திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/உறையூர் மண்மாரி

3-ம் அதிகாரம்.
உறையூர் மண்மாரி.

கரிகாலச்சோழன் :- சாரமாமுனி திரிசிராமலையில் நந்தவனத்தில் தாயுமானவர்[1] பூஜைக்காகப் பயிர் செய்திருந்த ஜவந்தி புஷ்பங்களை கர்ப்பிணியாயிருந்த உறையூர் சோழ மன்னன் மனைவிக்காக ராஜ ஸேவகர்கள் திருடிப்போனார்கள். ராஜன் சேவகரைக் கண்டிக்காததால் முனி கோபங்கொண்டு "உறையூர் மண்மாரியால் பாழாகக்கடவது" என்று சாபமிட்டார். அப்படியே பட்டணமும் அழிந்து அரசனும் இறந்தான். ராஜபத்னி காவேரிப்பட்டணம் சென்று அங்கு ஓர் ஆண் மகவு ஈன்றாள். மந்திரி கெட்ட எண்ணங்கொண்டு காவேரிப்பட்டணத்தில் அரசகுமாரன் வசித்த வீட்டைக் கொளுத்திவிட்டான். காலில் பட்ட காயத்துடன்மட்டும் அரசகுமாரன் தப்பித்தான். அவனுக்குத்தான் கரிகாலச்சோழன் அல்லது ஹஸ்திபாதன் என்று பெயர். இவன் திரிசிராமலைக்கு வந்து சாரமாமுனியை அடி பணிந்து தாயுமானவரைச் சேவித்து உறையூரைப் புதுப்பித்தான். இவன் தான் 1080 அடி நீளமும் 80 அடி அகலமும் 18 அடி உயரமும் உள்ள கல்லணையைக் கட்டினது. சேரபாண்டியர்களுடன் தஞ்சாவூர் ஜில்லா வெண்ணிலில் யுத்தம் செய்து அவர்களைத் தோற்கடித்தான். இவன் ஆக்ஷிசெய்த காலம் ஸா.17-க்கு (A. D. 95.) முந்தின 45 வருஷங்கள்.


குறிப்பு

தொகு
  1. திரிசிரபுரத்திலிருந்த தனகுப்தன் என்னும் வைசியன் மனைவி சிவபக்தியில் சிறந்தவளாய் ஒழுகிவருநாளில் கர்ப்பவதியாகிப் பிரஸவித்தாள். அச்சமயம் அவள் தாய் காவேரிப் பெருக்கால் அக்கரையில் நின்றுவிட சிவபிரான் அத்தாயைப் போல் உருவங்கொண்டு அப்பெண்ணிடஞ் சென்று பிரஸவ அறையில் அவளுக்கு உதவி புரிந்தார். அது பற்றியே ஸ்வாமிக்கு வடமொழியில் மாத்ருபூதர் என்றும் தென்மொழியில் தாயுமானவர் என்றும் பெயர் வழங்கலாயிற்று.