திருமந்திரம்/எட்டாம் தந்திரம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

எட்டாம் தந்திரம்

தொகு

1.உடலிற் பஞ்சபேதம்

தொகு

2122.
காயப்பை யொன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குண்ணின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

2123.
அத்த னமைத்த வுடலிரு கூறினிற்
சுத்தம தாகிய சூக்குமஞ் சொல்லுங்காற்
சத்த பரிச ரூப ரசகந்தம் புத்திமா னாங்காரம் புரியட்ட காயமே.

2124.
எட்டினி லைந்தாகு மிந்திரி யங்களுங்
கட்டிய மூன்று கரணமு மாயிடும்
ஒட்டிய பாசமுணர்வது வாகவே
கட்டி யவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

2125.
இரத முதிர மிறைச்சிதோன் மேதை
மருவிய வத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழா முபாதி
உருவ மலாலுட லொன்றென லாமே.

2126.
ஆரே யறிவா ரடியின் பெருமையை
யாரே யறிவா ரங்கவர் நின்றது
யாரே யறிவா ரறுபத்தெட் டாக்கையை
யாரே யறிவா ரடிக்காவ லானதே.

2127.
எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குட்
கண்கா லுடலிற் கரக்கின்ற கைகளிற் பல
புண்கா லறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண்பா லுடம்புதன் னாலுடம் பாகுமே.

2128.
உடம்புக்கு நாலுக்கு முயிராய சீவன்
ஒடுங்கும் பரனோ பொழியாப் பிரமங்
கடந்தொறு நின்ற கணக்கது காட்டி
அடங்கியே யற்றது யாரறி வாரே.

2129.
ஆறந்த மாகி நடுவுடன் கூடினாற்
றேறிய மூவாறுஞ் சிக்கென் றிருந்திடுங்
கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
ஊறு முடம்பை யுயிருடம் பெண்ணுமே.

2130.
மெய்யினிற் றூல மிகுத்த முகத்தையும்
பொய்யினிற் சூக்கம் பொருந்து முடலையுங்
கையினிற் றுல்லியங் காட்டு முடலையும்
ஐய னடிக்கு ளடக்கு முடம்பே.

2131.
காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போற்
சேய விடமண்மை செல்லவும் வல்லது
காயத் துகிற்போர்வை யொன்றுவிட் டாங்கொன்றிட்
டேயு மவரென்ன வேய்ந்திடுங் காயமே.

2132.
நாக முடலுரி போலுநல் லண்டச
மாக நனாவிற் கனாமறந் தல்லது
போகலு மாகு மரனரு ளாலேசென்
றேகு மிடஞ்சென் றிருபய னுண்ணுமே.

2133.
உண்டு நரக சுவர்க்கத்தி லுள்ளன
கண்டு விடுஞ்சூக்கங் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோற்
பிண்ட மெடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.

2134.
தானவ னாகிய தற்பரந் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை யுயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

2135.
ஞானிக்குக் காயஞ் சிவமே தனுவாகும்
ஞானிக்குக் காய முடம்பே யதுவாகு
மேனிற்கும் யோகிக்கு விந்துவு நரதமு
மோனிக்குக் காயமுப் பாற்கெட்ட முத்தியே.

2136.
விஞ்ஞானத் தோர்க்கா ணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தானென்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்ம தனுவாகு
மெய்ஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

2137.
மலமென் றுடம்பை மதியாத வூமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கிற்
பலமுள்ள காயத்திற் பற்றுமிவ் வண்டத்தே.

2138.
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமல னகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையு
மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.

2.உடல் விடல்

தொகு

2139.
பண்ணாகுங் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணா முடலிற் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க வழியு முடம்பே.

2140.
அழிகின்ற ஓருடம் பாகுஞ் செவிகண்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.

2141.
இலையா மிடையி லெழுகின்ற காமம்
உலைவாய நெஞ்சத்து மூழ்கு மூளத்துத்
தலையாய மின்னுடற் றாங்கித் திரியுஞ்
சிலையாய சித்தஞ் சிவமுன் னிடைக்கே.

3.அவத்தை பேதம் - கீழலாவத்தை

தொகு

2142.
ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கிற் கண்டங் கனாவென்பர்
பொய்கண்டி லாத புருடனித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி யாகுந் துரியமே.

2143.
முப்பதோ டாறின் முதல்நனா வைந்தாகச்
செப்பதி னான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி
அப்பகுதி யாகு நியதி முதலாகச்
செப்புஞ் சிவமீறாய்த் தேர்ந்துகொள் வீரே.

2144.
இந்திய மீரைந் தீரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருத மீரைந்தும்
அந்தக் கரண மொருநான்கு மான்மாவும்
பந்தவச் சக்கரப் பாலது வாகுமே.

2145.
பாரது பொன்மை பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதங் கறுப்பை யுடையது
வானகந் தூம மறைந்துநின் றாரே.

2146.
பூதங்க ளைந்தும் பொறியவை யைந்துளும்
ஏதம் படஞ்செய் திருந்த புறநிலை
ஓது மலங்குண மாகுமா தாரமோ
டாதி யவத்தைக் கருவிதொண் ணுற்றாறே.

2147.
இடவகை சொல்லிரு பத்தஞ் சானை
படுபர சேனையும் பாய்பரி யைந்தும்
உடையவன் மத்திமை யுள்ளுற நால்வர்
அடைய நெடுங்கடை யைந்தொடு நான்கே.

2148.
உடம்பு முடம்பு முடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற வுயிரை யறியார்
உடம்பொ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போன் மயங்குகின் றாரே.

2149.
இருக்கின்ற வாறொன் றறிகில ரேழைகண்
முருக்கு மசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்
துருக்கொண்டு தொக்க வுடலொழி யாதே.

2150.
ஒளித்திட் டிருக்கு மொருபதி னாலை
அளித்தன னென்னுள்ளே யாரியன் வந்து
அலைக்குங் கலைகளி னாலறு பத்து
ஒளித்திட்டு வைத்தா னொடுங்கிய சித்தே.

2151.
மண்ணினி லொன்று மலர்நீரு மங்காகும்
பொன்னினி லங்கி புகழ்வளி யாகாய
மன்னு மனோபுத்தி யாங்கார மோரொன்றாய்
உன்னி முடிந்தது பூத சமயமே.

2152.
முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைக ளைவர்மு னாளில்லை
கன்னியைக் கன்னியே காதலித் தாரே.

2153.
கண்ட கனவைந்துங் கலந்தன தானைந்துஞ்
சென்றுண்ட நான்கு மொருங்கே யுணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்த வியாக்கிரத்
தண்டமுந் தானா யமர்ந்துநின் றானே.

2154.
நின்றவ னிற்பப் பதினாலிற் பத்துநீத்
தொன்றிய வந்தக் கரணங்க ணான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்திற் கண்டான் கனவதே.

2155.
தான மிழந்து தனிபுக் கிதயத்து
மான மழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவறி யாவவ் வியத்ததின்
மேனி யழிந்து சுழுத்திய தாமே.

2156.
சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்றன் போதம்
ஒழுகக் கமலத்தி னுள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

2157.
தானத் தெழுந்து தருக்குந் துரியத்தின்
வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத் தெழுந்த கருத்தின் றலையிலே
ஊனத் தவித்தைவிட் டூமனின் றானே.

2158.
ஊமை யெழுத்தொடு பேசுந் எழுத்துறில்
ஆமை யகத்தினி லஞ்சு மடங்கிடும்
ஓமய முற்றது உள்ளொளி பெற்றது
நாமய மற்றது நாமறி யோமே.

2159.
துரிய மிருப்பதுஞ் சாக்கிரத் துள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாரிற் பறந்தன
துரிய மிறந்திடஞ் சொல்லவொண் ணாதே.

2160.
மாறா மலமைந்தான் மன்னு மவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்
கீறாகா தேயெவ் வுயிரும் பிறந்திறந்
தாறாத வல்வினை யாலடி யுண்ணுமே.

2161.
உண்ணுந்தன் னூடாடா தூட்டிடு மாயையும்
அண்ண லருள்பெற்ற முத்திய தாவது
நண்ண லிலாவுயிர் ஞானத்தி னாற்பிறந்
தெண்ணுறு ஞானத்தி னேர்முத்தி யெய்துமே.

2162.
அதிமூட நித்திரை யாண வநந்த
அதனா லுணர்வோ னருங்கன்ம முன்னால்
இதமான கேவல மித்திறஞ் சென்று
பரமாகா வையவத் தைப்படு வானே


2163.
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டா லெழுப்புஞ் செயல்போல்
நேசாய வீசனு நீடாண வத்தரை
ஏசாத மாயாடன் னாலே யெழுப்புமே.

2164.
மஞ்சொடு மந்தா கினிகுட மாமென
விஞ்சறி வில்லோன் விளம்பு மிகுமதி
எஞ்சலி லொன்றெனு மாறென இவ்வுடல்
அஞ்சுணு மன்னனன் றேபோ மளவே.

2165.
படியுடை மன்னவன் பாய்பரி யேறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை யைவரு மங்குறை வோருந்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

2166.
நேரா மலத்தை நீடைந் தவத்தையின்
நேரான வாறுன்னி நீடு நனவினின்
நேராம் மலமைந்து நேரே தெரிசித்து
நேராம் பரத்துட னிற்பது நித்தமே.

4.மத்திய சாக்கிராவத்தை

தொகு

2167.
சாக்கிர சாக்கிரந் தன்னிற் றிரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாமாயை
சாக்கிரந் தன்னிற் சுழுத்திதற் காமியஞ்
சாக்கிரந் தன்னில் றுரியத்து மாயையே.

2168.
மாயை யெழுப்புங் கலாதியை மற்றதி
னேயவி ராகாதி யேய்ந்த துரியத்துத்
தோயுஞ் சுழுனை கனாநனா வந்துன்னி
ஆயின னந்தச் சகலத்து ளானே.

2169.
மேவிய வந்தகன் விழிகட் குருடனா
மாவையின் முன்னடிக் காணு மதுகண்டு
மேவுந் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயி னான்மா முயலுங் கருமமே.

2170.
மத்திம மொத்த சிலந்தி வலயத்துள்
ஒத்தங் கிருந்து வுயிருண்ணு மாறுபோல்
அத்தனு மைம்மபொறி யாடகத் துண்ணின்று
சத்த முதலைந்துந் தானுண்ணு மாறே.

2171.
வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சு
முச்சு முடனனை வானொரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி யென்றென்று
நச்சி யவனரு ணானுயந்த வாறே.

2172.
நாலா றுடன்புருட னற்றத் துவமுடன்
வேறான வையைந்து மெய்ப்புரு டன்பரங்
கூறாவி யோமம் பரமெனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.

2173.
ஏலங்கொண் டாங்கே யிடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலுங்
காலங்கொண் டானடி காணலு மாமே.

2174.
நாடிகள் பத்து நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலி லொடுங்கி யிருந்திடுங்
கூடிய காமங் குளிக்கு மிரதமு
நாடிய நல்ல மனமு முடலிலே.

2175.
ஆவன வாவ வழிவ வழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவ
ஏவன செய்யு மிளங்கிளை யோனே.

2176.
பத்தொடு பத்து மோர்மூன்றும் பகுதியு
முய்த்த துரியமு முள்ளுணர் காலமு
மெய்த்த வியோமமு மேலைத் துரியமுந்
தத்துவ நாலே ழெனவுன்னத் தக்கதே.

2177.
விளங்கிடு முந்நூற்று முப்பதோ டொன்பான்
தளங்கோ ளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு மைம்மலம் வாயு வெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே.

2178.
நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிரம்
மேலுமோ ரைந்நூறு வேறா யடங்கிடும்
பாலவை தொண்ணு றோடாறுட் படுமவை
கோலிய வையைந்து ளாகுங் குறிக்கிலே.

2179.
ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுவென்பர்
ஆகின்ற வாறா றருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்
காகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே.

2180.
தத்துவ மானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மாமவை போயிடு மவ்வழி
தத்தவ மாவ தகார வெழுத்தே.

2181.
அறிவொன்றி லாதன வையேழு மொன்றும்
அறிகின்ற வென்னை யறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென் றருள்செய்தார் நந்தி
அறிகின்ற நானென் றறிந்துகொண் டேனே.

2182.
சாக்கிர சாக்கிர மாதி தனிலைந்தும்
ஆக்கு மலாவத்தை யைந்து நனவாதி
போக்கி யிவற்றொடும் பொய்யான வாறாறு
நீக்கி நெறிநின் றொன்றாகி நிற்குமே.

2183.
ஆணவ மாதி மலமைந் தலரோனுக்
காணவ மாதி நான்காமாற் கரனுக்கு
ஆணவ மாதி மூன்றீசர்க் கிரண்டென்ப
ஆணவ மொன்றே சதாசிவற் காவதே.

5.அத்துவாக்கள்

தொகு

2184.
தத்துவ மாறாறு தன்மனு வேழ்கோடி
மெய்த்தகு வன்னமை பானொன்று மேதினி
ஒத்திரு நூற்றிரு பானான்கெண் பானொன்று
வைத்த பதங்கலை யோரைந்தும் வந்ததே.

2185.
நாடிய மண்டல மூன்று நலந்தெரிந்
தோடு மவரோ டுள்ளிரு பததைஞ்சுங்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

2186.
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூல மளவாக்கி யதீதத்துத்
தாக்கிய வன்பான தாண்டவஞ் சார்ந்தது
தேக்குஞ் சிவமாத லைந்துஞ் சிவாயமே.

6.சுத்த நனவாதி பருவம்

தொகு

2187.
நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான வையைந்தும் விந்துவின் சத்தி
தனதா முயிர்விந்து தானின்று போந்து
கனவா நனவிற் கலந்ததிவ் வாறே.

2188.
நனவி லதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவிற் றூரிய நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவிற் சுழுனை நடந்தார் வளர்ந்தார்
நனவிற் கனவோட னன்செய்தி யானதே.

2189.
செறியு கிரியை சிவதத் துவமாம்
பிறிவிற் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசர மண்டத் தளவே.

2190.
ஆதி பரஞ்சிவஞ் சத்தி சதாசிவம்
ஏதமி லீசனல் வித்தியா தத்துவம்
போதங் கலைகால நியதி மாமாயை
நீதியீ றாக நிறுத்தின னென்னே.

2191.
தேசு திகழ்சிவஞ் சத்தி சதாசிவம்
ஈசன னல்வித்தை யிராகங் கலைகால
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி யான்மாவீ ராறே.

2192.
ஆணவ மாயையுங் கன்மமு மாமலங்
காணு முளைக்குத் தவிடுமி யான்மாவுந்
தாணுவை யொவ்வாமற் றண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

2193.
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற வாய னொருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற வாயன்கோல் போடிற்
பசுக்கட லைவனைப் பற்றி விடாவே.

2194.
உடலிந் தியமன மொண்புத்தி சித்தம்
அடலொன் றகந்தை யறியாமை மன்னிக்
கெடுமவ் வுயிர்மயல் மேலுங் கிளைத்தால்
அடைவது தானேழ் நரகத்து ளாயே.

2195.
தற்றெரி யாதவ தீதந்தற் கணவஞ்
சொற்றெரி கின்ற துரியஞ்சொற் காமியம்
பெற்ற சுழுத்திப்பின் பேசுறுங் காதலா
மற்றது வுண்டிக் கனநன வாதலே.

2196.
நனவிற் கனவில்லை யைந்து நனவிற்
கனவிலாச் சூக்குமங் காணுஞ் சுழுத்தி
தனனுண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவிற் றூரிய மதீதந் தலைவந்ததே.

2197.
ஆறா றிலையைந் தகல நனாநனா
வாறா மவைவிட வாகு நனாக்கனா
வேறானா வைந்தும் விடவே நனாவினில்
ஈறாஞ் சுழுனை யிதின்மாயை தானே.

2198.
மாயையில் வந்த புருடன் றுரியத்தில்
ஆய முறைவிட் டதுவுந்தா னன்றாகிச்
சேய கேவல விந்துடன் சென்றக்கால்
ஆய தனுவின் பயனில்லை யாகுமே.

2199.
அதீதத் துரியத் தறிவனா மான்மா
அதீதத் துரிய மதனாற் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய வனலிற்றுரியத்து முற்றுமே.

2200.
ஐயைந்து பத்துட னானது சாக்கிரங்
கைகண்ட வையஞ்சிற் கண்டங் கனாவென்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்
மெய்கண்ட வனுந்தி மேவ லிருவரே.

2201.
புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தனின் மூன்று கனவு
புரியட் டகத்தி லிரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்க துரியமே.

2202.
நனவி னனவு புலனில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தன் மறத்தல்
நனவிற் சுழுனையுண் ணாட லிலாமை
நனவிற் றுரிய மதீதத்து நந்தியே.

2203.
கனவி னனவுபோற் காண்ட னனவாங்
கனவினிற் கண்டு மறத்தல் கனவாங்
கனவிற் சுழுத்தியுங் காணாமை காணல்
அனுமாதி செய்த லிலான துரியமே.

2204.
சுழுத்தி நனவொன்றுந் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவத னுண்மை சுழுத்தியிற்
சுழுத்தி யறிவறி வாலே யழிகை
சுழுத்தித் துரியமாஞ் சொல்லறும் பாழே.

2205.
துரிய நனவா மிதமுரை போதந்
துரியக் கனவா மகமுணர் போதந்
துரியச் சுழுத்தி வியோமந் துரியந்
தூரியம் பரமெனத் தோன்றிடுந் தானே.

2206.
அறிவறி கின்ற வறிவு நனவாம்
அறிவறி யாமை யடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாகு மான துரியமே.

2207.
தானெங்கு மாயவ னைம்மலத் தான்விட்டு
ஞானத்த னதுரு வாகி நயந்தபின்
தானெங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு
மேனந்தச் சூக்க மவைவன்ன மேலிட்டே.

2208.
ஐயைந்து மாறுமோ ரைந்து நனாவினில்
எய்யு நனவு கனவு சுழுத்தியா
மெய்யும்பின் சூக்கம மெய்ப்பகுதி மாயை
ஐயமுந் தானவ னத்துரி யத்தனே.

2209.
ஈதென் றறிந்தில னித்தனை காலமும்
ஈதென் றறிந்தபி னேது மறிந்திலேன்
ஈதென் றறியு மறிவை யறிந்தபின்
ஈதென் றறியு மியல்புடை யோனே.

2210.
உயிர்க்குயி ராகி யுருவா யருவாய்
அயற்புணர் வாகி யறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியு நாத னுலகாதி
இயற்பின்றி யெல்லா மிருண்மூட மாமே.

2211.
சத்தி யிராகத்திற் றானல் லுயிராகி
ஒத்துறு பாச மலமைந்தோ டாறாறு
தத்துவ பேதஞ் சமைத்துக் கருவியும் வைத்தன னீசன் மலமறு மாறே.

2212.
சாக்கிரா தீதத்தி லாணவந் தன்னுண்மை
சாக்கிரா தீதத் துரியத்திற் றானுறல்
சாக்கிரா தீதத்தி லாணவந் தான்விடாச்
சாக்கிரா தீதம் பரனுண்மை தங்குமே.

2213.
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் றாணு
மலக்கலப் பற்றால் மதியொளி யாமே.

2214.
திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று
நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினு ளானைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

2215.
கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி யெழுந்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்ன மெய்வழி நின்றால்
அதிர வருவதோ ரானையு மாமே.

2216.
நனவகத் தேயொரு நாலைந் தும்வீடக்
கனவகத் தேயுட் கரணங்க ளோடு
முனவகத் தேநின் றுதறியுள் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.

2217.
நின்றவ னாசா னிகள்துரி யத்தனாய்
ஒன்றி யுலகி னியமா திகளுற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகால
நின்று பரனாய் நின்மல னாகுமே.

2218.
ஆனவவ் வீச னதீதத்தில் வித்தையாய்த்
தானுல குண்டு சதாசிவ மாசத்தி
மேனிக ளைந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோன மடைந்தொளி மூலத்த னாமே.

2219.
மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகொண் டுள்ளே கருதிக் கழிக்கின்ற
விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
தண்டமுந் தானா யகத்தினுள் ளாமே.

2220.
போதறி யாது புலம்பின புள்ளின
மாதறி யாவகை நின்று மயங்கின
வேதறி யாவண நின்றன னெம்மிறை
சூதறி வாருச்சி சூடிநின் றாரே.

2221.
கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
பொருத்தறிந் தோம்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
வருத்தறிந் தேன்மன மன்னிநின் றானே.

2222.
ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத்
தான விளக்கொளி யாமூல சாதனத்
தான விதிமூலத் தானத்தி லவ்விளக்கு
ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.

2223.
உண்ணாடு மைவர்க்கு மண்டை யொதுங்கிய
விண்ணாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற்
கண்ணாடி காணுங் கருத்ததென் றானே.

2224.
அறியாத வற்றை யறிவா னறிவான்
அறிவா னறியாதான் றன்னறி வாகான்
அறியா தவத்தை யறிவானைக் கூட்டி
அறியா தறிவானை யாரறி வாரே.

2225.
துரிய தரிசனஞ் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்நன வாதி பெரியன கால பரம்பிற் றுரியம்
அரிய வதீத மதீதத்த தாமே.

2226.
மாயையிற் சேதனன் மன்னு பகுதியோன்
மாயையின் மற்றது நீவுதன் மாயையாங்
கேவல மாகுஞ் சகலமா யோனியுட்
டோயு மனிதர் துரியத்துட் சீவனே.

7.கேவல சகல சுத்தம்

தொகு

2227.
தன்னை யறிசுத்தன் றற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனு
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
தன்னுவர் தத்தந் தொழிற்கள வாகவே.

2228.
தானே தனக்குப் பகைவனு நட்டானுந்
தானே தனக்கு மறுமையு மிம்மையுந்
தானே தான்செய்த வினைப்பயன் றுய்ப்பானுந்
தானே தனக்குத் தலைவனு மாமே.

2229.
ஆமுயிர் கேவல மாமாயை யின்னடந்
தாமுயிர் மாயை யெறிப்ப வறிவுற்றுக்
காமிய மாயேய முங்கல வாநிற்பத்
தாமுறு பாசஞ் சகலத்த தாமே.

2230.
சகல வவத்தையிற் சார்ந்தோர் சகலர்
புகலு மலமூ வகையும் புணர்ந்தோர்
நிகரின் மலரோன்மா னீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் கீட மந்தமு மாமே.

2231.
தாவிய மாயையிற் றங்கும் பிரளய
மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளன
ஓவ லிலக்கண ரொன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு ருத்திர ராகுமே.

2232.
ஆகின்ற கேவலத் தாணவத் தானவர்
ஆகின்ற வித்தே சராமனந் தாதியர்
ஆகின்ற வெண்ம ரெழுகோடி மந்திரர்
ஆகின்ற வீச ரனேகரு மாமே.

2233.
ஆமாறிற் சிவ னாரருள் பெற்றுளோர்
போமலந் தன்னாற் புகழ்விந்து நாதம்விட்
டோமய மாகி யொடுங்கலி னின்மலந்
தோமறு சுத்தா வவத்தைத் தொழிலே.

2234.
ஓரினு மூவகை நால்வகை யும்முள
தேரி லிவைகே வலமாயை சேரிச்சை
சாரிய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத் தீசன் மலமறுத் தானே.

2235.
பொய்யான போதாந்த மாறாறு விட்டகன்று
எய்யாமை நீங்கவே யெய்தவன் றானாகி
மெய்யாய் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு
எய்தாம லெய்துஞ்சுத் தாவத்தை யென்பவே.

2236.
அனாதி பசுவியாத்தி யாகு மிவனை
அனாதியில் வந்த மலமைந்தா லாட்டி
அனாதியிற் கேவல மச்சக லத்திட்டு
அனாதி பிறப்பறச் சுத்தத்து ளாகுமே.

2237.
அந்தரஞ் சுத்தாவத் தைகேவ லத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகே வலத்தற்ற தற்பரத்
தின்பாற் றுரியத் திடையே யறிவுறத்
தன்பாற் றனையறி தத்துவந் தானே.

2238.
ஐயைந் தொடுங்கு மான்மாவி லான்மாவு
மெய்கண்டிடுஞ் சுத்த வித்தையில் வீடாகுந்
துய்யவன் வித்தை முதன்மூன்றுந் தொல்சத்தி
ஐயன் சிவஞ்சத்தி யாந்தோற்ற மவ்வாறே.

2239.
ஐயைந்து மான்மாவி லாறோ டடங்கிடும்
மெய்கண்ட மேன்மூன்று மேவுமெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண
எய்யும் படியடங் கும்நாலேழ் எய்தியே

2240.
ஆணவத் தாரொன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலராகுங்
காண முருவினர் காணாமை காண்பவே
பூணுஞ் சகலமும் பாசமும் புக்கோரே.

2241.
ஆணவ மாகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலராகும்
ஆணவ மாயையுங் கன்ம மூன்றுமே
காணுஞ் சகலர்க்குக் காட்டு மலங்களே.

2242.
கேவலந் தன்னிற் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னிற் கிளர்விந்து சத்தியால்
ஆவயிற் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

2243.
மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையுந் தோன்றா வகைநிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திர ரென்பவே.

2244.
மும்மலங் கூடி முயங்கி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவா சுரர்நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீடாந்தம்
தம்முறை யோனிபுக் கார்க்குஞ் சகலரே.

2245.
சுத்த வவத்தையிற் றோய்ந்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனித்தளை பாசமு
மத்த விருள்சிவ னான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.

2246.
தற்கே வலமுத்தி தானே தனிமையாம்
பிற்பாற் சகலங் கலாதிப் பிறிவதாஞ்
சொற்பாற் புரிசுத்த கேவலஞ் சாக்கிரந்
தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.

2247.
அறிவின்றி யமுத்த னராகாதி சேரான்
குறியொன் றிலாநித்தன் கூடான் கலாதி
செறியுஞ் செயலிலான் றினக்கற்ற லில்லோன்
கிறியன் மலவியாபி கேவலத் தானே.

2248.
விந்துவு மாயையு மேவுங் கிரியையுஞ்
சந்தத ஞான பரையுந் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.

2249.
கேவல மாதியிற் பேதங் கிளக்குறில்
கேவல மூன்றுங் கிளருஞ் சகலத்துள்
ஆவயின் மூன்றுமதி சுத்த மூடவே
ஓவலில் லாவொன்பா னுற்றுணர் வோர்கட்கே.

2250.
கேவலத்திற் கேவல மதீதா தீதங்
கேவலத் திற்சக லங்கள் வைந்தவங்
கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்க்
காவயி னாத னருண்மூர்த்தி தானே.

2251.
சகலத்திற் கேவலஞ் சாக்கிரா தீதஞ்
சகல சகலமே சாக்கிர சாக்கிரஞ்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தி லிம்மூன்று தன்மையு மாமே.

2252.
சுத்தத்திற் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்திற் கேவலந் தொல்லுப சாந்தமாஞ்
சுத்த சகலந் துரிய விலாசமாஞ்
சுத்தத்தி லிம்மூன்றுஞ் சொல்லலு மாமே.

2253.
சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடுஞ்
சாக்கிரந் தன்னிற் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதந் தனிற்சுகா னந்தமே
ஆக்கு மறையாதி யைம்மல பாசமே.

2254.
சாக்கிரா தீதத்திற் றானது மாணவஞ்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதி யாமுப சாந்தத்தை
நோக்கு மலங்குண நோக்குத லாகுமே.

2255.
பெத்தமு முத்தியும் பேணுந் துரியமுஞ்
சுத்த வதீதமுந் தோன்றாமற் றானுணும்
அத்த னருளென் றருளா லறிந்தபின்
சித்தமு மில்லை செயலில்லை தானே.

2256.
எய்திய பெத்தமு முத்தமு மென்பன
எய்து மரனரு ளேவிளை யாட்டோ
டெய்தி டூயிர்சுத்தத திடுநெறி யென்னவே
எய்து முயிரிறை பாலறி வாமே.

2257.
ஐம்மலத் தாரு மதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரு மருவினைப் பாசத்தார்
ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யாள்பவர்
ஐம்மலத் தாரர னார்ச்சறி வோரே.

2258.
கருவி லதீதங் கலப்பிக்கு மாயை
அரிய துரிய மதிலுண்ணு மாசையும்
உரிய சுழுனை முதலெட்டுஞ் சூக்கத்
தரிய கனாத்தூல மந்நன வாகுமே.

2259.
ஆணவ மாகுமதீ தமேன் மாயையும்
பூணுந் துரியஞ் சுழுத்திபொய்க் காமியம்
பேணுங் கனவு மாமாயை திரோதாயி
காணு நனவின் மலக்கலப் பாகுமே.

2260.
அரன்முத லாக வறிவோ னதீதத்தன்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை
கரும முணர்ந்து மாமாயை கைக்கொண்டார்
அருளு மறைவார் சகலத்துற் றாரே.

2261.
உருவுற்றுப் போகமே போக்கியந் துற்று
மருவுற்றுப் பூத மனாதியான் மன்னி
வருமச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணுஞ் சகலத்தே.

2262.
இருவினை யொத்திட வின்னருட் சத்தி
மருவிட ஞானத்தி லாதன மன்னிக்
குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
பெருமல நீங்கிப் பிறவாமை சுத்தமே.

2263.
ஆறாறு மாறதி னையைந் தவத்தையோ
டீறா மதீதத் துரியத் திவனெய்தப்
பேறான வைவரும் போம்பிர காசத்து
நீறார் பரஞ்சிவ மாதேய மாகுமே.

2264.
தன்னை யறியா துடலைமுன் றானென்றான்
தன்னைமுன் கண்டான் றுரியந் தனைக்கண்டான்
உன்னுந் துரியமு மீசனோ டொன்றாக்காற்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.

2265.
சாக்கிரந் தன்னி லதீதந் தலைப்படில்
ஆக்கிய வந்த வைந்தவ மானந்த
நோக்கும் பிறப்பறு நோன்முத்தி சித்தியாம்
வாக்கு மனமு மருவல்செய் யாவே.

2266.
அப்பு மனலு மகலத்து ளேவரும்
அப்பு மனலு மகலத்து ளேவரா
அப்பு மனலு மகலத்து ளேதெனில்
அப்பு மனலுங் கலந்தவவ் வாறே.

2267.
அறுநான்கு சுத்த மதிசுத்தா சுத்தம்
உறுமேழு மாயை யுடனைந்து சுத்தம்
பெருமா றிவைமூன்றுங் கண்டத்தாற் பேதித்
துறுமாயை மாமாயை யான்மாவி னோடே.

2268.
மாயைகைத் தாயாக மாமாயை யீன்றிட
வாய பரசிவன் றந்தையாய் நிற்கவே
ஏயு முயிர்க்கே வலசக லத்தெய்தி
ஆய்தரு சுத்தமுந் தான்வந் தடையுமே.

8.பராவத்தை

தொகு

2269.
அஞ்சுங் கடந்தவ னாதி பரந்தெய்வ
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சு முடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

2270.
சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தந் தன்னிற் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சத்தி யைந்துடன்
சத்தி பெறுமுயிர் தானங்கத் தாறுமே.

2271.
ஆறாறுக் கப்பா லறிவா ரறிபவர்
ஆறாறுக் கப்பா லருளார் பெறுபவர்
ஆறாறுக் கப்பா லறிவா மவர்கட்கே
ஆறாறுக் கப்பா லரனி னிதாமே.

2272.
அஞ்சொடு நான்குங் கடந்தக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனு மெல்லிய லாளொடு
நஞ்சற நாடி நயஞ்செய்யு மாறே.

2273.
உரிய நனாத்துரி யத்தி லிவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றிற்
பரிய பரதுரி யத்திற் பரனாந்
திரிய வருந்துரி யத்திற் சிவமே.

2274.
பரமா மதீதமே பற்றறப் பற்றல்
பரமா மத்தம் பயிலப் பயிலப்
பரமா மதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

2275.
ஆயும்பொய்ம் மாயை யகம்புற மாய்நிற்கும்
வாயு மனமுங் கடந்த மயக்கறின்
தூய வறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

2276.
துரியப் பிரியி லிருந்தவச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை யோடத் துரத்திய நாதர்க்
கரிய வினைகணின் றோலமிட் டன்றே.

2277.
நின்றவிச் சாக்கிர நீடுரி யத்தின்
மன்றனு மங்கே மணஞ்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே யிவனு மவன்வடி வாமே.

2278.
விரிந்திடிற் சாக்கிர மேவும் விளக்காய்
இருந்த விடத்திடை யீடான மாயை
பொருந்துந் துரியம் புரியிற்றா னாகுந்
தெரிந்த துரியத்துத் தீதக லாதே.

2279.
உன்னை யறியா துடலைமுன் னானென்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்த னமலனென் றறிதியே.

2280.
கருவரம் பாகிய காயந் துரியம்
இருவருங் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குரபரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரு மின்றியொன் றாகிநின் றாரே.

2281.
அணுவின் றுரியத்தி லான நனவும்
அணுவசை வின்கண் ணான கனவும்
அணுவசை விற்பரா தீதஞ் சுழுத்தி
பணியிற் பரதுரி யம்பர மாமே.

2282.
பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசக முண்ட கனவுமெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியு மோவத்
தெரியுஞ் சிவதுரி யத்தனு மாமே.

2283.
பரமா நனவின் பின்பார் சகமுண்ட
திரமார்கனவுஞ் சிறந்த சுழுத்தி
உரமா முபசாந்த முற்றல் துறவே
தராஞ் சிவதுரி யத்தனு மாமே.

2284.
சீவ தூரிய முதலாகச் சீரான
ஆவ சிவதுரி யாந்த மவத்தைபத்
தோவும் பராநந்தி யுண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

2285.
பரஞ்சிவன் மேலாம் பரமம் பரத்திற்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாவிடர் வீட்டுஞ் சுழுனை
யுரந்தகு மாநந்தி யாமுண்மை தானே.

2286.
சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாத
மேலாய விந்து சதாசிவ மிக்கோங்கிப்
பாலாய் பிரம னரியம ராபதி
தேவா முருத்திர னீசனாங் காணிலே.

2287.
கலப்பறி யார்கடல் சூழுல கேழும்
உலப்பறி யாருட லோடுயிர் தன்னை
அலப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல மடலது வாமே.

2288.
பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியிற் றயாபர னெம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற காலமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

2289.
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணந்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாந்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

2290.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே.

2291.
ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையி னிருளற்ற தற்பரன்
பேறார் சிவாய வடங்கும்பின் முத்தியே.

2292.
துரியத்தி லோரைந்துஞ் சொல்லக ராதி
விரியப் பரையின் மிகுநாத மந்தம்
புரியப் பரையின் பராவத்தா போதந்
திரியப் பரமந் துரியந் துரியமே.

2293.
ஐந்துஞ் சகலத் தருளாற் புரிவுற்றுப்
பந்திடுஞ் சுத்த வவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போலு மைம்மல மாறுமே.

2294.
ஐயைந்து மட்டுப் பகுதியு மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்
பெய்யும் படியா யெவற்றுமா யன்றாகி
உய்யும் பராவத்தை யுள்ளுறல் சுத்தமே.

2295.
நின்றா னருளும் பரமுமுன் னேயமும்
ஒன்றாய் மருவு முருவு முபாதியுஞ்
சென்றா னெனைவிடுத் தாங்கிற்செல் லாமையு
நன்றான ஞானத்தி னாதப் பிரானே.

9.முக்குணம் - நிர்க்குணம்

தொகு

2296.
சாத்திக மெய்து நனவெனச் சாற்றுங்கால்
வாய்த்த விராசத மன்னுங் கனவென்ப
ஓய்த்திடுந் தாமத முற்ற சுழுத்தியாம்
மாய்த்திடு நிர்க்குண மாசி றுரியமே.

10.அண்டாதி பேதம்

தொகு

2297.
பெறுபகி ரண்டம் பேதித்த வண்டம்
எறிகட லேழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியுமண் டாசனத் தேவர் பிரானே.

2298.
ஆனந்த தத்துவ மண்டா சனத்தின்மேன்
மேனியைந் தாக வியாத்தமுப் பத்தாறாய்த்
தானந்த மில்லாத தத்துவ மானவை
ஈன மிலாவண்டத் தெண்மடங் காமே.

11.பதினோராந்தானமும் அவத்தை எனக்கானல்

தொகு

2299.
அஞ்சி லமுதுமோ ரேழின்க ணானந்த
முஞ்சிலோங் காரமோ ரொன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடிற் காயமாங்
கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

2300.
புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறு மதீதத் துரியம்
விரியுஞ் சுழுத்தியின் மிக்குள்ள வெட்டும்
அரிய பதினொன்று மாமவ் வவத்தையே.

2301.
காட்டும் பதினொன்றுங் கைகலந் தாலுடல்
நாட்டி யழுத்திடி னந்தியல் லாலில்லை
ஆட்டஞ் செய்யாத வதுவிதி யேநினை
ஈட்டு மதுதிட மெண்ணலு மாமே.

12.கலவு - செலவு

தொகு

2302.
கேவலந் தன்னிற் கலவச் சகலத்தின்
மேவுஞ் செலவு விடவரு நீக்கத்துப்
பாவுந் தனைக்காண்டன் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்திற் சுத்தமே.

2303.
வெல்லு மளவில் விடுமின் வெகுளியைச்
செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலு மருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

13.நின்மலாவத்தை

தொகு

2304.
ஊமைக் கிணற்றகத் துள்ளே யுறைவதோர்
ஆமையி னுள்ளே யழுவைக ளைந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே.

2305.
காலங்கி நீர்பூக் கலந்தவா காய
மாலங்கி யீசன் பிரமன் சதாசிவன்
மேலஞ்சு மோடி விரவவல் லார்கட்குக்
காலனு மில்லை கருத்தில்லை தானே.

2306.
ஆன்மாவே மைந்த னாயின னென்பது
தான்மா மறையறை தன்மை யறிகிலர்
ஆன்மாவே மைந்த னரனுக் கிவனென்றால்
ஆன்மாவு மில்லையா லையைந்து மில்லையே.

2307.
உதய மழுங்க லொடுங்கலிம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாந் துரியத்
ததிசுப னாயனந் தானந்தி யாகுமே.

2308.
எல்லாந்தன் னுட்புக யாவுளுந் தானாகி
நல்லாந் துரியம் புரிந்தக்கா னல்லுயிர்
பொல்லாத வாறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

2309.
காய்ந்த விரும்பு கனலை யகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரண மிறந்த துரியத்தும்
தோய்ந்த கருமத் துரிசக லாதே.

2310.
ஆன மறையாதி யாமுரு நந்திவந்
தேனை யருள்செய் தெரிநனா வத்தையில்
ஆன வகையை விடுமடைத் தாய்விட
ஆன மலாதீத மப்பரந் தானே.

2311.
சுத்த வதீதஞ் சகலத்திற் றோய்வுறில்
அத்த னருணீங்கா வாங்கணிற் றானாகச்
சித்த சுகத்தைத் தீண்டா சமாதிசெய்
தத்தனோ டொன்றற் கருண்முத லாமே.

2312.
வேறுசெய் தானிரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தானென்னை யெங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாவருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாவத்தன் மேவிநின் றானே.

2313.
கறங்கோலை கொள்ளி வட்டங் கடலிற்
றிரைநிறஞ் சேர்மத்தின் மலத்தினி னின்ற
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்ந்
திறங்கா வுயிரரு ளாலிவை நீங்குமே.

2314.
தானே சிவமான தன்னை தலைப்பட
ஆன மலமு மப்பாச பேதமு
மான குணமும் பரான்மா வுபாதியும்
பானுவின் முன்மதி போற்பட ராவே.

2315.
நெருப்புண்டு நீருண்டு வாயுவு முண்டங்
கருக்கனுஞ் சோமனு மங்கே யமருந்
திருத்தக்க மாலுந் திசைமுகன் றானும்
உருத்திர சோதியு முள்ளத்து ளாரே.

2316.
ஆனைக ளைந்து மடக்கி யறிவென்னு
ஞானத் திரியைக் கொளுவி யதனுள்புக்
கூனை யிருளற நோக்கு மொருவற்கு
வானக மேற வழியெளி தாமே.

2317.
ஆடிய காலி னசைகின்ற வாயுவுந்
தாடித் தெழுந்த தமருக வோசையும்
பாடி யெழுகின்ற வேதாக மங்களும்
நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.

2318.
முன்னை யறிவினிற் செய்த முதுதவம்
பின்னைப் பிறவியின் பெற்றா லறியலாந்
தன்னை யறிவ தறிவாமஃ தன்றிப்
பின்னை யறிவது பேயறி வாகுமே.

2319.
செயலற் றிருக்கச் சிவானந்த மாகுஞ்
செயலற் றிருப்பார் சிவயோகந் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தொடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாகுமே.

2320.
தானவ னாகுஞ் சமாதிகை கூடினால்
ஆன மலமறு மப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காய மிருக்கு மிருநிலத்
தூனங்க ளெட்டு மொழிந்தொன்று வோர்கட்கே.

2321.
தொலையா வரனடி தோன்றுமச் சத்தி
தொலையா விருளொளி தோற்ற வணுவுந்
தொலையாத் தொழின்ஞானந் தொன்மையி னண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

2322.
தோன்றிய பெத்தமு முத்தியுஞ் சூழ்சத்தி
மான்றுந் தெருண்டு முயிர்பெறு மற்றவை
தான்றரு ஞானந்தன் சத்திக்குச் சாதனா
மூன்றலில் லாவுள் ளொளிக்கொளி யாமே.

2323.
அறிகின் றிலாதன வையேழு மொன்றும்
அறிகின்ற வென்னை யறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென் றருள்செய்தா னந்தி
அறிகின்ற நானென் றறிந்துகொண் டேனே.

2324.
தானவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமின் ஞானத் தின்னருட் சத்தியை
ஊனமி லாடன்னை யூனிடைக் கண்டதே.

2325.
ஒளியு மிருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகு மான்மாவை யன்றி
அளியு மருளுந் தெருளுங் கடந்து
தெளிய வருளே சிவானந்த மாகுமே.

2326.
ஆனந்த மாகு மரனருட் சத்தியிற்
றானந்த மாமுயிர் தானே சமாதிசெய்
தூனந்த மாயுணர் வாயுள் ளுணர்வுறிற்
கோனந்த வாய்க்கு மகாவாக்கிய மாமே.

2327.
அறிவிக்க வேண்டா மறிவற் றயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டா மறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற் றறியாமை யெய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்மறி வாரறி வோரே.

2328.
சத்த மசத்துஞ் சதசத்துந் தான்கூடிச்
சித்து மசித்துஞ் சிவசித்த தாய்நிற்குஞ்
சுத்த மசுத்தந் தொடங்காத் துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.

2329.
தானே யறியா னறிவிலோன் றானல்லன்
தானே யறியா னறிவு சதசத்தென்
றானா லிரண்டு மரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் றங்குமே.

2330.
தத்துவ ஞானந் தலைப்பட் டவர்க்கே
தத்துவ ஞானந் தலைப்பட லாய்நிற்குந்
தத்தவ ஞானத்துத் தானவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் றொடங்குமே.

2331.
தன்னை யறிந்து சிவனுடன் றானாக
மன்னு பதங்குண மாளும் பிறப்பறும்
பின்னது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.

2332.
ஞானந்தன் மேனி கிரியை நடுவங்கந்
தானுறு மிச்சை யுயிராகத் தற்பரன்
மேனிகொண் டைங்கரு மத்துவித் தாதலான்
மோனிகண் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

2333.
உயிர்க்கறி வுண்மை யுயிரிச்சை மானம்
உயிர்க்குக் கிரியை யுயிர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோ னூட்டு மவனே
உயிர்ச்செய லன்றியவ் வுள்ளத்து ளானே.

2334.
தொழிலிச்சை ஞானங்க டொல்சிவ சீவர்
கழிவற்ற மாமாயை மாயையி னாரும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவனாமே.

2335.
இல்லது முள்ளது மியாவையுந் தானாகி
இல்லது முள்ளது மாயன்றா மண்ணலைச்
சொல்லது சொல்லிடிற் றூராதி தூரமென்
றொல்லை யுணர்ந்தா லுயிர்க்குயி ராகுமே.

2336.
உயிரிச்சை யூட்டி யுழிதருஞ் சத்தி
உயிரிச்சை வாட்டி யொழித்திடு ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுற லாலே
உயிரிச்சை வாட்டி யுயர்பதஞ் சேருமே.

2337.
சேருஞ் சிவமானா ரைம்மலந் தீர்ந்தவர்
ஓரொன்றி லாரைம் மலவிரு ளுற்றவர்
பாரின்கண் விண்ணர கம்புகும் பான்மையோர்
ஆருங்கண் டோரா ரவையரு ளன்றே.

2338.
எய்தினர் செய்ய மிகுமாய சத்தியின்
எய்தினர் செய்யு மிருஞான சத்தியின்
எய்தினர் செய்யு மிருஞால சத்தியின்
எய்தினர் செய்யு மிறையரு டானே.

2339.
திருந்தனர் விட்டார் திருவி னரகந்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கந்
திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டந்
திருந்தனர் விட்டார் சிவமா யவமே.

2340.
அவமுஞ் சிவமு மறியா ரறியார்
அவமுஞ் சிவமு மறிவா ரறிவார்
அவமுஞ் சிவமு மருளா லறிந்தால்
அவமுஞ் சிவமு மவனரு ளாமே.

2341.
அருளான சத்தி யனல்வெம்மை போலப்
பொருளவ னாகத் தான்போதம் புணரும்
இருளொளி யாய்மீண்டு மும்மல மாகுந்
திருவரு ளானந்தி செம்பொரு ளாமே.

2342.
ஆதித்தன் றோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ராலவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறருட் பேதமே.

2343.
பேத மபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமு நாதமு
நாத முடனாத நாதாதி நாதமு
மாத னருளி னருளிச்சை யாமே.

2344.
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தற் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டு மரனரு ளாமே.

2345.
ஆறா றகன்று தனையறிந் தானவன்
நீறாகி யாவினு மியாவுந் தனிலெய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றா னம்மரு
டேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

2346.
தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலு மாமே.

2347.
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட வானந்தர்
சார்ந்தவர் சத்த வருட்டன்மை யாரே.

2348.
தானென் றவனென் றிரண்டென்பர் தத்துவந்
தானென் றவனென் றிரண்டற்ற தன்மையைத்
தானென் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தானின்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

2349.
தன்னினிற் றன்னை யறியுந் தலைமகன்
தன்னினிற் றன்னை யறியத் தலைப்படும்
தன்னினிற் றன்னைச் சார்கில னாகில்
தன்னினிற் றன்னையுஞ் சார்தற் கரியவே.

2350.
அறியகி லேனென் றரற்றாதே நீயு
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகி யியற்றவல் லானும்
ஒருசுட ராவந்துன் னுள்ளத்துள் ளாமே.

2351.
மண்ணொன்று தான்பல நற்கல னாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லா மொருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலு மவ்வண்ண மாகிநின் றானே.

2352.
ஓம்புகின் றானுல கேழையு முண்ணின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூறுவர்
தேம்புகின் றார்சிவஞ் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலு மாமே.

2353.
குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடங் கூடல் பெரிது
குறியறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாவிருந் தன்னமு மாமே.

2354.
ஊனோ வுயிரோ வுறுகின்ற தேதின்பம்
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
தானோ பெரிதறி வோமென்னு மானுடர்
தானேய் பிறப்போ டிறப்பறி யாரே.

14.அறிவுதயம்

தொகு

2355.
தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமற் றானே கெடுகின்றான்
தன்னை யறியு மறிவை யறிந்தபின்
தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே.

2356.
அங்கே யடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா சனத்தே சிவனிருந் தானென்று
சங்கார் வளையுஞ் சிலம்புஞ் சரேலெனப்
பொங்கார் குழலியும் போற்றியென் றாளே.

2357.
அறிவு வடிவென் றறியாத வென்னை
அறிவு வடிவென் றருள்செய்தா னந்தி
அறிவு வடிவென் றருளா லறிந்தே
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.

2358.
அறிவுக் கழிவில்லை யாக்கமு மில்லை
அறிவுக் கறிவல்ல தாதார முமில்லை
அறிவே யறிவை யறிகின்ற தென்றிட்டு
அறைகின் றனமறை யீறுக டாமே.

2359.
மன்னிநின் றாரிடை வந்தருண் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேனீ பெரியையென் றானே.

2360.
அறிவறி வாக வறிந்தன்பு செய்ம்மின்
அறிவறி வாக வறியுமிவ் வண்ணம்
அறிவறி வாக வணிமாதி சித்தி
அறிவறி வாக வறிந்தனன் நந்தியே.

2361.
அறிவறி வென்றங் கரற்று முலகம்
அறிவறி யாமை யாரு மறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை யழகிய வாறே.

2362.
அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவா யொழிந்தெங்குத் தானான போது
அறிவா யவற்றினுட்டானா யறிவின்
செறிவாகி நின்றவன் சீவனு மாமே.

2363.
அறிவுடையார்நெஞ் சகலிட மாவது
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவது
அறிவுடையார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத் தங்குநின் றானே.

2364.
மாயனு மாகி மலரோ னிறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேய னணியன் தித்திக்குந் தீங்கரும்
பாயமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

2365.
என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏது மறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலுங் கைவிடாது
என்னையிட் டென்னை யுசாவுகின் றானே.

2366.
மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

2367.
தேடுகின் றேன்றிசை யெட்டோ ரிரண்டையும்
நாடுகின் றேனல மேயுடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

2368.
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்றான்
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

15.ஆறந்தம்

தொகு

2369.
வேதத்தி னந்தமு மிக்கசித் தாந்தமும்
நாதத்தி னந்தமு நற்போத வந்தமும்
ஓதத் தகுமெட் டியோகாந்த வந்தமும்
ஆதிக்க லாந்தமு மாறந்த மாமே.

2370.
அந்தமோ ராறு மறிவா ரதிசுத்தர்
அந்தமோ ராறு மறிவா ரமலத்தர்
அந்தமோ ராறு மறியா ரவர்தமக்
கந்தமோ டாதி யறியவொண் ணாதே.

2371.
தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்த
மானாத் துரியத் தணுவன் றனைக்கண்டு
தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற் றருஞ்சித்தி யாதலே.

2372.
நித்தம் பரனோ டுயிருற்று நீண்மனஞ்
சுத்த முதலைந்துந் தத்துவத் தானீங்கிச்
சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந்
தத்தன் பரன்பா லடைதல்சித் தாந்தமே.

2373.
மேவும் பிரமனே விண்டு வருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாவாறா
றோவும் பொழுதணு வொன்றுள தாகுமே.

2374.
உள்ள வுயிராறாற தாகு முபாதியைத்
தெள்ளி யகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள விருணீங்க வோருணர் வாகுமேல்
எள்ளலி னாதாந்தத் தெய்திடும் போதமே.

2375.
தேடு மியம நியமாதி சென்றகன்
றுடுஞ் சமரதியி லுற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடு முபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

2376.
கொள்கையி லான கலாந்தங் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தாதி மேதாதிக் குளளன வாமவிந்து வுள்ளே யொடுங்கலுந்
தெள்ளி யதனைத் தெளிதலு மாமே.

2377.
தெளியு மிவையன்றித் தேரைங் கலைவே
றொளியு ளமைத்துள்ள தோரவல் லார்கட்
களியவ னாகிய மந்திரந் தந்திரந்
தெளிவுப தேசஞா னத்தொடைந் தாமே.

2378.
ஆகு மனாதி கலையா கமவேதம்
ஆகுமத் தந்திர மந்நூல் வழிநிற்றல்
ஆகு மனாதி யுடலல்லா மந்திரம்
ஆகுஞ் சிவபோ தகமுப தேசமே.

2379.
தேசார் சிவமாகு தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையுங் கலாந்தத்துப்
பேசா வுரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

2380.
தானவ னாகுஞ் சமாதி தலைப்படில்
ஆனக லாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தஞ் சித்தாந்த மானது
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

2381.
ஆறந்த மும்சென் றடங்குமந் நேயத்தே
ஆறந்த ஞேய மடங்கிடு ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனஞ் சிவானந்த வுண்மையே.

2382.
உண்மைக் கலையாறோ ரைந்தா னடங்கிடும்
உண்மைக் கலாந்த மிரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலையொன்றி லீறாய நாதாந்தத்
துண்மைக் கலைசொல்ல வோரந்த மாமே.

2383.
ஆவுடை யாளை யரன்வந்து கொண்டபின்
தேவுடை யானெங்கள் சீர்நந்தி தாடந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைக் கருதுமே.

2384.
கருது மவர்தங் கருத்தினுக் கொப்ப
அரனுரை செய்தரு ளாகமந் தன்னில்
வருசம யப்புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த வுண்மையே.

2385.
வேதாந்தஞ் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்த மானந்தஞ் சீரோ தயமாகு
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.

2386.
வேதாந்தந் தன்னி லுபாதிமே லேழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பத
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி யென்பவே.

2387.
அண்டங்க ளேழுங் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளா முளவொளி
பண்டுறு நின்ற பராசத்தி யென்னவே
கொண்டவ னன்றிநின் றானெங்கள் கோவே.

2388.
கோவுணர்த் துஞ்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத வொருவனே.

2389.
ஒருவனை யுன்னா ருயிர்தனை யுன்னார்
இருவினை யுன்னா ரிருமாயை யுன்னார்
ஒருவனு மேயுள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய வாதரத் தானே.

2390.
அரனன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகண் முன்னா வகுத்திட்
டுரனுறு சந்நிதி சேட்டிப்ப வென்றுந்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாகுமே.

2391.
வேதாந்த தொம்பத மேவும் பசுவென்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போயிரண் டயிக்கியஞ்
சாதா ரணஞ்சிவ சாயுச்சிய மாமே.

2392.
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவமவ மாகு மவ்வவ் விரண்டுஞ்
சிவமாஞ் சதாசிவன் செய்தொன்றா னானா
நவமான வேதாந்த ஞானசித் தாந்தமே.

2393.
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற்
சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே.

2394.
சிவனைப் பரமனுட் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்த மானான்
நவமுற் றவத்தையின் ஞானஞ் சிவமாந்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

2395.
தத்துவ மாகுஞ் சகள வகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதஞ் சதாசிவஞ்
தத்துவ மாகுஞ் சீவன்றன் றற்பரந்
தத்துவ மாஞ்சிவ சாயுச்சிய மாமே.

2396.
வேதமோ டாகம மெய்யா மிறைவனூல்
ஓதுஞ் சிறப்பும் பொதுவுமென் றுள்ளன
நாத னுரையவை நாடி லிரண்டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே.

2397.
பரானந்தி மன்னுஞ் சிவானந்த மெல்லாம்
பரானந்த மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்த மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற வுள்ளமே பூரிப்பி யாமே.

2398.
ஆகுங் கலாந்த மிரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலையைந்தா மாதலின்
ஆகு மரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகு மறையா கமமொழிந் தானன்றே.

2399.
அன்றாகு மென்னாதை வகையந்தந் தன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்த முள்ளிட்டு
நின்றாலி யோகாந்த நேர்படு நேர்பட்டான்
மன்றாடி பாத மருவலு மாமே.

2400.
அனாதி சீவனைம் மலமற்றப் பாலாய்
அனாதி யடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த வுண்மையே.

2401.
உயிரைப் பரனை யுயர்சிவன் றன்னை
அயர்வற் றறிதொந் தத்தசி யதனாற்
செயலற் றறிவாகி யுஞ்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்த மாமே.

2402.
மன்னிய சோகமா மாமறை யாளர்தஞ்
சென்னிய தான சிவோகமா மீதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொரு
முன்னிய வாகம நூலெனத் தோன்றுமே.

2403.
முதலாகும் வேத முழுதா கமமகப்
பதியான வீசன் பகர்ந்த திரண்டு
முதிதான வேத முறைமுறை யாலமர்ந்
ததிகாதி வேதாந்த சித்தாந்த மாகவே.

16.பதி பசு பாசம் வேறின்மை

தொகு

2404.
அறிவறி வென்ற வறிவு மனாதி
அறிவுக் கறிவாம் பதியு மனாதி
அறிவினைக் கட்டிய பாச மனாதி
அறிவு பதியிற் பிறப்பறுந் தானே.

2405.
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கியப் பாசமறுத்தாற்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

2406.
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறு நோக்கித்
துடக்கொன்று மின்றித் தொழுமின் றொழுதாற்
குடக்குன்றி லிட்ட விளக்கது வாமே.

2407.
பாசஞ்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசஞ்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலுங்
கூசஞ்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
வாசஞ்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

2408.
விட்ட விடமேறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாச மெய்கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலங் காணுஞ் சகலத்தைச்
சுட்டு நனவி லதீதத்துட் டோன்றுமே.

2409.
நாடும் பதியுட னற்பசு பாசமு
நீடுமா நித்த னிலையறி வாரில்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமு
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

2410.
ஆய பதிதா னருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவு மடலே றெனநிற்கும்
ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
ஆய வரனிலை வாய்ந்துகொள் வார்கட்கே.

2411.
பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க் காறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.

2412.
பதியும் பசுவொடு பாசமு மேலைக்
கதியும் பசுபாச நீக்கமுங் காட்டி
மதிதந்த வானந்த மாநந்தி காணுந்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

2413.
அறிந்தணு மூன்றுமே யாங்கணு மாகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணு மாகி
அறிந்த வனாதி வியாத்தனு மாகி
அறிந்த பதிபடைப் பானங் கவற்றையே.

2414.
படைப்பாதி யாவது பரஞ்சிவஞ் சத்தி
இடைப்பா லுயிர்கட் கடைத்திவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரஞ் செய்யப்
படைப்பாதி தூய மலமப் பரத்திலே.

2415.
ஆகிய சூக்கத்தை யவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேலைந்தால்
ஆகிய சூக்கத்தி லைங்கரு மஞ்செய்வோன்
ஆகிய தூயவீ சானனு மாமே.

2416.
மேவும் பரசிவ மேற்சத்தி நாதமு
மேவும் பரவிந்து வைம்முகன் வேறீசன்
மேவு முருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போனர னாமே..

2417.
படைப்பு மளிப்பும் பயிலிளைப் பாற்றுந்
துடைப்பு மறைப்புமுன் றோன்ற வருளுஞ்
சடத்தை விடுத்த வருளுஞ் சகலத்
தடைத்த வனாதியை யைந்தென லாமே.

2418.
ஆறாறு குண்டலி தன்னி னகத்திட்டு
வேறாகு மாயையின் முப்பான் மிகுத்திட்டங்
கீறாங் கருவி. யிவற்றால் வகத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.

2419.
வீட்கும் பதிபசு பாசமு மீதுற
வாட்கு மிருவினை யாங்கவற் றாலுணர்ந்
தாட்கு நரக சுவர்க்கத்திற் றானிட்டு
நாட்குற நான்றங்கு நற்பாச நண்ணுமே.

2420.
நண்ணிய பாசத்தி னானென லாணவம்
பண்ணிய மாயையி லூட்டற் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசே ரூபாயம் தாகுமே.

2421.
ஆகு முபாயமே யன்றி யழுக்கற்று
மோக மறச்சுத்த னாதற்கு மூலமே
ஆகு மறுவை யழுக்கேற்றி யேற்றல்போல்
ஆகுவ தெல்லா மருட்பாச மாகுமே.

2422.
பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலாற்
பாசம் பயிலப் பதிபதி யாகுமே.

2423.
அத்தத்த லுத்தரங் கேட்ட அருந்தவர்
அத்தத்தி லுத்தர மாகு மருண்மேனி
அத்தத்தி னாலே யணையப் பிடித்தலும்
அத்தத்திற் றம்மை யடைந்துநின் றாரே.

17.அடி தலை அறியும் திறங்கூறல்

தொகு

2424.
காலுந் தலையும் அறியார் கலதிகள்
காலந்தச் சத்தி யருளென்பர் காரணம்
பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர்
காலந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

2425.
தலையடி யாவ தறியார்கா யத்தில்
தலையடி யுச்சியி லுள்ளது மூலம்
தலையடி யான வறிவை அறிந்தோர்
தலையடி யாகவே தானிருந் தாரே.

2426.
நின்றான் நிலமுழு தண்டமும் மேலுற
வன்றா ளசுரர் அமரரு முய்ந்திடப்
பின்றா னுலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணையென் தலைமிசை யானதே.

2427.
சிந்தையி னுள்ளே எந்தை திருவடி
சிந்தையு மெந்தை திருவடிக் கீழது
எந்தையு மென்னை யறிய கிலானாகில்
எந்தையை யானும் அறியகி லேனே.

2428.
பன்னாத பாரொளிக் கப்புறத் தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிருந்திடம்
உன்னா ஒளியு முரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

2429.
பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பத மோதும்
நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
கதிசெயுங் காலங்கள் கண்டுகொ ளீரே.

2430.
தரித்துநின் றானடி தன்னிட நெஞ்சில்
தரித்துநின் றானம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றானப் பரிபாகத் தானே.

2431.
ஒன்றுண்டு தாமரை யொண்மலர் மூன்றுள
தன்றாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்
கின்றேசென் றீசனை யெய்தலு மாமே.

2432.
கால்கொண்டேன் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்
பால்கொண்ட வென்னைப் பரன்கொள்ள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பவொண் ணாதே.

2433.
பெற்ற புதல்வர்போற் பேணிய நாற்றமுங்
குற்றமுங் கண்டு குணங்குறை செய்யவோர்
பற்றைய வீச னுயிரது பான்மைக்குச்
செற்றமி லாச்செய்கைக் கெய்தின செய்யுமே.

18.முக்குற்றம்

தொகு

2434.
மூன்றுள குற்ற முழுது நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

2435.
காமம் வெகுளி மயக்க மிவைகடிந்
தேமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே யுறைவதோர்
தாம மதனைத் தலைப்பட்ட வாறே.

19.முப்பதம்

தொகு

2436.
தோன்றிய தொம்பதந் தற்பதஞ் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபர மாகும் பிறப்பற
வேன்றனன் மாளச் சிவமா யிருக்குமே.

2437.
போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்
ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தப் பெற்றியிற் கைவிட்டு
வேதஞ்சொல் தொம்பத மாகுதன் மெய்ம்மையே.

2438.
தற்பதம் என்றுந் துவம்பதந் தானென்றும்
நிற்ப தசியத்துள் நேரிழை யாள்பதஞ்
சொற்பதத் தாலுந் தொடரவொண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

2439.
அணுவும் பரமும் அசிபதத் தேய்ந்து
கணுவொன் றிலாத சிவமுங் கலந்தால்
இணையறு பால்தேன் அமுதென இன்பத்
துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

2440.
தொம்பதந் தற்பதந் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியஞ்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

2441.
ஐம்ப தறியா தவருமவர் சிலர்
உம்பனை நாடி யுரைமுப்ப தத்திடப்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தானவ னாகுமே.

2442.
நந்தி யறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியம் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்றிரண் டொன்று நலமைந்து
நந்தி னனவாதி மூட்டும் அனாதியே.

2443.
பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதனுப சாந்தத்
துரிய சுழுனையு மோவுஞ் சிவன்பால்
அரிய துரியம் அசிபத மாமே.

20.முப்பரம்

தொகு

2444.
தோன்றியென் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி யின்புற் றிருந்தே யிளங்கொடி
நான்று நலஞ்செய் நலந்தரு மாறே.

2445.மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியுங்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காமே.

2446.ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரங்
கூறா வுபதேசங் கூறிற் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

2447.பற்றறப் பற்றிற் பரம்பதி யாவது
பற்றறப் பற்றிற் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினிற் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றிற் பரம்பர மாமே.

2448.பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.

2449.நனவிற் கலாதியா நாலொன் றகன்று
தனியுற்ற கேவலந் தன்னில் தானாகி
நினைவுற் றகன்ற அதீதத்துள் நேயந்
தனையுற் றிடத்தானே தற்பர மாமே.

2450.தற்கண்ட தூயமுந் தன்னில் விலாசமும்
பிற்காணுந் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
தற்பரன் கால பரமுங் கலந்தற்ற
நற்பரா தீதமு நாடக ராதியே.

21.பரலட்சணம்

தொகு

2451.
அதீதத்து ளாகி யகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி யறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

2452.
ஆதியும்
அந்தமும் இல்லா வரும்பதி சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய வப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

2453.
துரியங் கடந்து துரியாதீதத்தே
அரிய வியோகங்கொண் டம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்கு துரிசில்லை தானே.

2454.
செம்மைமுன் னிற்பச் சுவேதந் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோ டணுவனுள் ளாயிடப்
பொய்ம்மைச் சகமுண்ட போத வெறும்பாழிற்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

2455.
வைச்ச கலாதி வருதத்து வங்கெட்
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்
துச்ச பரசிவ மாமுண்மை யொன்றவே
அச்சம் அறுத்தென்னை யாண்டனன் நந்தியே.

2456.
என்னை யறிய இசைவித்த என்னந்தி
என்னை யறிந்தறி யாத விடத்துய்த்துப்
பின்னை யொளியிற் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை யளித்தனன் தற்பர மாகவே.

2457.
பரந்துஞ் சுருங்கியும் பார்புனல் வாயு
நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அரனெறி யாயது வாகி
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

2458.
சத்தின் நிலையினில் தாளான சத்தியும்
தற்பரை யாய்நிற்குந் தானாம் பரற்குடல்
உய்த்தகு மிச்சையில் ஞானாதி பேதமாய்
நித்த நடத்து நடிக்குமா நேயத்தே.

2459.
மேலொடு கீழ்பக்க மெய்வாய்கண் ணாசிகள்
பாலிய விந்து பரையுட் பரையாகக்
கோலிய நான்கவை ஞானங் கொணர்விந்து
சீலமி லாவணுச் செய்திய தாமே.

2460.
வேறா மதன்தன்மை போலிமிக் காயத்தில்
ஆறாம் உபாதி யனைத்தாகுந் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய்
ஊறா யுயிர்த்துண் டுறங்கிடு மாயையே.

2461.
தற்பர மன்னுந் தனிமுதற் பேரொளி
சிற்பரந் தானே செகமுண்ணும் போதமும்
தொற்பதந் தீர்பாழிற் சுந்தரச் சோதிபுக்
கப்புற மற்றதிங் கொப்பில்லை தானே.

2462.
பண்டை மறைகள் பரவான் உடலென்னும்
துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக்
கண்டு பரனுமக் காரணோ பாதிக்க
மிண்டி னவன்சுத்த னாகான் வினவிலே.

2463.
வெளிகால் கனலப்பு மேவுமண் ணின்ற
தளியா கியதற் பரங்கா ணவன்றான்
வெளிகால் கனலப்பு மேவுமண் ணின்ற
வெளியாய சத்தி யவனவடி வாமே.

2464.
மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீரார் தவஞ்செய்யிற் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

22.முத்துரியம்

தொகு

2465.
நனவாதி மூன்றினிற் சீவ துரியந்
தனதாதி மூன்றினிற் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றி னிற்சிவ துரியமா
மினதாகுந் தொந்தத் தசிபதத் தீடே.

2466.
தானா நனவில் துரியந்தன் தொம்பதம்
தானாந் துரிய நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபத மற்ற தருநனாயே
வானான மேன்மூன்றுந் துரியம் அணுகுமே.

2467.
அணுவின் துரியத்து நான்கும தாகிப்
பணியும் பரதுரி யம்பயி னான்குந்
தணிவிற் பரமாகிச் சார்முத் துரியக்
கணுவிலிந் நான்குங் கலந்தவீரைந்தே.

2468.
ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
நேரந்த மாக நெறிவழி யேசென்று
பாரந்த மான பராபரத் தயிக்கியத்
தோரந்த மாமிரு பாதியைச் சேர்த்திடே.

2469.
தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடிற் பன்னா வுதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.

2470.
அறிவா யசத்தென்னு மாறா றகன்று
செறிவாய மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

2471.
நனவின் நனவாதி நாலாந் துரியந்
தனதுயிர் தொம்பத மாமாறு போல
வினையுறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே.

2472.
தொம்பதந் தற்பதஞ் சொன்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாந் துரியத்து நற்றாமம்
அம்புவி யுன்னா அதிசூக்க மப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

23.மும்முத்தி

தொகு

2473.
சீவன்றன் முத்தி யதீதம் பரமுத்தி
ஓயுப சாந்தஞ் சிவமுத்தி யானந்த
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளுநா தாந்தமே.

2474.
ஆவ தறியார் உயிர்பிறப் பாலுறும்
ஆவ தறியும் உயிரருட்பாறும்
ஆவதொன் றில்லை யகம்புறத் தென்றகன்
றோவு சிவனுடன் ஒன்றுதன் முத்தியே.

2475.
சிவமாகி மும்மல முக்குணஞ் செற்று
தவமான மும்முத்தி தத்துவத் தயிக்கியத்
துவமா கியநெறி சோகமென் போர்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

2476.
சித்தியும் முத்தியுந் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்குஞ் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

24.முச்சொரூபம்

தொகு

2477.
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத்
தாறிய ஞானச் சிவோக மடைந்திட்டு
வேறு மெனமுச் சொரூபத்து வீடுற்றங்
கீறதிற் பண்டைப் பரனுண்மை செய்யுமே.

2478.
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினின் முப்பத் தாறு முதிப்புள
மூன்றினி னுள்ளே முளைத்தெழுஞ் சோதியைக்
காண்டலுங் காயக் கணக்கற்ற வாறே.

2479.
உலகம் புடைபெயர்ந் தூழியும் போன
நிலவு சுடரொளி மூன்றுமொன் றாய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையு மாரறி வாரே.

2480.
பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்
தருவா யுருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வருஞ்சத்தி கோனுயிர்ப் பன்மை
உருவா யுடனிருந் தொன்றாயன் றாமே.

2481.
மணியொளி சோபை யிலக்கணம் வாய்த்து
மணியென லாய்நின்ற வாறது போலத்
தணிமுச் சொரூபாதி சத்தியாதி சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

2482.
கல்லொளி மாநிறஞ் சோபைக் கதிர்தட்ட
நல்ல மணியொன்றி னாடியொண் முப்பதஞ்
சொல்லறு முப்பாழிற் சொல்லறு பேருரைத்
தல்லறு முத்திராந் தத்தனு பூதியே.

2483.
உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதந் தகைந்தால்
அடைந்த பயோதரி யட்டி யடைத்தல்
விடந்தரு வாசலை மேல்திற வீரே.

25.முக்கரணம்

தொகு

2484.
இடனொரு மூன்றி லியைந்த வொருவன்
கடனுறு மவ்வுரு வேறெனக் காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுறை பேதமும் ஒன்றென லாமே.

2485.
ஒளியை யொளிசெய்து வோமென் றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியுஞ் சிவபதத் தானே.

2486.
முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த் தாவதக்
கைக்கா ரணமென்னத் தந்தனன் காணந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்தேக
ஒக்கும துன்மனி யோதுட் சமாதியே.

26.முச்சூனிய தொந்தத்தசி

தொகு

2487.
தற்பதந் தொம்பதந் தானாம் அசிபதந்
தொற்பத மூன்றுந் துரியத்துத் தோற்றவே
நிற்ப துயிர்பர நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகுந் தொந்தத் தசியே.

2488.
தொந்தத் தச்மூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தச்மூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலங்குண மாளச் சிவந்தோன்றின்
இந்துவின் முன்னிருள் ஏகுதல் ஒக்குமே.

2489.
தொந்தத் தசியையவ் வாசியில் தோற்றியே
அந்த முறையீ ரைந்தாக மதித்திட்டு
அந்த மிலாத அவத்தையவ் வாக்கியத்
துந்து முறையிற் சிவமுன்வைத் தோதிடே.

2490.
வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்
துய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்
தத்தற் கடிமை யடைந்துநின் றானே.

2491.
தொம்பத மாயையுள் தோன்றிடுந் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணுமவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

2492.
ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத்
தாகிய வைவிட்டாலற் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறி
வாகிய சீவன் பரசிவ னாமே.

2493.
தாமத காமிய மாகித் தகுகுண
மாமல மூன்றும் அகார வுகாரத்தோ(டு)
ஆமறு மவ்வுமவ் வாயுடன் மூன்றில்
தாமாந் துரியமுந் தொந்தத் தசியதே.

27.முப்பாழ்

தொகு

2494.
காரிய மேழ்கண் டறுமாயப் பாழ்விடக்
காரண மேழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறுஞ்
சீருப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.

2495.
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யிற்சீவன்
ஆய வியாப்த மெனுமுப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்திற் சொல்முடி வாகுமே.

2496.
எதிரற நாளும் எருதுவந் தேறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

2497.
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யாரறி வாரே.

2498.
ஆறாறு நீங்க நமவாதி யகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டு மதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

2499.
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறிந் தோரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடரில்லைப் பாழில்லை
உள்ளமும் இல்லை யுருவில்லை தானே.

28.காரிய காரணவுபாதி

தொகு

2500.
செற்றிடுஞ் சீவ வுபாதித் திறனேழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகருரை
உற்றிடுங் காரிய காரணத் தோடற
அற்றிட வச்சிவ மாகும் அணுவனே.

2501.
ஆறாறு காரியோ பாதி யகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறா றகன்ற சுழுத்தி யதில்எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

2502.
அகாரம் உயிரே யுகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்து
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென் றறையலு மாமே.

2503.
உயிர்க்குயி ராகி யொழிவற் றழிவற்
றயிர்ப்பறு காரணோ பாதி விதிரேகத்
துயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தாலன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.

2504.
காரியம் ஏழிற் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழிற் கலக்கும் பரசிவன்
காரிய காரணங் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே.

29.உபசாந்தம்

தொகு

2505.
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரந் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

2506.
காரியம் ஏழும் கரந்திடு மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்முப சாந்தப் பரிசிதே.

2507.
அன்ன துரியமே யாத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு பரங்காட்சி யாவ துடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனின்உப சாந்தமே.

2508.
ஆறா றமைந்தாண வத்தையுள் நீக்குதற்
பேறான தன்னை யறிதற்பின் றீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதங் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழுப சாந்தமே.

2509.
வாய்ந்த உபசாந்த வாதனை யுள்ளப்போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்ததில் தீர்க்கை யானதீ ரைந்துமே.

2510.
பரையின் பரவப ரத்துடன் ஏகமாய்த்
திரையினின் றாகிய தெண்புனல் போலவுற்
றுரையுணர்ந் தாரமு தொக்க வுணர்ந்துளோன்
கரைகண் டானுரை யற்ற கணக்கிலே.

30.புறங்கூறாமை

தொகு

2511.
பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறையறி வோமென்பர் நெஞ்சிலர் தாமே.

2512.
கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக்
கருந்தாட் கயத்திற் கரும்பாம்பு நீங்கப்
பெருந்தன்மை பேசுதி நீயொழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.

2513.
கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தருவும்ப ராமே.

2514.
பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கியெம் மீசனே யீசனென் றுன்னிற்
கணம்பதி னெட்டுங் கழலடி காண
வணங்கெழு நாடியங் கன்புற லாமே.

2515.
என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலு மாமணி யாய புனிதனை
மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.

2516.
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்
தொன்றா யுணரும் ஒருவனு மாமே.

2517.
நுண்ணறி வாயுல காயுல கேழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.

2518.
விண்ணவ ராலும் அறிவறி யான்றன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடிற் காலையில் எண்ணுற வாகமுப் போது மியற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே.

1519.
ஒன்றா யுலகுடன் ஏழும் பரந்தவன்
பின்றா னருள்செய்த பேரரு ளாளவன்
கன்றா மத்தார்தங் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.

2520.
போற்றியென் றேனெந்தை பொன்னான சேவடி
ஏற்றியே சென்று மெறிமணி தானகக்
காற்றின் விளக்கது காய மயக்குறும்
ஆற்றலுங் கேட்டதும் அன்றுகண் டேனே.

2521.நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊருபுக் காரு முணர்ந்தறி வாரில்லை
கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே.

2522.
ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண்
டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே.

2523.

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தத்
தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
காமல மற்றார் அமைவுபெற் றாரே.

2524.
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்
டிதமுற்ற பாச விருளைத் துரந்து
மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.

2525.
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.

31.அஷ்டதள கமல முக்குண அவத்தை

தொகு

2526.
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனுந்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
நிதித்தென் டிசையு நிறைந்துநின் றாரே.

2527.
ஒருங்கிய பூவுமோ ரெட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

2528.
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.

2529.
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

2530.
திகையெட்டுந் தேரெட்டும் தேவதை யெட்டும்
வகையெட்டு மாய்நின்ற வாதிப் பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டு முண்ணின் றுதிக்கின்ற வாறே.

2531.
ஏழுஞ் சகள மியல்புங் கடந்தெட்டில்
வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்
ஊழி பராபர மோங்கிய பத்தினிற்
றாழ்வது வான தனித்தன்மை தானே.

2532.
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி யைந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் பகவனே.

2533.
புரியும் உலகினில் பூண்டவெ ட்டானை
திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே.

2534.
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.

1535.
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

32.நவாவத்தை - நவாபிமானி

தொகு

2536.
தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொல்இதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.

2537.
நவமா மவத்தை நனவாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவமார் துரியம் சொரூபம தாமே.

2538.
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான வந்தத்தின் நற்சிவ போதம்
தவமா மவையாகித் தானல்ல வாமே.

2539.
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லில் எண்ணத் தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டு
தன்செய்த ஆண்டவன் றான்சிறந் தானே.

2540.
உகந்தன வொன்பது மைந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்தெம்பி ரானென்ப னல்லும் பகலும்
இகந்தன வல்வினை யோடறுத் தானே.

2541.
நலம்பல காலந் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல வாறின னீர்மையன் றானே.

2542.
ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி
நீதியாம் பேதமொன் பானுட னாதியே.

2543.
தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமு மேதினி
ஆறாப் பிறப்பு முயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினைவுயிர் பெற்றதே.

2544.
ஒன்பா னவத்தையுள் ஒன்பா னபிமானி
நன்பாற் பயிலும் நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.

33.சுத்தாசுத்தம்

தொகு

2545.
நாசி நுனியினி னான்மூ விரலிடை
ஈச னிருப்பிட மியாரு மறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே.

2546.
கருமங்க ளொன்று கருதுங் கருமத்
துரிமையுங் கன்மமு முன்னும் பிறவிக்
கருவினை யாவது கண்டகன் றன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுமே.

2547.
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே.

2548.
மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்
கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்
ஆழ வடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ வடைப்பது தன்வலி யாமே.

2549.
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயென்றும் தேடித் திரிபவர்
காயத்து ணின்ற கருத்தறி யாரே.

2550.
ஆசூச மாசூச மென்பா ரறிவிலார்
ஆசூச மாமிட மாரு மறிகிலார்
ஆசூச மாமிட மாரு மறிந்தபின்
ஆசூச மானிட மாசூச மாமே.

2551.
ஆசூச மில்லை யருநிய மத்தருக்
காசூச மில்லை யரனையர்ச் சிப்பவர்க்
காசூச மில்லையா மங்கி வளர்ப்போருக்
காசூச மில்லை யருமறை ஞானிக்கே.

2552.
வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.

2553.
தூய்மணி தூயன றூய வொளிவிடுந்
தூய்மணி தூயன றூரறி வாரில்லை
தூய்மணி தூயன றூரறி வார்கட்குத்
தூய்மணி தூயன றூயவு மாமே.

2554.
தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் றிருநாமம்
தூயது வாளா வட்டமா சித்தியுந்
தூயது வாளாத் தூயடிச் சொல்லே.

2555.
பொருளது வாய்நின்ற புண்ணிய னெந்தை
அருளது போற்று மடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.

2556.
வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
வினைவிட வீடென்னும் வேதமு மோதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.

34.முத்திநிந்தை

தொகு

2557.
பரகதி யுண்டென வில்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞால மறியும்
இரகதிசெய்திடு வார்கடை தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.

2558.
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறிந்
தாடவல் லாரவர் பேறிது வாமே.

2559.
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
திறம்பட்ட சிந்தையைத் தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் றழைக்கில்
இறப்பற்றி னேனிங் கிதென்னென் கின்றானே.

2560.
திடரிடை நில்லாத நீர்போல வாங்கே
உடலிடை நில்லா வுறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல்
அடலெரி வண்ணனு மங்குநின் றானே.

2561.
தாமரை நூல்போற் றடுப்பார் பரத்தொடும்
போம்வழி வேண்டிற் புறமே யுழிதர்வர்
காணவழி காட்டக் கண்காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் றிரிகின்ற வாறே.

2562.
மூடுத வலின்றி முடியு மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடு மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னகி லீரே.

2563.
ஆவது தெற்கும் வடக்கு மமரர்கள்
போவர் குடக்கும் குணக்குங் குறிவழி
நாவினின் மந்திர மொன்று
நடுவங்கி வேவது செய்து விளங்கிடு நீரே.

2564.
மயக்குற நோக்கினு மாதவஞ் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.

35.இலக்கணாத்திரயம்

தொகு

2565.
விட்ட இலக்கணை தான்போம் வியோமத்துத்
தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியின்
சுட்டு மிலக்கணா தீதஞ் சொரூபமே.

2566.
வில்லின் விசைநாணின் கோத்திலக் கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
இல்லு ளிருந்தெறி கூரு மொருவற்குக்
கல்கல னென்னக் கதிரெதி ராமே.

36.மகாவாக்கியம்

தொகு

2567.
சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி பத்தினிற் றற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதம்
ஓவி விடுந்தத்துவமசி யுண்மையே.

2568.
ஆறா றகன்ற வணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பர மெய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே.

2569.
ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத்
தாகிய விட்டு விடாத விலக்கணைத்
தாகுப சாந்தமே தொந்தத் தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவன் ஆமே.

2570.
துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னு மந்நுவயத் தேக மான
தவமன்னு தத்துவ மசிவே தாந்த
சிவமாகும் அதுஞ்சித் தாந்த வேதமே.

2571.
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்பர் ஆகார் இதன்றென்னார்
உரிய பரம்பரம் ஆமொன்றுதிக்கும்
அருநிலம் என்பதை ஆரறி வாரே.

2572.
தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமேல் நாடவே
யும்பத முப்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே.

2573.
வைத்த துரிய மதிற்சொரூ பானந்தத்
துய்த்த பிரணவ மாமுப தேசத்தை
மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்துநின் றானே.

2574.
நனவாதி ஐந்தையும் நாதாதி யில்வைத்துப்
பினமாம் மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கெட்ட மன்னனை நாடே.

2575.
பூரணி யாதது புறம்பொன் றிலாமையின்
பேரணி யாதது பேச்சொன் றிலாமையின்
ஓரணை யாதது ஒன்று மிலாமையின்
காரணம் இன்றியே காட்டுந் தகைமைத்தே.

2576.
நீயது வானாய் எனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயனந் தானந்தி யாகுமே.

2577.
உயிர்பர மகா உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவம் வேதத்
திரியிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓமய மாமே.

2578.
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்
தாய்நாடி யாதிவாக் காதி கலாதி
சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.

2579.
அறிவறி யாமை யிரண்டு மகற்றிச்
செறிவறி வாயெங்கு நின்ற சிவனைப்
பிறிவறி யாது பிரானென்று பேணும்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

2580.
அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவா னிருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவா னறிந்த அறிவறி யோமே.

2581.
அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

2582.
அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாம்
கடிதொழக் காணென்னுங் கண்ணுத லானே.

2583.
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே.

2584.
துறந்துபுக் கொள்ளொளிச் சோதியைக் கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

2585.
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறையாட்ட ஆடலால்
கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே.

37.விசுவக்கிராசம்

தொகு

2586.
அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.

2587.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

2588.
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

2589.
பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்குந்
தினெங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும்
உரனெங்கு மாயுல குண்டுமிழ் செய்யும்
வரமிங்கன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

2590.
அளந்து துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
கிளர்ந்த பரஞ்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.

2591.
இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தனன் நந்தி இதயத்து ளானே.

2592.
கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் ஓதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.

2593.
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை உண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே.

38.வாய்மை

தொகு

2594.
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

2595.
எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்
எல்லாம் அறிந்த இறை எனலாமே.

2596.
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனைக் கண்டுகொண் டேனே.

2597.
தானே உலகில் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளமொன் றாமே.

2598.
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

2599.
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந் தூழித் தலைவனு மாய்நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.

2600.
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துறல் ஆமே.

2601.
எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி ஆகிநின் றானே.

2602.
எய்துவ தெய்தா தொழிவ திதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய் புலனெறி ஒன்பதும் தாட்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

2603.
கைகலந் தானைக் கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்யொழிந் தார்க்கே புகலிடம் ஆமே.

2604.
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திருந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்
கத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

2605.
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே.

2606.
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பால் பறவை புகுந்துணத் தானொட்டா(து)
அம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடின்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே.

2607.
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கஞ் செய்யாதே சிவனெம்பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.

2608.
மனமது தானே நினையவல் லாருக்(கு)
இனமெனக் கூறும் இருங்காய மேவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

39.ஞானி செயல்

தொகு

2609.
முன்னை வினைவரின் முன்உண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

2610.
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.

2611.
மனவாக்கு காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.

40.அவாவறுத்தல்

தொகு

2612.
வாசியும் ஊசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாமே.

2613.
மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
கூடத் துளானலன் கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே.

2614.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனொ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.

2615.
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

2616.
உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.

2617.
நின்ற வினையும் பிணியும் நெடுங்செயல்
துன்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

2618.
உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை அருள்தான் அடைந்தன்பில் ஆறுமே.

2619.
அவனிவன் ஈசனென் றன்பற நாடிச்
சிவனிவன் ஈசன்என்றுண்மையை ஓரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே.

2620.
கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.

2621.
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

41.பத்தியுடைமை

தொகு

2622.
முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்றன்னைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியை
பத்தன் பரசும் பசுபதி தான்என்றே.

2623.
அடியார் அடியார் அடியார் அடிமைக்கு
அடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியான் இவனென் றடிமைகொண் டானே.

2624.
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் கயனாரைக் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி ஆகிநின் றானே.

2625.
ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
றத்தன் இருந்திடம் ஆரறி வார்சொல்லப்
பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.

2626.
ஆன்கன்று தேடி அழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி அழைத்தேனென் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றால் நாடிவந் துள்புகுந் தானே.

2627.
பெத்தத்துத் தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப் பட்டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

2628.
பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகக்
குறவஞ் சிலம்பக் குளிர்வரை ஏறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே.

2629.
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறுதுணை செய்து சிவனடி சிந்தித்து
உறுதுணை யாயங்கி யாகிநின் றானே.

2630.
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்
கானவன் என்றும் கருவரை யான்என்றும்
ஊனத னுள்நினைந் தொன்று பட்டாரே.

2631.
நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்கும்என் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் மூழ்கிநின் றேனே.

42.முத்தியுடைமை

தொகு

2632.
முத்தியில் அத்தன் முழுத்த அரள்பெற்றுத்
தத்தவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.

2633.
வளங்கனி தேடிய வன்றாட் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

43.சோதனை

தொகு

2634.
பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்
தம்மான் அடிதந் தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.

2635.
அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடுங் கூடுவன் நானே.

2536.
அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை அழகிய வாறே.

2637.
குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்(து)
அறியா அறிவினி லவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவமென லாமே.

2638.
காலினில் ஊறும் கருப்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போன்றுளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே.

2639.
விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.

2640.
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவந் தானென் றெழுந்தே னெழுதலும்
சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே.

2641.
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.

2642.
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

2643.
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தைதாய் கேளியான் ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே.

2644.
எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவத னோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குந் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே.

2645.
ஆதிப் பிரான்தந்த வாளங்கைக் கொண்டபின்
வேதித் தென்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கட் டெய்வம் அவனிவ னாமே.

2646.
அந்தக் கருவை அருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிறப்பும் வாட்டிச்
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தார் சோதனை
சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.

2647.
உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.