திருக்குறள் புதைபொருள் 2/009-010


9. எய்தாப் பழி

       "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
        எய்துவர் எய்தாப் பழி."

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “ஒழுக்கமுடைமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.

ஒழுக்கத்தை அடைந்தவர் உயர்வையும், இழுக்கத்தை அடைந்தவர் பழியையும் அடைவர் என்பது இதன் பொருள்.

ஒழுக்கமுடையவர் உயர்ந்தோராகவும், அதனை இழந்தவர் தாழ்ந்தோராகவும் கருதப்பெறுவர் என்பது குறிப்பு.

ஒழுக்கத்தை நல்லொழுக்கம் எனவும், தீயொழுக்கம் எனவும் குறிப்பிடுவதுண்டு. எனினும், “ஒழுக்கம்” என்பது நல்லொழுக்கத்தை மட்டுமே குறிக்கும் என்பது இக் குறளின் முடிவு.

“மக்களாய்ப் பிறந்தவர்கள் உயர்வை அடைய வேண்டும். அதற்குரிய ஒரே வழி ஒழுக்கத்தைப் பெறுவதுதான்” என்பது, இக்குறளின் மேற்பாதியின் கருத்து.

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை” என்பதனால் அது இல்லாத கல்வி, கேள்வி, ஆடை, அணி, பட்டம், பதவி, வீடு, நிலம், வண்டி, வாகனம், பொன், பொருள் முதலியவைகளால் மேன்மையடைய முடியாது என இக்குறள் வெளிப்படையாகவே கூறிக் கொண்டிருக்கிறது. இதனால், பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்பதும் பெறப்படும்.

முதலில் ஒழுக்கத்தைப் பெற்று, அதன் மூலம் உயர் வடைந்துவிட்ட ஒருவர், பின்பு அறியாது ஒரு தவறு செய்துவிட்டாலும், அல்லது அவர் தவறு செய்துவிட்டதாக ஒருவர் முன்வந்து கூறினாலும் உலகம் நம்பாது. ஆதலின் ஒழுக்கத்தைப் பெற்றவர் எப்பொழுதும் அடைவது மேன்மையே என இக்குறள் கூறிக்கொண்டிருக்கிறது; இதனை ‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை’ என்பதால் நன்கறிலாம்.

மக்கட் பண்பு ஒழுக்கத்கை அடைவதே. அதனையடையாதவர் மக்களல்லர். “அவர் மரம்” என்பது வள்ளுவர் கருத்து. இதனை “மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்” என்ற மற்றொரு குறளாற் காட்டுகிறார். இவ் உவமையும் மக்களில் தாழ்ந்தோரைக் குறிப்பிடுவதில்லை. ஏனெனில், மரம் இருந்தும் உதவுகிறது; இறந்தும் உதவுகிறது.

இக்குறளின் மேற்பகுதிக்கும், கீழ்ப்பகுதிக்கும் இடையில் “இழுக்கம்” என்ற சொல் காணப்படுகிறது. “ஒழுக்கம்” என்பதன் நேர்மாறானதே “இழுக்கம்” என்றாகும். ஒழுக்கம் என்பது நல்லொழுக்கத்தை மட்டுங் குறிப்பதுபோல, இழுக்கம் என்பது தீயொழுக்கத்தை மட்டுமே குறிக்கும்.

“இழுக்கு” என்ற சொல் திக்குறளில் 18 இடங்களில் காணப்படுகிறது. அவற்றுள் தவறு என்ற பொருளில் வந்தவை 6, (136, 137, 35, 48, 384, 536.); குற்றம் என்ற பொருளில் வந்தவை 5, (127, 164, 467, 716, 893.); வழுக்கல் என்ற பொருளில் வந்தவை 3, (384, 415, 963.); பிழை என்ற பொருளில் வந்தவை 2, (138, 808); இன்னாமை என்ற பொருளில் வந்தது 1, (911); மறுப்பு என்ற பொருளில் வந்தது 1, (535). இக்குறளில் இது “முதல் வரிசையிலுள்ள தவறு” என்ற பொருளில் வந்துள்ளது.

“இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்ற இக் குறளின் கீழ்ப்பகுதி, ஒழுக்கத்தில் தவறிய மக்கள் பழியை அடைய நேரிடும் என எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

பழியிலும் கடும்பழி, கொடும்பழி, பெரும்பழி எனப் பலவகையுண்டு. இக்குறள் அவைகளுக்கு மேலாக “எய்தாப்பழி” என ஒரு புதுப்பழியையுங் காட்டுகிறது.

ஒழுக்கம் தவறிய ஒருவனை சுட்டிக்காட்டி, “இவரிடம் நான் நேற்றிரவு நூறு ரூபாய்களைக் கொடுத்து வைத்துத் திண்ணையிற் படுத்திருந்தேன்; காலையில் கேட்டால் தர மறுக்கிறார்” என ஒருவன் பொய்யாகக் கூறினாலும், உலகம் எளிதாக நம்பிவிடுமாம். பணத்தை அவனிடம் கொடுத்துவிடும்படி ஊரார் வற்புறுத்துவார்களாம். அவன் எவ்வளவுதான் உண்மையைச் சொன்னாலும் ஊரார் நம்பவே மாட்டார்களாம். ஆகவே, அவன் ஏற்காத பழியையும் ஏற்க நேரிட்டுவிடுமாம். இக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அம்புகளாக்கி, ”எய்தாப் பழி" என்பது நம் உள்ளத்தில் எய்துகொண்டேயிருக்கிறது.

சாலை அமைத்தல், சத்திரங்கள் கட்டுதல், சோறு வழங்குதல், கோயிலைப் புதுப்பித்தல், பள்ளியைத் தொடங்குதல் முதலியவை நல்லோர் செய்யும் நற்பணிகள். இவை அனைத்தும் புகழுக்குரியவை. எனினும். ஒழுக்கத்தை இழந்துவிட்ட ஒருவன் இவற்றிலொன்றைக் செய்வானானால், அதற்குரிய புகழையும் அவனால் அடையமுடியாது. “செய்த இழிசெயல்களை மறைப்பதற்காகவே அவன் இதைச் செய்கிறான்” என மேலும் அவன் பழிக்கப்படுவான். பாவம்! அவன் அடைய வேண்டாத பழி இது. என் செய்வது? “எய்தாப்பழி” என்பது, நமக்கு இதை மட்டுமா அறிவிக்கிறது? இன்னும் என்னென்னவோ?

மேற்பாதியை மேன் மக்களுக்கும், கீழ்ப்பாதியை கீழ் மக்களுக்கும் அமைப்பதை வள்ளுவர் ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. இவ் உண்மை பல்வேறு குறள்களால் நன்கறியலாம். அது மட்டுமல்ல; இந்த அதிகாரத்திலேயே வந்துள்ள “வழுக்கியும் வாயால் சொலல் தீது”, “ஒழுக்கமினான்கண் உயர் வில்லை”, “பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்”, “இழிந்த பிறப்பாய் விடும்”, “என்றும் இடும்பை தரும்” என்ற கீழ்ப்பாதி குறள்களும் இதனை மெய்ப்பிக்கும்.

“எய்தாப்பழி” ஆம், இக்குறளின் இறுதிச் சீர்! இறுதி எச்சரிக்கை! எண்ணாப்பழி, செய்யாப்பழி, பொல்லாப்பழி எனவும் கூறலாம். ஒழுக்கம் தவறி நடக்கும் மக்களுக்கு இதை ஒரு "அபாய அறிவிப்பு” என்றே கூறியாக வேண்டும்.

தம்பி! ஒழுக்கமாக நட! அதனால் பயனுண்டு, புகழுமுண்டு! ஒருக்கால் நீ அறியாது தவறினாலும், உலகம் நம்பாது. ஆதலின் அன்றும் உனக்கு உயர்வுண்டு! ஆகவே முயற்சிசெய்து அதனை அடை! முடியாவிடில் சும்மாவாவது இருந்துவிடு! தவறியும் இழுக்கத்தில் இறங்கி விடாதே! அதனால் நீ பழியையே அடைவாய். பின் நல்லது செய்யினும் பயனுமிராது, புகழும் வராது, பழியும் நீங்காது.

அந்த அளவில் நின்றுவிட நீ விரும்பினாலும், உலகம் உன்னை ஒருபோதும் விட்டுவிடாது. இறுதியில் ஏற்காத பழியையும் நீ ஏற்கவேண்டி வந்துவிடும்! என எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது இக்குறள், குறள் வேண்டுமா? படியுங்கள் மறுபடியும்.

       "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
        எய்துவர் எய்தாப் பழி."

படித்தீர்களா? மறந்து விடாதீர்கள்! ஏனெனில் குறள் படிப்பதற்கோ, மறப்பதற்கோ தோன்றியதல்ல; அது நடப்பதற்காகவே தோன்றிய ஒன்று!

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் தமிழ்ப் பண்பு!