திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/முதல் யுத்தம்
12-ம் அதிகாரம்.
ஆங்கிலோ பிரஞ்சு கர்னாடக முதல் யுத்தம்.
தஞ்சாவூர் மன்னனும் புதுக்கோட்டை தொண்டமானும் மஹமடாலி கக்ஷியில் சேர்ந்தார்கள். தஞ்சாவூரைக் கொள்ளையடிக்க நினைத்துச் சென்ற சண்டாசாஹிப் மஹாராஷ்டரராலும் மைசூராராலும் மேஜர் லாரன்ஸாலும் உதவி செய்யப்பட்ட நாஸர் ஜங்வின் வருகையைக் கேள்விப்பட்டு புதுச்சேரிக்கு ஓடிவிட்டான். முஸபர் ஜங்ஙை அவன் சிறிய தகப்பன் சிறையிலடைத்தான். ஆனாலவனே கொலை செய்யப்பட்டமையால் முஸபர்ஜங் விடுதலையடைந்து நிஜாமானான்.
இங்கிலீஷார் மஹமடாலிக்கு உதவி செய்யும் பொருட்டு ஸென்ட் டேவிட் கோட்டையிலிருந்து காப்டன் கோப்பை அனுப்பினார்கள். மதுரையில் நிகழ்ந்த ஒரு கலகத்தையடக்க அவன் சென்றான். புதுச்சேரியிலிருந்து சண்டாசாஹிப் தெற்கே வரயத்தனித்தபடியால் காப்டன் ஜின்ஜென் ஒரு பெரிய படையுடன்வந்து வாலிக்கொண்டா புரத்தில் ஒரு தோப்பில் தங்கினான். சண்டாசாஹிப் 4 மைலுக்கப்பாலிருந்து சண்டை செய்து ஆங்கிலரைத் தோற்கடித்து ஊட்டத்தூருக்கு ஓட்டிவிட்டான். அப்படி ஓடின ஆங்கிலருள் ஒருவன் லெப்டினன்ட் க்ளைவ் (1672.)
பிரஞ்சாரும் சண்டாசாஹிப்பும் இங்கிலீஷாரைத் துரத்திவந்து மறுபடியும் தோற்கடித்தனர். ஆங்கிலர் பிக்ஷாண்டார் கோவில் வழியாய் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து, பிறகு திருச்சியை யடைந்தார்கள். அவர்களைத் துரத்திவந்த சண்டாசாஹிப்பும் பிரஞ்சாரும் ஸ்ரீரங்கத்தில் ஒரு ஸேணையை வைத்து விட்டு காவேரியைத் தாண்டி திருச்சினாப்பள்ளிக்குக் கிழக்கே தங்கினார்கள். அவர் வரிசை ஸர்க்கார் பாளையத்திலிருந்து பிரஞ்சு பாறைவரையிலும் அங்கிருந்து எறும்பேசுவரம் வரையிலும் நின்றது. வேறொரு ஸேனையுடன் வந்த மேஜர் லாரென்ஸ் எறும்பேசுவரத்திற்குத் தெற்கே சென்று பொன்மலை மார்க்கமாய் திருச்சிக்குள் வர முயன்றான். மைசூராரும் நவாப்பின் சேனைகளும் காப்டன் டால்டனும் அவனுடன் சேர்ந்தார்கள். பிரஞ்சார் தோற்கடிக்கப்பட்டுக் காவேரிக்கு வடக்கே துரத்தப்பட்டனர். ஆனால் லாரென்ஸ் அவரைப் பின் தொடரவில்லை.
இதற்குள் ஆர்க்காட்டை க்ளைவ் பிடித்துக்கொண்டு 50 நாள் முற்றுகையிலும் வெற்றியடைந்தான். திருச்சியைவிட்டு சண்டா சாஹிப் சேனையும் வடக்கே துரத்தப்பட்டமையால் களைவ் தெற்கே வந்தான். வரும் வழியில் சமயபுரமும் மண்ணச்சநல்லூரும் திருத்தவத்துரை என்ற லால்குடியும் பிடிக்கப்பட்டன.
புதுச்சேரியிலிருந்து ட்யூப்ளே அனுப்பிய பிரஞ்சார் ஊட்டத்தூர்வந்து சேர்ந்தார். அவரைத் தெற்கே வராமல் தடுக்க க்ளைவ் சென்றான். அவனைப் பின்புறமிருந்து தாக்க ஸ்ரீரங்கத்திலிருந்த பிரஞ்சார் சென்றனர். க்ளைவ் ஊட்டத்தூர் போகாமல் சமயபுரத்திலேயே தங்கிவிட்டான். ஸ்ரீரங்கத்திலிருந்துவந்த பிரஞ்சார் பாதிராத்திரியில் சமயபுரத்தை யடைந்தார். வெகு சாமர்த்தியமாய் க்ளைவ் அவரைத் தோற்கடித்து எல்லோரையும் சிறையோ கொலையோ செய்துவிட்டான். டால்டன் ஊட்டத்தூரில் பிரஞ்சாரை எதிர்க்க அவர் ரஞ்சன்குடிக்கு ஓடினர். களைவும் டால்டனும் மறுபடியும் அவரைத்தாக்க அவர் சரணமடைக்தனர்.
பிறகு களைவ் பிக்ஷாண்டார் கோவிலுக்குச் சென்றான். பிரஞ்சார் தங்கியிருந்த கோவிலுக்கு 200 கஜம் வடக்கேயுள்ள கிராமத்திலிருந்து கொண்டு தன் பீரங்கிகளால் அக் கோவிலையும் முழு வெள்ளத்துடன் இருந்த கொள்ளிடத்திற்குத் தென்புறமுள்ள ஸ்ரீரங்கம் கோவிலையும் தாக்கினான். ஸ்ரீரங்கமும் பிடிக்கப்பட்டது. சண்டாசாஹிப் ஸைன்யம் சரணமடைந்தது. அவனும் நிர்க்கதியாய் இங்கிளிஷாருக்கு உதவிசெய்துக்கொண்டிருந்த தஞ்சாவூர் சேனாபதியைச் சரணமடைந்தான். அவன் அவனைக் கொன்று தலையைத் தஞ்சாவூருக்கனுப்பிவிட்டான். பிரஞ்சாரும் சரணமடைந்தனர். சண்டா சாஹிப்பின் தலையில்லாமுண்டம் திருச்சினாப்பள்ளியில் நத்தர்ஷா பள்ளிவாசலில் புதைக்கப்பட்டது.
டால்டனை ஒருசிறு ஸேனையுடன் திருச்சியில் நிறுத்திவிட்டு லாரென்ஸ் சென்னைக்குப் புறப்பட்டான்.