திருவாசகம்/திருவேசறவு

திருவேசறவு
(திருப்பெருந்துறையில் அருளியது - கொச்சகக் கலிப்பா)


இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547

ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று
ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548

பச்சைத்தா ளரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்
துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551

என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552

மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா
வோத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு
அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554

நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555

திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவாசகம்/திருவேசறவு&oldid=473494" இலிருந்து மீள்விக்கப்பட்டது