திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/பல்லவர்

5-ம் அதிகாரம்.
பல்லவர்.

தென் இந்தியாவில் சோழர் அரசு செலுத்துங்காலத்தில் பல்லவர் காஞ்சீபுரத்தில் ஆண்டனர். அவர்கள் எவர் என்றாவது எவ்விதம் சோழநாட்டைக் கைப்பற்றினார்கள் என்றாவது சொல்லமுடியாது. தென் ஆற்காடு ஜில்லாவில் பனைமலையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது ராஜஸிம்ஹ பல்லவனுடைய சாஸனத்திலிருந்து அசுவத்தாமன் துரோணி என்ற ரிஷிக்கு வல்லவன் என்று ஒரு குமாரன் இருந்ததாகவும் அவனுடைய சந்ததியாரே பல்லவர் என்றும் அவர்கள் பாரத்துவாஜ வம்சமென்றும் அசுவமேதயாகங்கள் பல செய்தார்கள் என்றும் தெரிகிறது. பல்லவ கிரந்த எழுத்தில் 'வ' வும் 'ப' வும் அதிக வேற்றுமைப் படாமையால் 'வல்லவர்' 'பல்லவர்' ஆக மாறியிருக்கலாம். மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கு ஆசாரியராயிருந்த துரோணரின் புத்திரன் அசுவத்தாமனின் சந்ததியிலேற்பட்ட ஒருவன்தான் இந்த அசுவத்தாமன் துரோணியாய் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இவர்கள் கஞ்சம் முதல் தெற்கு கோடி வரையில் அரசு செலுத்தியதாகவும் பலமான கோட்டைகள் பல கட்டினதாகவும் தண்ணீர் இல்லாத இடங்களில் ஏரிகள் வெட்டினதாகவும் கைத்தொழில்களை விர்த்தி செய்ததாகவும் சமுத்திர மார்க்கமாய் வியாபாரம் செய்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. திரிசிராமலையில் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குக் கீழே தென்புறத்திலும் மலைக்கோட்டை வீதியில் தென்புறத்திலும் பாறையைக் குடைந்தெடுத்த இரு குகைகள் காணப்படுகின்றன. ஸிம்ஹவிஷ்ணு, மஹேந்திரவர்மன் முதலிய பல்லவ மன்னர்கள் எழுதி வைத்திருக்கும் சிலா சாஸனங்கள் இக்குகைகளில் இருக்கின்றன.

மேலசாலுக்கியர்கள் சோழபல்லவர்களை வென்று காவேரியைத் தாண்டிச் சேரபாண்டியர் நாடுகளுக்குச் சென்றனர். மண்ணைக்குடியில் பாண்டியரைத் தோற்கடித்த பல்லவ நந்திவர்மன் 755 முதல் 769 வரையில் ஆண்ட விக்ரமாதித்ய சாலுக்கியனால் தோற்கடிக்கப்பட்டான். சுமார் நூறு வருஷங்களுக்குப்பின் விஜய நிருபதுங்க விக்ரம வர்ம பல்லவன் சோழநாட்டையாண்டதாக லால்குடியிலும் தஞ்சாவூரிலும் சாஸனங்கள் கிடைத்திருக்கின்றன.

பல்லவராண்ட காலத்தில் தென்னாட்டில் பௌத்த ஜைன மதங்கள் பரவின. சில பல்லவர்களும் சைவத்தை விட்டு பௌத்த ஜைன மதங்களைக் கைப்பற்றினார்கள். பௌத்த ஜைனர்களுக்கு திருவள்ளரை மலையில் ஒரு குகையும் பழயசங்கடத்தில் (பழய ஜயங்கொண்ட சோழபுரம்) ஒரு மண்டபமும் குளமும் பல்லவர்களால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன.

திருஞானஸம்பந்தர் :-திரும்பவும் தென்னாட்டில் சைவத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு இவர் பிறந்தார். தஞ்சாவூர் ஜில்லாவில் சீர்காழி நகரத்தில் அந்தணர் குலத்துதித்து இளம்பிராயத்திலேயே ஞானமடைந்து சஞ்சாரம் செய்யத் தொடங்கினார். மதுரையில் பாண்டிய மன்னனைச் சைவத்துக்குத் திருப்பி சமணர்களில் அனேகரைக் கழுவிலேற்றுவித்தார். காஞ்சீபுரத்திற்குச்சென்று பல்லவமன்னனைத் திருப்பயத்தனித்ததில் முடியாமல் போனதால் சோழரின் உதவியைக்கொண்டு அவனை வென்றார். காலக் கிரமத்தில் பல்லவர் வம்சம் அழிந்து போயிற்று. இக்காலத்திய வன்னியர், படையாச்சிகள், புதுக்கோட்டை ராஜர்கள், இன்னும் சிலர் தாம் பல்லவரைச் சேர்ந்தவர் என்று சொல்லுகிறார்கள்.