திருவாசகம்/திருத்தசாங்கம்

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி. 359

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர். 360

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு. 361

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை. 365

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம் உவந்த தார். 366

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாம் கொடி. 367

திருச்சிற்றம்பலம்

திருத்தசாங்கம் விளக்கம்

தொகு

திரு+தசம்+அங்கம் = திருத்தசாங்கம் ஆகும். அரசனுக்கு உரிய பெயர்,நாடு, ஊர்,ஆறு,மலை புரவி படை முரசு மாலை கொடி ஆகிய பத்து உறுப்புகளையும் போற்றிப் பாடுவது மரபாகும். அந்த மரபினைப் பின்பற்றி சிவனக்கு உரிய பத்து உறுப்புகளையும் மாணிக்கவாசகர் பாடுகின்றார்.

உசாத்துணை

தொகு

புலவர் கருப்பூர் மு.அண்ணாமலை, திருவாசகம் தெளிவுரை, நான்காம் பதிப்பு ஏப்ரல் 2007- குமரன் பதிப்பகம் சென்னை.