திருக்கோவையார்/ஐந்தாம் அதிகாரம் - இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

ஐந்தாம் அதிகாரம்
5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்

நூற்பா
ஐய நாடல் ஆங்கவை இரண்டும்
மையறு தோழி அவன்வர வுணர்தல்.

பேரின்பக் கிளவி
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்
துறையோர் இரண்டும் சிவம்உயிர் விரவியது
அருளே உணர்ந்திடல் ஆகும் என்ப.

1. ஐயறுதல்
பல்இல னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
எல்இலன் நாகத்தோ(டு) ஏனம் வினாஇவன் யாவன்கொலாம்
வில்இலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
சொல்இலன் ஆகற்ற வாகட வான்இச் சுனைப் புனமே. .. 60


கொளு
அடற்கதிர் வேலோன் தொடர்ச்சி நோக்கித்
தையல் பாங்கி ஐயம் உற்றது.

2. அறிவு நாடல்
ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து
வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
மாழைமெல் நோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. .. 61


கொளு
வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி
நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது.