தென்னாட்டு காந்தி/குருதேவருக்கு அஞ்சலி
◯ காலம்
◯ என்றென்றும்
◯ வணக்கம்
◯ சொல்லும் பெற்றி
◯ பெற்ற உலகப்
◯ பெரு மேதைக்கு
◯ நூற்றாண்டு விழா
◯ கொண்டாடப்பட்டது.
◯ குருதேவர்
◯ தாகூரைப் பற்றிய
◯ இனிய சிந்தனைகள்
◯ ஒன்றா, இரண்டா?
“ஜபமாலை உருட்டுவதை விட்டு விடு; மந்திரமும் தந்திரமும், ஆடலும் பாடலும் ஆண்டவனைக் காட்ட மாட்டா!
தாளிட்டு அடைபட்ட கோயிலின் இருளடைந்த மூலையில் யாரைப் பூசிக்கின்றாய்? கண்களைத் திறந்து, உன் ஆண்டவன் உன் எதிரே இல்லை என்பதை உணர்ந்து கொள்!
கடினமான தரையில் ஏர்கட்டி உழுவோரிடமும், சாலை அமைத்திட சரளைக்கல் உடைப்போரிடமுமே தெய்வம் இருக்கிறது; அவர்களுடன் ‘அவன்’ மழையில் நனைகிறான்; வெயிலில் உலர்கிறான்; அவன் ஆடையில் தூசி படிந்திருக்கிறது. உன் காஷாயத்தைக் களைந்தெறி; கடவுளைப் போல நீயும் புழுதியில் இறங்கி வா!
பூவையும் நறும்புகையையும் ஒதுக்கிவிட்டு வெளியே வா! உன் ஆடை கிழிந்து, அழுக்கடைந்தால், என்ன? நெற்றி வேர்வை நிலத்தில் சொட்ட உழை, நீ உன் ஈசனைக் கண்டிடுவாய்!...”
காலத்தைக் கடந்து நின்று ஒலி கொடுக்கிறது இந்தத் தெய்வீகக் குரல். இதுவே காலத்தால் நிலை பெற்றுவிட்ட ஞானயோகியின் தீர்க்க திருஷ்டி வாக்காகவும் அமைந்து விடுகிறது. மனிதனைப் படைத்த ஆண்டவனுக்கும், ஆண்டவனைப் படைத்திடும் மனிதனுக்கும் இடையே புகுந்து ஒலிபரப்பும் இத்தகைய புரட்சிக் குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாராக இருக்கமுடியும், குருதேவரைத் தவிர? ‘கீதாஞ்சலி’யின் அமரவாக்கு ஆயிற்றே!
தாகூர் பிறந்த இடம்: கல்கத்தா, நாள் : 1861, மே 7. மஹரிஷி தேவேந்திர நாத் தாகூருக்கு அவர் பதினான்காவது பிள்ளை ; கடைக் குட்டி.
கவிஞர் பிரான் சொல்லுகின்றார், “குழந்தைப்பருவம்! ஆஹா! வாழ்க்கையின் விடியற்காலம் அல்லவா அது!” என்று
நிதிமிகுந்த செல்வக் குடும்பத்தில் பிறந்த ரவீந்திரருக்கு வீட்டை விட்டு வெளியுலகைக் காண நேர்ந்த அந்த வாய்ப்பே அவரது இலக்கிய வாழ்க்கையின் மகிழ்வுக்குரிய மூலைத்திருப்பம் ஆகும், ‘இளமை நினைவுகள்’ என்ற நூலில் தம்முடைய இளம் பிராயத்துக் கற்பனைகள் குறித்துப் பேசும் பொழுது, இவ்வாறு குறித்துள்ளார்.
தாகூரின் மூத்த சகோதரரான சோமேந்திராவும் அவரது சகோதரி மகனான ஸத்யாவும் அவரை தனியே விட்டுவிட்டுப் பள்ளி சென்று, பிறகு திரும்பும் பொழுது, அங்கு நடந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்லுவார்கள், தாகூருக்கு தானும் பள்ளி செல்ல வேண்டுமென்ற துடிப்பு மிஞ்சிக் கொண்டே போகுமாம். இதை உணர்ந்த போதனாசிரியர் ஒருநாள் அவரைப் பார்ந்து, “நீ இப்போது பள்ளிக்கூடம் போக வேண்டுமென்றுதான் துடிப்பாய்; ஆனால் பின்னர் ஒரு நாளில், இந்தப்பள்ளி எனும் சிறை யிலிருந்து விடுபட்டால்போதும் என்று நீயே துடிப்பாய்!” என்றார்.
ஆசிரியரின் இந்த முன்னோக்குச் சொற்கள் அப்படியே மெய்யாய் விட்டன அல்லவா? பள்ளிச் கூடத்தை ஏறக்குறைய சிறை போலாக்கி விட்டிருக்கும் நவீனப் படிப்பு முறையை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் வழிகாட்டியாக அமைந்து, அமைத்த குருகுலம் தான்: ‘சாந்தி நிகேதனம்’. 1900 டிசம்பரில் ஆரம்பமானது இது. இந்தியக் கலாசார வழித் தொடர்பும், புதிய சமுதாயத்தின் தென்பு மீட்டும் லட்சியங்களுமே இப்பள்ளிக்கு ஆதார சுருதியாயின, ‘உலகப் பல்கலைக்கழகம்’ என்னும் கவிபிரானின் லட்சியக் கனவுக்கு அத்தாட்சியாக 1921 டிசம்பரில் ‘விஸ்வபாரதி’ தோன்றிற்று.
கவிஞன் யார்?
பாமர மனிதனின் கற்பனை மனத்துக்கும் ஊட்டம் கொடுத்துப் பேணும் செவிலித்தாய்தான் இந்தக் கவிஞன்! இயற்கை அன்னையின் மாண்பு மிகுந்த மடியில் தவழ்ந்து வளர்ந்தார் தாகூர். இயற்கை நலம் அவருக்குச் சேம நிதியானது; வெட்ட வெட்ட கொட்டிக் காட்டும் காவியச் சுரங்கம் ஆனது. “கவியென்று நாம் கௌரவிக்கும் ஒருவனிடத்தில் உள்ள சிறப்பு யாதெனில், நாம் சொல்ல விழைவதையெல்லாம் அவன் ஒருவனே அழகாகச் சொல்லி மூடிக்கின்றான்.” கவிஞனுக்கு வரம்பறுக்கிறார் கவியரசர். அவரது முடிவுக்கே முத்தாய்ப்பு வைக்கின்றாள் இயற்கை அன்னை. “நாம் இயற்கையின் எழிலிலே இன்பத்தையே காண்கிறோம்; உண்மையையே தரிசிக்கிறோம்; இயற்கை உலகிலும் ஒழுக்க உலகத்திலும் நாம் அழகின் ஒருமைப் பாட்டையே கண்டு இன்புறும்போது. நாம் கலையின் போக்கை சர்வசு தந்தரமாக வெளியிட முடிகிறது!” இப்படிப்பட்ட நுண்ணிய கருத்துரைகளை நுண்மாண் நுழை புலம் அமைத்துச் சமைத்திட ரவீந்திரரால் தானே முடியும்!
ஆங்கிலப் பாடல்களும், வைணப் பாசுரங்களும், உபநிஷத்துக்களும் தாகூரின் இளங்கவியுள்ளத்தை மேலும் தூண்டிவிட உதவின. ‘காலைப்பாடல்கள்’ புனைந்தார், அழகின் இயற்கைக் கவர்ச்சியில் லயித்திருந்த கவிமனம் படிப்படியாக வளர்ந்தது; வளர்ச்சி கண்டது. பரிபக்குவம் எய்திய மனததிட்டம் உருவானது; வாழ்வின் தத்துவம் சுடர்தட்டித் திகழ்ந்தது. ‘கீதாஞ்சலி’ பிறந்தது தாகூர் உலக அரங்கத்தில் நின்று புகழ்கொடி ஏந்தித் திகழ்ந்தார். 1913ல் நோபல் பரிசு பெற்றார். இந்தியத் துணைக்கண்டம் இறும்பூதெய்தியது. பொய்யெனும் இருட்திரை விலகி, மெய்யான ஒளி கொண்ட நம்பிக்கைச் சுடர் பிரகாசிக்கத் தொடங்கியது.
தாகூர் அரசியல்வாதியல்லர்; ஆனாலும், மாபெரும் தேசியவாதி, வங்கத்தில் நடை பெற்ற சுதேசி இயக்கத்தில் பெரும்பங்கு ஏற்றார். அவரது தேசப்பற்று, உலகத்தின் சகலவிதமான குறுகிய நோக்குகள் அனைத்தையும் சாடி ஓடியது. இந்தியாவின் கழிந்த காலத்திற்கும் நிகழ் காலத்துக்கும் அன்புப் பாலம் கட்டவும் அவர் செயற்பட்டதுண்டு. பலவிதமான கருத்து மாறுதல்களையும் விலக்கி, கிழக்குக்கும் மேற்குக்கும் தொடர்பு வைக்க விரும்பி, காரியங்களில் இறங்கினார் அவர். ‘மனிதாபிமானம்’ பெற்று விரிந்த தாகூரின் இத்தகைய ‘அகில உலகக் கண்ணோட்டம்’ உலகப் பெரியார்களின் நல்லெண்ணங்களை வுயப்படுத்திக் கொண்டது. “இந்தியக் கவி திலகமான தாகூர் பிறரை விட கிழக்குக்கும் மேற்குக்குமான ஐக்கியத்துக்கும் பிணைப்புக்கும் கூடுதலாகவே செய்திருக்கிறார்.” என்று பாராட்டுத் தெரிவிக்கலானார் ரொமெய்ன் ரோலாண்ட்.
செயலுக்கு காந்தி என்றும் எண்ணத்திற்கு தாகூர் என்றும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் நேருஜி.
“வங்காளத்திலே வளர்ந்து வந்த நடுத்தர வகுப்பு நவ இந்தியாவில் நிகரற்ற இலக்கிய மேதைகளை அளித்து, வங்க இலக்கியம் தாகூர் என்ற உலக மேதை மூலம். இமயம் போல உயர்ந்துவிட்டது,” என்று புகழ்ந்திருக்கிறார் பேராசிரியர் ஹுமாயூன் கபீர்.
கவி தாகூரின் கால்கள் இந்திய மண்ணில் ஊன்றியிருந்தன; அவரது கவிமனம் இந்திய ஞானத்தில் ஊறித் திளைத்திருந்தது. அவர் இந்திய இலக்கியத் தாயின் தவப்புதல்வர்.
பாரதப் பண்பாடு தனி மகத்துவம் பூண்டது. அதுபோலவே, தாகூரின் கதைகள் ஈட்டிய புகழ்பெரிது. ‘ஸுபா’, ‘தபால் காரன்’ ‘உடற்கூடு’ போன்ற அற்புதமான சிறுகதைப் படைப்புக்களைப் புகழ்வதா? ‘கவிழ்ந்த படகு’, ‘வீடும் வெளியும்’, ‘இரு சகோதரிகள்’ முதலான நவீனங்களைப் போற்றுவதா? சிருஷ்டித் தத்துவத்தின் காவிய விளக்கமாகவும் சிருஷ்டியின் புதிரைச் சொல்லும் கதைக் கோவையாகவும் பொலுவுறும் ‘தங்கப் படகு’ போன்ற கதைச் சித்திரங்களின் வண்ணங்களை வாழ்த்த வாத்தைகள் ஏது? அவர் பாடிய ‘தேசிய கீதம்’ காலத்தை வெல்ல வல்லது !
தாகூர் மனித மகாகவி, ஏனெனில், கவிக்குரிய சிறப்பியல்புகளுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்ந்த மனிதாபிமானம், அவரது இதயத்தில் வற்றாமல் ஊறிக் கொண்டிருந்தது. தொல்லைப்படும் பிறந்த நாட்டுக்காக தொல்லைப்பட்டவர் அவர். கவியின் மனத்தூய்மை நிரம்பிவழிந்த அந்தத் தெய்விகப் பண்புச் சுடர் அவரை உலக மேடையில் கொண்டுபோய் நிறுத்தியது. இன்று நாம் தாகூரின் பெயரைக் காட்டிப் பெருமை அடைகின்றோம். குருதேவரின் நூற்றாண்டு விழா இப்பொழுது உலக மெங்கும் நடைபெறுகிறது. உலக மேதையின் நினைவு நாளிலே, அன்னாரது விலைமதிக்க முடியாத திறனைப் போற்றி, அவரது கவி இதயத்துக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.