திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்

தொகு

இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களால் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது.

நூற் சிறப்பு

தொகு

எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி? 1

மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன்? - பேணிப்பின்
செவ்வேல் விநோதன் திருப்புகழ்சிந் தித்திருப்பார்க்
கெவ்வேலை வேண்டும் இனி? 2

சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக
ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; - நேராக
அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல்
எந்தப் புகழோது வீர்? 3

அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக்
கருணையினாற் பாடுங் கவிபோற் - பிரியமுற
வேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில்
ஏறுமோ? என்னே இனி? 4

ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி
தேனனைய சொல்லான் திருப்புகழை - யானினைந்து
போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ்
சாத்திடவும் ஓதிடவும் தா. 5

திருப்புகழ்ச் சிரவணத்தால் வேதார்த்தாதி அனைத்து அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்றது

தொகு

வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம். 6

நூற் பயன்

தொகு

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ
டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக்
கூறினார்க் காமேஇக் கூறு. 7

ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன்
ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால். 8

அன்பர் வினவ ஆண்டவன் விடையருளியதாக மேலையதை வற்புறுத்தியது

தொகு

பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா
இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம். 9

அங்ஙனம் அருளக் கேட்ட அன்பர் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகத் திருப்புகழ் படிப்போர் தீரங் கூறியது

தொகு

திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே
ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே
பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே
தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே. 10

நூலாசிரியர் பெயரோடு நூற்பண்பும் பெயரும் உணர்த்தி அதனைத் துதிப்போர் பேறுங் கூறியது

தொகு

ஓராறு மாமுகனாம் உச்சிதமெய்ஞ் ஞானகுகன்
பேரால் அருணகிரி பேருலகில் - சீராருந்
தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை
ஏத்தினவர் ஈடேறு வார். 11

வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத்
தெள் ளுதமி ழாற்புனைந்து சீர்பெறவே - உள்ளபடி
வைப்பாம் அருணகிரி வாழ்த்துந் திருப்புகழைக்
கற்பார் கரையேறு வார். 12

திருப்புகழ் இன்ன இன்னதற்கு இன்ன இன்னதாம் எனல்

தொகு

அருணகிரி நாதர்பதி னாயிறா யிரமென்
றுரைசெய் திருப்புகழை யோதீர், - பரகதிக்கஃ
தேணி; அருட்கடலுக் கேற்றம்; மனத்தளர்ச்சிக்
காணி; பிறவிக் கரம். 13

திருப்புகழ் வழிபாட்டாற் கூற்றையும் வெல்லலாம் எனக் கெடி பெற உரைத்தது

தொகு

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தஞ் செபிக்கத் - திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று
கெர்ச்சிக்க லாமே கெடீ. 14

திருப்புகழின் பிரபாவம்

தொகு

மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர்
அடங்கி நடுங்குவர் சூலா யுதமென், றசுரர் கடல்
ஒடுங்கி நடுங்குவர் வேலா யுதமென், றுரகனுங்கீழ்க்
கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே. 15

திருப்புகழடியார் பெருமை

தொகு

திருப்புகழ் வல்ல சு ரர்மகள் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன்
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 16

முற்றும்.