திருவாசகம்/அன்னைப் பத்து

தில்லையில் அருளியது - கலிவிருத்தம்

407075திருவாசகம் — அன்னைப் பத்துமாணிக்கவாசகர்

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும். 338

கண்ணஞ் சனத்தார் கருணைக் கடலினர்
உள்நின் றுருக்குவர் அன்னே என்னும்
உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 339

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெரும்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 340

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுவென்ன அன்னே என்னும். 341

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 342

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதியசம் அன்னே என்னும். 343

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 344

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாள மிருந்தவா றன்னே என்னும். 345

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையுமிது வென்னே அன்னே என்னும். 346

கொன்றை மதியமும் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும். 348

திருச்சிற்றம்பலம்