத்

திறமெலாம் அடிமை யாகும் 608

மேம்படு குடியா னாலும்

விழுந்திடும் சோம்ப லாலே 609

பூம்புனல் உலக மெல்லாம்

போற்றிடும் சோம்பல் போனால் 610

62 ஆள்வினையுடைமை

தொகு

அசையாத உயைப்பி னால்நாம்

அரிதாற்றிப் பெருமை கொள்வோம் 611

கசங்கி நாம் வினைகை விட்டால்

கருதிய(து) அடைய மாட்டோம் 612

இசைதரும் உதவி செய்ய

எதுவேண்டும் முயற்சி யன்றோ 613

விசைபடா னேடி கைவாள்

வேளாண்மை முயற்சி நல்கும் 614


செயலிலே இன்பம் நாடான்

திண்துணை சுற்றத் தார்க்கே 615

முயற்சிதான் திருவுண் டாக்கும் 616

முயலாதான் மூதே விக்காம் 617

இயல்பொறி ஐந்தும் ஊழும்

இன்மைமேல் பழிபோ டாதே 618

முயலுவார்க் குண்டு கூலி (619)

முயற்சியால் ஊழும் பின்னாம் 620

63 இடுக்கண் அழியாமை

தொகு

மேலும் மேலும் துன்பங்கள்

அடுக்கி வந்து இடுக்குவது இடுக்கண்

துன்பம்வந் திடுக்கும் போது

துணிந்துமகிழ்ந் தெதிர்த்தால் ஓடும் 621

துன்பத்தின் வெள்ளம் உள்ளத்

துணிவினால் வடிந்து போகும் 622

துன்பத்தை இடுக்கி வைப்போம் 623

துவளாத காளை போல்வோம் 624


துன்பங்கள் அடுக்கிவந்தால்

சோராதே நசுங்கும் துன்பம் 625

இருக்குங்கால் போற்றிக் காக்கின்

இன்மையில் அல்லல் இல்லை 626

இருப்பதெது உடலில் துன்பம் 627

இன்பத்தை நாட வேண்டா 628

இருக்குமேல் இன்பம் காணேல்

இல்லையேல் துன்பம் போகும் 629

நெருக்கிடும் துன்பம் தன்னை

நினைவினால் இன்பம் என்போம் 630

64 அமைச்சு

தொகு

அரசனின் கருவியாய்க் காலம் செய்கை

அருவினை அளவிடல் அமைச்சன் மாட்சி 631

மருவலில் உறுதியாய், மக்கள் காத்து,

வளர்கல்வி, நல்லறிவு, ஆளும்பாங்கன் 632

பிரித்தலும் பேணலும் பிரிந்தார் தம்மைப்

பெய,ர்த்துடன் கூட்டலும் பேண வல்லான் 633

தெரிதலும் தேர்ந்துடன் செயலும் கண்டு

தெரிவிப்பான் உறுதியுடன் அமைச்சன் என்பான் 634


அறனறிதல் ஆன்றமைதல் அதைக்காட் டாமை 635

ஆழறிவு நூலறிவு 636 செயற்கைப் பாங்கின்

திறன்றிந்தோங் கியற்கையொடு சேர்ந்து செய்தல் 637

தெரியாத அரசனுக்கும் தெரியக் காட்டல் 638

திறமுடையான் நல்லமைச்சன் தீமை சூழ்வான்

செறுபகையின் எழுகோடி தீயன் 639 மற்றும்

முறைபடவே சூழாதான் முடியாச் செய்வான்

முழுத்திறமை இல்லாத முடவன் என்க 640

65 சொல் வன்மை

தொகு

நலமே நல்லநலம் நாடிப் பார்க்கின்

நல்லபிற நலமில்லை 641 நன்மைதீமை

நா நலிய வருவதனால் சொல்லில் சோர்வு

நடவாமல் காத்திடுக 642 நன்றாய்ச் சொல்க

நா திறையைக் கேட்டாரும் கேளா தோரும்

நாடிவரப் பேசிடுக 643 திறச்சொல் லாலே

வாய் நிறைய அறம்பொருள்கள் வந்து சேரும் 644

வாய்திறந்தால் வெல்பயன்சொல் வளர்தல் வேண்டும் 645


மற்றவர்கள் விருப்பத்தை வளர்க்கும் சொல்லால்

மற்றவர்கள் பயன்பாட்டை வளைத்துக் கொள்க 646

சொற்றிறத்தில் சோர்வின்றேல் யாரே வெல்வார் 647

தொழிற்படுமே உலகமெலாம் சொல்வாய்ப் பட்டு 648

கற்றபல காமுற்றுச் சொல்வர் வீணே

கருத்துணரச் சிலசொல்லும் கனிவே இல்லார் 649

எற்றை நலம் கற்றதனை ஏற்கச் சோல்லா

இயல்பினரால்? மணக்காத எழில்சேர் பூவே 650

66 வினைத் தூய்மை

தொகு

வினைத்தூய்மை வேண்டியவை எல்லாம் நல்கும்

விழைதுணையால் ஆக்கமெனும் ஒன்றே நிற்கும் 651

வினையாலே நன்றி புகழ் விளைய வேண்டும் 652

வெளிச்சமிலா இருட்செயலை விலக்க வேண்டும் 653

தனக்கிடுக்கண் வந்தாலும் இழிவாம் செய்கை

தடுமாற்றம் இல்லாதார் செய்ய மாட்டார் 654

தனையீன்றாள் பசிபோக்கும் காலும் செய்யேல்

ணான்றோர்கள் பழிக்கின்ற வினையை என்றும் 655


தானேபின் வருந்துகிற செயலைச் செய்யேல் 656

சான்றோரின் பெருவறுமை நன்றாம் ஆக்கம்

ஆனாத பழிதருவ த்தனோ டெண்ணில் 657

ஆக்கமுடன் பழிதந்தால் அதுவே பீழை 658

உனுள்ளம் தேம்பியழ உலுக்கிப் பெற்ற

உடைமையவர் பின்னாடி ஓடிப் போகும் 659

பானைசுடர்ப் பசும்பானை வைத்த நீர்போல்

பழுதாகும்வஞ்சனையால் படைத்த செல்வம் 660

67 வினைத் திட்பம்

தொகு

மனத்தினிலே உறுதிநிலை வந்து சேர்ந்தால்

வாழ்க்கையிலே செயல்திட்பம் வாய்க்கும் தன்னால் 661

வினையினிலே இடையூறு மேவும் மேவின்

வீண்தளர்ச்சி வேண்டாத குறிக்கோள் வேண்டும் 662

வினைமுடியும் வரைமுயலும் உழைப்பே ஆண்மை 663

வெறும்வாய்ச்சொல் எளிதரிது செயலில் காட்டல் 664

வினைவீறு பெறச்செய்தான் மாண்டு போனால்

வேந்தனுரை புகழ்சேரும் உலகம் போற்றும் 665


எண்ணியவை எண்ணியவா றெயத வேண்டின்

இடைவிடாச் செய்கையிலே திட்பம் வேண்டும் 666

கண்ணாலே உருவம்பார்த் தெள்ள வேண்டா

கருதிப்பார் அச்சாணி தேரைத் தாங்கும் 667

புண்ணுளத்தால் சோராமல் அசையா மல்செய் 668

புகுந்தாலும் துன்பங்கள் போற்றா மல்செய் 669

திண்ணியார் செயல்திட்பம் திட்பம் மற்றைத்

திட்பத்தை மதியாது உலகம் கண்டோம் 670

68 வினை செயல்வகை

தொகு

ஆராய்ந்து செய்தாலும் காலம் தாழேல் 671

அளந்தறிந்து காலத்தை ஆட விட்டும்

சீராய்ந்தவ் வப்போது செய்தும் வெல்க 672

செல்லும்வாய் நோக்கிவினை முடித்தல் நன்றாம் 673

தாராமல் விட்டகுறைச் செயதும் தெவ்வும்

தீயெச்சம் போல்கனன்று சுட்டுத் தீர்க்கும் 674

வேரான பொருள், கருவி, காலம், செய்கை,

வினையாற்றும் இடம் – ஐந்தும் எண்ணிச் செய்க 675


செயல்முடிவும் இடையூறும் விளைவும் எண்ணிச்

செயல்படுக 676 செய்வினையுள் அறுப்பான் உண்டேல்

அயராமல் செயல்பட்டால் அழிந்து போவான் 677

அழிசெயலை ஆக்கமதாய் மாற்றிக் கொள்க 678

செயல்முறையில் ஒட்டாரை ஒட்டிச் செய்க

சேர்ந்தவர்க்குச் செயும்நன்றி பின்னர் வைக்க 679

உயர்பெரியார்ப் பணிந்தேற்கும் காலந் தன்னில்

உறைசிறியார் உள் நடுங்க வைக்க வேண்டா 680

69 தூது

தொகு

அன்புடைமை ஆன்றகுடி வேந்தன் மேவும்

அரும்பாங்கு தூதுரைப்பார்க் கணியாம் பண்பாம் 681

அன்புடைமை அறிவுடைமை சொல்லில் வன்மை

அருங்குணங்கள் இவைமூன்றும் தூதற் காக்கம் 682

முன்னேறும் தன்படைகள் வெற்றி கொள்ள

முறைகண்ட நூலறிவால் தூது சொல்லும் 683

தன்னறிவு தகையுருவம் சான்ற கல்வித்

தகவுடையான் தூதுரைக்கும் தகுதி யானாம் 684


பற்றுக்கோ டாய்நன்றி பயப்பச் சொல்க 685

பகையஞ்சாச் செலச்சொல்லும் பாங்கைக் கொள்க 686

பற்றியுள கடமையுடன் இடம்கா லத்தைப்

பகுத்தறிந்து சொல்லுவதே தூதின் பாங்கு 687

பெற்றுள்ள துணிவுடைமை துணைமை தூய்மை 688

பேசுவதில் வடுவின்மை வாய்சோ ராமை 689

கொற்றவர்பால் உறுதிவரக் கூறும் போது

கூடுமேல் உயிர்க்கிறுதி கொள்வான் தூதன் 690

70 மன்னரைச் சேர்ந்தொழுகல்

தொகு

மன்னருக்குத் துணைபுரிவோர் தீக்காய் வார்போல்

மருவிமரு வாதிருந்து வாழ்தல் வேண்டும் 691

மன்னனொரு பொருள்மேலே ஆசை வைத்தால்

மனம்விட்டுக் கொடுத்தவர்க்கே வழங்கல் வேண்டும் 692

மன்னருக்குக் கடுப்பேறா வாழ்வைக் கொள்க 693

மறைப்புரையும் ஏளனமும் இன்மை வேண்டும் 694

மன்னரவர் மற்றவர்பால் பேசும் போது

வாய்திறவா திருந்துபின் மறையைக் கேட்க 695


குறிப்பறிந்து காலத்தில் விருப்பம் சொல்க 696

கொள்கையில கேட்டாலும் சொல்ல வேண்டா 697

உறவுடையார் இளம்பருவம் என்றெண் ணாமல்

ஒளிசேர மன்னர்க்காம் உறுதி சொல்க 698

உறவானோம் என்றெண்ணி ஒவ்வாச் செய்யார்

உளந்தெளிந்து கண்டவர்கள் உதவும் சுற்றம் 699

மறையினிலும் பழநண்பர் என்றே எண்ணி

மாண்பல்ல செயின்கேடு வருதல் திண்ணம் 700

71 (மற்றவர்களின்) குறிப்பு அறிதல்

தொகு

அடுத்திருப்போர் கூறாமுன் அவரெண் ணத்தை

அளந்தறிவான் தனையுலகின் அணியாய்க் கொள்வோம் 701

அடுத்தவரின் குறிப்பறிவான் தெய்வம் போல்வான் 702

அக்குறிப்பின் குறிப்புணர்வான் உறுப்பாகட்டும் 703

விடுத்தவரின் குறிப்பறிவான் விள்ள வேண்டாம் 704

விழைகுறிப்பை உணராக்கண் என்ன கணனோ 705

அடுத்திருக்கும் பொருள்காட்டும் பளிங்கைப் போல

அகத்தெண்ணம் காட்டுவது முகமே யன்றோ 706


நெஞ்சமெலாம் பூத்துவரும் முகம் உள் ளத்தில்

நெளிகின்ற கடுஞ்சினமும் உவப்பும் காட்டும் 707

நெஞ்சத்தைப் படிப்பவர்முன் நின்றால் போதும்

நினைப்பதெலாம் நிறைவேறும் குறிப்பாய்க் கொள்க 708

கொஞ்சிவரும் மிஞ்சிவரும் குணத்தை யெல்லாம்

கொண்டுவந்து கொட்டுவது முகத்தின் கண்கள் 709

நெஞ்சத்தை அளந்தறிய நீட்டும்கோல்தான்

நீர்முகத்தில் நிழலாடும் குறிப்புக் கண்கள் 710

72 அவை அறிதல்

தொகு

அவையத்தை அறிந்தாய்ந்து கருத்தில் கொண்ட

அரும்பொருளைச் சொல்பவர்கள் அவைக்குத் தூயர் 711

அவையத்தார் மனங்கொள்ளக் காலம் தந்து

அவைநடப்பை அளந்துரைப்பர் நன்மை யாளர் 712

அவையறியா துரைப்பாரேல் அறிவின் ஆற்றல்

அத்தனையும் வீணாகும் 713 அறிஞர் முன்னே

சுவைகாட்டித் திறங்காட்டிச் சுடர்க மற்றைச்

சுன்னத்தார் முன்சுண்ணம் வண்ணம் கொள்க 714


வல்லவர்கள் அமைதியின்முன் வாயைக் கொட்டேல் 715

வழுக்காற்றில் விழுந்தநிலை வாய்த்தல் நன்றோ 716

வல்லவர்கள் முன்விளங்கும் கற்றார் வாக்கு 717

வளர்கின்ற பாத்தியிலே நீர்தெ ளிப்பாம் 718

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லார் நல்ல

புலமையினார் முன்பேசும் புலமை யாளர் 719

நல்லமிழ்தைச் சாக்கடையில்கொட்டல் போலாம்

நாவளரக் கேட்பவர்கள் தம்மார் அன்றேல் 720

73அவை அஞ்சாமை

தொகு

வகையறிந்து வல்லவையில் வளரும் வாய்தான்

வளர்ந்துள்ள தொகையறிவின் தூய வாயாம் 721

வகையறிந்து கற்றாரின் மனத்துள் பாயும்

வகையுரைக்கும் வல்லவர்தான் கற்றார் ஆகும் 722

பகைமுகத்துப் பட்டொழிய அஞ்சா வீரம்

படித்தவர்முன் அஞ்சிப்பின் வாங்கல் உண்டு 723

வகையாகக் கற்றவரும் மதிக்கச் சொல்லி

மாண்பெய்தி மிக்காருள் வளர வேண்டும் 724


வல்லவர்க்கு விடைபகரக் கற்க வேண்டும் 725

மற்றெதற்கு நூலறிவு அவையை அஞ்சின் 726

வில்லென்னாம் வாளென்னாம் பேடி கையில்

மேற்படிப்பால் என்னபயன் சொல்லா விட்டால் 727

பல்லவைதான் கற்றாலும் பயனே இல்லை 728

பயங்கொள்ளின் நல்லார்முன் கல்லார் மேலாம் 729

இல்லாரோ டொப்பரென எண்ணிக் கொள்வோம்

எடுத்துரைக்க அஞ்சுகிற ஏழை தன்னை 730

74 நாடு

தொகு

வளமான விளைச்சலுடன் தக்கார் செல்வர்

வாழுமிடம் நன்னாடு 731 மற்றை நாட்டார்

உளங்கொள்ள உதவுவது நல்ல நாடு 732

ஒண்டுகுடி வந்தேறின் தாங்கும் நாடு 733

களங்காணும் பகையின்றிப் பசிநோ யின்றிக்

காய்ந்தழிக்கும் பிணியின்றேல் நல்ல நாடு 734

பிளவுசெயும் உட்பகையும் குழுக்கள் சேர்ந்து

பிய்த்துண்ணும் கொல்குறும்பும் இன்றேல் நாடு 735


கேடறியாக் கேனுறினும் வளமை குன்றாக்

கெழுதகையார் வாழ்வதுதான் சிறந்த நாடு 736

ஓடுபுனல் பெருகவரும் ஊற்றும் வானும்

உள்ளரணும் உறுப்பாகி ஓங்கும் நாடு 737

சூடுபிணி யின்மையொடு விளைச்சல் செல்வம்

சுகம் காப்பு துணையிருத்தல் அணிகொள் நாடு 738

நாடாமல் வளம்சேர்ந்தால் நல்ல நாடு 739

நல்லாட்சி யும்வாய்த்தால் வல்ல நாடே 740

75 அரண்

தொகு

பொருள்செயலை ஆற்றுநர்க்கும் போற்று நர்க்கும்

புகலிடமாய் அமைவதனை அரணென் பார்கள் 741

வருநீரும் வளமண்ணும் மலைச்செல் வங்கள்

வளர்நிழலும் வாய்க்குமெனில் அரண்மக் கட்காம் 742

அரணுக்கோர் உயர்வகலம் அருமை திண்மை

அமைவதுதான் இலக்கணநூல் அளக்கும் நான்காம் 743

வருபகையின் ஊக்கத்தைச் சிறிய காப்பால்

மடக்கிவிடும் பேரிடமாய் வாய்க்கின் மேலாம் 744


வெலற்கரிதாய் அகத்திருப்போர் உணவுச் செல்வம்

மிகவுடைத்தாய் 745 மேவுபொரு ளெல்லாம் கொண்டு

நிலைகொண்ட காப்புரத்தார் நிறைந்து 746 முற்றின்

நிலைதளரா அறைபோகா நெஞ்சம் கொண்டு 747

மலைவதற்கு வளைத்தாலும் வலிய வந்து

வன்கண்மைப் போரிடினும் வென்று 748 மாற்றார்

நிலையழித்து வீறெய்தி நின்று 749 போரின்

நெறிகொண்டார் காப்பதுவும் அரணென் றாகும் 750

76 பொருள் செயல் வகை

தொகு

பொருளில்லாப்பொருளையெலாம் பொருளாய்ச் செய்யும்

பொருள்நன்று 751 பொருளின்றேல் எள்ளு வார்கள்

பொருளிருந்தால் போற்றிடுவர் 752 போகும் நாட்டில்

புகழ்சேர்க்கும் விளக்காகும் 753 அறத்தோ டின்பம்

வரவளிக்கும் நல்வழியில் பொருள்வந் தாக்கால் 754

மற்றதுவும் அருளன்போ ட்டைதல் நன்றாம் 755

தருவரியும் திறைவரியும் சுங்கம் தந்த

தனிவரியும் வேந்தற்காம் பொருளாம் என்க 756


அருளென்னும் அன்புத்தாய் அளித்த பேறு

அரும்பொருளாம் செவிலியினால் வளர்வ துண்டு 757

பெருங்குன்றின் மீதேறி யானைப் போரைப்

பிரியமுடன் பார்ப்பதுபோல் பொருட்கண் காட்டும் 758

பொருள்செய்க போற்றாரின் செருக்கைப் போக்கும்

போர்க்கருவி பொருளாகும் சிறந்த தாகும் 759

பொருட்புகழின் வயிரத்தில் அறத்தோ டின்பம்

புகுந்தேறும் அதனாலே பொருளைச் சேர்ப்போம் 760

77 படை மாட்சி

தொகு

ஊறஞ்சா வெல்படையோர் உறுப்பாம் வேந்தன்

உடைமைகளில் தலையென்க 761 உலையா தென்க

மாறேற்கும் தொல்படைக்கே வன்கண் உண்டு 762

மறிகடல்நீர் வந்தேறின் வடியும் மீண்டும்

வீறுண்டோ எலிப்பகைக்கு நாகம் பாயின் 763

வேற்றார்மாட் டறைபோகாப் படையே மேலாம் 764

சீறாத எமன்சீறி வந்தால் கூட

சென்றெதிர்க்கும் படையதுவே சிறந்த தென்க 765


மறம்மானம் முன்னேற்றம் தேற்றம் நான்கும்

வன்படைக்குக் காப்பாகும் 766 முன்னே செல்லும்

திறத்தானை சீரழிக்கும் பகையை 767 ஏகும்

செம்மாப்பால் பகைநடுங்கும் திறலின் றேனும் 768

சிறுமையுளம் செருப்பிணக்கு வறுமை சேராத்

திறப்பாட்டால் செம்படைக்கே சேரும் வெற்றி 769

திறமுள்ள படைவீரர் பலரா னாலும்

செந்தலைவன் இல்லாக்கால் செலவே றாதே 770

78 படைச் செருக்கு

தொகு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் மேனாள்

எதிர்த்தவர்கள் கல்தெய்வ மாகிப் போனார் 771

என்னைக்கோர் இலக்குமுயல் போன்றார் அன்று

ஏறுபோல் அஞ்சாத வீரர் காண்க 772

என்னையை எதிர்க்காமல் திரும்பு வாயேல்

ஏதுமுனைச் செயமாட்டான் ஊராண் மையான் 773

என்னைகை வேலில்லை என்ற போதும்

எழில்மார்பில் வேலுண்டு பிடுங்கித் தாக்கும் 774


கூர்த்தகண் இமையாமல் குறியைத் தாக்கும் 775

குத்துவார் புண்நாளும் அணியாய்க் கொள்ளும் 776

சீர்த்தபுகழ் தேடியவன் கழலைப் பூண்டுத்

திரிகின்றான் உயிரவற்குச் செல்லாக் காசு 777

ஆர்த்திறைவன் தடுத்தாலும் பாய்தல் தீரான் 778

ஆருயிரே போனாலும் அடைவான் வெற்றி 779

சீர்த்திறைவன் கண்ணீர்மேல் சாவென் றால்பின்

சென்றிரந்து பெறுவதனில் பெருமை கண்டான் 780

79 நட்பு

தொகு

நண்பர்களின் காப்பிருந்தால் நடக்கும் எல்லாம் 781

நல்நண்பர் நிறைகுடமாம் பேதை நட்பு

கண்குளிரும் நிறைமதியம் தேய்தல் போலாம் 782

கருத்துரைக்க நூல்நயங்கள் வளர்தல் போல

நண்ணியுடன் பழகுங்கால் சிறக்கும் நாளும் 783

நகுதற்கு நட்பன்று தீமை தேய்க்க 784

எண்ணத்தால் உணர்ச்சியினால் இணைதல் வேண்டும் 785

இளித்துமுகம் காட்டுவது நட்பா காது 786


துன்பமுறா வகையுய்த்துத் துன்பம் வந்தால்

துன்பத்தில் பங்கேற்றல் தூய நட்பாம் 787

தன்னுடுக்கை அவிழ்ந்தால்கை தழுவு மாப்போல்

தரமுடையார் நண்பர்க்குத் துணையாய் நிற்பர் 788

பின்னுமவர் தன்நண்பர் கொடிவந் தேறப்

பிணைகொம்பாய் நேர்நிற்பர் ஒல்லும் வாயில் 789

தன்கிழமைப் பெருமையினைச் சாற்ற மாட்டார்

தரம்சிறிதாய்ப் போகுமெனத் தன்னுள் கண்டார் 790

80 நட்பு ஆராய்தல்

தொகு

ஆராய்ந்து பார்க்காமல் நட்பு கொண்டால்

அதன்விளைவு கேடாகும் வீடும் போகும் 791

ஆராய்ந்துள் ஆராய்ந்து கொள்ளாக் கேண்மை

ஆவிபோம் வரையிலுமே துயரம் சேர்க்கும் 792

சீராய குணங்குடிமை குற்றம் செய்யாத்

திருத்தமுற் பழவாழ்க்கை எண்ணிச் செய்க 793

ஊராயப் பழிநாணல் 794 உலகை ஒத்துள்

உறவாட இடித்துரைப்பார் நட்பைக் கொள்க 795


கேடுற்ற போதுதான் நண்பர் கேண்மை

கிட்டிவரும் அஃதளவுக் கோலாய்க் கொள்க 796

பீடுற்ற ஊதியங்காண் பேதை நட்பைப்

பிய்த்துவிடல் 797 கேடுற்றால் பிரியும் நண்பர்

வாடிடினும் விலகிடுக 798 மனத்தில் கொண்டால்

மற்றஃதே சுட்டெரிக்கும் 799 மாசற் றாரை

நாடியே எஞ்ஞான்றும் கேண்மை கொள்க

நமக்கொப்பாய் நடவாரை ஒதுக்கி வைப்போம் 800

81 பழைமை

தொகு

கிழமையெனும் உரிமையினைக் கீழ்மை செய்யாக்

கெழுதகைமை யதனைநாம் பழமை என்போம் 801

பழைமைதான் நட்பினுக்குள் உறுப்பாம் என்னில்

பாடுபெற உப்பாதல் வேண்டும் சான்றோர் 802

பழகியதோர் நட்பதனால் வருவ தென்ன

பழவுரிமை கொண்டுதவிக் கொள்ளா விட்டால் 803

விழைதகையால் செயின்நண்பர் விரும்பி ஏற்பர் 804

வேண்டாத செய்தாலும் உரிமை என்பர் 805


தொல்லையிலே உழல்கின்ற தோழர் தம்மைத்

துறவாமல் மருவிவரும் பழைமை நட்பு 806

இல்லாத அழிச்சாட்டம் செய்த போதும்

ஈரங்கொண் டன்புறுவர் 807 நண்பர் கேட்டைப்

பொல்லாங்காய்க் கருதுபவர் புன்மை செய்தால்

பொல்லாத நாளென்பர் 808 புரிந்த கேண்மை

வல்லாறாய் வழிவழியாய் மலரும் 809 வாய்க்கின்

வளர்கின்ற நற்பண்பில் மாற்றம் இல்லை 810

82 தீ நட்பு

தொகு

பருகுநீர் போலிருந்து பல்நஞ் சாகும்

பண்புடையார் நட்பிருந்தால் குன்றல் நன்று 811

அருகிருப்பார் பணமிருந்தால் அதுபோய் விட்டால்

அறுந்துபோய் விலகிடுவார் அவரோ நண்பர் 812

வருபயனைச் சீர்தூக்கும் நண்பர் கள்வர் 813

வாம்குதிரை படைநடுவில் ஏமாற் றல்போல்

உருவியே நழுவிடுவார் ஓர நண்பர் 814

ஒருபோதும் பாதுகாப் பாதல் இல்லை 815


பேதையரின் நட்பைவிடப் பகைவர் நட்பைப்

பேசிடலாம் கோடிநலம் தருவ தென்றே 816

வாதுநகை நட்பினரின் பகைவர் நட்பு

மாப்பத்துக் கோடியுறும் விலக்கற் பாற்றாம் 817

பாதிநிலை செயல்கெடுப்பார் விலக்கற் பாலார் 818

பகருரையும் செயல்முறையும் வேறு பட்டால்

ஏதுமிலாக் கனவினிலும் இன்னா 819 வீட்டில்

இன்னுரைசெய் தவைபழிப்பின் எறிக நட்பை 820

83 கூடா நட்பு

தொகு

வாய்ப்புவரின் நண்பர்மேல் ஏறிக் கொள்வார் 821

மருவிடுவார் விலகிடுவார் வரைவில் லாள்போல் 822

கூர்த்தபல கற்றிடினும் கொடுமை மாறார் 823

குலவிமுகம் மலர்ந்தினிக்க கொஞ்சிப் பேசி

ஊத்தைமனம் வஞ்சிக்கும் 824 உரைக்கும் சொற்கள்

உள்ளமிலாத் தன்மையரைத் தேர்தல் தீதாம் 825

பார்த்துநலம் சொன்னாலும் பகைகொள் நண்பர்

பளிச்சென்று தெரிந்துவிடும் விலக்கற் பாற்றாம் 826


சொல்வணக்கம் ஒன்னார்கண் வளையும் வில்போல்

சொல்லாமல் பாய்ந்தேறும் நம்ப வேண்டா 827

நல்வணக்கக் கைக்குள்ளேநண்பர்க் கொல்லும்

நாசஞ்செய் படையொடுங்கும் கவனம் வேண்டும் 828

பல்வகையால் தூண்டிவிட்டுப் பார்த்தே எள்ளும்

பகைநட்பு செத்தொழிய விட்டுச் செல்வோம் 829

பொல்விதையால் பகைநண்பர் வந்து விட்டால்

போலிமுகம் காட்டிமனம் ஒன்ற வேண்டா 830

84 பேதைமை

தொகு

பேதைமை என்பதெது துன்பம் வாங்கிப்

பெற்றுள்ள இன்பத்தை விற்ப தாகும் 831

பேதைமையுள் பேதைமையாம் காதல் கொண்டு

பேணியே ஒழுங்கில்லாச் செயலைச் செய்தல் 832

பேதைதொழில் பேணாமை நாண்நார் நாட்டம் 833

பெரிதுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் அடங்காத் தன்மை 834

பேதைமைதன் வாழ்நாளில் ஒருபோ தாற்றின்

பின்னிட்டும் வழிவழியாய்த் துன்பத் தாழ்வான் 835


ஒழுக்கமிலாப் பேதைவினை பொய்யில் சாயும்

ஒண்டடிடினும் புகலில்லை 836 செல்வம் வந்தால்

வழுத்துவார் துய்த்திருக்கப் பசியால் நோவான் 837

மதிமாறக் கள்ளுண்டு களிப்பான் போல்வான் 838

விழுமியதாம் பேதையரின் நட்புங் கூட

விலகுங்கால் இனிதாகும் வேறென் வேண்டும் 839

கழுவாத கால்பள்ளி வைத்தல் போலக்

கனிந்தவர்பால் பேதைபுகின் சீர்மை குன்றும் 840

85 புல்லறிவாண்மை

தொகு

இன்மையுள் இன்மைஎது அறிவில் லாமை 841

ஈவானேல் அறிவில்லான் பெற்றான் பேறாம் 842

தன்னாலே தான்கெட்டுப் போவான் திண்ணம் 843

தன்னறிவே பெரிதென்று மதிப்பான் வெள்ளை 844

முன்னாலே வந்திருந்து கல்லா மூட்டை

முடிச்சவிழ்த்துக் கற்றதையும் முட்டை ஆக்கும் 845

பின்னாலும் குற்றத்தைப் பெருக்கிக் கொள்ளும் 846

பெருங்குற்றம் தனக்குத்தான் செய்து கொள்ளும் 847


சொன்னாலும் காட்டிடினும் செய்ய மாட்டான்

சும்மாவே இருந்தாலும் உலகுக் கெல்லாம்

பன்னாளும் நோயாவான் பார மாவான் 848

பார்க்காத ஒன்றையவன் பார்த்தான் போலத்

தன்னாலே கதைகட்டிச் சாலப் பேசித்

தடம்காட்டி ஏமாற்றும் சாலாப் பொய்யன் 849

மன்னுலகம் உண்டென்றால் இல்லை என்பான்

வையத்தின் பேயாக இவனை வைப்போம் 850

86 இகல்

தொகு

பிரித்துவைத்துப் பிறவுயிரைப் பார்க்கும் பாங்கைப்

பேசிடுவோம் இகல் என்போம் இகல்பண் பன்று 851

பிரித்துவிட எண்ணுபவர் வேண்டாச் செய்தால்

பிரிந்துவிட எண்ணாமல் நன்றே செய்க 852

பிரிவினையாம் கொடுமைநோய் நீங்கி விட்டால்

பின்விளைவு புகழொளியாய் விளங்கக் காண்போம் 853

பிரிவினையால் இகல்போனால் பெருகும் இன்பம் 854

பிரிவினையில் சாயாரை பிய்க்கப் போமோ 855


பிரிவதுதான் இன்பமெனப் பேணும் வாழ்க்கை

பிய்ந்துபோம் உடனழியும் 856 பிரியா எண்ணம்

அரியதொரு மெய்ப்பொருளாம் 857 பிரித்து வைத்தால்

அதன்வழியே பிரிவதுதான் ஆக்கம் என்றால்

பெருகிடுமேல் கேடுதரும் 858 பிரிய நாணான்

பேராக்கம் கேடுதரும் 859 மாறு கோளால்

தெரியாத துன்பமெலாம் தின்னும் சேர்ந்தால்

தேடிவரும் நன்மையெனும் செருக்குத் தானே 860

87 பகை மாட்சி

தொகு

வலியார்மேல் பகையொழிக மெலியார் தன்மேல்

வரின்கொள்க 861 துணையன்பு துய்க்க வாழ்ந்தால்

வலியாரும் மருண்டொழியும் 862 மருவ லின்றி

வழங்காமல் மனமஞ்சின் பகைக்கே மாட்சி 863

சலியாமல் சினங்கொள்ளும் நிறையில் லானைத்

தாக்குவது பகைக்கெளிது 864 தடம்பார்க் காமல்

நலவாய்ப்பை நழுவவிடின் பகைதான் வெல்லும் 865

நன்கெண்ணிப் பகைச்சிறப்பை நாடல் நன்றாம் 866


அடுத்திருந்து கெடுப்பவனைப் பகையாய் நாமும்

அகம்கொண்டு அவன்பகையை வாங்கல் வேண்டும் 867

அடுத்தடுத்துப் பலகுற்றம் செய்துள் நெஞ்சில்

அமையாத சிறுகுணத்தன் பகைவர்க் காக்கம் 868

கெடுவஞ்சப் பகையாளி கிடைக்கப் பெற்றால்

கெடுக்கவரும் பகையாளிக் கின்பம் சேரும் 869

கடுக்கின்ற சிடுமூஞ்சி கல்லான் ஒல்லான்

கவிழ்வானைப் புகழ்வந்து சேர்வ தில்லை 870

88 பகைத்திறம் தெரிதல்

தொகு

பகையேறி விளையாடும் பண்பில் லாமை

பல்லிளிக்க என்றாலும் வேண்டாம் வேண்டாம் 871

நகையேற விளையாடும் சொல்லே ராளர்

நடைப்பகையைக் கொள்ளற்க வில்லாய்ப் பாயும் 872

மிகப்பல்லார் பகைகொள்வான் காப்பில் ஏழை 873

மிளிர்பகையை நட்பாக்கி மேவல் பண்பாம் 874

பகையிரண்டா தன்துணையா ஒன்றைக் கொள்க

பகையிரண்டேல் தமக்குள்ளே அடித்துக் கொள்வர் 875


பகையென்றோ நட்பென்றோ அழிவில் வேண்டா

பக்கதுணை யாய்ப்பகையை மாற்றிக் கொள்க 876

பகைவனிடம் படும்பாட்டைச் சொல்ல வேண்டா

பகைமெலிது என்றெண்ணி அணுகல் தீதாம் 877

பகைச்செருக்கு தற்காப்பால் பட்டுப் போகும் 878

பகையதனை முளையினிலே எளிதாய்க் கொல்க 879

பகைவர்களின் செம்மாப்பைச் சிதைக்கா விட்டால்

பகைமூச்சு விட்டாலும் பட்டுப் போவார் 880

89 உட்பகை

தொகு

நிழல்குளிரில் இன்னாது நீரும் அற்றாம்

நெருங்கியுளே பகையிருந்தால் இன்னா தாகும் (881)

அழிவாளை அஞ்சற்க பகையுள் ளுக்குள்

அமையுமேல் அஞ்சிடுக (882)போக்கா விட்டால்

தழல்மண்ணாய்ச் சுட்டெரிக்கும் (883) தமர்க்கும் துன்பம் 884

தமருள்ளம் பகையானால் சாலாத் துன்பம் 885

உழையிருந்து குழிபறிப்பார் ஒன்ற மாட்டார்

உதவிடினும் தீதாகும் உள்ளம் கொள்வோம் 886


பொன்னோடு செம்பேறில் போற்றல் கொள்ளும்

புணர்ச்சியினால் உட்பகைக்கே பொலிவு சேரும்

பொன்மாற்றுக் குறைந்துவிடும் 887 அரத்தால் தேயும்

பொன்போல எடைகுறையும் குடியும் சாயும் 888

சின்னதுதான் எட்பிளவின் அளவென் றாலும்

சேர்ந்துள்ளே புரையோடும் பகைகே டாகும் 889

பன்னச்சுப் பாம்போடு வாழ்தல் எற்றே

பகையுறவுக் குடிலிருந்து வாழ்தல் அற்றே 890

90 பெரியாரைப் பிழையாமை

தொகு

பொறுத்தமையும் பெரியாரை இகழாத் தன்மை

போற்றுகின்ற செயற்கெல்லாம் தலைமை யாகும் 891

நிறைகொண்ட பெரியாரைப் பேணா விட்டால்

நேர்கின்ற துன்பங்கள் நீக்கப் போமோ 892

பறிபோகும் இன்பங்கள் 893 உயிரை வாங்கும்

படைக்கூற்றம் தன்னைவர வழைப்பார் உண்டோ 894

பொறைவேந்து பெரியார்க்குப் பிழையைச் செய்தால்

புகலில்லை எவ்விடத்தும் போற்றிக் கொள்வோம் 895


தீப்பட்டால் ஆறிவிடும் பெரியார் சீறின்

தீர்ப்பதற்கு வழியில்லை 896 தக்கார் சீறின்

காப்பிட்ட வான்பொருளும் வாழ்வும் போகும் 897

காப்பாற்றும் பெரியாரை மதிக்கா விட்டால்

வாய்ப்புடைய குடிமாளும் 898 வகைமைக் கொள்கை

மாண்பினார் சீறிவரின் வேந்தும் சாயும் 899

மீப்பெரிய சுற்றத்தால் உய்தி இல்லை

மிகச்சிறந்த சீர்பொறையார் சீறி வீழ்ந்தால் 900

91 பெண்வழிச் சேர்தல்

தொகு

பெண்டாட்டி வால்பிடித்துப் பேண வேண்டா 901

பிறர்நகைக்க நாணாகும் செல்வம் போகும் 902

பண்பாட்டி நகைகாட்டக் குனிய நேரும் 903

பாடுபடும் செயல்திறமை படுத்துக் கொள்ளும் 904

பெண்டாட்டிக் கஞ்சிடுவான் எந்த நாளும்

பேணான்காண் நல்லவர்க்கு நன்மை செய்யான் 905

பெண்டாட்டி தோள்தொடவே அஞ்சும் வீரன்

பெருந்தேவர் உலகத்தும் பெருமை கொள்ளான் 906


பெண்சொன்ன படிவழியும் ஆண்மை என்னாம்

பெருநாணப் பெண்பிறப்பே பெருமை என்போம் 907

நண்பர்களின் குறைபோக்கார் நன்மை செய்யார்

நன்னுதலாள் ஆசைவழி நடக்கும் ஆண்கள் 908

திண்பொருளும் சேர்ப்பதில்லை அறமும் செய்யார்

செய்கின்ற செயலெல்லாம் சிறுத்துப் போகும் 909

எண்சேர்ந்த நெஞ்சுரத்தார் எந்த நாளும்

எடுபிடியாய்ப் பெண்வழியில் சேர மாட்டார் 910

92 வரைவின் மகளிர்

தொகு

(திருமணம்இல்லாமல் இன்ன ஆண் என்று இல்லாமல் எல்லா ஆண்களோடும் சேரும் பெண்கள்)

அன்பின்றிப் பொருள்பறிக்க அழகை விற்கும்

ஆய்தொடியார் பசப்பின்பம் அனைத்தும் துன்பம் 911

தன்பயனை மனங்கொண்டு பசப்பும் பெண்கள்

தகவில்லார் அவரின்பம் சார்தல் வேண்டாம் 912

துன்னிருளில் செத்தபிணம் தோய்தல் போலச்

சுகம்தருவார் (913) அருட்செல்வர் அவரைத் தோயார் 914

புன்னலத்தார் பொதுநலத்தார் பக்கம் போகார்

புகழறிவும் மதிநலமும் பூக்கும் மேலோர் 915


அழகியெனும் திமிர்மேலே அழகைக் கூட்டி

அவித்துண்ணும் பெண்களிடம் நலமா கிட்டும் 916

பழகியவர் பலர்நெஞ்சில் படுக்கும் பெண்கள்

பாய்வீழார் நிறைநெஞ்சப் பாங்கு கொண்டார் 917

விழைமகளிர் மாயவலை வீழ்வார் என்றும்

விளைவறிவு விளங்காதார் 918 விளக்கிச் சொன்னால்

தழையாத பூரியர்கள் 919 கவறும் கள்ளும்

சலப்பெண்ணும் திருவேண்டார் சார்வர் தாமே 920

93 கள் உண்ணாமை

தொகு

கள்ளுண்டு களிப்பார்க்கு வெட்கம் இல்லை

காப்பாக வந்தபுகழ் கழன்று போகும் 921

கள்ளுண்டார் சான்றோரின் எண்ணில் வாரார் 922

காத்தீன்ற தாய்முகமும் கன்றிப் போகும் 923

அள்ளுகின்ற கட்டழகி நாணம் என்பாள்

அழகுமுகம் தாராமல் முதுகைக் காட்டும் 924

உள்ளுடைமை தருவார்கள் ஒன்றோ மெய்யின்

ஊறுபுலன் இல்லாராய் ஒழிவர் அந்தோ 925


செத்தவர்க்குச் சமமென்க கள்நஞ் சுண்டார் 926

சேர்ந்தாரும் ஊராரும் சிரிப்பர் பார்த்தால் 927

ஒத்திகைக்கே என்றாலும் ஒதுக்கல் நன்றாம்

உண்பானேல் ஒளிந்திருந்துள் ஊக்கி உந்தும் 928

பொத்திநீர்க் கடிபோனான் ஒருவன் தேடிப்

போவான்கை விளக்காகும் உண்டாற் (ன்+ஐ) காட்டல் 929

பித்தேறிக் களிப்பானைக் காணான் கொல்லோ

பேய்க்கள்ளை உண்ணாமல் வாழுங் காலே 930

94 சூது

தொகு

சூது = வஞ்சனை, கவறு = கவலை, பிளவு, கழகம் = சூதாடுவோர் கூட்டம், முகடி = முகமூடிக் கோள்ளைக்காரி

வென்றாலும் சூதாட்டம் வேண்டாம் வெற்றி

மீன்தூண்டில் இரைவிழுங்கல் போலக் கொல்லும் 931

ஒன்றுவரும் நூறுபோம் சூதாட் டத்தில் 932

உடனாடும் ஆயத்தால் பொருள்கூ றாகும் 933

ஒன்றிவரும் பலசிறுமை உடன்சீர் போகும்

உதவாத சூதைப்போல் வறுமை உண்டோ 934

நன்றென்று கைநம்பிக் கழகம் ஏறின்

நலாற்றின் வந்தபொருள் நலிந்தே போகும் 935


சூதென்னும் முகமூடித் திருடி கவ்வும்

சோற்றுக்கே இல்லாமல் துன்பம் வவ்வும் 936

ஆதியாம் செல்வமொடு பண்பும் போகும் 937

இருள்வந்தா லும்போகும் அல்லல் சேரும் 938

ஓதுகல்வி, வளம், சோறு, கட்டும் ஆடை,

உயர்புகழென் றைந்துமே மாறிப் போகும் 939

வாதையுறும் உனம்பையுயிர் மருவல் போல

வந்ததெலாம் போனாலும் மனம்சூ தெண்ணும் 940

95 மருந்து

தொகு

நோய் = வயிற்றுவலி, தலைவலி போன்றவை. பிணி = தொழுநோய், சர்க்கரை நோய் போன்றவை. கற்றான் = மருத்துவம் கற்றவன், டாக்டர். உழைச்செல்வான் = நோயாளியுடன் இருந்து பேணுபவர். வளி முதலா எண்ணிய மூன்று = 1 பெருமூச்சு, மூச்சுத் திணரல் இல்லாமல் அளவோடு ஓடும் மூச்சு 2 காய்ச்சல் இல்லாமை 3 உதரல் (சன்னி) இல்லாமை, மருந்து = மருவி உந்தும் உணவுப் பொருள் மரு(வு) – வினை, ஒப்பு நோக்குக. மருமகன், மருமகள், து = உணவு. துப்பார்க்கு … குறள்.


வளி, சூடு, தட்பமெனும் உடலின் நாடி

வளர்ந்தாலும் குறைந்தாலும் நோயைச் செய்யும் 941

உளைநோய்க்கு மருந்தொன்றும் வேண்டா உண்ட(து)

உள்செரித்த பின்னுண்டு வாழ்வோ மானால் 942

அளவுடனே உணவுண்டால் வாழ்நாள் நீளும் 943

அரும்பசியில் ஒவ்வாத விலக்கி உண்க 944

உளம்வாய்கள் வேண்டுவதில் மறுத்துக் கொஞ்சம்

உண்பதனால் உடற்கூறு பாடே யில்லை 945


உடல்வாழும் சிறிதளவே உண்டால் இன்பம்

ஒருபிடியாய்ப் பிடித்துவிட்டால் நோய்தான் மிஞ்சும் 946

குடல்செரிக்க மாட்டாமல் கூடின் நோயாம் 947

கொண்டநோய், வந்தவழி, தணிக்கும் ஆறு

அடைவுகளை ஆராய்து மருந்தை ஊட்டல் 948

அளந்தறிக பிணியளவு காலம் உற்றான் 949

இடர்ப்படுவான், மருந்தளிப்பான். மருந்தின் ஆற்றல்,

இருந்தளிப்பான் எனும்நான்கும் மருந்தின் மாட்சி 950

96 குடிமை

தொகு

குடிமை = குடிமகனின் தன்மை குடி = அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெற்றோர் அடங்கிய குடும்பம். குலம் = மாமன், மச்சான், கொழுந்தன், கொழுந்தி ஆகியோருடனும் குலவி வாழும் குடும்பம். இல் = இல்லாள் என்னும் மனைவியோடு வாழும் தனிக் குடும்பம். பெருமாள் குடி சிவன் குடி – என்னும் வழக்குகள் இக் காலத்தில் உண்டு. இந்த வழக்கம் வள்ளுவர் காலத்தில் இருந்ததற்கான சான்று இல்லை. எனினும் பெருமாளை வழிபடும் குடும்பம், சிவனை வழிபடும் குடும்பம் என்று அவற்றைக் குறிப்பிடலாம். இதன்படி ஒழுக்கத்தை வழிபடும் குடும்பத்தை வள்ளுவர் பழங்குடி என்று குறிப்பிடுகிறார் எனலாம்.


நல்லகுடிப் பிறந்தார்க்கு நாணம் செப்பம்

நன்கமையும் இயல்பாக பிறருக் கேறா 951

சொல்லினிலே வாய்மையொடு ஒழுக்கம் நாணம்

சோர்வதிலை மூன்றினிலும் குடியின் மாண்பாம் 952

இல்லாமை காட்டாத நகையோ டீகை

இன்சொல்லும் இகழாத பண்பும் ஓங்கும் 953

நல்லவழி மாறார்கள் கோடி யாலே 954

நல்குநெறி குறைவதிலை வறுமைக் கண்ணும் 955


நப்பாசை யால்சால்பு நலியச் செய்யார் 956

நல்லநிலா மறுப்போலத் தெரியும் செய்தால் 957

செப்பமுடன் வாழுங்கால் நாராம் அன்பு

சீர்கெட்டால் குடிப்பிறப்பில் ஐயம் உண்டாம் 958

உப்பிநிலம் முட்டியெழும் ஊறும் வித்தே

உயர்குடியில் பிறந்தார்வாய் உரையும் அற்றே 959

செப்பிடுவோம் நலம்வேண்டின் நாணம் வேண்டும்

சீர்குடிக்கு என்றென்றும் பணிவே வேண்டும் 960

97 மானம்

தொகு

தன்மான உணர்வு, மானம் கருதக் கெடும் – 1028 – தனக்கென்று பார்த்தால் தன்மான உணர்வு வேண்டும். குடும்பத்திற்குள்ளே தன்மானம் பார்க்கக் கூடாது.

இல்லாமல் வாழ்வில்லை என்றால் கூட

இழுக்குவரின் மானத்திற் கென்றால் வேண்டா 961

வல்லவராய் வாழ்ந்தாலும் சீர்மை குன்றா

வாழ்க்கையதே பேராண்மை 962 பெருக்கம் வந்தால்

சொல்லாமல் பணிவதுவும் சுறுக்கம் வந்தால்

சோராமல் உயர்நெறியில் வாழ்தல் மானம் 963

இல்லாமல் நிலைதவறின் மயிரின் வீழ்வாம் 964

இம்மியும்சீர் வழுவாமை மானக் குன்றம் 965


இகழ்ந்தாலும் வால்பிடிக்கும் வாழ்க்கை என்னாம்

இப்போதும் பிற்பாடும் புகழே இல்லை 966

பகையாளி பின்போகும் வாழ்க்கை என்னாம்

பட்டொழிதல் நன்றாகும் 967 உடம்பைப் பேண

நகைவழியப் பீடழியும் வாழ்க்கை நன்றோ 968

நன்மயிர்மேல் உயிர்வைக்கும் கவரி போல்க 969

இகழ்வுவரின் வாழாத மானம் வேண்டும்

என்றிருப்பார் புகழினையே உலகம் ஏத்தும் 970

98 பெருமை

தொகு

பிறரால் பெருந்தன்மை உள்ளவர் என்று மதிக்கப்படும் தன்மை. அவருக்குப் பெரிய மனசு என்று பேசப்படும் தன்மை. பெருமிதம் = பீடு = பெருந்தன்மையைப் பீத்திக் கொள்ளாமல் கடைப்பிடிக்கும் வைராக்கியம். ஒளி = பிறர் மதிப்பதால் தான் பெறும் வெளிச்சம்.

பெறுமொளியாம் பெருமைதான் பெரிய செல்வம்

பெறாமையால் இளிவரவே வாழ்வில் சேரும் 971

பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் சிறப்பில் ஒவ்வார்

பேணுகின்ற செய்தொழிலால் சிறப்பு மாறும் 972

சிறப்பொன்றும் மேல்குடியால் சேர்வதில்லை

சேர்ந்துவிடும் கீழ்குடிக்கும் செய்கைப் பண்பால் 973

திறல்கற்பும் பெண்மனத்தின் திண்மை யாலே

சேர்ந்துவரும் பெருமையதும் திண்மைப் பண்பால் 974


பெருங்குணமே அருஞ்செயலைப் பேணி ஆற்றும் 975

பெரியாரைப் பேண் உணர்வு சிறியார்க் கில்லை 976

பெருமைசிறி யார்பெற்றால் பெரிய துன்பம் 977

பெருமையெனில் பணிவுண்டு சிறுமை பீத்தும் 978

பெருமிதம் கொள்ளாமை பெருமை யாகும்

பெருமைகொளின் அதுவேதான் சிறுமை யாகும் 979

பெருங்குணமோ பிறர்குற்றம் மறைத்துப் பேணும்

பெரிதாக்கும் சிறுகுற்றம் சிறுமை தானே 980

99 சான்றாண்மை

தொகு

சான்று = எடுத்துக்காட்டு. பிறர் பின்பற்றி நன்மை சேர்க்கும் வகையில் எடுத்துக்காட்டாக நடந்து கொள்வது சான்றாண்மை. சான்றாகத் தன்னைத் தானே ஆளுதல்.

நல்லவை எல்லாமே நாடி செய்தல்

நானிலத்தில் சான்றோர்க்குக் கடமை யாகும் 981

நல்லகுண நலப்பாடு சான்றோர் மாட்டே 982

நாண், அன்பு, ஒப்புரவு, நற்கண் ணோட்டம்

சொல்வாய்மை எனுமைந்து தூண்மேல் நிற்பர் 983

சொல்லாமை பிறர்தீமை அவர்க்கே சாலும் 984

கொல்லவரும் பகைதிரும்பும் பணிவுச் சால்பால் 985

கொண்டிடுவார் தோல்வியினைத் தோற்பார் மாட்டும் 986


இன்னாசெய் தார்க்குமிவர் இனிதே செய்வார்

என்னபயன் சால்பதனால் இதுசெய் யாக்கால் 987

இன்மைநிலை இழிவன்று சால்பாம் தன்மை

இருக்கின்ற த்துபோதும் எல்லாம் உண்டாம் 988

தன்னூழே தாக்கிடினும் சால்பில் குன்றார்

தனிவயிரம் சால்பிற்குச் சான்றோர் அன்றோ 989

அன்னபெருஞ் சான்றவர்தன் நிலையில் குன்றின்

அசைந்துருளும் நிலவாழ்வு நிலைகொள் ளாதே 990

100 பண்புடைமை

தொகு

பண்பட்ட நெஞ்சையும், சொல்லையும், செயலையும் உடைமையாகக் கொள்ளல்

எண்ணத்தின் பண்பாட்டால் எளிதாம் பண்பு 991

ஈரமனம் குடிப்பிறப்போ டிணையும் பண்பு 992

வண்ணவுறுப் பொத்தவர்கள் உலகில் இல்லை

மனப்பாங்கில் ஒத்தநிலை பண்பில் வாழும் 993

பண்ணியதோர் நயன்றிந்து நன்றி செய்து

பயன்காண்பார் பண்பினையே உலகம் போற்றும் 994

எண்ணிகழ்ச்சி நண்பருளும் இன்னா, பண்போ

இகலியெழும் பகையுள்ளும் நன்மை செய்யும் 995


பண்புடையார் வாழ்வதனால் உலகம் வாழும்

பண்பின்றேல் மண்ணாகும் 996 அறிவின் கூர்மை

பண்பின்றேல் பயனின்றாம் அறிவுப் பல்லின்

அரம்வீழ்த்தும் மரமாவர் 997 நயன்செய் யாமல்

நண்பாற்றார் என்றாலும் நலம்செய் பண்பை

நாடாதார் கடையாகும் 998 பகலி ருட்டாம்

பண்பில்லாக் குருடர்க்கே 999 பெற்ற செல்வம்

பால்கலத்தின் தீதேறித் திரிந்தாற் போலாம் 1000

101 நன்றியில்செல்வம்

தொகு

உதவிப்பயன் இல்லாத செல்வம், ஈத்துவக்கும் இன்பம் துய்க்காத செல்வம்

வைத்திருக்கும் பெருஞ்செல்வம் துய்க்கா விட்டால்

வாழ்வேது செத்தாருள் வைத்துக் கொள்வோம் 1001

பைத்தியமாய்ப் பொருள்சேர்க்கும் மருளாம் கஞ்சம்

பண்பில்லாப் பிறப்பாகும் 1002 பணம் பதுக்கும்

சைத்தானால் மக்கட்கே சுமையே மிஞ்சும் 1003

தனக்குப்பின் அவனெச்சப் புகழ்யா ருக்கோ 1004

கைத்திருக்கும் பொருள்கொடுத்துத் துய்க்கா விட்டால்

காத்திருக்கும் பலகோடி தந்த தென்ன 1005


தக்கார்க்குக் கொடுத்துதவித் தான்துய்க் காத

தனியுடைமைச் செல்வத்தால் தாக்கும் துன்பம் 1006

அற்றார்க்கொன் றீயானேல் அழகி மீப்பே 1007

அவன்செல்வம் நச்சுமரம் போலே கொல்லும் 1008

இற்றழிந்துள் அன்பறமும் இன்றி ஈட்டி

ஈயாத ஒண்பொருளைப் பிறரே கொள்வர் 1009

பெற்றிருக்கும் செல்வத்தை முடங்கச் செய்தால்

பெய்மாரி பெய்யாது வறங்கூர்ந் தற்றே 1010

102 நாணுடைமை

தொகு

இன்பத்துப்பாலில் வரும் நாணுடைமை (நாணுத் துறவு உரைத்தல்) பெண்ணின் இயல்பான நாணப் பண்பைப் பற்றியது. இங்குச் சொல்லப்படும் நாணுடைமை யானது தகாத செயல் செய்வதற்கு ஆணோ, பெண்ணோ நாணுவது பற்றிக் கூறுவது.

நாணுடைமை = கூச்சப்படும் பண்புச் செல்வம்

நாணென்றால் தீமைசெய நாணல்ஆகும்

நன்மகளிர் நாணகுணம் இயல்பே யன்றோ 1011

ஊணுடையோ டெச்சமுயிர்க் கெல்லா முண்டாம்

ஒழுக்கக்கேட் டிற்கஞ்சல் ஒன்றே நாணம் 1012

ஊணுடலை ஒண்டிநிற்கும் உயிர்க ளெல்லாம்

ஒப்பில்லா நாண்நன்மை நோக்கும் சால்பே 1013

நாண்ணியை அணியாதார் பிணிமேற் கொண்டார் 1014

நாணுவார் பழிபிறர், தன்மேலே வந்தால் 1015


நாணமே உலகுக்கு வேலி யாகும் 1016

நாண்பெரிதாம் உயிர்சிறிதாம் நாணுள் ளார்க்கே 1017

வேணவே பிறர்நாணும் செயற்கு நாணா

மிண்டரிடம் அறம்நாணி விலகிப் போகும் 1018

காணவே பிழைசெய்தால் குலந்தான் சாம்பல்

காப்புநாண் கொள்ளாக்கால் நலமே சாம்பல் 1019

நாணமிலா உயிர்வாழ்க்கை பொம்ம லாட்டம்

நாண்கயிற்றில் உயிராடும் நலத்த தாகும் 1020

103 குடிசெயல் வகை

தொகு

குடும்பம் மேம்படச் செயலாற்றும் முறைமை


உழைப்பதுவே ஓய்வென்னும் பெருமைப் பீடு

உடையவனே குடும்பத்திற் குறுதிப் பாடாம் 1021

தழைத்திடவே தனையாள்தல் அறிவின் மாட்சித்

தன்மைகளால் குடிநீளும் 1022 தெய்வ் தானே

அழைக்காமல் வந்துதவும் 1023 அயராப் பாட்டால்

அத்தனையும் நிறைவேறும் 1024 குற்றம் இன்றி

உழைப்பதனால் குடிசெய்யும் ஒருவன் தன்னை

உலகமெலாம் உறவாக்கிச் சுற்றி நிற்கும் 1025


குடும்பமதை முன்வைத்துக் கொள்கை பூண்டு

குடிக்குழைத்தல் நல்லாண்மைக் கோட்பா டாகும் 1026

படைமுகத்துப் பகைதடுக்கும் வீரம் போலப்

பாதுகாப் பான்வழியில் குடும்பம் நிற்கும் 1027

குடிக்குழைக்கப் பருவமிலை சோம்பல் கேடு

குடும்பத்துக் குள்ளேதன் மானம் இல்லை 1028

இடும்பைக்கே கொள்கலமாய் 1029 இடுக்கண் போக்கி

இல்லாளன் குடிசெய்வான் குடிக்கே ஏற்றம் 1030

104 உழவு

தொகு

உழவினிலே உழைப்பதிகம் உண்மை ஆனால்

உலகத்தில் தலையாய த்துவே யாகும் 1031

உழுவாரே உலகத்தேர்க் காணி யாவார்

உழவுணவுக் கெழுவாரை உன்னிப் பார்த்தால் 1032

தொழுதுண்டு பின்செல்வார் மற்றை யோர்கள் 1033

சுழல்குடைகள் நெற்குடைகீழ்ச் சுகத்தைக் காணும் 1034

உழவர்க்கே இரவில்லை இரப்பார்க் கீவர்

உழுங்கையால் உண்டுபிறர்க் கூட்டு வார்கள் 1035


உழவின்றேல் துறவிகட்கும் உணவின் றாகும் 1036

உழும்புழுதி உணங்குவதும் உரமாய் ஏறும் 1037

உழுவதன்மேல் உரம்நன்று களையை வெட்டி

ஊறநீர் பாய்ச்சியபின் காப்பு நன்று 1038

குழையவே முயங்கானேல் மனைவி ஊடும்

கொத்திவிட்டு மிதியானேல் வயலும் ஊடும் 1039

வழியில்லை என்றிருக்கும் மடியற்(ன்+ஐ) காணின்

மணந்திருக்கும் நிலமடந்தை சிரிக்கும் எள்ளும் 1040

105 நல்குரவு

தொகு

நல்கும் உரவு அதாவது கொடுக்கும் வலிமை இல்லாமை. இன்மை, நிரப்பு, நல்குரவு – என்னும் சொற்களால் எங்கு வறுமை குறிப்பிடப் படுகிறது. நல்கூர்ந்தார், துப்புரவில்லார் – என்னும் சொற்களால் வறுமையாளர்கள் குறிப்பிடப் படுகின்றனர். துப்பு என்னும் சொல் உணவு என்னும் பொருளையும், பற்றுக்கோடு, துணை ஆகிய பொருள்களையும் உணர்த்தும் என்பதை அறிவோம். எனவே உணவு உண்ணும் பற்றுகோடு இல்லாதவர் என்று துப்புரவில்லார் என்னும் சொல்லுக்கு நாம் பொருள் கொள்ளலாம்.


இன்மையிலே இன்னாத தெதுவென் போமேல்

இன்மையதே பெருந்துன்பம் மேலொன் றில்லை 1041

இன்மையினால் இப்பொழுதும் இன்பம் இல்லை

ஈகையிலை செத்தபினும் யாரும் போற்றார் 1042

முன்னோரால் வருபுகழும் மொய்க்கும் சுற்ற

முறைமைகளும் அடியோடு கெட்டுப் போகும் 1043

நன்னிலைய குடிப்பெருமை நாச மாகும் 1044

நாடாமல் துன்பங்கள் நடுவில் நிற்கும் 1045


நல்லபொருள் சொன்னாலும் நடுவே றாது 1046

நற்றாயும் பிறன்போலப் பார்க்க வைக்கும் 1047

இல்லையெனும் வறுமைப்பேய் இன்றும் வந்தால்

என்செய்வேன் முன்னடைந்த துன்பம் போதும் 1048

பொல்லாத நெருப்பினிலும் காய்தல் இன்பம்

போக்கில்லா வறுமையிலே எல்லாம் துன்பம் 1049

இல்லாதார் ஏன்வாழ்வார் உப்பும் நீரும்

இருந்துண்பார் அழிப்பதற்கே என்னே வாழ்வு 1050

106 இரவு

தொகு

ஏற்று வாழும் இன்னல் வாழ்க்கை

இருப்பதனை பெற இரக்க ஈயா விட்டால்

ஈயார்மேல் பழிபோகும் 1051 இரத்தல் இன்பம்

இரந்தபொருள் துன்பமின்றிக் கிட்டு மானால் 1052

இரப்பதிலும் அழகுண்டாம் ஈயும் வள்ளல்

கரப்பின்றி ஈவாரேல் (1053) கனவில் கூடக்

கரவாதார் முன்னிரத்தல் ஈகை போலாம் 1054

கரவாதார் வையத்து வாழ்வ தால்தான்

கையேந்திக் கெஞ்சிடுவார் உலகில் உண்டே 1055


நிரப்பிடும்பை எல்லாமே நில்லா தோடும்

நெஞ்சறிந்து மறைக்காமல் நேர்வார் முன்னே 1056

கரந்திகழா தீவாரைக் காணின் உள்ளம்

களிப்பெய்தும் உள்மலரும் 1057 கயிற்றால் பொம்மை

வரும்போகும் அதுபோலே இரப்பார் இன்றேல்

வையத்தில் உயிரியக்கம் மலர்தல் இன்றாம் 1058

இருப்பீவார்க் கின்பமிலை இரப்பார் இன்றேல் 1059

இரப்பவர்கள் வெகுளற்க இன்மை காண்க 1060

107 இரவு அச்சம்

தொகு

பிச்சையெடுத்தல் அச்சம் தரும் செயல் ஆவிற்கு நீர் = தாகத்தால் பேச முடியாமல் ஆ என்று குரல் கொடுத்தேற்கும் பிச்சை நீர் இரவல் வாங்குதல் – (ஆசாரக் கோவை) (இரவு அல்லாமை?)

மறைக்காமல் கொடுத்தாலும் வாங்கா உள்ளம்

வாய்த்திருக்கும் கோடிபெறும் 1061 வாங்கும் வாழ்வை

இறைதந்த தெனின் அவனும் இரந்தே கொள்க 1062

இரந்தின்மை போக்கிடுதல் கொடுமை, துன்பம் 1063

நிறைந்திடமே கொள்ளாத பெருமை என்ன?

நேர்ந்தாலும் இரவெண்ணா நெஞ்சச் சால்பாம் 1064

நிறைவாகத் தன்னுழைப்பால் வந்த சோறு

நீர்க்கீரை என்றாலும் அதுதான் இன்பம் 1065


இரக்குநீர் எனக்கில்லை என் ஆ விற்கே

என்றியம்பும் நாவுக்கும் இழிவே சேரும் 1066
(இரப்பதுவும் நாநனைக்கும் நீர்க்கென் றாலும்
இழிவுதரும் வாய்நாவிற் கென்றே கொள்க) 1066

இரக்கின்றேன் அனைவரையும் இரவா தீமின்

இரப்பீரேல் இருப்பதனை ஒளித்து வைப்பர் 1067

இரப்பென்னும் தோணிபோய்க் கரப்புப் பாறை

இடிக்குமேல் உடைந்துபோம் 1068 இரப்பை எண்ணில்

உருகும்பின் கரப்பெண்ணில் உடையும் 1069 எங்கே

உயிரொளிக்கும் கரப்பவர்வாய் இல்லை என்றால் 1070

108 கயமை

தொகு

கயவரெலாம் மக்களைப்போல் காண லாலே

கள்ளத்தில் அவர் ஒப்பார் கண்டே னில்லை 1071

கயவரறி வுச்செல்வம் நன்று நன்று

கலங்காத நெஞ்சத்தால் தீதே செய்தல் 1072

கயவர்களைத் தேவரெனக் காணல் கூடும்

கண்டபடி விருப்பம்போல் செய்வ தாலே 1073

வயப்பட்ட தீயவர்நேர் வாய்க்கும் போது

மற(று)அவரின் செம்மாந்து கீழ்மை செய்யும் 1074


கயவர்க்கு நினைப்பொழுக்கம் அச்சம் எச்சம்

கண்டாசைப் பட்டபொருள் 1075 பறையைப் போல

நயமறையை உய்த்துரைப்பர் 1076 பல்லு டைக்கும்

நாசத்தார்க் கே ஈவர் 1077 கரும்பைப் போலப்

பயன்படுவர் நசுக்குவதால் 1078 வயிறெ ரிந்தே

பார்ப்பார்கள் குறைகாண்பர் நல்லார் துய்ப்பை 1079

பயன்படுவர் தன்னைவிற்றும் தன்துன் பத்தைப்

பறித்தெறிவர் பிறர்மேலே பாயச் செய்தே 1080

காமத்துப்பால்

தொகு

109 தகையணங்கு உறுத்தல்

தொகு

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா) (தரவு = எருத்தம்)

மனவருத்தம் தருகின்ற அணங்குருவோ, மயிலசைவோ
எனைவருத்தும் மாதர்கொலோ 1081 இவள்பார்வை என்பார்வை
தனைவருத்தும் தானைகொலோ 1082 சாய்விழியின் தனிநோக்கு
தினவருத்தும் கூற்றங்கொல் 1083 தெரியாமல் பார்ப்பவரின்
உயிருண்டுள் அணைப்பதுவோ 1084 உழைமானோ கூற்றமதோ
பயிர்கண்ணோ முகக்கண்ணோ பார்க்கின்றேன் தெரியலையே1085

தாழிசை = இடைநிலைப்பாட்டு

புருவங்கள் படபடக்கும் பூக்கின்ற பொற்பாவை
விருப்பத்தைச் சொல்வதனால் வேதனையைத் தாராதே 1086 1
யானைமுகத் துணிபோலே இவளிரண்டு மார்பகத்தைத்
தானையினால் மூடிடுவார் தாம்கண்ட பயன்யாதோ 1087 2
என்கண்முன் போர்முனையில் எல்லாரும் தோற்றோட
மின்கண்ணாள் இவள்முன்னே விழுந்தேனே தோற்றேனே 1088 3

தனிச்சொல் = இடைநிலை = கூன்

ஆதலினால்,

ஆசிரியச் – சுரிதகம் = அடக்கியல் = வாரம் = வைப்பு =போக்கியல்

மானின் மருட்சி வருநாண் அணியிருக்க
ஏனிவட் கொப்பனை 1089 இன்பம் கள்ளில்
தானுண் டார்மேல் தங்கும்
மானிவட் கண்டால் காமம் மடக்குமே 1090

110 குறிப்பறிதல்

தொகு

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா தரவு

இவளுடைய கண்களிலே இருநோக்கம் ஒருநோக்கம்
தவநோயைத் தருவதெனில் தணிப்பதுவும் மறுநோக்கம் 1091
கண்ணாலே திருடுகின்ற காதல்நெறி (காதனெறி) விளையாட்டு
பண்ணுகின்ற பாங்கினிலே பாதியையும் மிஞ்சியதே 1092
நோக்கியவள் குனிகின்றாள் நுவள்கின்றாள் ஒப்புதலை 1093
நோக்குங்கால் நோக்காமல் நோக்காக்கால் நோக்குவதே 1094

தாழிசை

நோக்குவதும் ஓரக்கண் நொடிப்பதுவும் ஒப்புதலே 1095
வாக்காலே மறுப்பதுவும் மனம்குளிர்ந்த ஒப்புதலே 1096 1
சினமின்றி வாய்பூத்துச் சிலமொழியும் சிறுசொல்லும்
தனக்குள்ளே ஒப்புதலைத் தந்துவிட்ட சிறுகுறிப்பே 1097 2
நான்பார்த்தால் அவள்பார்க்கும் நப்பாசைப் பார்வையிலே
தான்வந்து குடியேறும் சல்லாபப் பேரழகே 1098 3

தனிச்சொல் இனி, வெண்பாச் சுரிதகம்

தெரியா தவர்போல் தெரிந்திணைந்த காதல்
இருவரின் பார்வை இருக்கும் இதமாய்1099
இருகண்ணின் பார்வை இணைந்துவிட்டால் வாய்ச்சொல்
ஒருபயனும் இல்லை உணர் 1100

111 புணர்ச்சி மகிழ்தல்

தொகு

கலிவெண்பா

அவளைநான் கண்டேன் அவள்வாய்ச்சொல் கேட்டேன்
அவள்தேனை உண்டேன் அதன்மணத்தை மோந்தேன்
அவள்மேனி தோய்ந்தேன் அருமையடா ஐந்தும் 1101
அவள்தந்த உள்நோய்க் கவளே மருந்தாம் 1102
இருக்கிறதா வானுலகம் என்னே இவளணைப்பில்
தூங்குதற்கு மேலே சுகம்தருமோ 1103 விந்தையடா
நீங்கில் சுடுதல் நெருங்கில்குளுகுளுப்பாய்ப்
பற்றும் பதத்தீயைப் பாவையிவள் வாங்கியது 1104
எற்றே இவளின்பம் எண்ணம்போ லே இனிக்கும் 1105
தொட்டால் உயிர்தழைக்கும் தோன்றா அமிழ்தமிவள் 1106
தொட்டுழைத்த சோறுபோல் சொல்லடங்கா இன்பவுடல் 1107
கட்டிஅணைக்கையிலே காற்றிடையில் வேண்டாமே 1108
விட்டு விலகல் விருப்பம் உணர்ந்தணைத்தல்
சேர்ந்தவர்கள் வாழ்வில் செழித்து விளைகாமம் 1109
கூர்ந்தறிவார் நோக்கினிலே கொள்ளைகொள்ளை யாய் அறிவு
மீந்திருக்கு மாபோலே வேண்டும் இவளணைப்பில்
மேய்ந்திருக்கும் இன்பம் மிகுந்து 1110

112 நலம் புனைந்து உரைத்தல்

தொகு

(அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா)
(அம்போதரங்கம் என்னும் உறுப்பினைப் பெற்றிருக்கும் கலிப்பா) அம்பு = நீர், தரங்கம் = அலை
அம்பு + தரங்கம் = அம்போதரங்கம், - வடமொழிப் புணர்ச்சி. நீரலையானது தோன்றிய இடத்திலிருந்து உயரம் குறைந்துகொண்டே செல்வது போல் அடியின் நீளமானது குறைந்துகொண்டே செல்லும் பாடற்பகுதி. மேலும் அலையின் நீளமானது போகப போக கூடிக் கொண்டே செல்வது போல அடியின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்லும் பாடற்பகுதி.
இவற்றை முறையே பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் என்று பெயரிட்டு வழங்குவர்.
பேரெண் – 4 சீர்கொண்ட ஈரடிப் பாடல் 2 அமைவது. அல்லது குறட்பாக்கள் 2 அமைவது.
சிற்றெண் – 4 சீர்கொண்ட ஓரடிப்பாடல் 4 அமைவது இடையெண் – 2 சீர்கொண்ட அடிகள் 8 அமைவது.
அளவெண் – ஈரசை அல்லது மூவசைகொண்ட சீர் ஒன்றும் அசைச்சீர் ஒன்றும் சேர்ந்து ஓரடியாகி 16 அடிகளைக் கொண்டு அமைவது
2, 4, 8, 16 எண்ணிக்கை வரையறை அன்று. இயல்பான விரிவு. எண் உறுப்பு குறைவதும் உண்டு.
அம் + போது + அரங்கம் – தமிழ் நெறிப் புணர்ச்சி
= அழகிய பூவரங்கம்
தரவு

மலர்மணத்தை முகர்ந்தாலே வாடிவிடும் தன்மையதாய்
நிலைதளரும் நீர்மையுடை அனிச்சமெனும் மென்மலரே
என்னவளோ யான்கசக்க இனிதாக மலர்கின்றாள்
பின்பிரிய வாடுகிறாள் பெச்சீர்மை பெரிதன்றோ 1111

தாழிசை

மலர்கண்டால் இவள்கண்ணாய் மயங்குகிற என்நெஞ்சே
பலர்கண்டால் பார்த்திடுமோ பாவையிவள் கண்நெஞ்சே 1112

பார்வை 1

மாந்தளிரின் மெல்லியதாம் மற்றிவள்தன் பொன்மேனி
காந்தாமல் முதிராமல் கனியாகும் நன்மேனி1113 – 1

தொடு புலன் 2

மெல்லீரம் உள்ளிருக்கும் வெண்முத்தே இவள்வாயில்
நல்லீர அமிழ்தூறும் நகைமுத்திற் கிணைநீயோ 1113 – 2

சுவை 3 அம்போதரங்கம் பேரெண்

நஞ்சும் அமிழ்தாம் நறுமணம் உடலில்
கொஞ்சும் வெறியைக் கூட்டிக் குலவும் 1113 – 3

முகர்வு 1

கருத்த கருவிழி கலவியால் செந்நிறம்
பொருதவேல் உண்கண் பொருவும் நிறமால் 1113 – 4

பார்வை 2 சிற்றெண்

மூங்கிலைப் போல மொசியும் தோள்கள் 1113 – 5 1
குவளை கவிழக் குலவும் கண்கள் 1114 2
அனிச்சச் சுமையால் ஆடும் மெல்லிடை 1115 3
மதியா முகமா மயங்கும் விண்மீன் 1116 4

இடையெண்

குறையாத மதியம் நீ 1
கூடும் கலைமுகம் நீ 2
நிறைந்த முழுமுகம் நீ 3
நெஞ்சில் நெளிமுகம் நீ 4
மறையாத வாள்முகம் நீ 5
மாதர் வளர்முகம் நீ 6
சிறைவை திருமுகம் நீ 7
தேடாத் தெளிமுகம் நீ 1117 8

அளவெண்

மாதரும் நீ 1
மதியமும் நீ 2
காதலும் நீ 3
கலையும் நீ 4
ஒளியும் நீ 5
உவப்பும் நீ 6
வல்லையும் நீ 7
வனப்பும் நீ 8
முகமும் நீ 9
அகமும் நீ 10
விடலும் நீ 11
தொடலும் நீ 12
வாழியும் நீ 13
மேழியும் நீ 14
போன்மையும் நீ 15
பூவும் நீ 1118 16

தனிச்சொல்

என்றெல்லாம்

சுரிதகம்

சொல்லி மகிழ்ந்தான் சுடர்மதியம் தோற்றதென்றான் 1119
மெல்லன்னத் தூவி அனிச்சம் நெருஞ்சியென்றான்
நல்லடியை நாடுகின்ற நாள் 1120

113 காதல் சிறப்பு உரைத்தல்

தொகு

வண்ணகம் தழுவிய கொச்சகக் கலிப்பா
தரவு
அவன் உரை

பாலோடு தேன்கலந்து பருகுவது பணிமொழியின்
வாலெயிறு வழிசுவையை வாய்மடுத்தல் போலினிதாம் 1121
உடலோடும் உயிர்ஃக்கென்ன உறவதுவே என்றனுக்கும்
மடந்தைக்கும் இடையோடி மலர்கின்ற நட்பாகும் 1122
கருத்துள்ளே காதலியைக் காட்டுகிற கண்பாவாய்
வருத்துகின்ற என்னவட்கு வாழிடம்தந் தொதுங்கிவிடு 1123

அராகம் = வண்ணம் = அடுக்கியல் = முடுகியல்

உயிருடை எனதுயிர் உடனுறை நிலையென
நயமொடு மனமொடு உடலொடு நணுகினள்
அவள்விடில் எனதுயிர் உடல்விடும் அதுசொல
எவர்மனம் இடந்தரும் இனைதரு மறையே1124

தாழிசை

மறந்திட்டால் அவள்குணத்தை மறுபடியும் நினைத்திடலாம்
மறந்திடவே முடியலையே வளர்கின்றாள் மனத்துள்ளே 1125 1

அவள் உரை

கண்ணுக்குள் போகாமல் கண்நின்றும் உருத்தாமல்
நுண்ணியராய்க் காதலவர் நுழைந்துருப்பார் கண்ணுள்ளே 1126 2
மையிட்டுக் கண்ணெழுதேன் கண்ணுக்குள் வாழ்பவரின்
மெய்யழகை விழுங்கிடுமோ என்கின்ற வேட்கையினால் 1127 3
சுடச்சுடவும் தின்பதிலை தோள்மேலார் நெஞ்சுள்ளார்
படப்படென வேகுமெனும் பான்மைசேர் பயத்தாலே 1128 4
கண்ணிமைக்கும் போழ்தினிலே கருவிழியில் மறைவதனால்
பண்ணிருத்தி வாயாலே பகைநண்பர் என்பாரே 1129 5

தனிச்சொல்

எனவாங்கு

சுரிதகம்

மகிழ்வுடன் நெஞ்சுள் மணக்கும் மன்னரை
இகந்து பிரிந்துளார் என்ப
நகையொடு நாணி நடுக்குறும் நெஞ்சே 1130

114 நாணுத்துறவுரைத்தல்

தொகு

கருமத்தால் நாணுதல் நாணு – என்பது திருக்குறள். தகாத செயல் செய்வதற்கு நாணுவதே இது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய நாணம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்களிடம் இயல்பாக அமைந்துள்ள பண்புகள். இவற்றுள் நாணம் கொள்ளும் நளினத்தால் பெண்கள் ஆண்களைக் கவர்கின்றனர்.
கரும நாணமுடைய அவனும், கவிழும் நாணமுடைய அவளும் இயற்கையின் தாக்கத்தால் இணைந்து விட்டனர். உடலாலும் உள்ளத்தாலும் ஒன்று கலந்து விட்டனர்.
இதற்கு உற்றாரும் பெற்றாரும் ஒப்புதல் தரவில்லை. அவன் தன் நாணத்தை விட்டுவிட்டு மடல் ஏறத் தீர்மானிக்கிறான்.
மடல் என்பது பனை மட்டை. மா என்பது குதிரை. பனை மட்டையால் செய்த குதிரையை மடன்மா என்பர்.
இக்காலத்துப் பொய்க்கால் குதிரை ஆட்டம் மடல்மா ஏறும் வழக்கத்தில் மருவி வந்த விளையாட்டு.
மடல்மாவை இடுப்பில் கட்டிக் கொண்டு அதனைப் பொந்க்கால் குதிரையைப் போல் ஆட்டிக் கொண்டே காதலன் வருவான். அவன்மேல் உள்ள துணியில் காதலியின் உருவமோ, பெயரோ எழுதப் பட்டிருக்கும்.
மடன்மாவை ஆட்டும்போது பனை மடலின் கருக்குகள் கிழிக்கும். இரத்தம் ஒழுகும். அவனது வேதனையையும், படத்தையும் பார்த்து ஊரார் நிலைமையை உணர்ந்து கொள்வர்.
காதலரை இணைத்துத் திருமணம் செய்து வைப்பர்.
திருக்குறளில் அவன் மடலேறுவேன் என்று பேசுகிறான்.

வெண்கலிப்பா
வெண்டலையும், கலித்தளையும் விரவி வந்து வெண்பாவைப் போல் கடைசிஅடி மூன்று சீர் கொண்டு முடிவது – யாப்பருங்கலம் நூற்பா 85 உரை விளக்கமும் மேற்கோள்களும்

அவளைநான் அடையாத அருங்காம வேதனையால்
துவளுகிறேன் மடலேறத் துடிக்கின்றேன் வழியதுவே 1131
என்னுயிரும் என்னுடலும் என்னமோ போலிருக்க
முன்னிருந்த நாண்விட்டு முடிவெடுத்தேன் மடலேற 1132
நான்கொண்ட நாணுடைமை நல்லாண்மை போனதென்ன
ஏன்காமம் வந்துமடல் ஏறுகநீ என்பதென்ன 1133
காமமெனும் காட்டாற்று வெள்ளமிரு கரைபுரண்டால்
தாமாக நல்லாண்மை தருநாணம் போனதென்ன 1134
பூமாலை பொன்வளையல் போட்டிருப்பாள் என்மாலை
காவெருக்கம் பூவாக்கிக்கருக்குமா தந்தாளே1135
நாளைக்கு மடலேறப் போகின்ற நப்பாசை
மாலையிர வெல்லாம்கண் மடியாமல் வாழ்கிறதே 1136
கடல்போல் அலைமோதும் காமமவட் கிருந்தாலும்
மடலேறாப் பெருந்தகைமை மகளிர்க்கே வாய்த்ததுவே 1137
தாங்கமுடி யாதபெரும் தடுமாற்றம் கொண்டெனை
வீங்கியெழுங் காமமதுவிரிக்கிறதே மன்றினிலே 1138
மற்றவர்க்குத் தெரியாதென் றெண்ணியது மடலேறிச்
சுற்றிவந்து தெருவெல்லாம் சோர்ந்துள்ளம் மருண்டியதே 1139
எனைக்கண்டே எள்ளிடுவார் யாம்படுமோர் பாடறியார்
பனைமாவைப் பார்ப்பதுவோ பாங்கு 1140

115 அலரறிவு உறுத்தல்

தொகு

காமம் வெளிப்படுதலை அலர் என்றும், கௌவை என்றும் கூறுவர். மறைவான உடலுறவு பற்றி மற்றவர் அறிய நேர்வதுதான் அது. அவனோ, அவளோ தன் ஏக்கத்தையும், சோக்கத்தையும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்துவதால் அது நிகழும்.
பூவின் மணம் போலச் சிலர் மட்டும் அறியின் அது அலர்.
ஊரெல்லாம் அறிந்து, ஊர் மக்கள் உள்ளங்களை யெல்லாம் கவ்விக் கொள்வது கௌவை.
வெளிப்படையாகப் பேசாமல் மறைமுகமாகப் பேசப்படுவது அலர். வெளிப்படையாகப் பலரால் பேசப்படுவது கௌவை.
அலரை அறிவுறுத்தல் என்றும், அலர் அறிவு உறுத்துகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிவுறுத்து – அறிவுறுத்தல் – இதில் உறு என்பது துணைவினை. உறுத்து என்பது முதல்வினை ஆயின் உள்ளத்தைத் துன்புறுத்தல் என்று பொருள்.

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
தாழிசைகள் மூன்று வருவது இயல்பு. பல வருவது பஃறாழிசை. மொழியில் கொச்சைமொழி உண்டு. அதுபோலக் கலிப்பாவில் கொச்சைப் பட்டுக் கிடப்பது கொச்சகக் கலிப்பா – யாப்பருங்கலம் நூற்பா 85

தரவு

எங்களது மறையுறவின் றெங்களது துடிதுடிப்பால்
பொங்கியெழக் கண்டவர்கள் புகல்கின்ற அலராலே
தங்கிடுமால் எங்களுயிர் தழையுமுற வாதலினால் 1141
எங்குண்டோ அந்தமலர் இதோவுண்டே அவள்கண்ணில்
அவளருமை தெரியாமல் அலர்தூற்றும் ஊர்வாயால்
எவருக்கு நன்மையென இவர்களுக்குத் தெரியலையே 1142

தாழிசை

ஊரறிந்த கோவைச்சொல் உண்மையென மலரட்டும்
சீரறிந்த செம்மைச்சொல் சேர்ப்பிக்கும் எங்களையே 1143 1
பலருரைக்கும் கோவையினால் பாலிக்கும் காமலை
இலையென்றால் காமத்திற் கெங்குண்டோ இன்பநிலை 1144 2
களியாட்டம் தன்னளவில் கண்டவர்க்குக் கள்ளின்பம்
வெளியாட்டக் கௌவையினால் மேவுவதே பேரின்பம் 1145 3
நிலாமுகத்தில் பாம்பைப்போல் நிழலுண்மை ஊரறியும்
நிலைபோலே மறையொருநாள் நிற்கும் அலர் நெடுநாளே 1146 4
அன்னைசொல் நீர்ஊற்ற அறி ஊர்சொல் எருப்போட
தன்னாலே தழைக்கின்ற காமநோய் தகவுடைத்தே 1147 5
நெய்யூற்றி நெருப்பணைக்கும் நெறிபோலே காமத்தைச்
செய்யூற்றுக் கௌவையால் சேர்ந்தணைப்பர் பொல்லாதே 1148 6

தனிச்சொல்

அதனால்,

சுரிதகம்

பிரியேன்நான் அஞ்சாதே என்றார் பிரிந்தார்
வரியும் அலருக்கு மாழ்குவதோ நாணி 1149
எமக்கிந்தச் சொல்வேண்டும் இன்றவர் வந்து
தமக்கின்பம் கொள்க தணித்து 1150

116 பிரிவு ஆற்றாமை

தொகு

குடும்பத்தைப் பொருளீட்டிக் காப்பாற்றும் பொறுப்பை ஆண் மகன் பெற்றிருந்தான். எனவே காக்கும் கடமையை நிறைவேற்ற அவன் பிரிய வேண்டியதாயிற்று. தண்ணீர் சுட்டால் ஆற்றிக் கொள்வது போல ஆணின் பிரிவைப்பெண் ஆற்றிக்கொள்வதுதான் இயல்பு. ஆனால் இன்னும் திரும்பவில்லையே என்று துடிப்பதும் இயல்புதானே. இதுதான் பிரிவாற்றாமை.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தரவு

பிரிந்துசெல்வ தில்லையென்றால் பேசிடுக பிரிவுண்டேல்
பிரிந்தபின் உயிரிருக்கும் பெண்ணிடத்துப் பேசல்மேல் 1151
இன்பொழுகும் பார்வையினால் இவர்கட்டிப் போட்டாலும்
துன்பிருக்கும் பிரிவதிலே சுழன்றிருக்கும் உடலுறவில் 1152
விட்டகலேன் என்றுரைப்பார் விட்டென்னைப் பிரிந்திடுவார்
அட்டப்பொய் நம்புவதோ அரிதரிதே இவர் உறுதி 1153

அராகம் = முடுகியல்

உடலுற வதிலுயிர் உரசிட இணைகையில் ஒருமுறை பலமுறை
இடைபிரி யலனென இதனையும் நம்பிய என்குறை என்னசொல் 1154

பேரெண்

காப்பாற்றிக் கொள்வதெனில் காதலன்போய்ப் பிரியாமல்
காப்பாற்றிக் கொள்வதுவே பிரிந்திட்டால் கைவிடலாம் 1155 1
பிரிந்துபோய்ப் பொருள்கொண்டு பின்மீள்வேன் என்பாரேல்
அரிதன்றோ நப்பாசை அவர்வரவு மெய்யெனலே 1156 2

தாழிசை

பொருள்துறையில் அவரின்று போனதனால் கைவளையல்
அருள்துறையை நாடுவதாய் அகன்றென்னைத் தூற்றிடுமே 1157 1
உறவினர்கள் இல்லாத ஊர்வாழ்தல் துன்பந்தான்
இறைகொண்ட இனியவரின் றில்லாமை பெருந்துன்பம் 1158 2
தொட்டால்தான் சுடும்நெருப்பு காமமெனும் துணைநெருப்போ
விட்டாலே உயிர்சுடுமோர் வேதனையும் வியப்பன்றோ 1159 3

தனிச்சொல்

அதனாலே

சுரிதகம்

மற்றவர் போலப் பிரிந்திருந்து வாழேன்நான்
அற்றாளென் றெண்ணி அளி 1160

117 படர் மெலிந்து இரங்கல்

தொகு

கொடி படர்வது போல அவளது நினைவுகள் அவனை நினைத்துப் படருதல்தான் படர்.
மற்றும் படு – படர் – படுதல் – என்ற வகையில் துன்பப்படுதல் என்றும் கொள்ளலாம்.
எனவே படர் என்பது நினைவுத் துன்பம்.
நினைவுத் துன்பத்தால் உடல் மெலிந்து போய், மெலிவு ஊருக்குத் தெரிகிறதே என்று வருந்துதல் இங்குக் கூறப்படுகிறது.

கலிவெண்பா

என்துன்பம் யான்மறைப்பேன் என்றாலும் ஆற்றுமணல்
தன்னுள் இறைக்கும்நீர் தானூறல் போல்மிகுமே 1161
என்நோய் மறைக்க எனக்கே திறனில்லை
முன்நோய்செய் தார்க்கும் மெறையிடும் வக்கிலையே 1162
காமமும் நாணும் காவடியின் தொங்கலைப்போல்
தாமிருபால் தொங்குவதால் தாங்க முடியலையே 1163
காமக் கடலுண் டதனைக் கடப்பதற்கு
ஏமப் புணையில்லை என்செய்வேன் சொல்லுங்கள் 1164
வேண்டியவர் மாட்டும் வெறித்துன்பம் செய்திடுவார்
வேண்டாதார் மாட்டென்ன செய்வார் விளங்கலையே 1165
காமத்தில் இன்பம் கடலளவு என்றெண்ணில்
காமம் சுடுங்கால் கடல்கொள்ளாத் துன்பங்காண் 1165
காமமாம் ஆற்றைக் கடந்து கரையேற
ஏமப் பரிசல் இரவாமோ சொல்வீரே 1167
ஊரையெல்லாம் தூங்கவைத்து உற்றதுணை என்றென்னை
சோராமல் தூங்காமல் சும்மா இராத்தொளைக்கும் 1168
விட்டகன்றார் துன்பத்தின் மேலான துன்பத்தைக்
கொட்டி அளக்கும் கொடிய இரவதுவே 1169
உள்ளம்போல் சென்றவரை ஒட்டிக்கொண் டால்கண்கள்
வெள்ளநீர் நீந்தாவே வேட்டு 1170

118 கண் விதுப்பு அழிதல்

தொகு

விதுப்பு = பார்க்க விரும்பும் படபடப்பு = பரபரப்பு = துடிதுடிப்பு.
இந்தக் கண்துடிப்பால் பயன் விளையாமையால் கண்ணின் நிலையை எண்ணி மனம் அழிதல்.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா தாழிசை

கண்தானே காட்டிற்று கண்ணுள்ளார் முன்னின்றேல்
தண்ணீரை உப்பாக்கித் தானழுவ தென்கொல்லோ 1171 1
எப்படிப்பட் டவரென்றே எண்ணாமல் பார்த்தெடுத்த
தப்பிதத்தை எண்ணாமல் தானழுவ தென்கொல்லோ 1172 2
பாய்ந்தவரைப் பார்த்துவிட்டுப் பக்கமிலை என்றெண்ணிக்
காய்ந்தழு கின்றதொரு காட்சியினால் நகைதருமே 1173 3
கண்ணீரே வறண்டுபோய்க் காய்ந்துருத்தி என்னுயிரை
உண்ணும்நோய் தந்ததுவே உருக்குவதன் மாயமென்ன 1174 4
கடலாற்ற முடியாத காமநோய் தந்துவிட்டுப்
படலாற்றாப் பேரலையால் படபடக்கும் பைதலிலே 1175 5
ஓவோவோ நன்றுநன்று நோய்செய்த ஒய்யாரம்
தாமாக அதில்பட்டுத் தவிக்கின்ற வீறாப்பே 1176 6
வறண்டின்னும் வறண்டுபோய் வக்கற்றே அழுதிடுக
உறைந்தவருள் வாழாமல் உசுப்பியழும் என்கண்ணே 1177 7
பேணாமல் எனைவிட்டுப் பிரிந்திருக்கும் அன்னவரைக்
காணாமல் கலங்குவதே கண்ணுக்குப் பெருஞ்சிறப்பாம் 1178 8

தனிச்சொல்

என்றெல்லாம்,

சுரிதகம்

தன்கண்ணைத் தான்நொந்து தானே அழுகின்றாள்
பின்னும் சிலசொல்லிப் பேதுற் றுளைகின்றாள்
வாராக்கால் துஞ்சா மடநெஞ்சே வந்தபினும்
சோராமல் துஞ்சாமல் தொல்லை தருவதென்ன 1179
என்துன்பம் யான்மறைப்ப என்கண் பறையறைந்து
தன்துன்பம் ஊர்க்குரைக்கும் தான். 1180

119 பசப்புறு பருவரல்

தொகு
  • பசப்பு, பசலை என்பன உடலில் தோன்றும் ஒருவகை மாற்றம். இரண்டு சொற்களும் ஒரே பொருளை உணர்த்துவன.
  • பசந்த, பசக்க, பசந்தாள் – என்று இச் சொல் வினை வடிவிலும் இவ் வதிகாரத்தில் கையாளப் பட்டுள்ளது.
  • நோயும், பசலையும் – என்று கூறப்படுவதால் பசலை என்பது நோய் அன்று என்பது தெளிவாகிறது.
  • பருவ காலத்தில் உடலில் தனிப் பொலிவு தோன்றும். உடலுறவுக்குப் பின் அது மேலும் பொலிவுறும். காதலர் பிரிந்து ஏங்கும்போது உடலின் கட்டழகு குன்றும். உடல் இளைக்கும். இதனைப் பசலை அல்லது பசப்பு என்றஃ கூறினர்.
  • முதல் குழந்தை கைப்பிள்ளையாக இருக்கும்போதே மற்றொரு குழந்தை பிறந்துவிட்டால் இரண்டாவது குழந்தை சவலைப் பிள்ளை. அக்குழந்தை தாயின் பாசத்துக்கு ஏங்கும்.
  • அதுபோல காதலனின் துணை கிட்டாதாஎன்று ஏங்கும் காதலியின் ஏக்கத்தைப் பசலை என்று வழங்கினரோ என்று எண்ண வேண்டியுள்ளது. காரணம், பிரிந்தவர் மேனியில் பச்சை தோன்றுவது இயல்பாகத் தெரியவில்லை.
  • செய்திகளை மூடி மறைப்பதைப் – பசப்புகிறாள் அந்தக் கள்ளி – என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். காதலன் பிரிந்த கவலையைஅவள் பசப்பி மறைத்தாள் போலும். இப்படிப் பாவனையால் பசக்கும் (பாசாங்கு செய்யும்) அல்லது பசப்பும் (நடிக்கும்) மேனியைப் பசலை, பசப்பு என்னும் சொற்களால் குறிப்பிட்டனர் போலும்.
  • பசந்த பண்பு, மேனிமேல் ஊரும் பசப்பு,, என்னும் தொடர்கள் காதலியின் மேனியில் தோன்றும் மாற்றத்தை குறிப்பிடுகின்றன என்பது தெளிவு. மாற்றம் இளைப்பைக் குறிக்கிறது.
  • இளங்குழந்தை == பச்சைக் குழந்தை – இளைப்பு – பசப்பு – இளமை = பசலை - - இப்படி இந்தச் சொற்கள் தோன்றி யிருக்குமோ என்று எண்ணத் தூண்டுகிறது.
  • உடல் நிறத்தை மாந்தளிர் போன்ற மாமை நிறம் என்றும், பசலை நிறத்தை எரிமலர் பீர்க்கம் பூ போன்ற நிறம் என்றும் அகநானூறு குறிப்பிடுகின்றது. – 45. *எண்ணெய் ஊற்றி அகலில் எரியும் தீ மஞ்சள் நிறமாகத் தோன்றும். பீர்க்கம் பூவும் மஞ்சள் நிறம் . எனவே பசலை என்பது மேனியில் தோன்றும் மஞ்சள் நிறம் எனத் தெரிகிறது.
  • கொன்றையம் பசு வீ நம்போல் பசக்கும் – என்று தலைவி கூறுவதாகக் குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது. – 183. கொன்றைப் பூவும் மஞ்சள் நிறம். இது மேலே சொன்ன கருத்தை வலியுறுத்துகின்றது.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தாழிசை

அன்றென்னை அணைக்கவர அகன்றொதுங்கி னேன் பசப்போ
இன்றென்னைத் தின்கிறதே யார்க்குரைப்பேன் அம்மம்ம 1181 1
அவர்விலகிச் சென்றாலும் அளித்துள்ளார் எனப்பசப்பு
கவலைபாய்என்மேனி கவ்வியதே அம்மம்ம 1182 2
மேனியது மெல்லழகும் வெட்கமும் கொண்ட அவர்
தானமாய்ப் பசலை, நோய் தந்தகன்றார் அம்மம்ம 1183 3
மனமெல்லாம் அவர்நினைவு வாயெல்லாம் அவர்திறமை
வனப்பெல்லாம் பசப்பூர்ந்த மாயமென்ன அம்மம்ம 1184 4
இங்கில்லை அங்கில்லை இடையிலதோ செல்கின்றார்
பொங்கிவரும் பசப்பழிவு பொல்லாத தம்மம்ம 1185 5
ஒளிபோன உடனேயே உள்ளேறும் இருளைப்போல்
அளியணைப்பு விலகியதும் பசப்பேறும் அம்மம்ம 1186 6
அணைத்திருந்தேன் புரண்டுவிட்டேன் அவ்வளவில் பசப்பள்ளி
உணத்தொடங்கி விட்டதுவே உருகுகிறேன் அம்மம்ம 1187 7
யான்பசந்தேன் என்றுரைப்பார் எல்லாரும் சொல்லாரோ
தான்துறந்த தன்மையினைச் சற்றெண்ணி அம்மம்ம 1188 8
ஆசைகொளச் செய்த அவர் அகன்றுநல மில்லாரேல்
ஏசட்டும் பசப்பேறி எனைத்தின்க அம்மம்ம 1189 9

தனிச்சொல்

அம்மம்மா

சுரிதகம்

பழியவர்மேல் செல்லாதேல் பசக்கட்டும் மேனியெலாம்
இழிவென்மேல் இருக்கட்டும் என்கின்றாள் பொன்பசலை
பழிநிலையா? பாராட்டா? பார் 1190

தனிப் படர் மிகுதி படர் = நினைவு படர்ந்தோடுதல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா சிந்தியல் வெணபாவாலான தாழிசை

ஆசைப் படுபவர்தன் ஆசை வலைவீழ்ந்தால்
பாசமாம் காம்பஃபழமதில் காழில்லை
நேசம் சுவைக்கும் நிலைத்து 1191 1

காழில் கனி = கொட்டை நீக்கிய பழம்

ஆசையில் வீழ்ந்தாரை ஆசைப்பட் டாரணைத்தால் பாசமழை வாழ்வார் பயிர்செழிக்கப் பெய்ததுபோல்

பேச இனிக்கும் பெரிது 1192 2
காதலைக் கொண்டவரும் காதலில் வீழ்பவரும்
மோதா திணையின் முழுவாழ் வமைந்திருக்கும்
காதல் சிறப்புண்டு காண். 1193 3
காதலிப்பார் காதல் வலைவீழ்வார் யார்நல்லார்
காதல் வலை வீழாக் கல்நெஞ்சர் ஏனென்றால்
நோதல் வருமே நுழைந்து 1194 4
யான் காதல் கொண்டவர்க்கு என்மேல் அதுவின்றேல்
தான்காதல் கொண்டவர்க்குத் தானே அதுவருமோ
ஏன்காதல் வேண்டும் இவர்க்கு 1195 5
காவடியைத் தூக்கின் இருபால் கனம்சமனாம்
தாவிய காமம் தவிக்க மறுப்புண்டேல்
நோவே நுழையும் நுவல் 1196 6
மேனி படபடக்க வெந்துள்ளம் நொந்திருக்க
மானமிலாக் காமன் வளைத்தொருவர் மாட்டிருந்தால்
ஈனம் அவற்கே இயம்பு 1197 7
பருவரல் = பரபரப்பு – உடல்துன்பம் பைதல் = உளத்துன்பம்
யான்காதல் கொண்டவர்வாய் இன்சொல் பெறாதுலகில்
ஏன்வாழ வேண்டும்? இருப்பார் கொடியரே
மேன்மேலும் துன்பம் விழும் 1198 8
அன்றுநான் காதலித்த அன்புருவம் என்றனுக்கு
என்றுமே ஏதொன்றும் ஈயாமல் போனாலும்
வென்றார் நலம்வேண்டு வேன் 1199 9

தனிச்சொல்

எனவாங்கு

சுரிதகம்

காதலனோ காதலியோ காதலிலே கையிகந்து
மோதி மொழிந்த மனக்குமுறல் மொத்துவதால்
காதலலை மோதாத கல்நெஞ்சக் காரருக்குக்
காதலைச் சொல்லிக் கரைந்தால் பயனில்லை
ஓதக் கடலை ஒறுத்தழித்தல் மேலாகும்
ஆதலினால் தன்போக்கில் காதல் அலைவேண்டா
மோதற்க என்றார் முறை 1200

121 நினைத்தவர் புலம்பல்

தொகு

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா தாழிசை

உண்டால்தான் கள்ளினிக்கும் உள்ளம் நினைத்தாலே
உண்டாகும் நல்லின்பம்காம உணர்வுகளால் 1201
காதலரின் காதலிலாக் காலத்தும் தன்நினைவால்
மோதுமொரு இன்பம் முகிழ்த்து. 1202 1
தும்மல் வருவதுபோல் தோன்றிக் கெடுவதனால்
எம்மை நினைத்துவிட்டு ஏதோ நினைப்பார்கொல் 1203
என்னுடைய நெஞ்சில் இருக்கும் அவர் என்னைத்
தன்நெஞ்சில் வைத்துளரோ சாற்று. 1204 2
தன்நெஞ்சில் என்னைத் தரிக்காமல் வெட்கமின்றி
என்நெஞ்சை நாடி இருக்குமவர் நல்லவரோ 1205
வாழ்கின்றேன் ஏனென்றால் பண்டு மணந்தநினை(வு)
ஆள்கின்ற தாலே அறி. 1206 3
எண்ணும்போ தேஉள்ளம் என்னைச் சுடுகிறதே
எண்ணாக்கால் என்னிலைமை என்னாம் தெரியலையே 1207
எப்படிநான் காய்ந்துவந்து எண்ணிடினும் மற்றவர்தாம்
தப்படியும் நோவார்கீண் சால்பு. 1208 4

தனிச்சொல்

எனவாங்கு

சுரிதகம்

உன்னுயிரும் என்னுயிரும் ஒன்றுதான் என்றுரைப்பார்
என்னைப் பிரிந்திருக்க எண்ணும் பகுப்புரையே 1209
என்னை விடாமல் இருக்கின்ற வேறிடத்தை
முன்னின்று காண முழுநிலவே நில்லென்று
பின்னும் புலம்பும் பெரிது. 1210

122 கனவுநிலை உரைத்தல்

தொகு

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா தாழிசை

விட்டகன்ற காதலன் மீண்டுவரும் தூதுரைத்து
விட்டகனீ வுக்கு விருந்துசெயக் கூடலையே 1211 1
என்கனவில்
என்னோ டிருந்தவர் யானிரப்பத் துஞ்சுவரேல்
என்னுயிர் வாழ்தல் எதற்கென்று சொல்லிடுவேன் 1212 2
என்கனவில்
யானவரைக் காண்பதால் என்னுயிர் வாழ்வதனை
ஏனனவில் நல்காமல் என்னை மறைக்கின்றார் 1213 3
என்கனவில்
காமம் வருமேல் கலைந்தபின் நல்காரை
தாமாகத் தேடித் தழுவும் தகைபெறுமே 1214 4
என்கனவில்
கண்ட பொழுதின்பம் காட்டும் நனவினிலும்
கண்ட பொழுதன்றோ கண்ணின்பம் கொண்டிருக்கும் 1215 5
என்கனவில்
என்றும் இருந்துள் இனிப்பார் நனவென்னும்
ஒன்றில்லை என்றால் உவப்பன்றோ எந்நாளும் 1216 6
என்கனவில்
என்னைக் கசக்குதற்கு என்ன உரிமையுண்டு
பின்னனவில் விட்டுப் பிரிந்திருக்கும் காதலர்க்கே 1217 7
என்கனவில்
தோள்மேல் கிடந்தவர் சும்மா நனவினிலே
வாள்போலே நெஞ்சறுத்து வஞ்சனையேன் செய்கின்றார் 1218 8
என்றெல்லாம்

தரவு

தன்கன வின்பம் தறுக்கி மகிழ்ந்தவள்
பின்னூரை எண்ணிப் பெரிதும் கவல்கின்றாள்

தனிச்சொல்

நன்றாமோ

சுரிதகம்

ஊரீர்கேள்
உம்கண்ணில் தென்படாது ஊர்போன காதலர்
எம்கண் கனவில் இருப்ப தறியீரோ 1219
ஊர்கண்ணில் காணா தொதுங்கியென் கண்ணுறங்கும்
நார்கண்ணார் நம்நீத்தார் என்றால் நகைப்பிடமே 1220
ஆர்கண்ணோ நல்ல தறை.

123 (மாலைப்) பொழுது கண்டு இரங்கல்

தொகு

கலிவெண்பா

விட்டகன்ற காதலர் மீண்டுவரா நாள்களிலே
தொட்டலைக்கும் வேலையெனச் சொல்லிடுவேன் மாலையே 1221
கண்ணுருட்டிக் கொண்டணைத்துக் காட்டாமல் சென்றவர்போல்
கண்ணிருட்டும் காரிருள்நின் காதலனோ மாலையே 1222
நீர்ப்பணியோ அன்றி நினைவுப் பனியரும்போ
ஆர்ப்பனிப்பத் துன்பம் அளக்கின்றாய் மாலையே 1223

பனி = நடுக்கம். பனித் தூறல்

காதலர் இல்லாத போழ்து களப்போரில்
ஏதிலார் போல எனைக்கொல்வாய் மாலையே 1224
காலைப் பொழுதிற்குக் காணிக்கை தந்தேனோ
வாலைப் பகையுண்டோ வஞ்சனையேன் மாலையே 1225
என்னுள்ளார் என்னோ டிருக்கிலுன் நோயறியேன்
பின்னளிப்பார் இன்று பிழியாதே மாலையே 1226
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மயக்க மலராவாய் மாலையே 1227

மால்+ ஐ + மயக்கம் – ஆசையாகிய பெருமை மிக்க மயக்கம் ஐ பெற்று ஆகும் – தொல்காப்பியம் உரியியல்ஆயன் குழலோசை யாய்த் தூ தனுப்புகிறாய்

பாயும் நெருப்புப் பழமன்றோ மாலையே 1228
ஊராரைப் பார்த்து மருள்கின்ற உள்ளறிவு
சாரா தலையும் தவிப்புன்னீல் மாலையே 1229

குறளில் – பதி= ஊர், நினைவுப் பதியம் மதி = நிலா, அறிவு பைதல் = மன உளைச்சல்

ஒண்பொருள் தேடி உவக்கின்ற கண்ணாளர்
எண்பொரு ளாகி இருக்கும் உயிராகி
நண்ணி நயந்தூறல் நன்று 1230

குறள் – பொருள் மாலை = பொருள் மேல் மருள் மாலை = ஒளியிருள் மருட்சி, மன மயக்க மருட்சி

124 உறுப்பு நலன் அழிதல்

தொகு

கண் (4) தோள் (5) நுதல் (2) உறுப்புகள் தம் நலத் தன்மையில் அழிந்து போனது பற்றிக் கூறல்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தாழிசை

சிறுமையிலே சீரழியச் செய்தென்னை விட்டுவிட்டு
மறந்துதொலை வானார்பால் மாட்டிமலர் நாணுகின்றாய் என்கண்ணே 1231 1
என்னைநயந் தன்றிருந்தார் இன்றுநய வாதிருப்பார்
தன்னையறி விப்பதுபோல் தண்ணீரில் பசக்கின்றாய் என் கண்ணே 1232 2
அணைத்தநாள் பருத்துயர்ந்தாய் அகன்றநாள் வாடுகின்றாய்
தணந்தமை மணந்தமைசாற்றுநிலை ஆகின்றாய் என் தோளே 1233 3
துணைநீங்கிப் போனதனால் தொல்கவின் வாடுகின்றாய்
பணைநீங்கிப் பைந்தொடி சோருகின்ற பான்மையினாய் என் தோளே 1234 4
வளையல்கள் கழன்றோட வாடுகின்றாய் வாராரின்
நிலைமையிலைக் கொடிதென்பர் நெகிழ்செயலின் தன்மையினால் என் தோளே 1235 : 5
நொந்துநான் வாடுகிறேன் நொடித்துவளை கழன்றோடத்
தந்தவரைக் கொடியரெனச் சாற்றவைத்த கொடுமையினாய் என் தோளே 1236 6
வாடுகின்ற தோளிளைத்து வருந்துகின்ற தன்மையினைப்
பாடுபெறத் தந்தவரின் பாலுரைப்பாய் பாடுனக்கோ என் நெஞ்சே 1237 7

இடை எருத்து

எனவவள் சொல்லி இனைய அவனும்
இனையன சொல்லும் இனி.

தாழிசை

அணைத்திருந்த கையெடுத்தேன் அவ்வளவே அவள்நெற்றி
பிணித்தேறும் பசலைநோய் பிரிந்துள்ளேன் அவள் என்னாம்? 1238 1
அழுத்தியணைக் காப்பிடியில் அசைந்தீரக் காற்றோட
மழைக்கண்ணில் பசப்பேறி வருந்துவாள் இன்று என்னாம்? 1239 2
அவளுடைய நெற்றிநலம் அழகழிந்து போனதனால்
அவளைக்கண் கண்டழுத கோலத்தாள் இன்று என்னாம்? 1240 3

தனிச்சொல்

எனவெண்ணித்

சுரிதகம்

தன்னழகு போனதற்குத் தான்கவலை இல்லாமல்
தன்னவனைத் தூற்றும் தரமென் றவள்நோவத்
தன்னவளை எண்ணியவன் தன்பிரிவை நோகின்றான்
என்னே இவர்நெஞ் சிருப்பு.

125 நெஞ்சொடு கிளத்தல்

தொகு

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தாழிசை

நன்றாக நீ நினைந்து நல்ல மருந்தொன்றைக்
குன்றும் உணர்வுக் கொடுநோய்க்குத் தாராயோ என் நெஞ்சே 1240 1
காதலித்தார் இங்கில்லாக் காலத்தே நோகின்றாய்
பேதைமை யார்மாட்டு பேசிவிட்டு வாழியநீ என் நெஞ்சே 1242 2
புண்ணோயைச் செய்தகன்றார் பொன்மனத்தில் இல்லைநீ
எண்ணிப் பலப்பலவாய் ஏன்தான் இரங்குவையோ என் நெஞ்சே 1243 3
கண்ணாளர் தன்னுருவைக் காணுங்கண் ணாடிநீ
கண்ணென்னைத் தின்னாமல் உன்னோடு கட்டிச்செல் என் நெஞ்சே 1244 4
என்னை அழிக்கின்றார் என்றெண்ணிக் கைவிடுதல்
உன்னால் முடியா துறாமை அவர்திறமை என் நெஞ்சே 1245 5
காதலர் வந்துவிட்டால் காய்ந்து புலக்கின்றாய்
போதல் பிரிவென்றால் பொய்க்காச்சல் போடுகிறாய் என் நெஞ்சே 1246 6
காமத்தை விட்டுவிடு கண்டால்நாண் விட்டுவிடு
ஏமம் எனக்கில்லை இந்தவிரண் டும்மிருந்தால் என்நெஞ்சே 1247 7
நெஞ்சுருகப் பேசியவர் நேர்வார் எனேங்கிப்
பஞ்சாய் அவர்பால் பறக்கின்றாய் பேதையே என் நெஞ்சே 1248 8
உன்னுள் அவரிருக்க ஊரெல்லாம் தேடுகிறாய்
இன்னும் எவரெங் கிருக்காறார்? யாருமிலை என் நெஞ்சே 1249 9

தனிச்சொல்

என்றெல்லாம்

சுரிதகம்

உள்ளம் அவள்கலங்கி ஊசல் மனத்துரைப்பாள்
அள்ளி அணைக்காமல் ஆற்றில் பிரிந்தவரை
உள்ளத்தில் வைப்பதனால் உள்ளழ கின்னும்போம் 1250
தெள்ளத் தெளிவென்றாள் தேர்ந்து

126 நிறை அழிதல்

தொகு

நிறை = காம உணர்வைத் தலைதூக்க விடாமல் தன் கட்டுக்குள் வைத்திருத்தல்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தாழிசை – சிந்தியல் வெண்பா

நாணமெனும் தாழிட்டு நானென்னைக் காத்திருந்தேன்
பேணாத காம்பஃ பெரியதோர் சம்மட்டி
வீணாய் உடைத்து மிகும் 1251 1
நெஞ்சத்து நின்று நிலையாக யாமத்தும்
விஞ்சி எனையாண்டு வெல்வ தெதுகாமம்
அஞ்சினால் நாணத்தின் ஆறு 1252 2
எம்மை மறைக்காமல் ஏறியெழும் காமநிலை
தும்மல்போல் தோன்றிச் சுடுகின்ற காரணத்தால்
எம்மை மறந்தேன் இனிது 1253 3
ஆடா நிறைகுடம்போல்அச்சுநிறை கொண்டிருந்தேன்
ஓடிவந்த காமம் உடைத்தூர்க்குக் காட்டுவதால்
பாடாய்ப் படுக்கின்றேன் பார் 1254 4
விலகுகின்ற செற்றாரை வேண்டிப்பின் செல்லார்
அலைகின்ற காமத்தலையவரை உய்க்கும்
வலையன்றோ காம வரவு 1255 5
விட்டகன்று செற்றவர் மேவும் வழிச்செல்லக்
கட்டுயெனைத் தின்னுகின்ற காமம் அளித்தரோ
ஒட்டி உளம்பாய் உறவு 1256 6
காதலர் என்றன் கருத்தாசை வாழ்வாரேல்
மோதேன் நிறைநாண் முழுவதும் விட்டிடுவேன்
தோதாம் எனக்குத் துணை 1257 7
மாயமொழியால் மயக்கும் திருடனவன்
மேயுமென் பெண்மை மிடுக்கை உடைத்தெறியும்
ஞாயமென் றுண்டோ நடப்பு 1258 8
பொய்யான காய்ச்சல் புலவிமேல் சென்றேனை
மெய்யூறும் காமம் விழுங்க அவரணைத்தேன்
உய்யுமோ பொய்யுண்மை யோடு 1259 9

தனிச்சொல்

என்றெல்லாம்

சுரிதகம்

பலவும் மனத்துப் பழகி நினைவாள்
குலவும் மனமுள் குழைந்து மொழிவாள்
எரிகின்ற காமத்தீ என்நெஞ்ச நெய்யைப்
பருகிச் சுடர்வீசப் பட்டவிற கூடல்
உருகிக் கரியாம் உடைத்து 1260

127 அவர்வயின் விதும்பல்

தொகு

விரும்பல் எனபதன் எதிர்ச்சொல் வெறுத்தல்.
அதுபோல வெதும்பு என்பதன் எதிர்ச்சொல் விதும்பு.
மனம் வெதும்பினான் என்றால் மன வேதனைப் பட்டான் என்று பொருள்.
மனம் விதும்பினான் என்றால் மன ஆசையால் துடிதுடித்தான் என்று பொருள்.
வயின் = இடம். அவரது இடத்தைப் பெற ஆசைப படுதல். அவரது இடம் தனது இடமாக அமைய ஆசைப் படுதல்.
இப் பொருள் குறட்பாக் கருத்துகளை உணரும்போது புலனாகும்.

வெண்கலிப்பா

வழிபார்த்து வழிபார்த்து வரவின்றிக் கண்தொய்ய
வழிநாளை எண்ணியெண்ணி மணிவிரலும் தேய்ந்ததுவே 1261
இன்றுவரார் என்றெண்ணி என்னவரை நான்மறந்தால்
மென்றோளின்விம்மிதம்போய் மின்னணிகள் சோர்ந்துவிழும் 1262
நெஞ்சழுத்தம் தன்துணையாய் நெடுங்காலம் பிரிந்தமைந்தார்
கொஞ்சவரும் என்றெண்ணிக் கொல்லுயிரைக் காத்திடுவேன் 1263
அன்றுநான் அவரணைப்பில் ஆர்ந்தசுகம் நெஞ்சேறின்
இன்றுள்ளம் பொங்கியெழுந் தின்பத்தில் மிதக்கிறதே 1264
காண்கநான் கொண்டவனைக் கண்குளிரக் கண்டபின்னர்
நீங்குமென் தோள்பசப்பு நெஞ்சநோய் நீங்குவதால்1265
கொண்டவன்முன் வரவேண்டும் கூடியவன் இன்பமெல்லாம்
உண்டின்று பருகிடுவேன் ஊறல்நோய் போயொழியும் 1266
புலப்பேனோ புல்லுவனோ புகுந்துடலில் உடலேறக்
கலப்பேனோ கண்ணன்ன காதலர்முன் வந்தக்கால் 1267
போர்முனையில் வென்றிடுக புரக்கின்ற மன்னனுடன்
ஏர்மாலை இன்றேனும் இனிக்கட்டும் அவர்விருந்தால் 1268
வருநாளை எண்ணியெண்ணி மனஞ்சோரும் காதலிக்கொவ்
வொருநாளும் எழுநாள்போல் ஊர்ந்திடுமே ஏக்கத்தால் 1269
உள்ளமெலாம் உடைந்துடைந்து உதிர்ந்தபின் வந்தாலென்
அள்ளிநான் பெறினென்னாம் பெற்றக்கால் ஆருயிரும்
துள்ளித் துணையாமோ சொல். 1270

128 குறிப்பு அறிவுறுத்தல்உறழ்கலி

தொகு

எருத்தம்

வினைமுற்றி மீண்டவன்தன் மெல்லியலாள் தன்னை
மனமுற்றிப் பார்த்துள் மகிழ்ந்தான் உரைக்கின்றான்

தாழிசை

அவன் அவளிடம்

ஆசை மறைக்கின்ற அழகுருவே நின்கண்கள்
வீசும் உரையெல்லாம் வேறுபட்டு நின்றனவே 1271 1

அவன் தனக்குள்

கண்கொள்ளாக் கட்டழகும் காம்பேர்நல் தோளழகும்
எண்கொள்ளாப் பெண்மைக் கெதிரில் சிறிதன்றோ 1272 2
மணிக்குள்ளே நூலோட்டம் மண்ணும் மடந்தை
அணிக்குள் திகழும் அழகொன்று பாலோட்டம் 1273 3
பூமலரும் முன்னே புகுந்திருக்கும் வாசனைபோல்
வாய்முல்லை பூப்பதிவே வாழும் ஒருகுறிப்பே 1274 4
வளையலை ஆட்டி மறைந்தாள் அதனால்
களைகுவள் என்நோய் கருத்துமருந்தாலே 1275 5

அவள் தனக்குள்

பண்டுபோல் இல்லாமல் பலபடியாய்க் கூடுகிறான்
உண்டாம் பிரிவுரைக்கும் உள்ளத்தில் அன்பில்லான் 1276 6
கண்ணன் பிரிவென் கருத்தேறாக் காலத்தே
முன்னம் உணர்ந்தவளை மோதிக் கழன்றனவே 1277 7
நேற்றுதான் போனார் நிறப்பசலை நோய்வந்து
வீற்றிருக்கும் ஏழுநாள் முன்னே மிகக்கொடுமை 1278 8

அவன் தனக்குள்

தன்வளையல் தான்தோள் தடம்பார்த்தாள் என்னடியைப்
பின்வணங்கிப் பார்த்தாள் பிரியாமை கேட்பாள்போல் 1279 9

எருத்து

எண்ணில் குறிப்புணர்த்தும் இன்பத்தின் மெய்ப்பாட்டில்
மன்னும் மனந்தெரியும் வந்து

சுரிதகம்

அவன் தனக்குள்

கண்ணாலே காமநோய் சொல்லிக் கருத்துணர்த்தும்
பெண்ணினால் பெண்மை பெரிதுயரும் பெண்பெருமை
எண்ணினால் இன்பம் மிகும். 1280

129 புணர்ச்சி விதும்பல்

தொகு

விதும்பல் – விளக்கம் – அதிகாரம் 127

வெண்கலிப்பா

அவனோ அவளோ பேசுவது

குடித்தால்தான் கள்ளின்பம் கூடியதை நெஞ்சினிலே
படித்தாலும் காமங்கள் பாவனையால் மகிழ்வுதரும் 1281
பனைபோல மிகப்பெரிதாய்ப் பாய்ந்துவரும் காமமெனில்
தினையளவும் ஊடாமல் சேருவதே நல்லின்பம் 1282
பேணாமல் அவர்விருப்பம் போலென்னைப் பிரிந்தாலும்
காணாமல் அவர்வரவைக் கண்தேடும் ஆசையினால் 1283

அவள் தோழியிடம்

ஊடிநின்று பிரிவின்னல் உணர்த்தலாம் எனச்சென்றேன்
கூடற்கண் என்நெஞ்சம் கொண்டுய்த்த தென்தோழி 1284

அவள் தனக்குள்ளோ தோழியிடமோ

எழுதுங்கால் யாரேனும் எழுதுகோல் பார்ப்பதுண்டோ
பழிகாணேன் கொண்கனிடம் பக்கத்தில் வந்துவிட்டால் 1285
காணுங்கால் அவர்செய்த தவறொன்றும் காணோமே
காணாக்கால் அவர்செய்த தவறுமட்டும் தெரிகிறதே 1286
ஆறடித்துச் செல்லுமென அதில்குளிக்கா திருப்பாரோ
வீறாப்பாய்ப் புலக்கின்றேன் வெற்றியிலை என்றறிந்தும் 1287
பலரென்னை நகையாடப் பலதுன்பம் செய்தாலும்
களித்தார்க்குக் கள்போலக் கள்வனவன் நெஞ்சினிக்கும் 1288

அவன் நினைவுகள்

மலரைவிட மெலியது காமவுடல் என்றாலும்
சிலர்மலரும் போதுவரும் செவ்விமணம் போலினியர் 1289
இன்பக்கண் ணீர்க்கலக்கம் யார்கண்ணில் அவள்கண்ணில்
என்னைவிடக் கூடிடுமால் ஈர்த்து 1290

130 நெஞ்சொடு கிளத்தல்

தொகு

வெண்கலிப்பா

அவள் நினைவுகள்

அவர்நெஞ்சம் அவர்செயலில் ஆழுங்கால் என்நெஞ்சே
அவர்நினைவில் ஆழுகின்றாய் எனைநினைப்பார் ஆர்நெஞ்சே 1291
நினைக்காமல் இருந்துவிட்டு நேர்ந்தின்று வந்தவரை
அணைக்கநீ பாய்கின்றாய் அவர்மீதே நம்பிக்கை 1292
கெட்டவர்பால் உற்றுதவும் கெழுதகையார் இலையென்றோ
விட்டவர்பால் சென்றுநீ மிதிபடுவாய் என்நஞ்சே 1293
நெஞ்சினிக்கப் பேசிவிட்டு நீங்கியவர் சென்றுவிட்டார்
தஞ்சமவர் தானென்றே சார்கின்றாய் என்நெஞ்சே 1294
அவரில்லை என்றழுத அக்கண்கள் அவரணைக்க
அவர்பிரிவை நினைத்துக்கொண் டழுகிறதே பெருந்தொல்லை 1295
தன்னந்தனி யாயிருந்தால் சப்பியென துள்ளத்தைத்
தின்னுவத னாலேநான் திணறுகிறேன் என்நெஞ்சே 1296
மறந்துவிட்டேன் வெட்கத்தை மறக்கவில்லை அவருருவம்
இறந்துவிட்ட மடநெஞ்சில் எப்படித்தான் நுழைந்தாரோ 1297
குறையெடுத்துச் சொல்வோமேல் குறையவர்க்கு நேருமென
நிறையெடுத்து நெஞ்சத்தில் நினைத்தூறி மகிழ்கின்றேன் 1298
துன்பத்தில் வாடுகையில் துணையின்றி என்நெஞ்சே
என்பக்கம் இல்லாமல் ஏகிவிட்டால் என்செய்வேன் 1299
என்நெஞ்சே எனக்குறவாய் இல்லாத காலத்தில்
பின்னவர்தம் நெஞ்சமும்போய்ப் பேசாமல் தூங்குகையில்
என்னபிறர் தஞ்சம் எனக்கு 1300

131 புலவி

தொகு

அவள் அவனிடம் கொள்ளும் காதல் பிணக்கு

  • புலவி = பிணக்கின் அரும்பு நிலை
  • ஊடல் = பிணக்கின் போது நிலை
  • துனி = பிணக்கின் மலர் நிலை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தாழிசை

அவள் தனக்குள்

புலவிகொள்ளும் பொன்மகளே புல்லாமல் பார்த்திருந்தால்
கலவிக்குத் துடிப்பவரைக் கண்டுமகிழ் வெய்திடலாம் 1301 1

அவன்தனக்குள்

உணவதனில் உப்பைப்போல் ஓரளவே புலவிநலம்
பிணக்குமிகின் பெண்ணின்பம் பெருந்திணையாய் மாறிவிடும் 1302 2

அவள் தனக்குள்

துன்பத்தில் துடிப்பவரைத் துன்புறுத்தற் கொப்பாகும்
இன்பதால் புலந்தாரை எடுத்தணைக்கா தவர்விடுதல் 1303 3
ஊடியதன் காதலியை உணர்ந்தணைக்கா தவர்விலகல்
வாடிய கொடிவேரைவாள்கொண்டே அறுப்பதுவாம் 1304 4
நல்லவராம் பெண்களுக்கு நல்லழகாம் சிறுபுலவி
புல்லுகின்ற காதலர்க்குப் பூவன்ன கண்ணிருந்தால் 1305 5
கனிபோன்ற துனியோடு காய்போன்ற ஊடலுடன்
இனிப்பதுவே காமமெனும் இன்பமழைச் செழுஞ்சோலை 1306 6
ஊடுவது நீளாமல் உணர்ந்துவிடும் செல்துன்பம்
கூடுவதால் பெண்மைக்குக் குறையென்ன நேர்ந்துவிடும் 1307 7
துன்புறுதல் கூடாது துன்புற்றாள் என்றறிந்தே
அன்பூறி அணைப்பவராய் அவரில்லாக் காலத்தே 1308 8
நீரினிக்கும் எட்டோது நிழலிருக்கும் காலத்தில்
ஓரினிப்பாம் ஊடலதும் உணர்ந்துவிழும் வேளையிலே 1309 9

தனிச்சொல்

ஊடலின் தன்மை உணர்ந்துபல சொன்னாலும்
நாடும் நினைவு நடப்பு நயமுரைக்கும்
அம்மம்ம
ஊடுவதைக் காயவிட்டார் என்றாலும் என்நெஞ்சம்
கூடிடுவோம் என்றெண்ணிக் கொண்டிருக்கும் ஆசையினால்
ஆடி மகிழும் அகம் 1310

132 புலவி நுணுக்கம்

தொகு

கலிவெண்பா

அவள்

எல்லாரும் உன்னழகை ஏரெடுத்துப் பார்ப்பதனால்
பொல்லாப் பரத்தன்நீ புல்லேன்நின் போர்மார்பை 1311
ஊடி யிருந்தேன் ஒருதும்மல் போட்டுவிட்டார்
நீடுவாழ் கென்றுரைப்பேன் என்னும் நினைப்பவர்க்கோ 1312

அவன்

கோட்டுப்பூச் சூடினேன் கோதையோ காய்ந்துரைத்தாள்
காட்டுவாய் வேறொருத்தி காண்பதற்கே என்பாளாய் 1313
எல்லார்க்கும் மேலாம்நம் காதல் இணையென்றேன்
நல்லார் அவர்யார் நமக்கிணை என்றொடிந்தாள் 1314
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றுரைத்தேன்
உம்மையில் என்னென் றொளிர்கண்ணில் நீரானாள் 1315
உள்ளினேன் என்றேன் மறந்ததேன் என்றூடி
புல்ல விடாமல் பொசுக்கென்று தள்ளிநின்றாள் 1316
தும்மினேன் வாழ்த்தி எவள்நினைத்தாள் என்றழுதாள்
தும்மல் பிறர்நினைத்தால் தோன்றுமென்று நம்பியவள் 1317
தும்மல் அடக்கினேன் அதற்கும் துனித்தழுதாள்
எம்மை மறைக்கின்றீர் யார்நினைப்பித் தும்மலென 1318
போற்றி அவளைநான் புல்லினேன் காய்ந்துரைத்தாள்
ஊற்றிது போலபிறர்க் கூட்டுவீர் என்றூடி 1319
உற்றவளைப் பார்த்திருந்தேன் ஊடினாள் நெஞ்சாலே
மற்றவளைப் பார்த்திருந்தேன் என்று 1320

133 ஊடல் உவகை

தொகு

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தாழிசை – சிந்தியல் வெண்பா

தவறில்லை காதலன்பால் என்றாலும் ஊடல்
அவளுக் கினிக்கும் அவனளி கூடும்
தவழுமொரு இன்பம் தழைத்து 1321 1
சிறுபிணக்கில் தோன்றும் பெரும்பிணக்கால் நெஞ்சம்
சிறுமை பெரிதுறினும் சீர்மை பெருமை
நிறையும் உணர்வில் நிலைத்து 1322 2
நீர்வாழ் நிலம்போல் நெடிதூடிப் புல்லுகையில்
சேர்வாழ்வின் இன்பம்போல் தேவருல கீந்திடுமோ
ஓர்க உள்ளத்தில் உயர்ந்து 1323 3
புல்லிக் கிடக்கும் புலவி தடுக்குமோர்
கொள்ளையின் பத்தின் கொடைப்படை ஊடுதலே
தள்ளியும் அள்ளியும் தாம் 1324 4
தவறில்லை என்றாலும் தான்கூட்டிச் சொல்லி
அவரை அணைக்கா தகலுங்கால் ஒன்று
இவருமால் வீழ்வார்க் கிடை 1325 5
உண்ணும் சுவையின் உணவுசெரி தெம்பினிது
நண்ணும் கலவியினும் நல்லூடல் பண்பினிது
எண்ணம் மணக்கும் இனிப்பு 1326 6
விட்டுக் கொடுத்து வெறும்பிணக்கில் தோற்றவர்தான்
தட்டியே வெற்றித் தனியின்பம் கண்டிடுவார்
விட்டுப்பார் காம வெறி 1327 7
உடலின்பத் தில்பிறந் தோடும் வியர்வை
தடையின்ப ஊடல் தனில்வருமேல் அஃதும்
கொடையின்பம் போலினிக்கும் கொள் 1328 8
ஊடட்டும் என்னாள் உணரட்டும் என்நெஞ்சம்
நீடட்டும் இன்ப நிழலிரவு யான்கெஞ்சி
ஆட அவள்பின் அமர்ந்து 1329 9

தனிச்சொல்

என்பதெல்லாம்

சுரிதகம்

காமத்திற் கின்பம் கனிகாதல் ஊடுவதாம்
ஏமம் அதற்காம் இணைந்திருவர் கூடுவதாம்
தாமே உணரும் தகைத்து 1330

பாவுரை நூல்கள்

தொகு

திருக்குறள் பாவுரை

தொகு

பாடல்களுக்குப் பாடலால் உரை எழுதும் மரபினைப் பாவுரை மரபு என்கிறோம். நம் முன்னோர் பலர், பல்வேறு நூல்களுக்குப் பாடலால் உரை எழுதியுள்ளனர். முனைவர் செங்கைப் பொதுவன் திருக்குறள் பாவுரை, Tiukkural: A Verse Commentary, திருக்குறள் மூலத்துடன், 21 அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகளுடன், சில குறிப்புகளுடன் திருக்குறள் மூலம் சேர்க்கப்பட்டது, வெளியீடு 2006

பாட்டால் உரை எழுதிய பெருமக்கள்

தொகு

அகநானூறுக்கு

தொகு

அகநாறூறு தொகுப்பிலுள்ள பாடல்களுக்குக் கருத்துரை எழுதுகையில் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ணத் தேவனான வில்லவதரையன் என்பவன் அகவல் பாவால் எழுதினான் என்பதை அறிவோம். (சங்கிலக்கியம் – பாட்டும் தொகையும்- பேராசிரியர் எஸ் வையாபுரிப் பிள்ளை தொகுப்பு – பழம்பாடலும் அதனை அடுத்துத் தரப்பட்டுள்ள குறிப்பும்) அகவலாலான இந்தப் பாடலுரை இப்போது கிடைக்கவில்லை.

ஆத்தி சூடிக்கு

தொகு

ஆத்தி சூடி வெண்பா – என்னும் நூல் ஒன்று உண்டு.
இராம பாரதி என்பவர் அதனை இயற்றியுள்ளார்.
(முதல் பதிப்பு- சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவர் புதுவை இராசகோபால முதலியார். இதன் வழிமுறைப் பதிப்பு – மதுரைப் புதுமண்டபம் புக் ஷாப் வி என் இராகவக் கோனார் – சென்னை, செல்லப்ப முதலியாரது ஜீவகாருண்ய விலாச அச்சு இயந்திர சாலைப் பதிப்பு – 1905)
இதில் காப்பு வெண்பா ஒன்றும், ஆத்தி சூடியிலுள்ள 109 ஓரடிப் பாடல்களுக்கும் 109 வெண்பாக்களும் உள்ளன.
ஒவ்வொரு வெண்பாவும் ஒருவரி ஆத்திச்சூடிப் பாடலுக்குக் கருத்துரையாக அமைந்துள்ளது .
அதன் பாங்கை விளக்குவதற்காக அதிலிருந்து 2 வெண்பாக்கள் மட்டும் இங்குத் தரப்படுகின்றன. மாவலி கதை

மாவலியை மானுக்கு மண்ணுதவா மல்தடுத்த
காவலினால் சுக்கிரனும் கண்ணிழந்தான் – ஆவதனால்
நன்னீதி புன்னைவன நாதமகி பாவுலகத்
தின் ஈ வதுவிலக் கேல். – 4

மோகத்தின் செய்கை

தேவர்முனி வர்மண்ணோர் தென்புலத்தார்க் கும்மோகம்
பாவவித்தென் றோதும் பழமறைகள் – ஆவதனால்
வேளாளா புன்னைவன வித்தகா இத்தரையில்
மூளும்மோ கத்தை முனி.

நற்றிணைப் பாடல்களுக்கு

தொகு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் (ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2006) தொகுப்பு நூலில் கருத்துரைப் பாட்டு என்னும் தலைப்பின்கீழ் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 2 குறுந்தொகை 186, 189 பாடல்களுக்காக எழுதப்பட்டவை என்று பாரதிதாசனே குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் இயற்றிய பாடல் – குறுந்தொகை 189

இன்றே சென்று வருதும் நாளைக்
குன்றிழி அருவியின் வெண்தேர் முடுகுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் அருவியின் பசும்பயிர் துமிப்பக்
காலியற் செய்தியின் மாலை எய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆகம் மணந்துவக் குவனே.

இதற்குப் பாரதிதாசன் தந்துள்ள கருத்துரைப் பாட்டு

நாமின்று சென்று நாளையே வருவோம்
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்
இளம்பிறை போல் அதன் விளங்கெளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
காற்றைப் போலக் கடிது மீள்வோம்
வளையல் நிறைந்த கையுடை
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே. <poem>

ஒக்கூர் மாசாத்தியார் பாடல் – குறுந்தொகை 186
<poem>ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் பனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்குத்
துயில்துறந் தனவால் தோழியெங் கண்ணே.

இதற்குப் பாரதிதாசன் பாடியுள்ள கருத்துரைப் பாட்டு

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப் பரு வத்தைக்
கொல்லையில் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியென்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே.

திருக்குறளுக்கு

தொகு

திருக்குறட் குமரேச வெண்பா என்னும் நூல் தூத்துக்குடி கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனாரால் எழுதப் பட்டுள்ளது. ( வெளியீடு 1938 ) முதலில் பருவ இதழாக வெளிவந்து, பின்னர் 5 தொகுதிகளில் 4602 பக்கங்களில் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒவ்வொரு வெண்பா அந்நூலில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வெண்பாவிலும் அதனதன் திருக்குறளோடு தொடர்புடைய ஒரு கதை சுட்டப் பட்டுள்ளது. வெண்பாவின் முதலிரண்டு அடிகளில் கதைச் செய்தியின் கருத்து உள்ளது. பின்னிரண்டு அடிகள் திருக்குறள். வெண்பாவுக்கு அடியில் குறள் விளக்கமும், கதை விளக்கமும் மேற்கோள் பாடல்களோடு தரப்பட்டுள்ளன. கதையோடு கூடிய அதன் கருத்துரைப் பாடல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்வதற்காக 2 வெண்பாவை மட்டும் காணலாம்.

கண்டணங்கோ கார்மயிலோ கன்னியோ என்றுமால்
கொண்டுநின்றாய் என்னே குமரேசா – கொண்ட
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மானுமென் நெஞ்சு.

பண்டு துறவுகொண்ட பட்டினத்தார் மாண்புலகில்
கொண்டவுயர் வென்ன குமரேசா – கண்ட
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

திருக்குறளுக்கு

தொகு

திருக்கோவனூர் திருக்குறள் அறக்கட்டளையின் தலைவர் தவத்திரு தங்க பழமலை அவர்கள் ஒவ்வொரு திருக்குறளுக்கும் நாற்சீர் ஓரடிப் பாடலால் அமைந்தநூல் ஒன்றைப் படைத்துள்ளார். அது கவிதை நடையில் திருக்குறளுக்குப் பொருள் விளக்கம் தருகிறது. எல்லாக் குறள்களுக்கும் அதில் பாடல்கள் இல்லை. எடுத்துக் காட்டாகச் சொன்னால் அரண் அதிகாரத்தில் 2 குறட்பாக்களுக்கு மட்டுமே ஓரடிப் பாடலுரை உள்ளது. நூலின் ஓரடிப் பாடல்களில் சில 41 அரசர், அந்தணர், வணிகர் துணை இல்லறத்தான் 55 தற்கொண்டான் பேணுபவள் பருவத்து மழை 134 ஓதலின் நன்றே ஒழுக்கம் உடைமை 1155 நீங்கின் உயிர் நீங்கும், பிரிவைத் தடு. 706 நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்

திருக்குறளுக்கு

தொகு

கவிஞர் யுவராஜ் என்பவர் திருக்குறளுக்குக் கவிதையுரை யொன்றை வெளியிட்டுள்ளார். அது விருத்தப் பாவால் அமைந்துள்ளது. காஞ்சி அமுதன் என்பவரின் மகன் இவர். (செய்தி எழுச்சிக்கவி ஈரோடு தமிழன்பன்)

திருக்குறளுக்கு

தொகு

திருவள்ளுவர் கலம்பகம் என்னும் நூல் மதுராந்தகம் கவிஞர் இளம்பூரணர் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் இயற்பெயர் சி பூ கன்னிசாமி. கலம்பக நெறியில் 100 பாடல்களைக் கொண்ட நூல் இது. இதில் திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய செய்திகள் பாடுபொருளாக அமைந்துள்ளன. (செய்தி – மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் சு திருநாவுக்கரசு அவர்கள்)

திருக்குறளுக்கு

தொகு

குழலும் யாழும் மழலைமுன் குழைவே – என்பது குட்டிக்குறள். குட்டிக்குறள் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சுகவனம் சிவப்பிரகாசனார் என்பவரால் செய்யப்பட்ட ஒரு நூல். இந்தக் குட்டிக்குறள்களுக்குக் கீ வா ஜ அவர்களின் உரையும் உண்டு.

குழலும் யாழும்
மழலைமுன் குழைவே – இது ஒரு குட்டிக் குறள்

இது ஒருவகையான புத்தாக்கம்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

என்னும் திருக்குறளுக்குத் தந்த பாடல் உரையாக அமைந்திருத்தலைக் காண முடிகிறது. (செய்தி – சந்தக் கவிமாமணி தமிழகன்)

தலைப்பு 8 – 1 முதல் 15 முடிய தரப்பட்டுள்ள செய்திகள் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அளித்தவை

தொகு
8 – 1 திருக்குறளுக்கு

1330 குறளுக்கும் ஓரடி நூற்பாவாலான உரை ( சுகவனம் சிவப்பிரகாசனார், திருக்குறள் நூற்பா) ஒழுக்கமே விழுப்பம் உழிரினும் பெரிது குறள் 131 பல்லாற்றி னானும் துணையாவ தொழுக்கம் குறள் 132 ஒழுக்கமே குடிமை இழுக்கமே இழிமை குறள் 133 இவை நூற்பா

9 நன்னூலுக்கு

ஆண்டிப் புலவர் என்பவர் கி பி 15ஆம் நூற்றாண்டில் நன்னூலுக்கு விருத்தப் பாவில் ஓர் உரை எழுதியுள்ளார்.

10 திருக்கோவையாருக்கு

திருக்கோவையாரில் 100 கலித்துறைப் பாடல்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வோர் அகவலாகக் கிளர்ந்தது கல்லாடம்.

11 திருக்குறளுக்கு

இராய சொக்கலிங்கனார்என்பவர் முதலிரண்டு அடிகளில் காந்தியடிகளைப் பற்றிக் கூறிப் பின்னிரண்டு அடிகளில் தொடர்புடைய திருக்குறள் ஒன்றை இணைத்துள்ளார். 125 திருக்குறள்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு இவ்வாறு பாடப் பட்டுள்ளன. காவி உடையணியான், காந்தி, சடைமுடியான் மேவு தவமிதுவோ மெய்ப்புலவர் – ஓஒ மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (காந்தி கவிதை – காந்தியும் வள்ளுவரும் – பா 8)

12 திருக்குறளுக்கு

சின்னதாராபுரம் பாவலர் இறையரசனின் நூல் குறளும் பொருளும். இது 1330 குறட்பாக்களுக்கும் தாழிசையில் பொருள் விளக்கம் தருகிறது. இந்தத் தாழிசையை அரைவிருத்தம் என்றும் போற்றுவர். காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. – குறள் 527 அடைகின்ற உணவுகளை மறைத்தி டாமல் அழைத்தழைத்துக் காகம்தன் இனத்தோ டுண்ணும் அடைந்திருக்கும் பெருஞ்செல்வம் அதனைப் போன்ற அரும்பண்பு கொண்டவர்க்கே நிலைப்ப தாகும் இது நூலின் தாழிசை – மணிமேகலை பதிப்பகம், சின்னதாராபுரம் 1982

13 திருக்குறளுக்கு

அகவல் பாடலால் 1330 குறட்பாக்களுக்கும் உரை எழுதப்பட்ட நூலும் உண்டு.(வேதாசலம், திருக்குறள் அகவல் 1955) ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. இது குறள்ஊருண் கேணி உறுபுனல் அற்றே ஒப்புர வதனை யுவக்கும் பேரறி வாளன் பெரிய திருவே பா 215 இது அகவல்

14 திருக்குறளுக்கு

133 அதிகாரத்துக்கும் 133 வெண்பா (கன்மதியன். குறளமுதம் 1976) ஒழுக்கம் ஒருவர்க் குயிரினும் மேலாம் வழித்துணை யாயும் வருமாம் – வழுவின் பழிவரும் துன்பமும் பற்றிடும் என்றும் ஒழுக்கம் உயர்வென்றே ஓம்பு. பா 14

15 திருக்குறளுக்கு

திருக்குறளின் கருத்துகளையும் தொடர்களையும் வைத்து எழுதப்பட்ட 100 குறட்பாக்களால் அமைந்த நூல் உவமைக் குறள் நா பசும்பொற்கிழார் என்பவரால் இது எழுதப்பட்டது. ஓர் எடுத்துக் காட்டு. பணத்தியல்பால் பண்புதிரிந் தற்றாகும் போலிக் குழத்தியல்பால் சேர்நட்புக் கொள். பா 47 செக வீர பாண்டியனாரின் திருக்குறட் குமரேச வெண்பா – ஓர் ஆய்வு என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை வருமாறு ஆசிரியர் முனைவர் கெ எ இந்திராணி (நூல் பதிப்பு 2001)

16 திருக்குறளுக்கு

பிறைச்சாந்தக் கவிராயர் – இரங்கேச வெண்பா – அரங்கநாதனை இரங்கேசா என்று முன்னிலைப்படுத்திப் பாடியது – 133 வெண்பா – அதிகாரத்திற்கு ஒன்று – முதலிரண்டடிகளில் தொடர்புள்ள கதை – பின்னிரண்டு அடிகளில் திருக்குறள்.

17

சென்ன மல்லையர் – சிவசிவ வெண்பா – 17667 – 68 – சிவனை முன்னிலைப் படுத்திப் பாடப் பட்டது -133 வெண்பா – கதையும் குறளும் – அருச்சுனன் சிவனை வில்லால் அடித்த அடி உலகத்தார் அனைவர்மீதும் பட்டதும், மதுரையில் பிரம்படி பட்டது அனைவர்மீதும் பட்டதும் முதல் குறளை விளக்கும் கதைகளாகத் தரப்பட்டுள்ளன.

18

சினேந்திர வெண்பா என்னும் நூல் சினேந்திரா என்று அருகக் கடவுளை அழைத்துப் பாடும் நூல். இது பதிப்பில் இல்லை. ஆசிரியரின் பெயர்கூடக் கிடைக்கவில்லை.

19

மாதவச் சிவஞான யோகி – சோமேசர் முதுமொழி வெண்பா சென்னைக் கிறித்துவக் கலாசாலைத் தமிழாசிரியர் வ மகாதேவ முதலியாரின்உரையும் இதற்கு உண்டு 114 கதைகளில் 133 குறட்பாவில் வெண்பாக்கள் இதில் உள்ளன. 16, 17 வரிசையெண் தரப்பட்டுள்ள நூல்களில் 133 – க்குமேற்பட்ட கதைகள் இடம் பெற்றுள்ளன. மேலே கண்ட 3 நூல்களும் திருக்குறள் குமரேச வெண்பாவுக்குவழிகாட்டிகள்.

20

இரட்டைப் புலவர் பாடல் மாங்காட்டு வேளான் மகளை மருமகன்பால் போங்காட்டில் இன்பம் புணர்ந்தானே – ஆங்கானும் மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (தனிப்பாடல் திரட்டு) இப்பாடல் திருக்குறள் குமரேச வெண்பா தோன்ற வழிகோலிய தாகலாம் என்பது முனைவர் இந்திராணியின் கருத்து.

21

திருத்தொண்டர் வெண்பா எனவும் போற்றப்படும் திருத்தொண்டர் மாலை 102 திருக்குறள்களை பின்னடிகளாகக் கொண்டது. இதன் ஆசிரியர் குமார பாரதி. திருத்தொண்டத் தொகையிலுள்ள 72 அடியார்களுக்கு முதன்மை தரப்பட்டு அவர்களின் வரலாறுகளுக்கேற்ற திருக்குறள்கள் இந்நூலின் பாடல்களில் இணைந்துள்ளன.

22

திரிப் புல்லாணி மாலை என்னும் நூல் 135 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டது. இந்நூலில் 133 அதிகாரத்திலிருந்தும் 133 திருக்குறள்கள் தெரிவு செய்யப் பெற்று இணைத்துப் பாடப்பட்டுள்ளன. இந்த வைணவப் பாடல்கள்நாராயண ஐயங்கார் என்பவரால் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடிகப் பதிப்பாகியுள்ளது.

23

திருமலைக் கொழுந்து வெண்பா திருமலைக் கொழுந்து பிள்ளை என்னும் பெருமகனாரை முன்னிலைப் படுத்திப் பாடப்பட்ட நூல். 77 இன்னிசை வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் பாடல்களில் 77 திருக்குறள்கள் இணைந்துள்ளன.

24

திருமலை வெண்பா – 133 நேரிசை வெண்பா – அதிகாரத்துக்கு ஒரு திருக்குறள் – திருப்பதியாகிய திருமலையை முன்னிலைப் படுத்தியது – 60 பாடல்கள் (அறம் 38 + பொருள் 22) மட்டும் கிடைத்துள்ளன.

25

தினகர வெண்பா – தினகரன் என்பவரை முன்னிலைப் படுத்திப் பாடிய வெண்பா – கி பி 16 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட அச்சுதேந்திரன் என்னும் நாயக்க மன்னனின் அமைச்சர் இந்தத் தினகரன். இவரது குணநலன்களைப் பெருமைப் படுத்திப் பேசும். இவரது வெண்பாக்களில் பின்னிரண்டு அடிகள் திருக்குறள். அதிகாரத்திற்கு ஒன்று. மேலும் காப்பு,மக்கட்பேறு, புகழ், நட்பு ஆகியவற்றிற்குக் கூடுதல் வெண்பாக்கள். ஆக 137 ஆற்றொழுக்கு ஓட்டப் பாடல்கள் – இவற்றுள் இராமாயணச் செய்திகள் 10

26

பெரியபுராணச் சரித்திர வெண்பா லை என்னும் நூல் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிவரமும் கிடைக்கவில்லை.

27

முதுமொழிமேல் வைப்பு – ஆசிரியர் தரும்புர ஆதீன கமலை வெள்ளியம்பலவான முனிவர் – எல்லா அதிகாரங்களிலிருந்தும் திருக்குறள்கள் – சிலவற்றிலிருந்து கூடுதல் குறள்கள் – புதிதாக வீட்டுப்பால், அதில் உமாபதி சிவாசாரியாரின் திருவருட் பயன் நூலிலிருந்து திருக்குறள் இல்லாமல் விளக்கம். 196 + காப்புச் செய்யுள். – 151 கதைச் செய்திகள்.

28

குமரேசர் முதுநெறி வெண்பா – ஆசிரியர் சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் – முருகேசா என்று முருகனை விளிக்கும் வெண்பாக்களின் பின்னிரண்டு அடிகள் திருக்குறள் – அகத்தியம் முதலான 27 கதை நூல்களிலிருந்து செய்திகள் – சோ குமார வீரையரின் உரை – சு அ இராமசாமிப் புலவர் பொழிப்புரை – ஆசிரியர் சமயக் காழ்ப்பு இல்லாதவர்.

29

வடமலை வெண்பா – ஆசிரியர் ஏகாந்தக்கிராதி பாகை அழகப்பன் – ஒருவர் ஒரு முறை கூறிய பாடலை உடனே அப்படியே மனத்தில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் இவருக்கு இருந்ததால் இவரை ஏகாந்தக்கிராதி என்றனர் – அவரது புரவலர் வடமலைப் பிள்ளைமீது பாடப்பட்டது இந்நூல் – அறத்துப்பால், பொருட்பால்களிலுள்ள 108 அதிகாரங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு குறள் பின்னிரண்டு அடிகளில் – காமத்துப்பால் பகுதி இடம்பெறவில்லை.

30

வள்ளுவர் நேரிசை- ஆசிரியர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் – முதல் 10 அதிகாரத்தின் 100 குறள்கள் + தற்சிறப்புப் பாயிரம் = 100 வெண்பா – பின்னிரண்டு அடிகள் திருக்குறள் – முழுமைக்கும் செய்யத் திட்டமிட்டிருக்கலாம்.

31

இப்படிப்பட்ட கருத்துரைப் பாடல்களின் வழிநூலாகத்தான் இந்தப் பாவுரை நூல் தோன்றியுள்ளது என்று ஒருவகையில் கொள்ள முடியும். எனினும் அந்நூல்கள் தம் உரைக்கு இணையான மூலத்தை ஆங்காங்கே இணைத்துக் கொண்டுள்ளன. இந்நூல் அதனை ஆங்காங்கே எண்ணிட்டுக் காட்டிவிட்டுத் திரண்ட கருத்தைப் பாவாக்கியுள்ளது. மேலே காட்டப்பட்டுள்ள 29 பாவுரை நூல்களோடு ஒப்பிட்டு நோக்கினால் இந்நூலின் தனித்தன்மையும், அறிவியல் நோக்கும் புலனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_பாவுரை&oldid=1531458" இலிருந்து மீள்விக்கப்பட்டது