திருவாசகம்/அச்சப் பத்து

அச்சப் பத்து

 
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்;
இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம்
திரு உரு அன்றி, மற்று ஓர் தேவர், எத் தேவர்? என்ன
அருவராதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;
என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்;
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி,
துளி உலாம் கண்ணர் ஆகி, தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்கு,
அளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;
துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம் மால்,
திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறு
அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்;
தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன்,
தாள் தாமரைகள் ஏத்தி, தட மலர் புனைந்து, நையும்
ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்;
புகை முகந்து எரி கை வீசி, பொலிந்த அம்பலத்துள் ஆடும்,
முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி,
அகம் நெகாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
தறி செறி களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்;
வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்தி, சிறந்து, இனிது இருக்க மாட்டா
அறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்;
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்,
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீண்ட மாட்டாது,
அஞ்சுவார் அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 
கோண் இலா வாழி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;
நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு,
வாழ்

 நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவாசகம்/அச்சப்_பத்து&oldid=1406603" இலிருந்து மீள்விக்கப்பட்டது