6

பள்ளிக்கூட விளையாட்டுத் திடலின் ஒரமாக உள்ள மரத்தடிதான் அவர்களின் அரட்டை மாநாடு நடைபெறும் வழக்கமான இடம். அன்றைக்கும் அவர்கள் அங்கே குழுமத் தவறவில்லை.

கண்ணாயிரமும் தங்கதுரையும் மணியும் முன்பே அங்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். கண்ணனை இன்னும் காணோம். அவன் வருகையை எதிர்நோக்கியபடி காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கண்ணனும் வந்து சேர்ந்தான். அவன் கையில் ஒரு ‘ஸ்வீட் பாக்கெட்’ இருந்தது. இதை முதலில் கண்ட கண்ணாயிரம் ஆவலோடு அதைப்பற்றி வினவினான்.

“என்னடா, கண்ணா கைநிறைய ஸ்வீட் பாக்கெட். இன்னிக்கு என்ன உனக்குப் பிறந்த நாளா? நீ எங்களுக்குச் சொல்லவே இல் லையே?” வியப்போடு வினவினான்.

“எனக்குப் பிறந்த நாளெல்லாம் ஒண்னு மில்லேடா. ஆனால், ‘இது கண்ணனின் வாழ்விலே ஒர் புதுமை நாள்’னு சொல்லி எங்கப்பா இன்னிக்கு எனக்கு 5 ரூபா கொடுத்தார்’டா. அப்படியே அதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு உங்களைப் பார்க்க வந்துட்டேன்.” மூச்சு விடாமல் கூறி முடித்தான் கண்ணன்.

“புதுமை நாளா! ஒண்ணும் புரியலையே?” வியப்புடன் கேட்டான் தங்கதுரை.

“ஒரு வேளை கண்ணன் பள்ளிக்கூடம் போகலே, படிக்கலே, நல்ல மார்க் எடுக்கலை’ன்னு எப்பவும் அடிக்கிற அவன் அப்பா, இன்னிக்கு அப்படி அடிக்காததை புதுமையா நெனச்சு புதுமை நாளா கொண்டாடறாரோ என்னவோ?” கிண்டலாகக் கேட்டான் மணி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லேடா. நீங்கள் "லாம் கட்டாயப்படுத்தினதாலே கட்டுரைப் பேட்டிக்குப் பெயர் கொடுத்தேனா, அதை நம்ம ஆசிரியர் எங்கப்பாகிட்டே நேற்று சொல்லியிருக்கிறார். எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் ஏற்பட்டிருச்சு. கண்ணா! நீ இப்படியெல்லாம் திறமையாளனா இருக்கனும்’னு தான் நான் கனவு காண்கிறேன்’னு சொல்லி தின்பண்டம் வாங்கிக்க 5 ரூபா கொடுத்தார்டா.”

‘ஸ்வீட் பாக்கெட்’ வந்த வரலாறைச் சொல்லி முடித்தான் கண்ணன்.

“ஐயோ பாவம்'டா உங்கப்பா!” இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினான் மணி.

“தின்பண்டம் வாங்கித் தின்ன சதா காசு கொடுத்து, கண்ணன் தன் கவனத்தைப் படிப்புப் பக்கமே திரும்பவிடாம, தீனி மேலேயே இருக்

கும்படியா வச்சிருக்காரே அதுக்காக அனுதாபப் படறியா? இல்லே...” மணியின் அனுதாப வார்த்தைக்கு காரணம் கற்பிக்க முற்பட்டான் தங்கதுரை.

“இல்லைடா, கண்ணனைப்பற்றி அவன் அப்பா ரொம்ப நல்லா தப்புக்கணக்குப் போட்டதை நெனச்சுத்தான் அனுதாபப்படறேன்.” மணியின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

'காப்பியடிச்சாக்கூட கணக்கிலே பத்து மார்க்குக்கு மேலே வாங்காத நீ எங்கப்பா கணக்கைப்பத்திப் பேசறையா?” சுடச்சுடப் பதில் தந்தான் கண்ணன்.

இவர்களின் வாய்ச்சண்டை கண்ணாயிரத் துக்கு என்னவோ போலிருந்தது. அவன் இடை மறித்துப் பேசலானான்.

“போதும்'டா. உங்களுக்குள்ளே சண்டை வேணாம். நம்ம காரியம் கெட்டுடும். போட்டியிலே எப்படியும் இனியன் தோல்வியடையணும்.” தங்களின் குறிக்கோளை நினைவுப்படுத்தி வாய்ச்சண்டை வளராமல் தடுத்தான் கண்ணாயிரம்.

“நாம வெற்றி பெறணும்னா அவன் மாதிரி எப்படி’டா கட்டுரை எழுதறது? எனக்கு நல்லா வருமாடா?” தன் மீதே தனக்குள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்தி அப்பாவித்தனமாகக் கேட்டான் கண்ணன்.

“உங்கப்பாகிட்டே இன்னும் அஞ்சு ரூபா வாங்கி நல்லா தீனி தின்னுடா, பிரமாதமா வரும்.” கேலி செய்தான் தங்கதுரை.

“என்னடா வரும்? தூக்கமா?” கிண்டல் செய்தான் மணி.

காரியத்திலேயே குறியா இருந்த கண்ணாயிரத்துக்கு இந்தக் கேலிப் பேச்சும் கிண்டல் வார்த்தைகளும் பிடிக்கவில்லை. நண்பர்களின் வேடிக்கைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தான்.

“போதும்’டா கேலி. நோட்டீஸ் போர்டிலே கட்டுரைத் தலைப்பு இன்னும் போடலியே.” ஆர்வத்தோடு கேட்டான் கண்ணாயிரம்.

“சரியாப் போச்சு! கட்டுரைத் தலைப்பை நோட்டீஸ் போர்டுலே எழுதிப் போட்டு ஒரு மணி நேரம் ஆவுது.” நினைவூட்டினான் தங்கதுரை.

“என்னடா தலைப்பு?” ஆர்வப் பெருக்கோடு கேட்டான் மணி.

“உழைப்பும் உயர்வும்” தலைப்பைக் கூறினான் தங்கதுரை.

தலைப்பைக் கேட்டபோதே கண்ணனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. எந்தக் காரியம் தங்களுக்குப் பிடிக்காதோ, ஆகாததோ அதையே தலைப்பாகக் கொடுத்திருப்பதைக் கண்டு ஒருகணம் மலைத்தான்.

“ஐயகோ! என்னடா இது! தலைப்பே தகராறா இருக்கே. நாம எப்படிடா இந்தத் தலைப்பிலே கட்டுரை எழுதறது?”

கண்ணன் கருத்தை எதிரொலித்தான் மணி.

“அதானே, நமக்குச் சம்பந்தமே இல்லாத விஷயத்தைப்பத்தி நாம எப்படி'டா கட்டுரை எழுதறது? பரிசு வாங்குகிறது?”

தலைப்பைக் கேட்டு மலைத்து நின்ற நண்பர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றான் கண்ணாயிரம்.

“நாம் பரிசு வாங்குறோமா இல்லையாங்குறது பிரச்சினை இல்லை. இனியன் எந்தப் பரிசும் வாங்கக் கூடாது. இதுதானேடா நம்ம நோக்கம்?”

“கரெக்டுடா கண்ணாயிரம்” முழுமையாக ஆமோதித்தான் தங்கதுரை.

“இனியன் கட்டுரை எழுதினாலும் எழுதாவிட்டாலும் நாம கட்டுரை எழுதித்தானடா ஆகணும். இல்லேன்னா, எப்படிடா நமக்குப் பரிசு கிடைக்கும்?”

நடைமுறைப் போக்கை நாசுக்காக உணர்த்தினான் கண்ணன்.

“பரிசு வாங்குறதா? இருந்தாலும் இவனுக்கு ரொம்பப் பேராசைடா.” கிண்டல் செய்தான் மணி.

“இந்தத் தலைப்புள்ள கட்டுரை வேறெ எந்தப் புத்தகத்திலேயாவது இருந்ததுன்னா அதைப் பார்த்துச் சுலபமா காப்பியடிச்சு கட்டுரை எழுதி பரிசு வாங்கிடலாம்'டா.” தனக்குத் தெரிந்த வழியைச் சுட்டிக் காட்டினான் தங்கதுரை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்'னு சொல்லுவாங்க. இந்த விஷயத்திலே நீ எப்பவும் மாஸ்டர்தான்’டா.”

தங்கதுரையைச் சீண்டினான் மணி.

தங்கதுரையின் யோசனை கண்ணாயிரத்துக்கு மிகவும் பிடித்தது. வெறுங்கையால் முழம் போட முடியுமா?

“அந்தத் தலைப்புள்ள கட்டுரை எந்தப் புத்தகத்திலே இருக்குங்றதை எப்படிடா கண்டு பிடிக்கிறது?”

கண்ணாயிரத்தின் சந்தேகத்தைப் போக்கி உதவ முன்வந்தான் தங்கதுரை.

“இதுக்காக அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. நூலகத்திலே இருக்கிற புத்தகம் எல்லாத்தையும் ஒரு புரட்டு புரட்டினா எதிலே இருக்கு’ன்னு தெரிஞ்சிட்டுப் போவுது.”

தொடர்ந்து தன் யோசனைக்குச் செயல் வடிவம் தந்து சொல்லி முடித்தான் தங்கதுரை.

யோசனை நல்லதாக இருந்தாலும், செயல் படுத்த முடியாததாகத் தோன்றியது மணிக்கு. அதை அவன் சுட்டிக்காட்டிப் பேசினான்:

“இருக்கிற அஞ்சாறு பாட புத்தகங்களை ஒரு முறை புரட்டறதுக்கே ஒரு வருஷம் போதலே. இன்னொரு வருஷமும் அதே வகுப்பிலே இருந்து புறட்டும்படியா இருக்கு. நூலகத்திலே இருக்கிற எல்லாப் புத்தகங்களையும் புரட்டனும'னா இன்னும் ரெண்டு மூணு ஜென்மம் நமக்குத் தேவைப்படும்’டா.”

அனுபவப்பூர்வமாகப் பேசினான் மணி.

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல பரப்பரப்புடன் பேசினான் கண்ணாயிரம்.

“எனக்கு சுருக்கான ஒரு குறுக்கு வழி தோணுதுடா. கண்ணாயிரம் பீடிகைபோட்டுப் பேசினான்.

“உனக்கு எப்பவுமே அந்த வழிதாண்டா தோணும்:” மணி கேலி செய்யத் தவறவில்லை.

“அது என்ன சுருக்கான குறுக்கு வழி?” கண்ணாயிரம் சொல்லப் போகும் வழியை அறிய அவசரப்பட்டான் தங்கதுரை.

“இனியன் இந்தக் கட்டுரையை எழுத என்னென்ன செய்யறான்? எதை எதைப் படிக்கிறா'ன்னு துப்பறியனும். நாமும் அதே மாதிரி செஞ்சுட்டா போட்டியிலே சுலபமா வெற்றி யடையலாம்.”

ஏதோ ஒரு நல்ல யோசனையைச் சொல்லிவிட்ட பெருமிதம் கண்ணாயிரம் முகத்தில் களை கட்டி நின்றது. வெற்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை மாறி மாறிப் பார்த்தான்.

“எப்படியோ, கடைசியிலே இனியன் வழிக்கே எல்லோரும் போய்க்கிட்டிருக்கோம், இல்லையா?”

மணி கூறுவது ஒரு வகையில் உண்மை யாயிருந்தாலும் காரியம் சாதிப்பதிலேயே கருத் தாக இருந்தான் தங்கதுரை.

“இனியனிடம் போய் அதை எப்படி’டா கண்டுபிடிக்கிறது?”

தங்கதுரையின் கேள்விக்கு மணி பதில் கூற முற்பட்டான்.

“இதுக்கு ஏன்டா மண்டையைப் போட்டு உடைச்சுக்கிறீங்க நீ என்ன புஸ்தகம் படிச்சு கட்டுரை தயாரிக்கப் போறே'ன்னு இனிய னையே கேட்டுட்டாப் போச்சு. சுருக்கமான குறுக்கு வழியிலே நம்ம காரியம் சுலபமா முடிஞ்சிடும்.”

மணி கூறியது கண்ணாயிரத்துக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

“நம்ம எதிராளிக்கிட்டேயே நம்மை சரணடையச் சொல்றான்'டா.”

தன் அச்ச உணர்வை வெளிப்படுத்தினான் கண்ணாயிரம்.

“தகறாரை விடுங்கடா. இப்ப இனியன் எங்கே இருக்கிறான்? என்ன படிக்கிறான்? எப்படி கட்டுரை தயாரிக்கிறான்’ங்கிறதை எப் படியாவது துப்பறிஞ்சு கண்டுபிடிக்கணும். இல்லையா?

சமாதானப்படுத்தும் வகையில் நடுநிலைமையோடு பேசினான் தங்கதுரை.

“இப்ப அவன் எங்கேடா இருப்பான்?” கண்ணன் எழுப்பிய வினா மணிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“நிச்சயமா நம்ம மாதிரி எங்காவது மரத்தடியிலே உட்கார்ந்து சதித் திட்டம் போட்டுக்கிட்டிருக்க மாட்டான்.”

அவன் கேலி பேசியது கண்ணாயிரத்துக்குப் பிடிக்கவில்லை.

“சும்மா இருடா. இனியன் இப்ப எங்கே இருப்பான்னா...” கண்ணாயிரம் முடிக்குமுன் தங்கதுரை கூறினான்.

“கழுதை கெட்டா குட்டிச் சுவரும்பாங்க. இனியன் வீட்டிலே இருப்பான். இல்லேன்'னா நூலகத்திலே இருப்பான். அங்கேயும் இல் லேன்னா யாராவது ஒரு ஆசிரியர் வீட்டிலே சந்தேகமோ பாடமோ கேட்கப் போயிருப்பான்.”

“அவன் எங்கே இருந்தாலும் சரி. என்ன படிச்சு எப்படி எழுதறான்’னு நான் துப்பறிஞ்சு வந்து சொல்றேன்டா. இன்னிக்குச் சாயந்தரம் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலே இருக்கிற மரத்தடியில் சந்திக்கலாம்'டா' கூறிக் கொண்டே விரைந்து நடந்தான், நண்பர்களும் நம்பிக்கை யோடு கலைந்து சென்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/6&oldid=489834" இலிருந்து மீள்விக்கப்பட்டது