திருக்குறள் புதைபொருள் 1/010-013


10. உடுக்கை இழந்தவன்

        உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
        இடுக்கண் களைவதாம் நட்பு

என்பது ஒரு குறள். இதன் பொருள் :

ஆடை நழுவியபோது மனிதன் தன் கைகளுக்கு விண்ணப்பம் செய்துகொள்வதில்லை. அவன் கேளாமலேயே அவனது கைகள் விரைந்து சென்று நழுவிய ஆடையைப் பிடித்து இடையிற் கட்டிவிடுகின்றன. அதுபோல, நண்பனுக்கு இடையூறு ஏற்பட்டபொழுது, அவன் கேளாமலேயே வலியச் சென்று, அவனது இடரைப் போக்கி, உதவி செய்ய வேண்டும் என்பதாம்.

பரிமேலழகரும் பிறரும் இவ்வாறே பொருள் கண்டிருக்கிறார்கள். கருத்திற் பெரும் பிழை இல்லை. எனினும் பொருளிற் பெரும் பிழை காணப்படுகிறது. "இழந்த" என்ற சொல்லிற்கு, "நழுவிய" என்று பொருள் கண்டவர் எவ்வளவு பெரியவராயினும், அவர் தவறு செய்தவரே யாவர். உண்மையில் "இழந்த" என்பதற்குப் "பறி கொடுத்த" என்பதே பொருள். இழவு, இழப்பு, இழத்தல் என்பனவும் இப்பொருளையே குறிப்பனவாம்.

"ஆடையைப் பறிகொடுத்தவனுடைய கை அவன் கேளாமலேயே விரைந்து சென்று மூடிமறைத்து மானங்காப்பது போல, நண்பனது துன்பங்களையும் அவன் கேட்கும் முன்னே விரைந்து சென்று போக்குவதே சிறப்பு" என்பதே இக்குறளின் உண்மையான பொருளாகும்.

பரிமேலழகரின் பொருளை வைத்துக்கொண்டால், மூலத்தில் உள்ள ‘உடுக்கை இழந்த’ என்பதை, உடுக்கை இழிந்த என்று திருத்தியாக வேண்டும். மூலத்தை அப்படியே வைத்துக் கொண்டால், பொருளை ‘நழுவிய’ என்பதற்கு மாறாகப் ‘பறிகொடுத்த’ என்று திருத்தியாக வேண்டும்.

‘இழந்த’ என்று மூலத்தில் இருக்கும்பொழுது அதற்கு ‘நழுவிய’ என்று பொருள் காண்பதும், ‘இழந்த’ என்ற சொல்லிற்கும் ‘இழிந்த’ என்ற சொல்லிற்கும் உள்ள வேற்றுமையை வள்ளுவர் அறியார் என்று கருதுவதும் பெரும் பிழையாகும்.

‘நழுவிய’ என்பதைக் குறிப்பிட நேர்ந்தபொழுதெல்லாம், வள்ளுவர் அதனை இழிந்த என்ற சொல்வினைக் கொண்டே விளக்கி இருப்பதைக் கண்டு மகிழுங்கள். அது,

        தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
        நிலையின் இழிந்த கடை

என்பதாம்.

ஆகவே, இழந்த என்ற சொல்லிற்கு நழுவிய என்று பொருள் காணாமல் பறிகொடுத்த என்று பொருள் காண்பதே உண்மையானதாக இருக்கும்.