10

அன்றுதான் போட்டிக் கட்டுரைகளை ஆசிரியரிடம் சேர்ப்பிக்கும் கடைசி நாள். இனியனைத் தவிர பெயர் கொடுத்திருந்தவர்கள் எல் லோரும் கட்டுரையைக் கொண்டுவந்து கொடுத்து விட்டார்கள்.

எப்பவுமே எல்லோருக்கும் முன்னதாகப் போட்டிக் கட்டுரைக் கொடுப்பவனாயிற்றே இனியன்? இன்று ஏன் இன்னும் கொண்டுவந்து கொடுக்கவில்லை. ஆசிரியருக்கு இது வியப்பாக இருந்தது. எப்படியும் கட்டுரையோடு வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. தளர்ந்த நடையோடும் சோர்ந்த மனதோடும் இனியன் ஆசிரியரிடம் வந்தான்.

“இனியன்! கட்டுரைப் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தாயே. இன்னிக்குத்தானே கடைசி நாள். ஏன் இன்னும் கட்டுரை கொடுக்கலே? போட்டியிலே கலந்துக்கப் போறதில்லையா? கண்ணாயிரம்கூட போட்டிக்குக் கட்டுரை கொடுத்திட்டானே.” படபடவென கேள்விமேல் கேள்வியாகத் தொடுத்தார் ஆசிரியர்.

“போட்டிக் கட்டுரை எழுதி, திருத்தப்படியும் எடுத்து வச்சிருந்தேன் சார், ஆனால்,

இன்னிக்குத் திடீர்னு அது காணாமற் போயிடிச்சு. எங்கே தேடியும் கிடைக்கலே. எப்படி காணாமப் போச்சு"ன்னும் தெரியலே. அந்தக் கட்டுரையின் `ரஃப் காப்பி’ தான் சார் இப்போ என்கிட்டே இருக்கு. திருத்தப்படி எடுக்கவும் நேரமில்லே. சார்! நீங்க அனுமதிச்சா இந்த ரஃப் காப்பியையே போட்டிக்குத் தந்திடறேன்,சார்!”

“அப்படியா சங்கதி? அடித்தல் திருத்தல் இருந்தாலும் பரவாயில்லை. அந்தக் கட்டுரையைக் கொடு, போட்டியிலே சேர்த்திடறேன்.”

அன்போடு கேட்ட ஆசிரியரிடம், “இந்தாங்க, சார்,” என்று ரஃப் காப்பிக் கட்டுரையை நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த ஆசிரிய ருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இதே மாதிரி தாள்'லே இதே மாதிரிக் கையெழுத்துள்ள கட்டுரையைப் போட்டிக்கு வந்த கட்டுரைகள்’லே பார்த்ததுபோல நினைவு இருக்கு. சரி, இருக்கட்டும். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், சென்று வா.” எனக் கூறி இனியனை அனுப்பி வைத்தார்.

ஆசிரியர் கூறியது எதுவும் இனியனுக்கு விளங்கவில்லை. ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

தலையைச் சொரிந்தபடியே, எப்படியோ போட்டில் கலந்து கொண்டோமே என்ற திருப்தியுடன் இனியன் வெளியே வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/10&oldid=489838" இலிருந்து மீள்விக்கப்பட்டது