திரு இரட்டை மணிமாலை
- கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சம்என்பாய்த்
- தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
- வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
- இளந்திங் களும்எருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே 1
- ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து
- கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
- மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
- பிறவாமைக் காக்கும் பிரான் 2
- பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
- டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
- பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
- அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே 3
- அந்தணனைத் தஞ்செமென் றாட்பட்டார் ஆழாமே
- வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
- பொன்கண்டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே
- என்கண்டாய் நெஞ்சே இனி 4
- இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
- கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
- முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத்
- தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே 5
- சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
- பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
- ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும்
- ஓவாது நெஞ்சே உரை 6
- உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கிற்செவ் வான்தொடைமேல்
- இரைக்கின்ற பாம்பினை என்றும் தொடேல்இழிந் தோட்டந்தெங்கும்
- திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற கொன்றையும் செஞ்சடைமேல்
- விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே 7
- வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
- காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
- வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
- கில்லேன மாஎன்றான் கீழ் 8
- கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய்
- வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள்
- பாழா யிடக்கண்ட கண்டன்எண் தோளன்பைம் பொற்கழலே
- தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளும் தலைநின்மினே 9
- தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
- தலையா யினஉணர்ந்தோர்காண்பர் - தலையாய
- அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
- கண்டத்தான் செம்பொற் கழல் 10
- கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்
- நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிகர் ஏதுமின்றித்
- தழற்கொண்ட சோதிச் செம் மேனிஎம் மானைக்கைம் மாமலர்தூய்த்
- தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே 11
- தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
- ஒல்லை வணங்கி உமையென்னும்- மெல்லியல்ஓர்
- கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
- நீற்றானை நெஞ்சே நினை 12
- நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கோர் தஞ்சமென்று
- மனையா ளையும்மக்கள் தம்மையும் தேறியோர் ஆறுபுக்கு
- நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநொந் தாதசெந்தீ
- அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே 13
- அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
- முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தில்
- ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
- நீறாடி நெய்யாடி நீ 14
- நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே
- தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப்
- பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம்
- போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே 15
- புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
- எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
- கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
- அம்மானுக் காட்பட்ட அன்பு 16
- அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோர் ஆடரவம்
- தன்பால் ஒருவரைச் சாரஒட் டாதது வேயும்அன்றி
- முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை
- என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே 17
- ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
- ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
- படங்குலவு நாகமுமிழ் பண்டமரர் சூழ்ந்த
- தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு 18
- தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாம்ஒருநாள்
- எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச்
- சுமக்கின்ற பிள்ளைவெள்ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய்
- உமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட உத்தமரே 19
- உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
- செத்த மரம்அடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
- நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
- கேளாழி நெஞ்சே கிளர்ந்து 20
திருச்சிற்றம்பலம்