தென்னாட்டு காந்தி/தமிழ் நாட்டுக் காந்தி

◯ அதிசயத்தின்

◯ ஒரு பேரதிசயமாக

◯ விளங்கும் பெயர்:

◯ காமராஜ்.

◯ ஆம்;

◯ சரித்திரத்தைச்

◯ சிருஷ்டி செய்துவிட்ட

◯ பெயர் இது!



தமிழ் நாட்டுக் காந்தி

தமிழ் நாட்டுக் காந்தி

1964, மே மாதம் 27ஆம் நாள் !

பாரதத்தின் இதயமாகத் திகழ்ந்த ஆசிய ஜோதி நேருஜியின் இதயம், துடிப்பை நிறுத்திக் கொண்ட துயர் மண்டிய நாள் அது!...

உலகப் பேரொளியாம் நேரு பிரான் அமரத்துவம் எய்திய புனிதம் நிரம்பிய நினைவு நாள் அது!...

உலகத்தின் பேரதிசயமாகவும் பேரதிசயத்தின் உலகமாகவும் விளங்கிய பாரதப் பிரதமர் நேருஜியின் மறைவுக்குப் பின், அவ்விடத்தை இட்டு நிரப்பத் தகுதியும் தியாகமும் பெற்ற உள்ளம் எது என்று உலக நாடுகள் அத்தனையும் இந்தியாவை நோக்கிச் சிந்தனைகளைத் திருப்பிவிட்டிருந்த சரித்திரப் பிரதானம் பெற்ற நாள் அது!...

ஆம்; அத்தகைய சரித்திர மகிமை பூண்ட அத்தினத்தை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மகத்தான தினமாக-ஒரு மாண்பு மிகுந்த தினமாக ஆக்கிய பெருமை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜ் அவர்களையே சார்ந்தது.

நேரு பிரானின் எதிர்பாராத மரணத்தினால் ஏற்பட்ட தாங்கவொண்ணாத அதிர்ச்சியும், ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்புணர்வும் மேலிட்டு நாற்பத்தைந்து கோடி மக்களும் சொரிந்து கொண்டிருந்த நேரத்தில், நேருஜியின் இடத்தில் திரு லால்பகதூர் சாஸ்திரியை அமர்த்தி, தீர்க்க முடியாத பெரும் சிக்கலை காதும் காதும் வைத்த மாதிரி தீர்த்துவிட்ட மனிதாபிமானம் நிரம்பிய அச் செயல் திறனை உலக நாடுகள் பூராவுமே ஏகமனதாகப் பாராட்டின!— இப் பெருமையின் சரித்திரத்திற்கு ஒரு பொற்காலக் குறிப்பு ஈந்தவர் சரித்திர் புருஷர் காமராஜ் அவர்களே ஆவார்!- நேருஜியின் நல் வாழ்த்துக்களுடன் புவனேஸ்வரம் காங்கிரஸில் அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்ற காமராஜ், அதே நேருஜியின் இதயத்துக்குச் சாந்தியை நல்கி தம்முடைய கடமையைச் சஞ்சீவியாக அமைந்து செவ்வனே செய்துகாட்டி, இந்திய நாட்டின் பெருமையைக் கட்டிக் காத்துவிட்டார் அல்லவா?

காமராஜ் – லால்பகதூர் கூட்டு நாட்டுக்கு நல்ல சகுனம் நேருஜியின் இந்தியாவுக்கு இன்றுள்ள செல்வாக்கு தனி!

மெய்தான்.

உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் அந்தஸ்தையும் நிலைக்கச் செய்துவிட்ட ஓர் ஆதரிசப் பெயர் அது!

காந்திஜி ஒருமுறை குறிப்பிட்டார்:
தலைமையில் உள்ளவர்களின் நடத்தை ஒன்றுதான் பொதுமக்களிடம் நற்பலனை உண்டாக்கும்!”

ஆம்; முற்றிலும் உண்மை.

இப் பொன் உரைக்கு நிதர்சனமான ஓர் உரைகல் ஆனார் மதிப்புக்குகந்த காமராஜ்.

புடமிட்ட பொன் அவர்!

ஏழையாய்ப் பிறந்தார்.

ஏழைகளுடன் ஒன்றி வாழ்ந்தார்.

ஏழைகளின் வாழ்வுக்கும் வளத்துக்கு பாடுபட்டார்.

ஏழை பங்காளன் ஆனார்!...

அவர் பேச்சு நாட்டின் மூச்சு!

அவரே ஒரு சக்தி!...

காமராஜரின் உருவச் சிலையைத் திறந்து வைத்த தருணம் ஜவஹர்லால் அவர்கள், “காணக் கிடைக்காத அபூர்வமான தலைவர் காமராஜ்!” என்று இதயபூர்வமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்.

காலம் என்றென்றும் ஒலிபரப்பி அஞ்சல் செய்து கொண்டிருக்கும் அமரவாக்கு இது.

உயர் மரபும், வரலாற்றுச் சிறப்பும், தொன்மைப் பண்பும் கொண்டிலங்கும் நம் தமிழ் நாட்டின் அமைச்சர் தலைவராக காமராஜ் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை நடத்திவந்த அந்த ஆண்டுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத் தக்கவையன்றோ!

மக்கள் தலைவரைப்பற்றி திரு சவான் குறிப்பிட்டார்: “... ஆவடிக் காங்கிரஸின் போது நான் சென்னைக்கு வந்திருந்தேன். திரு காமராஜ் அவர்களைப்பற்றி ஒரு உழவரிடம் விசாரித்தேன். அரசியலைப்பற்றி ஒன்றுமே அறியாத அவ்வுழவர். விண்ணை நோக்கிக் கைகளைக் கூப்பினார். ஆண்டவன் அவரை நீடுழி வாழச் செய்ய வேண்டும்!” என்று பகவானைப் பிரார்த்தனே செய்தார். மக்கள் உள்ளங்களில் தனி இடத்தைப் பெற்றவர் காமராஜர். இந்தியாவிலேயே மிக நிலையான அரசு தமிழகத்தில்தான் இருந்து வருகிறது. மக்களாட்சி முறையில் சிறப்புற ஆட்சி நடத்தும் ஒப்பற்ற தேசியத் தலைவர் காமராஜ். அவர் அறிஞர். இந்திய தேசிய ஒற்றுமைக்கு காமராஜ் அவர்களின் பணி மிக விரிந்த அளவில் கிட்டு மென்பதும் உறுதி!”

தெளிந்த தீர்க்கதரிசனப் பண்புடன்தான் சவான் அவர்கள் அன்று சொல்லியிருக்க வேண்டும்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சி இது.

தமது அறுபத்து மூன்றாவது பிறந்த நாள் விழாச் சுற்றுலாவின் போது, ஓரிடத்தில் காமராஜரின் கார் நின்றது. விவரம் அறிந்த ஏழைப் பெண்கள் ஓடிவந்து, என்ன தடுத்தும் கேளாமல், காமராஜரின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்து, எங்களுக்குப் பசிக்குச் சோறும் எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு கண் திறக்கப் படிப்பும் கொடுத்து வருகிற தெய்வம் - கண்கண்ட கடவுள் நீங்கள்!” என்று வாயார, நெஞ்சாரப் புகழ்ந்த செய்தியை நாளேடுகள் என்றும் மறக்க முடியாது.

இலவசக் கல்வி முறையை இப்போது கல்லூரி நுழைவாசலிலும் நுழைத்துவிடும் பெரு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் கர்ம வீரர் தலைவர் காமராஜ்!

காலம் ஓடியது!

வெள்ளையன் ஓடினான்.

காட்சிகள் மாறின.

அன்னை பாரததேவி சுதந்திரதேவி ஆனாள்.

அண்ணல் காந்தியடிகள் வாழ்த்திய தொண்டர் காமராஜ், விடுதலை வீரர் காமராஜ், சமுதாய நலச் சேவகர் காமராஜ், இன்று தொண்டர்களின் தொண்டராகவும், தொண்டர்களின் பண்புடைத் தலைமையாளராகவும் காட்சி தருகின்றார். ‘அமரருள் உய்க்கும் அடக்கம்’ அவர் சின்னம்! தமிழ்ப் பண்பாட்டின் சீலம் நிறைந்த காவலர்!

இரத்தத்தோடு இரத்தமாக ஊறிவிட்ட தியாக நலப் பண்பு, நாட்டுப்பற்று, தன்னலமற்ற சேவை, ஆழ்ந்த மனிதாபிமானம், உலக அறிவு, பரந்த அரசியல் விவேகம், உணர்ச்சித் துடிப்பு, விரிந்த உள்ளம், சாந்தம், அறப்பண்பு, எளிமை, தூய்மை, ஈரம், அன்பு, நேசப் பரிவர்த்தனை போன்ற குணங்களுக்கு ஒருருவமாகத் திகழும் மேதை காமராஜ். ‘முறை செய்து’ காப்பாற்றும் அவர் ‘மக்கட்கு இறை’யாகப் பரிமளிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்?

திரு காமராஜ் ஓர் ஆச்சரியக் குறி!

பதவி மோகம் விளையாடும் இப் பூவுலகிலே, பதவியைத்துறந்த ஓர் உதாரண புருஷர் அவர். ‘காமராஜ் திட்டம்’ வரலாற்றுச் சிறப்புக்கொண்ட சேதி!...

1963 நவம்பர் 3-ல் நேருஜி சொன்னர்:

“காங்கிரஸ் அக்கிராசனர் பதவிக்குக் காமராஜ்தான் மிக மிகத் தகுதி வாய்ந்தவர். சென்னையில் அவர் செய்த நற்பணிகள்பற்றி எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் ஸ்தாபனத்திற்கு வலுவூட்ட புதுத் திட்டத்தைக் காமராஜ் தெரிவித்து, காங்கிரசுக்கே ஓர் அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறார். காமராஜ் திட்டம் நாம் செல்ல வேண்டிய புதுப் பாதையைக் காட்டியிருக்கிறது. காங்கிரஸ்காரர் பதவியிலிருந்து விலகமுடியும்; அல்லது பழைய உளுத்துப்போன வழியிலிருந்து அவர்களே அகற்றி, புதுவழியில் திருப்பமுடியும் என்பதைக் காமராஜ் திட்ட அமுல் நிரூபித்துவிட்டது!...”

உண்மை; ஒரு நாட்டின் தலைமைப் பீடம் என்பது ஒரு கோயிலுக்குச் சமானமாகும். அந்தத் தலைமைப் பதவியில் அமருவதற்குத் தேவைப்படுகின்ற குண நலன்கள் பலவுண்டு. நாட்டுத் தலைவனிடம் அந் நாட்டின் தலையெழுத்தையே ஒப்படைத்துவிடுகிறோம். ஆகவேதான், அத் தலைவன் நாட்டுப்பற்றே உயிர்ப்பாகக் கொண்டு, சுயநலப் பண்பைத் துறந்து, பந்தபாசம் கட்டறுத்துவிட்டு, பொது மக்களின் வளப்பமான எதிர்காலமும் சுமுகமான நல் வாழ்வுமே தன் கனவு, இலட்சியம் என்று கருதுபவனாக இருக்க வேண்டும். இவ்வகையான மனச் சாட்சிக் குறிக்கோளை ஓம்பி நடக்கும் மனிதர்கள் மேற் சொன்ன தலைமைப் பொறுப்பிற்கு வாய்ப்பது வெகு அபூர்வம்.

அந்த ஓர் அபூர்வமாக - அபூர்வத் தலைவர் காமராஜர்-தமிழகத்தின் சொத்தான காமராஜர் இன்று பாரதத்தின் பொது உடைமையாக ஆகி விட்டார். பூதலத்தின் ரோஜாவாகிவிட்டார்!...

தமிழ் கொண்டு இமயம் வரை வென்றுவிட்டது ஒரு தமிழ் உள்ளம்!

இனி, தமிழன் என்றென்றும் தலை நிமிர்ந்து நடப்பான்!

1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள் !

திரு குமாரசாமி-திருமதி சிவகாமி தம்பதிக்கு ஒரு புனிதமிகு நந்நாள் ஆகும். ஆம்; அன்றுதான் காமராஜ் அவதாரம் செய்தார்-ஆம்; ‘அவதாரம்’ செய்தார்.

இந்நாள், பாரதத் திரு நாட்டினுக்கும் ஒரு பொற்புடைத் தவநாளே ஆகும்.

எண்ணிப் பார்க்கிறோம்:

1903ல் பிறந்தார்.

1919ல் காங்கிரஸில் சேர்ந்தார்.

1920ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு.

1922: சாத்தூர் வட்டக் காங்கிரஸ் மாநாட்டுக்கு வரவேற்புக் குழுச் செயலாளர்.

1923-ல் கொடிப் போராட்டத்துக்கு தொண்டர் தலைமை.

1927-ல் சென்னை மவுண்ட் ரோடில் இருந்த நீலன் துரையின் சிலையினை அகற்ற போராட்டம்.

1930-ல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கைது; சிறைவாசம்.

1932-ல் சட்டமறுப்பு.

1933-ல் விருதுநகர் அஞ்சல் அகத்தில் குண்டு வீசியதாகக் குற்றச் சாட்டு; தண்டனை.

1936-ல் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்.

1937ல்-எம். எல். ஏ.

1940, த. நா. கா. க-வின் தலைவர்.

1948 அதே பதவி.

1953-ல் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர். தொடர்ந்த ஆண்டுகளில் பதவியின் தொடர்ச்சி!

1968-ல் காமராஜ் திட்டம்-பதவித் துறப்பு. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பொது நலச் சேவை-அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!

1965 அ. இ. கா. தலைமைப் பணி, பொறுப்பு நீடிப்பு!

எண்ணி முடிக்கிறோம்.

தொண்டர், தலைவர் ஆன கதை, கதைபோலவே தெரிகிறது.

இன்றைய இந்திய நாட்டின் ‘விதி’யாக விளங்கி வருகிறார் தன்னேரில்லாத் தலைவர் பெருமான், அவர் தலைமை, இன்றைய இந்திய நாட்டுக்கு இன்றியமையாததொரு தேவை ஆகிவிட்டது - அவசியத் தேவை ஆகிவிட்டது! ..

... சொத்துசுகம் நாடார்! சொந்
தந்தனை நாடார்!

பொன்னென்றும் நாடார்! பொருள்
நாடார்! தான் பிறந்த

அன்னையையும் நாடார்! ஆசை
தனை நாடார்!
நாடொன்றே நாடித்தன் நல
மொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்!...
நாடினேன்!...
...ஜனநாயகத்தோடு
சமதருமம் பூத்துத் தழைக்கும்
வழிதேர்ந்தேன்!
புதிராகநின்று போயதெல்லாம்
போயொழிய
எதிர்காலம் கண்டேன்! என்
தலைவன் தத்துவத்தைப்
பாடினேன்! வாழ்க! பாண்டியனார்
நந்நாட்டு
என் தலைவன் வாழ்க!...

கவிஞர் கண்ணதாசனின் ‘பார்வை’யில் அற்புதம் நிகழ்ந்துவிடும்!

பூதான இயக்கத்தின் தலைவர் முன்னம் குறிப்பிட்ட மாதிரி, திருமிகு காமராஜ் அவர்களே காங்கிரஸின் இதயம்!

அமெரிக்க நாட்டின் சோஷலிஸ மேதை ஒருவர், “அரசியல் என்பது சாதுர்யமான ஒரு வித்தை,” என்றார்,

ஆனால் காமராஜ் அவர்கள் எப்போதுமே வித்தை காட்டியது இல்லை; வித்தை காட்ட விழைந்ததும் இல்லை; வித்தை காட்டவேண்டிய அவசியம் கொண்டதும் கிடையாது. ஆனால், அரசியல் வித்தையாடிகளின் வித்தைகளைப் பார்க்கும் பார்வையாளராக இருப்பார்.

போலி வித்தையாடிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தி விடும் இரும்பு மனிதர் அவர்!..



நாட்டின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் சர்வபரித் தியாகம் செய்யவல்ல உள்ளங்களுக்குக் காமராஜ் ஒரு சீரிய வழிகாட்டி!

‘தியாக வேள்வியில்’ பூத்த பாரிஜாதம் காமராஜ்!

பதவிப் பித்துக்கொண்ட போலிகளுக்குக் காம்ராஜ் ஓர் எச்சரிக்கை!

அநீதியை அழிக்கும் நீதிதேவன் காமராஜ்!

நாட்டின் பொது அமைதிக்குப் பங்கம்விளைவிக்கும் தீய சக்திகளுக்கு காமராஜ் ஓர் அபாய அறிவிப்பு!

ஏழை எளியவர்களுக்குக் காமராஜ் கண்கண்ட ஒரு தெய்வம் - தெய்வமனிதர்!

வாய்ச்சொல் வீரர்களுக்குக் காமராஜ் ஒரு சிம்ம சொப்பனம் உலக நாடுகளின் நல்ல மனிதர்களுக்குக் காமராஜ் ஓர் அதிசய மனிதர்!

சத்தியத்தின் தேவன் அவர்!

தன்னை அழித்துக்கொண்டு மணக்கும் சந்தனக் கட்டை.

தர்மமிகு காமராஜ் அதற்குச் சமதை!

பாரத மண்ணைத் துளியளவேனும் எதிரிகள் கைப்பற்ற இடம் கொடாத கொள்கை வீரர் அவர்!

ஆம், பாரதத் தாயின் இனிய நற்கனவாக இன்று காமராஜ் பொலிவுற்றுத் திகழ்கிறார்!

காமராஜ்—தமிழ் நாட்டுக் காந்திஜி!

காமராஜ்—நேருஜியின் நிதர்சனமான ஆன்மா!

இந்திய ஜனநாயக சோஷலிஸ்க் குடியரசுத் தத்துவத்துக்குக் காமராஜ் ஓர் உதாரணம்!

இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அனுபவபூர்வமான உண்மைக்குக் காமராஜ் ஓர் உதாரணம்!

"நாம் தீவிரமான நடவடிக்கைகளை மேற் கொண்டால்தான் நமது பொருளாதார, சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். நமது மக்கள் பயனடைய வேண்டும் என்பது நம் பொருளாதாரத் திட்டத்தின் நோக்கம். இந்த நன்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைத்தாகவேண்டும். ஏழ்மை, அறியாமை, நோய் முதலிய கேடுபாடுகள் நமது முக்கிய விரோதிகள். இவை அகற்றப்படும் வரை நாம் அயராது தொடர்ந்து பாடுபட வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் நலனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் நாளாகும். வெற்றிகளையும் தோல்விகளையும் நாம் கணக்கிட்டுப் பார்த்துவிட்டு, முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த பெரியார்களை நாம் இன்று மனதார நினைத்து அஞ்சலி செலுத்த வேண்டும். பெயர் தெரியாத லட்சக்கணக்கான தியாகிகளின் முயற்சிகள் வீண் போகவில்லை. இவர்களில் மாபெரும் தலைவர்களான காந்திஜியும் நேருஜியும் இப்பொழுது நம்மிடையே இல்லை. ஆனqல் அவர்கள் காட்டிய வழியில் நாம் சென்று முன்னேற்றம் காண வேண்டும்!

நாம் அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டோம். பொருளாதாரப் பிரச்னையிலிருந்து விடுதலை அடைய வேண்டும். நமது மக்கள் மீது நம்பிக்கை வைத்து, இப் பிரச்னையை நாம் தீர்க்க வேண்டும். வருமான ஏற்றத் தாழ்வுகள் குறைய வேண்டும். சிலபேர்களிடம் செல்வம் ஒருசேர குவிவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். நில உடைமையும் பூரணமாக மாற்றப்பட வேண்டும்.

நாம் சமாதானத்தை விரும்பும் மக்கள். அண்டை நாட்டு மக்களுடனும் உலக மக்களுடனும் சமாதானத்துடன் வாழ விரும்புபவர்கள். தாழ்வான நிலையில் உள்ள நம் மக்களை முன்னேற்றத்துக்குக் கொண்டுவர வேண்டும். இதற்காக இமயப் பிரயத்தனம் செய்து வருகிறோம். நமது தற்காப்பும் அபிவிருத்தி அடைய வேண்டும். சோஷலிஸம் உருவாக நாம் ஒன்றுபட்டுச் சேவை செய்வோம் என்று உறுதிகொள்வோமாக!...”

இவ்வாண்டுச் சுதந்திர நாள்ச் செய்தியாக விடுத்திருந்த தலைவர் அவர்களது இதய ஒலியே மேற்கண்ட கருத்துரைகள்.

1948, ஜூன் 20ல் மவுண்ட் பேட்டன் தம்பதி இந்தியாவிலிருந்து விடை பெற்றபோது, “எத்தனைதான் ஏற்றமான பொருள்களும் பரிசுகளும் கிடைத்தாலும், மக்களின் அன்புக்கும் வாஞ்சைக்கும் மேலானது ஒன்றுமே இருக்க முடியாது!” என்று சுட்டினார். சத்தியத்தின் ஜோதி. அவர் வாக்கு அமரத்வம் வாய்ந்தது.

சமதர்ம இலட்சியவாதி காமராஜ் அவர்களின் தியாகத் தழும்புகளும் இடைவிடாத நாட்டுப் பணிகளும் அவரை, இன்று, ‘பொது மக்களின் மனிதராக’ ஆக்கிவிட்ட விந்தைக்கு ஈடேது, எடுப்பேது? இந்தியப் போர்முனைப் பகுதிகளுக்கு அவர் நேரிடையாகச் சென்று ஆற்றிய வீர உரைகள் நாடு எப்போதுமே மறக்க முடியாது!

பாரத மக்கள் காமராஜரை தங்களின் பிம்பமாகவே கருதுகிறார்கள். மற்றொரு காந்தியாகக் கருதுகிறார்கள்! என்று ‘இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆப் இந்தியா’ ஆசிரியர் குறிப்பிட்டதை யாவரும் நினைவில் பூசனைசெய்வர்!

சென்னை மெரினா கடற்கரையில் 2-10-65ல் மாபெருந் தலைவர் திரு. காமராஜ் அவர்கள் ஆற்றிய உரையை நாம் அனைவரும் நெஞ்சிலும் நினைவிலும் இருத்திக்கொள்ள வேண்டும்:

“... காஷ்மீர் நம்மோடு இணைந்தது இணைந்ததுதான்! அதிலே, நாம் உறுதியாக இருக்கிருேம் நமது உறுதி உலக சமாதானத்திற்கு நல்ல அஸ்திவாரம்!...

உலக சமாதானம் என்பதின் பெயரால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காஷ்மீரைத் தானம் செய்வதென்றால், உலகில் ஆக்கிரமிப்பு - மிரட்டல்களுக்கு முடிவே இருக்காது.

உலகில் நியாயத்துக்காக - சமாதானத்துக்காக அடிவாங்க நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். நாம் நியாயத்தின் பக்கம் இருக்கிறோம். நேர்மையின் பக்கம் இருக்கிறோம். நியாயத்துக்கும் நேர்மைக்கும் உதவி செய்வோம்!...

நாம் எதற்கும் துணிந்து தயாராக இருக்கவேண்டும். அந்த உணர்ச்சி, மனப்பான்மை இருக்க வேண்டும், உலகத்தில் சமாதானத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நமக்குச் சுயபலம் இருந்தால்தான் முடியும்.

காந்தியடிகள் அஹிம்சை என்றார் அல்லவா? பலவீனத்தாலா அப்படிச் சொன்னார்? -பலவீனர்களால் அகிம்சை கடைப்பிடிக்க முடியாது! பலமானவர்களுக்குத் தான் சொன்னார் எனவே, நமக்குத் தைரியம் வேண்டும். நாம் மானத்தோடு வாழவேண்டும். ஆகவே, எந்த நிமிஷத்திலும் நம்முடைய கடமையை நாம் நமது தாய் நாட்டுக்காக - நம் தேசத்துக்காகச் செய்யவேண்டும் என்ற உணர்ச்சி உண்டாக வேண்டும்.

இன்று எங்கே போனாலும், இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு என்ன வேலை ? என்று மக்கள் துடிப்புடன் கேட்கிறார்கள்.

இவ்வளவு நல்ல எண்ணமும் துடிப்பும் எப்போதும் நாட்டில் இருந்ததில்லை. இந்த நல்ல தியாக மனப் பான்மையை நல்ல முறையில் பயன்படுத்தி, நாட்டின் நலனுக்காகக் காரியம் செய்துகொள்வோமேயானால், மகாத்மா காந்தியடிகளுடைய இலட்சியம் நிறைவேறும். சுயமரியாதையுடன், தன்மான உணர்ச்சியுடன் வாழ்வதற்கு உறுதிகொள்வோம். அப்போது உலக அரங்கிலே நமக்கு மரியாதை தானாகவே வரும்!...

“தாழ்வுற்று, வருமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டுக் கிடந்த பாரத தேசந்தன்னை வாழ்விக்க” வந்தார் மகாத்மா காந்தி.

காந்திஜிக்கு வாரிசாக நேருபிரான் இருந்தார். இன்று அந்த மாபெருந் தலைவர்கள் இருவருமே நம்மிடை இல்லை.

ஆனால், காமராஜ் இருக்கின்றார்!

ஆம்; பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் சரித்திரத்தை ஒரு புத்தம் புதிய சரித்திரத்தைச் சிருஷ்டி செய்துவிட்டார்கள் !...