திருவாசகத்தேன்/'வா' என்ற வான்கருணை
மாணிக்கவாசகர் அன்பு ஒன்றினையே வேண்டி நின்றார். 'உனக்கு நிரந்தரமாய் அன்பு எனக் கருளாய்” என்று வேண்டினார். அன்பினால் ஊனும் உயிரும் உருகும் வகையில் அழுது அழுது அடி அடைந்தவர் மாணிக்கவாசகர். அதனால், அவர்தம் திருப்பாடல்கள் ஊனினை உருக்குகின்றன; உள்ளொளியைத் தருகின்றன. 'பாம் பறியும் பாம்பின் கால்'- இது பழமொழி. கற்றாரை கற்றாரே காமுறுவர். அடியார்கள், அடியார் களுடன் இணங்கி அவர்தம் நடுவுள் இருப்பதேயே விரும்புவர். அடியார் கூட்டத்தில் தம்மை அங்கீகரித்துப் பேசுவாரை விரும்புவர். மாணிக்கவாசகர் இந்த இயல்பு களுக்கு விதிவிலக்கானவரல்லர்.
மாணிக்கவாசகருக்குக் கண்ணப்பரிடம் பக் தி. கண்ணப்பர் தம் தூய அன்பை, அவர் இ ய ற் றி ய வழிபாட்டை, வழிபாட்டின் சிறப்பை வியந்து வியந்து உள்ளமெலாம் உவப்பப் பாராட்டுகின்றார்; பாராட்டி மகிழ்கின்றார்.
திருவுருவ வழிபாடு செய்தல் எளிதன்று. அது மிகவும் கடினமானது. திருவுருவத்தைக் கடவுளாகப் பாவிக்க வேண்டும். "திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைக் கண்டவர்க்குச் சிவனெனவே உறைவன் ஆங்கே!" என்பது சித்தியார். "திருக்கோயில் எழுந்தளிரு யிருப்பது திருவுருவமல்ல; கடவுளே" என்ற நம்பிக்கை யுடன் வழிபட்டால் வழிபாடு இறைவனுக்கு செய்தது ஆம்! அங்ங்ணமின்றி திருவுருவம் என்று வழிபட்டால் வழிபாடு இறைவனுக்காகாது. இதனை மாணிக்கவாசகர்,
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே,
எங்களை ஆண்டு கொண் டிங்கெழுக் தருளும்
மதுவளர் பொழில் திருவுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !
(திருப்பள்ளியெழுச்சி- 7)
என்று பாடுவதறிக. "இது அவன் திருவுரு; இவன் அவன் என்று வழிபடுதலே முறையான திருவுருவ வழிபாடு. திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பூசை செய்ய வேதம் சுற்றிருக்க வேண்டும்; ஆகமங்கள் தெரிந்திருக்க வேண்டும். பூசைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டும். இங்ங்ணம் பல்வேறு பொருளைச் சாதனமாகக் கொண்டும் மந்திரங்களை உச்சரித்தும் வழிபாடு செய்ய வேண்டும்.
சிவகோசரியார் மரபுவழி- விதிமுறைப்படி பொருள் பற்றிப் பூசை செய்தவர். நாள்தோறும் பொன்முகவி யாற்றில் நீராடி விதிமுறைப்படி பூசை செய்தல் சிவகோசரியாரின் வழக்கம். திண்ணனாருக்கு - கண்ணப்பருக்குப் பூசனை, பழக்கத்தில் இல்லாத ஒன்று. கண்ணப்பர் வேடுவர் குலத்தைச் சார்ந்தவர். குல மரபுப்படி வேட்டையாடும் தொழிலைக் கற்றவர். அவர் இயற்பெயர் திண்ணனார். அவர், தோழன் வாயிலாக "மலை உச்சியில் குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்" என்று கூறக்கேட்டார். குடுமித் தேவரை காணும் ஆர்வம் திண்ணனாருக்குப் பொங்கி வழி ந் தது. திண்ணனார் மலை ஏறுகிறார். உடற் சுமை குறைகிறது: ஆன்மா, தூய்மையுறுகிறது. திண்ணனாருக்கும் அவர்தம் அன்புக்குமிடையே போட்டி. திண்ணனாரின் அன்பு முன் செல்கிறது. திண்ணனார் குடுமித் தேவரைக் கண்டார். நிலமிசை வீழ்ந்து வணங்கினார்; எழுந்தார்; மீண்டும் வீழ்ந்து வணங்கினார்; காளத்தி அண்ணலை நோக்கினார் திண்ணனார். "காளத்தி அண்ணல் சாலப் பசித்திருக்கிறார்” என்று உணர்கிறார். "பொறுத்திரு! சடுதியில் சென்று உணவு கொண்டு வருகிறேன்" என்றார்; ஓடினார்; ஒடினார்; வேட்டையாடினார். பன்றி அறுத்து இறைச்சியாக்கினார். அனலில் சுட்டார்; வாயில் போட்டுச் சுவை பார்த்தார். ஆனால் சுவையை அனுபவிக்கவில்லை. பக்குவப்படுத்திய இறைச்சியைத் தேக்கிலையில் எடுத்துக் கொண்டார். "என் அப்பன் காளத்தி அப்பன் குளித்கிருக்கமாட்டானே!" என்று எண்ணினார். குளிப்பாட்டத் தன் வாய் நிறையத் தண்ணிரை எடுத்துக் கொண்டார். பூக்களைத் தலையில் எடுத்துக் கொண்டார்; விரைந்து காளத்தியப்பன் சந்நிதிக்கு வந்தார். திண்ணனார் வாயில் கொண்டுவந்த தண்ணீரைக் காளத்தியப்பர் மீது சொரிந்து திருமஞ்சன மாட்டினார்; தலையில் இருந்த பூக்கடை எடுத்துச் சூட்டினார். பின் கையில் தேக்கிலையில் கொண்டுவந்த ஊனை இறைவன் முன் படைத்து உண்ணுமாறு வேண்டினார். "நான் சுவைத்துப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது; உண்ணுக!" என்று இறைவன் வேண்டினார். மாலைப்பொழுது வ ந் த து; இருள் சூழ்ந்தது. "அப்பனே இருட்டில் தனியாக இருக்கிறாயே! துணை வேண்டாமா?" என்றெல்லாம் நீள நினைந்தார். இரவெல்லாம் விழித்து நின்று காத்தார்.
இந்தப் பூசை ஆகம வழிப் பூசையல்ல. புனல், பூ, தூபம், தீபம், மணியோசை முதலியன இல்லை. திண்ணனாரின் இந்தப் பூசையை இறைவன் விரும்பினார்; திண்ணனார் மெய் தீண்டும் பொழுதெல்லாம் மெய் குளிர்ந்தான். இதனால் வேடர் திண்ணனாரின் அன்பு, அன்பின் ஆற்றல் தெரிந்தது. முடிவு என்ன? பொருட்பற்றிச் செய்கின்ற பூசைகள் இறைவன் விரும்புவை அல்ல. அருச்சனை என்னும் வெறும் வயல் மட்டுமே பரந்து கிடந்தால் பயனுண்டோ? அந்த் அர்ச்சனை வயலுள் அன்பை விதைக்க வேண்டாமா? இறைவன் மலைத்தான்! ஆனால், அன்பெனும் பிடியுள் அவன் சிக்குவான்! சிவகோசரியார் செய்த பூசை பொருளைப்பற்றிச் செய்த பூசை. திண்ணனார் செய்த பூசை அன்பு பற்றிச் செய்த பூசை. அதனாலன்றோ சிவகோசரி யாருக்குக் கண்ணிடந்து அப்பும் பேறு கிடைக்கவில்லை. திண்ணனாருக்கே அந்தப் பேறு கிடைத்தது. ஏன் கண்ணிடந்து அப்ப வேண்டிய நிலை: காளத்தியப்பருக்குக் கண்ணில் உதிரங் கொட்டல் நோய், வரவழைத்துக் கொண்ட நோய். திண்ணனாரின் அன்பை- அன்பின் பெருக்கை அளந்து காட்ட வேண்டும், சிவகோசரி யாருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும்! அன்பைப் புலப்படுத்துவன, அன்பின் அளவைப் புலப்படுத்துவன. கண்கள்தாம். திண்ணனாரின் அன்பை யாருடைய கண்கொண்டு அளப்பது? அளந்தறிவது? எவருடைய கண்களும்- காளத்தியண்ணல் கண்களும்கூட, திண்ணனாரின் அன்பை அளந்து காணும் ஆற்றலுடையன அல்ல. எனவே, திண்ணனாரின் அன்பின் பெருக்கத்தைத் திண்ணனார் கண்களைக் கொண்டேதான் பார்க்க வேண்டும்; பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் காளத்தியப்பருக்குக் கண்ணில் உதிரப் பெருக்கு ஏற்பட்டது: பொருட்பற்றிப் பூசனை செய்த சிவகோசரியார் செயலற்றவராகிறார். திண்ணனார் விரைந்து செயற்படுகிறார்; தமது கண்ணை இடந்து அப்புகிறார். திண்ணனார் கண்ணப்பராகிறார்! அன்பு கண்ணப்பராகிறது: கண்ணப்பர் அன்பின் பிழம்பாய்த் தெரிகின்றார். கண்ணப்பரை ஆட்கொண்டருளிய இறைவன் தன்னையும் ஆட்கொண்டருளியதை
வியந்து பாடுகின்றார், மாணிக்கவாசகர். பொருட் பற்றிச் செய்கின்ற
பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடி
வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார்
கேடறிய மெய்குளிர்க் தங்கு
அருட்பெற்று கின்றவா
தேனோக்கம் ஆடாமோ !
(திருத்தேனோக்கம்- 3)
கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
எண்ணப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்று தாய் கோத்தும்பி !
(திருக்கோத்தும்பீ- 4)
இன்றைய திருக்கோயில் வழிபாட்டு நிலையில் பொருட்பற்றிச் செய்கின்ற பூசைகளே பெருகி வளர்ந்து வருகின்றன. பொருட்பற்றிய பூசையிலும் கூடத் 'தான்' கெடாமல் செய்யும் பூசைகளே மிகுதி. தான் கெடாதது மட்டுமன்றித் தன்னுடைய தேவைகளை, இல்லை, இல்லை அவாக்களை அடுக்கி வைத்து அருள்பாலிக்கும்படி வேண்டிச் செய்யும் வணிகத் தன்மை வாய்ந்த பூசைகளே மிகுதி "வேண்டத்தக்கது அறிவோய்" என்றும் வேண்டுவதும் உந்தன் விருப்பன்றே!" என்றும் தொழுது அழும் பக்தர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை. இன்று எங்கும் அன்பு வழிபாடு அருகி, ஆசையினால் இயற்றும்
வழிபாடே மலிந்து விட்டது. திருக்கோயில் சூழலும் 'சிவகோசரியார்’களைத் தோற்றுவிப்பதாகவே உள்ளது. 'கண்ணப்பர்கள் உருவாகும் சூழல் அறவே இல்லை. பழங்காலத்தில் சிவாச்சாரியார்கள் திருவுருவங்களில் இறைவனை (ஆவாகனம் செய்து) எழுந்தருளச் செய்து வைத்தனர். அவ்வாறு எழுந்தருளச் செய்தபின் பக்தர்கள் நேரிடையாக மூர்த்தியின் திருமேனி தீண்டிப் புனலும் பூவும் சொரிந்து வழிபடவும், அனைத்து உச்சிமோந்து வழிபாடியற்றவும் உரிமைகள் இருந்தன. தானே வழிபாடியற்றுதல்தான்- :செய்வது தான் நல்ல வழிபாட்டுப் பயிற்சி முறை. இந்த வழிபாட்டு முறையில் தான், 'கண்ணப்பர்கள்' தோன்ற முடியும். நாடு முழுதும் உள்ள திருக்கோயில்களின் வரலாறுகளைப் படித்தால் இந்த உண்மை புலனாகும். திருமுறைகளில், பக்தர்கள் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனியைத் தீண்டி வழிபாடியற்றினர் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. அப்பரடிகள் பாடிய திருவையாற்றுப் பதிகத்தில் வரும்,
"போதொடு நீர் சுமக் தேத்திப்
புகுவார் அவர் பின் புகுவேன்"
என்ற அடியை நினைவுகூர்க.
பக்தர்கள் அனைவரும் திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனியைத் தீண்டி வழிபடும் உரிமை இன்றும் வடபுலத்தில்- காசி முதலிய திருத்தலங்களில் நடைமுறையில் உள்ளது. இதனால் என்ன குறை வந்துவிட்டது. சம்பிரதாய்ம் என்ற பெயரில் பொருட்பற்றிச் செய்யும் பூசையை மட்டுமே வளர்த்து அன்பையும் அன்பைப் பற்றாகக் கொண்டு செய்யும் வழிபாட்டையும் புறத்தே தள்ளி, இறைவனிடமிருந்து பக்தர்களை அந்நியமாக்கினால் என்ன செய்வது? காலப் போக்கில் மக்கள் திருக்கோயில்களிலிருந்து விலகுவர். இதனைத் திருமுறை ஆர்வலர்கள் சிந்தனை செய்க!