தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 8

8

அருணோதயம் உண்டாவதற்கு முன்பே, உறக்கத்தை விட்டு எழுந்து விட்டனர் அவ்வூர் மக்கள், கிராமவாசிகனாதலால், அந்த அதிகாலையிலேயே சுறுசுறுப்பாகக் காரியங்களைச் செய்யலாயினர். மங்கையர் வீதிகளில் சாணந் தெளித்துப் பெருக்கிச் சுத்தஞ் செய்தனர். ஆடவர் வயல் நோக்கிச் சென்றனர்.

மயிலாடுதுறை நீர்வளமும், நிலவளமும் உடைய ஊராதலால் எங்கு பார்த்தாலும் செழுமையாகக் காணப்பட்டது. கர்ப் பெயருக் கேற்ப, கோல மயில்கள் ஒயிலாகத் தோகை விரித்து ஆடாவிட்டாலும், வயல் வெளிகளில் நஞ்சைப் பயிர்களும், புஞ்சைப் பயிர்களும், கதிர் பிடித்துக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பச்சைப்பசேல் என்ற இப் பசுமைக் காட்சி காலை சூரியோதயத்தில் பார்ப்பதற்கு ரம்மியமாயிருந்தது. வேளாள வீதியில் ஒட்டு வில்லை வீடு ஒன்றின் வாசலில் கோலம் போட்டுவிட்டு நிமிர்ந்த வயோதிக மாது ஒருத்தி வண்டிச் சப்தங் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். உடனே முதுமையால் ஒளியிழந்திருந்த அவள் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன.

"மங்கை! என்ன செய்யறே, உள்ளே! ஓடிவா பட்டணத்திலே இருந்து......" என்று அக்கிழவி வீட்டின் உட்புறத்தை நோக்கிக் கூறினாள்.

"பட்டணத்திலே இருந்து" என்றதும் அவள் சொல்லி முடிக்கும் முன்பே மங்கையர்க்கரசி செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டுப் - பதறி யோடி வந்தாள்.

"பட்டணத்திலே இருந்தா? யாரு அம்மா?"

"சிவாவோ, விசுவமோ? சரியா தெரியவில்லை. அக்கா வீட்டிலே இருந்து தான்......"

இதற்குள் மாட்டு வண்டி வீட்டை நெருங்கி விட்டது. மக்கையின் கண்கள் பரபரப்போடு வண்டியினுள் பார்த்தன. உள்ளே உட்கார்ந்திருப்பது சிவகுமாரன் தான் என்பது அவளுக்கு உடனே தெரிந்து விட்டது. ஆனால் அவன் முகம் வாட்டமாயிருப்பதைக் கண்டு அவள் கலவரமடைந்தாள். 'என்னவோ ஏதோ!' என்று எண்ணி அவளுடைய உள்ளம் ஏங்கியது. நான் சென்னையிலிருந்து வந்து ஒரு வாரங்கூட ஆகவில்லை; அதற்குள் அங்கிருந்து ஆள் வந்திருக்கிறதென்றால்? அதுவும் மனவருத்தத்துடன் வந்திருப்பதைக் கவனித்தால்? பாட்டணத்திலிருந்து வந்திருப்பது வேறு யாருமில்லை. அக்காவின் பெரிய பிள்ளையே வந்திருக்கிமுன். என்ன விஷயமா யிருக்கும்? ஒருவேளை என்னைக் கூப்பிட்டு வரச் சொல்லி அனுப்பியிருப்பார்களோ? அத்தான் சொல்லியனுப்பி யிருப்பாரோ? அக்கா சொல்லி அனுப்பி யிருப்பாரோ? அக்கா விருப்பத்துக்கு மாறாக அத்தான் கூறியனுப்பி இருக்க முடியாது. அக்காவேதான் கூறியனுப்பியிருக்க வேண்டும். என்மீது வெறுப்புக் கொண்டு வீட்டை விட்டு விரட்டியடித்த அக்கா என்னைக் கூட்டி வரச்சொல்லி அனுப்பியிருப்பாளா? நான் பிரிந்து வந்தபின் அக்கா என்மீது கொண்ட கோபம் மாறி......' மங்கையின் மனத்தில் ஒரு சில விநாடிகளில் இப்படிப் பல எண்ணங்கள் தோன்றின.

"வா சிவா, ஊரிலே அம்மா, அப்பா எல்லாம் சுகமா?" என்று சிவகாமியம்மாள் கேட்டு வரவேற்பது உணர்ந்து மங்கை நினைவுகளிலிருந்து விடுபட்டு, சிவகுமாரனை வரவேற்க எதிர்கொண்டு போனாள்.

இதற்குள் சிவகுமாரன் வண்டியை விட்டு இறங்கிப் படுக்கை பெட்டிகளை எடுத்து வைக்கச் செய்தபின், வண்டிக் காரனுக்குச் கூலி கொடுத்து அனுப்பிவிட்டு வந்தான்.

மங்கை பெட்டி படுக்கைகளை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, "நேரே பட்டணத்திலிருந்து தான் வருகிறாயா, சிவா?...." என்று கேட்டுக் கொண்டே சிவகுமாரனை உள்ளே அழைத்துப் போனாள், சிவகாமியம்மாள் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

மங்கை சாமான்களை உள்ளறையினுள் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து, சிவகுமாரனை நோக்கி, "அத்தான், அக்கா, கணேசன், கோகிலா, விசுவம் எல்லாம்....." என்று ஷேமலாபம் விசாரிக்கலானாள்.

சிவகுமாரன், "எல்லாம் சௌக்கியந்தான், சித்தி!......" என்று புன்முறுவலுடன் சொன்னான்.

"யோக க்ஷேமம் விசாரிப்பது இருக்கட்டும், மங்கை! முதலில் சிவா காலைக் கடனை முடிக்கட்டும், பலகாரமெல்லாம் செய்தான பின்னர்,....." என்று அன்னை மகளுக்குக்... கடமையை உணர்த்தினாள்.

மங்கை சிவகுமாரனைப் புறக்கடைக்கு அழைத்துச் சென்றாள். பல் விளக்கச் சொல்லிவிட்டு வெந்நீர் போட்டுக்.... கொண்டு போய்க் கொடுத்தாள். அவன் குளித்து வருவதற்குள் பலகாரம் தயார் செய்து விட்டாள்.

சிவகுமாரன் சிற்றுண்டி, காபி முதலியன அருந்தியான , பின், அவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த மங்கை, "என்ன சிவா, முகம் ஒரு மாதிரியிருக்கிறது? உனக்கு உடம்பு ஒன்றுமில்லையே?...அல்லது வேறு யாருக்காயினும்....." என்று கேட்டு நிறுத்தினாள்.

"எனக்கு ஒன்றுமில்லை" என்று சொல்லி விட்டு, சிவகுமாரன் மங்கையின் முகத்தை ஒருவிதமாக நோக்கினான்.

"என்ன தயங்குகிறாய்? சிவா! யாருக்காயினும்......."

மங்கை பதற்றத்துடன் கேட்டாள்.

சிவகுமாரன் சிந்தனையோடு "இருந்தது சிவகாமி"யம்மாளுக்கும் சிந்தாகுலத்தை யுண்டு பண்ணியது.

"சொல்லு, சிவா! யாருக்கு என்னவென்று?"

பாட்டியும் கேட்ட பின் சிவகுமாரனால் பேசாமலிருக்க முடியவில்லை.

"சித்தி வந்தபின், தம்பி நோயில் விழுந்து விட்டான்......"

"யாரு விசுவமா?" என்று கேட்டாள் சிவகாமியம்மாள்.

"கணேசனுக்கா உடம்பு அசௌக்கியம்?" என்ற சொல்லி வைத்தாற்போல் வினவினாள் மங்கை.

"ஆமாம், சித்தி! கணேசனுக்குத்தான் காய்ச்சல்......கைகால் எல்லாம் வீங்கியிருக்கு....."

மங்கை பதறிப்போய், "என்ன, சுரமா? கைகால்களும் வீங்கியிருக்கா?"

"காய்ச்சல் கண்டால் கையும் காலும் ஏன் வீங்கும்? இதென்ன, புதுவிதமான நோயாயிருக்கிறதே!"

சிவகாமியம்மாள் வியப்போடு பேசினாள்.

"டாக்டரை அழைத்து வந்து காட்டினீர்களா? அவர் என்ன சொன்னார்? மருந்து என்ன கொடுத்திருக்கிறார்?"

மங்கை மூச்சு விடாமல் கேட்டுக்கொண்டே போனாள்.

சிவகுமாரன், "நம்ம குடும்ப டாக்டர்தான் வந்து பார்த்து மருந்து கொடுக்கிறார். ஆனால் குணம் சிறிதும் காணவில்லை......"

"என்ன? மருந்து கொடுத்துமா குணம் ஏற்படவில்லை. இது என்ன?" உணர்ச்சியால் மங்கையின் பேச்சு தடைப்பட்டது

"அது தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கவலையாயிருக்கிறது. ஆகாரம், தூக்கங்கூடக் கொள்ளாமல் பித்துப் பிடித்தவர்கள் போல் உட்கார்ந்திருக்கிறார்கள்."

சிவகுமாரன் தயங்கித் தயங்கி விஷயத்தை விவரித்தான.

"ஒருவேளை தெய்வக் குற்றமா யிருக்குமோ! குல தெய்வத்துக்கு......"

சிவகுமாரன், "டாக்டர்கூட இது உடம்பால் உற்ற நோயாகத் தெரியவில்லை, வேறு ஏதோ......"

"வேறு என்னவாயிருக்கும்'......பச்சைக் குழந்தைக்கு......"

"கணேசன் சதா சித்தி, சித்தி என்று அரற்றிக் கொண்டே யிருக்கிறான், சித்தி! அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் உங்கள் கவனத்தால் அவனுக்கு உடம்பு அப்படியிருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். சுரங் கண்டால் கைகால் வீங்குவதற்குக் காரணமில்ல என அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்......"

"ஆமாம்; ஆமாம், இப்போது தான் எனக்கும் ஞாபகம் வருகிறது. குழந்தைகள், சிறுவர்கள் பெற்றவர்களிடத்தோ பிறரிடத்தோ பாசமாயிருந்தால் அவர்கள் பிரிவைத் தாங்காமல் இப்படித்தான் உடம்பு உப்புசமாகிக் கஷ்டப்படுவார்கள். சில பிள்ளைகளுக்கு மூஞ்சியெல்லாம் கூட வீங்கிவிடும்...... இதை நான் பார்த்திருக்கிறேன்..."

பாட்டி பேசி நிறுத்துவதற்கு முன்னே, சிவகுமாரன் பேசத் தொடங்கி, "அதற்கேற்றாற்போல, பாரு பாட்டி! சித்தி வந்த மறுநாளே கணேசன் படுக்கையில் விழுந்து விட்டான்..." என்று சொன்னான்.

"அப்படியா?" என்று கேட்டவாறு சிவகாமியம்மாள் மகணின் முகத்தைப் பார்த்தாள்.

மங்கை கண்கலங்கி அழுது கொண்டிருந்தாள்.

சிவகுமாரன் அவளைப் பார்த்து, "அப்பாவும் அம்மாவும் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொன்னார்கள், சித்தி!" என்று மெல்லச் சொன்னான்.

"அம்மாவும் சொன்னார்களா?" என்று கேட்டறிய வேண்டுமென்று மங்கை ஆவல் கொண்டாள். ஆனால் அன்னையின் முன்னர் அவ்விதம் கேட்டால், தான் மன வருத்தத்தோடு திரும்பி வந்துள்ள விஷயம் தெரிந்துவிடுமே என்று வாளாவிருந்தாள்.

சிறிது நேரங் கழித்து, மங்கை சிவகுமாரனை ஏறிட்டுப் பார்த்து, "போவோம், சிவா!" என்று சொன்னாள். "ஆமாம்; பட்டணத்துக்குத் திரும்ப டிரெயின் எப்போது போகிறது? தெரியுமா சிவா?"

சிவகுமாரன், "தெரியும்; வரும்போதே கேட்டுக் கொண்டு வந்தேன், பகல் தனுஷ்கோடி பாஸஞ்சர்; தப்பினால் செங்கோட்டை பாஸஞ்சரில் நாம் போகலாம். எதற்கும் சீக்கிரம் ஸ்டேஷனுக்குப் போய்விட்டால், சௌகர்யம்போல் போகலாம்" என்று பதில் சொன்னான்.

மங்கை, "இதோ ஒரு நொடியில் பகல் உணவைத் தயாரித்து விடுகிறேன். சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவோம்" என்று கூறிவிட்டு அவசரமாக உள்ளே செல்ல முயன்றாள்.

"வந்து ஆறேழு நாள்கூட ஆகவில்லை. அதற்குள்...உம், குழந்தை அப்படியிருக்கும்போது போகத்தான் வேண்டும்" என்று மெல்ல சிவகாமியம்மாள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

மங்கை இது கேட்டுச் சடக்கெனத் திரும்பி உதட்டின் மீது விரலை வைத்துச் சும்மா இருக்குமாறு சிவகுமாரனுக்குச் சைகைக் காட்டினாள்.

சிவகுமாரன் மங்கையர்க்கரசியின் பெருங் குணத்தை மனதுக்குள் வியந்து கொண்டிருந்தான். பெற்ற தாயிடம் கூடத் தான் மன வருத்தத்துடன் வந்ததைச் சொல்லாமல் சாதுரியமாக நடந்து கொண்டதோடு இப்போது - வந்து கூப்பிடும்போது மறுமொழி கூறாமல் உடன் வரவல்லவா உடன்பட்டு விட்டாள்? இவ்வளவு உயர்ந்த மனப்பான்மை யுடையவள அம்மா ஏதோ தவறாகக் கருதிக் கோபித்துப் பகையை பாராட்டிகளே என்று அவன் எண்ணி வருந்தினான்.



சதானந்தம் பிள்ளை வீட்டுக் கூடத்தில் குறுக்கும் நெதிக்தமாக உலாவிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் காணப்பட்ட கலவரம் அவருடைய நிம்மதியற்ற நிலைமையையும் தீவிர யோசனையையும் பிரதிபலிப்பதா யிருந்தது. இடையிடையே அவருடைய கண்பார்வை கூடத்தைச் சேர்ந்தாற்போலிருந்த அறையை நோக்கலாயிற்று.

அந்த அறைக்குள் திலகவதி, கணேசன் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தாள். சோகை நோய் கொண்டவன் போல் உடம்பெல்லாம் முகம் புடைத்து வெளுத்திருக்கும் மகனையே கவலையோடு கவனித்துக் கொண்டிருந்த அவள் அடிக்கடி கணவனையும் கடைக் கணிக்கலானாள். மூச்சுப் பேச்சில்லாமல் வெகு நேரம் அசைவற்றிருப்பதும் திடீர், திடீரெனக் கண்விழித்து ஏதேதோ அரற்றுவதுமாயிருக்கும் தம்பியைப் பார்த்து, என்னவோ ஏதோ என்று அச்சங் கொண்டு, கோகிலா ஒரு பக்கத்திலிருந்து குழம்பிக் குமுறிக் கொண்டிருந்தாள். விசுவநாதன் தன் அறையிலிருந்து ஏதோ காரியமாய் வருவது போல, அடிக்கடி அப்பக்கம் வந்து நிலைமையைக் கவனித்துப் போய்க் கொண்டிருந்தான்.

டாக்டர் சிறிது நேரத்துக்கு முன் தான் வந்து போனார். அவர் கணேசனைக் குறித்துக் கமலை கொள்வதற்கு ஒன்றுமில்லை யென்றும், கூடிய சீக்சிரம் குணமாய் விடுமென்றும், தைரியம் சொல்லிவிட்டுப் போயும் திலகவதியும் ஆறுதல் கொள்ளவில்லை; சதானந்தம் பிள்ளையும் சாந்தியடையவில்லை.

"ஏன் திலகம்? மங்கை வருவாளா?..." என்று இருந்தாற் போலிருந்து பிள்ளையவர்கள் மனைவியை நோக்கிக் கேட்டார்.

இக்கேள்வி திலகவதியை சட்டி கொண்டு குத்துவது போல் இருந்தது. தான் சண்டை போட்டு அவனை அனுப்பி விட்டதாகவே, கணவனிலிருத்து பிள்ளைகள்வரை அனைவரும் எண்ணியி கப்பதை அவர்களுடைய ஒவ்வொரு பேச்சிலிருந்தும் அவள் உணரலானாள். 'அவர்கள் எண்ணுவதென்ன! உண்மையும் அதுதானே? தான் மங்கையைப் பற்றித் தவறான எண்ணங் கொண்டு எடுத்ததற்கெல்லாம் அவள்மீது சிடுவென சரிந்து விழுந்தும் வாயில் வந்தவாறு பேசியும் தொந்திரவு கொடுத்து வந்ததால் தான், இந்த ஒருவினை தாங்காமல் அவள் போய்விட்டாள்' என்று திலகவதியின் மனம் ஒப்புக்கொள்ளத்தான் செய்தது. இந் நிலையில், மங்கை இங்கு மீண்டும் திரும்பி வருவாளா என்பது இவளுக்கும் சந்தேகமாய்த்தானிருந்தது. ஆனாலும் இவள் ஐயப்பட்டதையே கணவன் கேட்டபோது இவருக்குக் குற்றமாகப்பட்டது. தான் மங்கை விஷயத்தில் அநியாயமாக நடந்து கொண்டதாகச் சுட்டிக் காட்டவே, கணவன் இவ்விதம் கேட்டதாக எண்ணி மனம் வருந்தினாள்.

கணேசன் நிமிஷத்துக்கு ஒருதரம், 'சித்தி! சித்தி' என்று அரற்றுவதைக் கேட்டுவிட்டு, பக்கத்து வீட்டுப் பெரியம்மா, இவனுக்கு உடம்பாலுற்ற நோய் ஒன்றுமில்லை, திலகம்! பங்கையின் கவனமாய் இருக்கிறான் இவன், அவள் வரட்டும், பார், இவன் உடனே எழுந்து விளையாடுகிறனா இல்லையா என்று?' என்று கூறி, மங்கையை உடனே வரச் சொல்லி அழுது! இல்லாவிட்டால் ஆளையனுப்பிக் கூட்டி வரச் சொல், தான் சொன்னது சரியா இல்லையா அப்புறம் சொல்வேன்' என்று சொல்லிய யோசனை மீதுதான் அவள் கணவனிடம் கூறி மூத்த மகனை அனுப்பி வைத்தாள். பிள்ளைக்கு இப்படி இருக்கிறதே என்ற தாபத்தால், அவள் அப்படி மங்கையை அழைத்துவரச் சிவகுமாரனை அனுப்பினாளே யொழிய, அடுத்த கணத்திலே அவள், 'ஏன் அனுப்பினோம்? கூப்பிட்டதற்கு மதிப்புக் கொடுத்து மங்கை வராமல் போய்விட்டால், முகத்தில் கரியைப் பூசிக்கொண்டது போலத்தானே ஆகும்?" என்று பலவிதமாக எண்ணி நெய்சம் நைந்தாள். தன் மன நிலையை அவள் வெளிக்குக் காட்டவில்லையே தவிர, உள்ளுக்குள் மட்டும், 'மங்கை வருவதென்பது சந்தேகம்தான். வந்த பிறகே நிச்சயம்' என்று எண்ணிக் கொண்டிருந்தாள். இந்நிலையில் கணவன் கேட்ட கேள்வி அவள் மனதை வாள் கொண்டு அறுத்தது.

"என்ன அப்பா, அப்படிக் கேட்கிறீர்கள்?" என்று இடைமறித்தாள் கோகிலா.

பிள்ளையவர்கள் மகளை நோக்கி, "இல்லையம்மா, சித்தி திரும்பி வருவாள் என்று எனக்கென்னமோ நிச்சயமில்லை" என்றார்.

கோகிலா, "அப்படி நினைக்காதீங்க, அப்பா! தம்பிக்கு அசௌக்கியம் என்றதும், அலறியடித்துக் கொண்டு வரப் போகிறங்க, பாருங்களேன்!..."

"உம். பார்க்கலாம்!" என்று பெருமூச்சு விட்டவாறே சொன்ன பிள்ளையவர்கள், மங்கைக்கு கணேசன்மீது உசிர்தான், ஆனாலும்..." என்று இழுத்தார்.

திலகவதி திடீரென எழுந்து பின்பக்கம் போகலானாள். தத்தையும் மகளும் பேசும் பேச்சைக் கேட்க அவளுக்குப் பிடிக்கவில்லை. இக்குறிப்பை ஒரு நொடியில் உணர்ந்து கொண்ட, பிள்யைவர்கள் தாம் பேசவந்த பேச்சை அத்துடன் நிறுத்தலானார். மேலும் தாம் அங்கிருந்தால் மகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்று கருதி அவர் மெல்லத் தம் இருப்பிடத்துக்குப் போனார்.

இச்சமயும் விசுவநாதன் தன் அறையிலிருந்து பரபரப்பாக வெளியே வந்தான்.

இது கண்டு, "என்ன!" என்று வினவிய பிள்ளையவர்கள் நின்று எதையோ உற்றுக் கவனிக்கலானார். "ஏதோ வண்டி வந்து நிற்கிறாப் போலிருக்கே! யார் வருகிறது பார், விசுகம்?" என்று கூறிவர்.

"இதோ போகிறேன், அப்பா!... நம்ம வீட்டுக்கா? வண்டி வருகிறதைப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். ஒரு வேளை.. சித்திதான்......"

விசுவநாதன் பேசி முடிப்பதற்கு முன் கோகிலா மேல் மூச்சு வாங்க ஓடோடியும் அங்கு வந்து, அப்பா! அப்பா! சித்தி வந்துட்டாங்க, அப்பா!" என்று கூறிக் குதிக்கலானாள்.

"என்ன!" என்று வியப்போடு கேட்டவாறே வெளிப் பக்கம் நோக்கினார் பின்ளையவர்கள்.

"ஆமாம்; அப்பா! சிந்திதான் வருகிறார்கள், அண்ணனுடன்......"

விசுவநாதனும் கோகிலமும் கூறியபடி, சிவகுமாரன் பின்னே வர மங்கையர்க்கரசி முன்னே விரைந்து வந்து கொண்டிருந்தாள்.

எதிர் பாராதபடி ஏற்பட்ட சந்தடி கேட்டுத் திலகவதி பின்புறமிருந்து வந்தாள்.

சதானந்தம் பிள்ளை, "வா, அம்மா!" மங்கை என்று மங்கையை வரவேற்றார்.

அத்தானைக் கண்டதும் மங்கை நாணத்தால் ஒரு கணம் தலை குனிந்தவாறு தயங்கி நின்ருன், ஆயினும் கணேசன் மீதுள்ள பரிவுணர்ச்சி அவளை உந்தித் தள்ளியது. ஆகவே அவன், "குழந்தைக்கு என்ன உடம்பு, அத்தான்?" என்று துயரக் குரலில் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

அவளுடைய தாய்மை யுணர்ச்கியைக் கண்டு சதானந்தம் பிள்ளை திகைத்து நின்றார்.

"வாங்க, சித்தி!...... எங்கே வராம போய்விடுவிங்களோன்னு..." என்று கூறிக்கொண்டே அவளை எதிர்கொண்டு அழைத்த கோகிலாவுக்கு வாய்மீது விரலை வைத்துப் பேசாமலிருக்குமாறு விசுவநாதன் குறிப்புக் காட்டினான். ஆதலால், அவள் அத்துடன் பேச்சை நிறுத்தி, மங்கையைச் சேர்த்து அணைத்தவாறு அழைத்துப் போகலானாள்.

"குழந்தை எங்கே இருக்கிறான், கோகிலா!......" எனக் கேட்டுக்கொண்டே போன மங்கை வழியில் திலகவதி நின்றிருப்பதைக் கண்டு, "அக்கா, கணேசனுக்கு உடம்புக்கு என்ன? எனக்கு முன்னமே சொல்லியனுப்பக் கூடாதா?......" என்று துக்கந் தொண்டையை அடைக்கக் கேட்கலானாள்.

மங்கையைக் கண்டதுமே, அவள் முகத்தில் எப்படி, விழிப்பது என்று வெட்கத்தால் உடல் குன்றி நின்றிருந்த திலகவதி இவளுடைய கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தாள். வாயெழாமல் போகவே அவள் கைகளால் கணேசன் படுத்திருக்கும் இடத்தைக் காட்டினாள்.

உடனே மங்கை ஒரே பாய்ச்சலாக, கணேசன் இருக்குமிடத்தை அடைந்தாள். கோகிலா பின்னோடேயே சென்றாள்.

ஒரே தாவாகத் தாவிய மங்கை கணேசனை அப்படியே எடுத்துத் தழுவிக்கொண்டு, "கண்ணு, ஒரு வாரத்திலே இப்படி உருக்குலைந்து விட்டாயே!" என்று கூறிப் பொருமினாள்.

மருத்து மயக்கத்தில் மெய்மறந்து படுத்திருந்த கணேசன், மங்கையின் ஸ்பரிசம் பட்ட மாத்திரத்தில் உணர்வு கொண்டு விழித்து எழுந்தான். மெல்ல மெல்லத் திறந்த அவன் கண்கள் மங்கையைக்கண்டதும் அகல விரிந்தன. "ஆ! சித்தி" என்று அலறியவாறே அவன் மங்கையை இறுகச் சேர்த்துக் கட்டிக் கொள்ளலானான்.

"சித்தி எங்கே போனே? சித்தி!......என்னைத் தனியா விட்டுட்டு எங்கே போனே? சித்தி... என்னண்டை சொல்லாமெ கொள்ளாமெ கூட எங்கேயோ போயிட்டியே சித்தி!..."

குழந்தையின் பகிரலாபம் மங்கையை மேலும் உருக்கி விட்டது.

"நான் எங்கேயும் போகவில்லையடா, ராஜா! உன்னை விட்டுலிட்டு இனி எங்கேயும் போகமாட்டேண்டா, கண்ணு ...... நீ நல்லபடி ஆகிவிட்டால் போதும்" என்று சொல்லியவாறே அவனை உச்சி மோந்து முத்தமிட்டாள். அவளுடைய மென் கரங்கள் கணேசனுடைய உடம்பைப் பரிவோடு வருடலாயின.

"என்னை விட்டுவிட்டு மறுபடியும் போயிடமாட்டியே? சித்தி !.... !"

மீண்டும் கணேசனின் பிஞ்சு உள்ளம் பேசியது.

"ஊஉம். போகவே மாட்டேன். உன்னை விட்டுவிட்டு ஒரு இடத்துக்கும் போகமாட்டேன். ஒரு கணமும் பிரியமாட்டேன், கண்ணு!" என்று கன்னத்தைக் கிள்ளியவாறு கொஞ்சலாகச் சொன்னாள்.

கணேசன் மங்கையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு, "சித்தி! நீ இல்லாதே போகவே எனக்கு என்னவோ போலிருந்தது, சித்தி! ஒரு இராத்திரி பூதம்போல் ஒன்னு வந்து என்னை மருட்டிச்சி, சித்தி! நீ இருந்தா அதை அடிச்சித் துரத்திருக்கமாட்டே?...அம்மாவைக் கூப்பிட்டா வரவே இல்லை, சித்தி!" என்று மழலை ததும்ப மொழிந்தான்.

"அப்படியா! இனிமேல் நீ எதற்கும் பயப்படாதே; நான் இருக்கிறப்போ, பூதம் பிசாசு எதுவும் உன்னண்டை வராது" என்று மங்கை குழந்தைக்குத் தைரியம் சொன்னாள்.

இச் சோகக் காட்சியை எல்லோரும் தூர இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கோகிலா மட்டும் தான் மங்கையின் :பக்கத்தில் இருந்தாள்.

பிள்ளையவர்கள் தம் மனைவியைக் குறிப்போடு பார்த்தார். மழைத்துளி போல கண்ணீரைச் சோரவிட்டுக் கொண்டிருந்த திலகவதி கணவன் பார்வையை எதிரிட மாட்டாது, தலை குனிந்து கொண்டாள். அவள் முகத்தில் வெட்கம் வழிந்தது.

சிவகுமாரன் பிரயாணப் பையுடன் உள்ளே போகலானான். விசுவநாதனும் மன ஆறு தலுடன் போனான்.