திருக்குறள் புதைபொருள் 1/004-013


4. சேர்ந்தாரைக் கொல்லி

    சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

சினம் என்பது மக்களுக்கு வேண்டாதவைகளில் ஒன்று என்று இக் குறள் கூறுகிறது.

'சினம், சுடும்' என்ற சொற்கள் முதலும் முடிவுமாகக் கொண்டு நின்று சினத்தின் பண்பையும் குறளின் நயத்தையும் விளக்கிக்கொண்டிருக்கின்றன.

தீ சுடும் என்று நாம் பிள்ளைகளை எச்சரிப்பதுபோல, சினம் சுடும் என்று வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.

கோபம் கொண்டவனுடைய குருதி, நரம்பு, நெஞ்சு, மூச்சு அனைத்தும் கொதிக்கும் என்பதை அறிந்தே ஆசிரியர் 'சுடும்' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்று தெரிகிறது.

சினம் 'சுடும்' என்று கூறி, அதனை நெருப்பாகக் காட்டி, அதற்குச் சேர்ந்தாரைச் கொல்லி என்று ஒரு பெயரையும் இட்டு, அப் பெயராலேயே அதன் இழி தொழிலையும் விளக்குகின்ற ஆசிரியரின் திறமை எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.

நிலத்தை அறைந்தவன் கை வலி எடுக்கத் தப்பாதது போலச் சினத்தைச் சேர்ந்த மக்கள் கேடு அடையத் தப்புவது இல்லை என்பதை வலியுறுத்தவே, அதற்குச் 'சேர்ந்தாரைக் கொல்லி' எனப் பெயரிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சினம் பிறந்தவிடத்தை மட்டுமன்றி அது புகுந்த இடத்தையும் கொல்லும் என்ற கருத்தைச் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்ற சொற்றொடர் வெளிப்படையாக விளக்கிக் கொண்டிருக்கிறது,

நெருப்பு எடுத்தவனையும் அடுத்தவனையும் சுடுவது போல, சினம் கொண்டவனையும், கொடுத்தவனையும் அழிக்கும் என்ற பொருளைச் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் சிலேடையாக கண்டு மகிழுங்கள்.

சினம் கொண்டு வைவது சுடுவதை ஒக்குமா? என்ற ஐயப்பாடு எவருக்கேனும் ஏற்பட்டு விடலாம் என்று எண்ணியே, வள்ளுவர் அதனை 'நாவினாற் சுட்ட' என்ற சொற்களால் அடுத்து ஒரு குறள் மூலம் விளக்கியிருக்கிறார் போலும்.

சினம் ஒருவனிடத்தில் சேரும், அவனைக் கொண்டு மற்றொருவனைக் கொல்லும்; பிறகு தன்னைச் சேர்ந்தவனையும் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கிக் கொன்றுவிடும் என்ற நிகழ்ச்சிகளை 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் கண்டு நடுங்க வேண்டியிருக்கிறது.

சினம் தாக்கியவனை, தாக்கப்பட்டவனை மட்டுமின்றி இவ்விருவரையும் சேர்ந்தவர்களையெல்லாம் சேர்ந்து துன்பப்படுத்தும் என்ற பொருளும் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் சேர்ந்தே இருக்கிறது.

நண்பர், பகைவர், இரண்டுமற்ற பிறர் ஆகியவர்களை மட்டுமின்றி, 'சினம்' இனத்தையும் சுடும் என்று இக் குறள் கூறுவது ஒரு பயங்கரமான அறிவிப்பு ஆகும்.

கோபம் கொண்டவனை விட்டு அவனது சுற்றத்தார் விலகிப் போய்விடுவர், அவன் தனித்துநின்று வருந்துவான் என்பதை 'சினம் இனத்தைச் சுடும்' என்ற சொற்கள் நமக்கு நன்றாக அறிவிக்கின்றன.

'சினம் இனத்தைச் சுடும்' என்று வள்ளுவர் அழுத்திக் கூறுவதிலிருந்து, அன்பு இனத்தைத் தழுவும் என்பதை அவர் கூறாமற் கூறுவதாகக் கொள்ளவேண்டும்.

இனத்தைச் சுடுவது மக்கள் பண்புமல்ல; மரத்தின் பண்புமல்ல. மரம் மரத்தையும், மக்கள் மக்களையும் சுட்டுத் தொலைப்பதில்லை. ஆனால் நெருப்பேறிய மரங்கள் இனத்தைச் சுட்டழிப்பதுபோல, சினம் ஏறிய மக்களும் தம் இனத்தைச் சுட்டழிப்பர் என்று இக் குறள் கூறுவது வியக்கக்கூடியதாகும்.

"இன்பத் தெப்பமாயிருப்பினும் சரி, அதிலுள்ள மரம் தன் இனமாயிருப்பினும் சரி, சிறிதும் சிந்தியாமல் நெருப்பேறிய மரங்கள் சுட்டுத் தீர்ப்பதுபோல, சினம் ஏறிய மக்களும் இனமென்றும் நல்லோர் என்றும் கருதாமல் வதைத்துத் தீய்த்துவிடுவர்" என்று இக் குறள் கூறி, அபாயத்தைக் காட்டி எச்சரித்தாலும், உவமை நயம் காட்டி நம்மை மகிழவைக்கிறது.

சுடுகின்ற செயல் நெருங்கி நடைபெறுவது ஆதலின் 'சுடும்' என்ற சொல்லுக்கு இனத்தார் விலகிப் போய் விடுவர் என்று பொருள் காண்பதைவிட "இனத்தார் நெருங்கி நின்றே பகைத்துக் கொண்டிருப்பர்" என்று பொருள் காண்பது நயமாகத் தோன்றுகிறது.

இல்லறத்தாரை மட்டுமல்ல, துறவறத்தாரையும் இச்சினம் பற்றுமானால், அது அவருடைய தவத்தையும் அழித்து, பிறவிக்கடலைக் கடக்க உதவுகின்ற பேரின்பத் தெப்பத்தையும் அழித்துவிடும் என்பதை இக் குறளால் அறியலாம்.

தீப்பற்றிய மரங்களைத் தன்னினம் என்று கருதி இரக்க மனம்படைத்து ஏற்றிச் செல்லும் தெப்பமானது தானே அழிவதைப்போல், சினம் கொண்ட மக்களை இனம் என்று கருதித் தன்னிடத்தே வைத்து ஆதரிக்கும் மக்களும் அழிந்தொழிவார்கள் என்ற பேருண்மை இக் குறளிற் புதைந்து கிடக்கிறது.

பேய்கொண்ட, கள்ளுண்ட, பித்துண்ட, தாக்குண்ட மக்கள் அனைவருமே அறிவிழந்து நிற்பர். ஆனால் சினம் கொண்ட மக்களோ வாழ்விழந்து அழிவர் என்று வள்ளுவர் கூறுவது, அதன் கொடுமையைக் கடுமையாகக் காட்டுகிறது.

'சினம் என்பது எடுத்தவரைச் சுட்டு, அடுத்தவரைக் கொன்று, சேர்ந்தவரை அழித்து, சேராதவரைத் தீய்த்து, இனத்தையும் பகைத்து, இன்ப வாழ்வையும் கெடுக்கும் ஒரு கொடு நெருப்பு. ஆதலின் அதனைக் கொள்ளாதிருப்பது நல்லது' என்பது இக் குறளின் திரண்ட கருத்து.

வளர விரும்பும் மரங்கள் நெருப்பேற்கக் கூடாது; வாழ விரும்பும் மக்கள் சினம் ஏற்கக்கூடாது என்பது இக்குறளின் முடிவு.

இவ்வொரு குறளில் இவ்வளவு கருத்துக்கள் இருக்குமானால், இன்னும் 1329 குறள்களில் எவ்வளவு இருக்கும்? எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! உணருங்கள் உண்மையை! அவ்வளவோடு நிறுத்திவிடாதீர்கள்! செய்கையிலும் செய்துகாட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.

வாழட்டும் தமிழகம்!