திருக்குறள் புதைபொருள் 2/007-010
7. அல்லவை தேய
"அல்லவை தேய அறம் பெருகும்
நல்லவை நாடி இனிய சொலின்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது ‘இனியவை கூறல்’ என்ற தலைப்பில் வந்த ஒன்று.
இதற்கு முன்னே “விருந்து” ஓம்புதலைப் பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்பெறுகிறது.
“நல்லவைகளை நாடி இனிய சொற்களைச் சொன்னால் அல்லவை தேயும், அறம் பெருகும்” என்பது இதன் பொருள்.
தத்துவங்கள் 96 என்பர் அறிஞர், இக்குறள் திருக்குறளில் 9 வதாக அமைந்து, இன்சொல்லின் தத்துவங்களையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்கின்றது போலும்.
“இனியவை கூறல் விருந்தோம்புவார்க்கு வேண்டிய தொன்று” என்பது, பரிமேலழகர் கருத்து. விருந்தோம்பல் இயலாதார்க்குத்தான் இது முதலில் வேண்டியது என்பது பிறரது கருத்து.
ஆறு எழுத்துக்களால் ஆன மூன்று சொற்கள்தான் மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்துவன். அவை "எண், சொல், செய்“ என்பன. இதில் எண்ணத்தை உண்டாக்கிச் செயலை வளர்க்கும் ஆ ற் ற ல் ”சொல்"லுக்கே உண்டு. அச்சொல் இடையிலிருந்தாலும் இக்குறளின் இறுதியில் நின்று ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
சொற்களைச் சொல்வதிலும் நல்ல சொற்களைத் தேடி இனிமை கலந்து சொல்லவேண்டும் என்பது இக்குறளின் முடிந்த முடிபு.
“இனிய சொலின்” என்ற இரு சொற்கள் இக்குறளின் ஈற்றடியின் இறுதியில் வந்துள்ளன. “இனிய சொற்களைச் சொன்னால்” என்பது அதன் பொருள். இதிலிருந்து மக்கள் பெரும்பான்மையாக அவ்வாறு சொல்வதில்லை என்பதும் விளங்குகிறது.
இனிமையாகச் சொல்வதிலும் தீயன நாடிச் சொல்வதுண்டு. இது உள்ளத்திலே தீமையை வைத்து, உதட்டிலே உறவு வைத்துப் பேசுவதாகும். இதை வள்ளுவர் வெறுத்து, இனிமையாகச் சொல்வதிலும் நல்லவை நாடிச் சொல்லவேண்டும் என இக்குறளில் வற்புறுத்துகிறார். இது இன்சொல்லின் உயிரோட்டத்தையே நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது.
நல்லவை நாடி இனிய சொலின் அறம் பெருகும் என இக்குறள் கூறுவதானது, நல்லதை எண்ணி, நல்லதைச் சொன்னால் நல்லது விளையும் என இன்சொல்லின் விளைவையே நமக்கு விளக்குவதாக அமைந்திருக்கிறது.
இன்சொல்லின் விளைவு நன்மைகள் விளைவது மட்டுமல்ல; “தீமைகளும் அழியும். அதுவும் தேய்ந்து தேய்ந்து அழிந்தொழியும்” என்று கூறி, இக்குறள் நமக்கு மற்றொரு நன்மையையும் வழங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வுண்மையை, இக்குறளிலுள்ள “அல்லவை தேய” என்னும் சொற்களால் நன்கறியலாம்.
இனியவை கூறலுக்கும் இக்குறள் ஒரு இலக்கணமாக அமைந்து நம்மை மகிழ்விக்கிறது. ‘மறம்’ எனக் கூறுவதும் “தீயவை” எனக் கூறுவதும் இன்னாதன என எண்ணி, “அறமல்லாதவை” “நல்லதல்லாதவை” என்ற இனிய சொற்களால் இக்குறள் அமைந்திருப்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.
“அறநெறியில் நிற்பார்முன் தீமைகள் நிற்கா” என்று நாலடியார் கூறியிருப்பது இக்குறளின் விளக்கமென்றே தோன்றுகிறது. இனிய சொற்களைத் கூறிப் பிறரை மகிழ்விப்பதும் அறச்செயல்களில் ஒன்றேயாம். இதனை, முகம் மலர்ந்து ஈவதிலும் அகம் மலர்ந்த இன்சொல் நல்லது என்ற குறளாலும் அறியலாம்.
“இன்சொல்” சொல்பவர்க்கு மட்டும் நலந்தருவ தல்ல. அது அதனைக் கேட்போர்க்கும் நலந்தருவதாகும், அவரும் இன்சொல் வயப்பட்டு அதனால் நல்லன நாடிச் செயல்பட முடிகிறது.
“நன்மை பயக்கும் ஒன்றைச் சொல்லும்போதுகூட அதைக் கடுஞ்சொற்களால் சொல்லக்கூடாது” என, நல்லவை நாடி இனிய சொலின் என்ற சொற்றொடர் நம்மை எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறது.
“வன்சொல் துன்பம் தரும். அதுவும் தீயவை நாடிச் சொலின் பெருந்துன்பம் விளையும். அதனால் தீயவை வளர்ந்துகொண்டே வரும். அது மட்டுமல்ல, உள்ள அறமும்கூடத் தேய்ந்துவிடும்” என்பன இக் குறளில் புதைந்து கிடக்கும் பொருள்களாகும்.
"இன்சொல் நல்லது; எவர்க்கும் நல்லது; எப்போதும் நல்லது. அதை வழங்குவதும் எளிது. அதனால் இழப்பு எதுவுமிராது. பெறுவதோ நன்மை, அடைவதோ இனிமை. அவை மட்டுமல்ல, ஏற்கனவேயுள்ள தீமையுங்கூட அழித்தொழிந்து போய்விடும்" என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
படியுங்கள் மறுபடியும் இக்குறளை “அல்லவை தேய அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்.”
இக்குறள் உங்களுக்குப் பயன்படுகிறதா? இன்றேல் பயன்படுத்திப் பாருங்கள். ஓய்வு உள்ளபோதெல்லாம் திருக்குறளைப் படியுங்கள். அதனால், நீங்கள் பெரும் பயனைப் பெறுவீர்கள்.
பயணப் பெட்டிகளில் எது எதையே வைத்துக் கொண்டு போகிறீர்கள். ஒரு திருக்குறளையும் அதில் வைத்துக்கொண்டு போவது நல்லது. அது வழிக்குத் துணையாகவும், பின் வாழ்வுக்குத் துணையாகவும் அமையும் ஒரு தனிப்பெருஞ் செல்வம்.
வாழட்டும் தமிழ்ப் பண்பு!
வளரட்டும் குறள் நெறி!