தென்னாட்டு காந்தி/தென்னாட்டுக் காந்தி



◯ அகில இந்திய காங்கிரஸ் தலைவர்
◯ திரு காமராஜ் அவர்கள் தமிழ்நாட்டுக் காந்தி.
◯ ஆம்; அவர்களே தென்னாட்டுக் காந்தியும் ஆவார்!
◯ பாரதப் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரி
◯ அவர்கள் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில்
◯ கையொப்பமிட்டு அந்த மை உலரு முன்னே,
◯ அவர் காலன் வழிப்பட்டதும்,
◯ மீண்டும் உலகம் பூராவும்
◯ இந்தியாவை நோக்கத் தொடங்கி விட்டது.
◯ மிகவும் நெருக்கடியான நேரத்தில்,
◯ தமக்கே உரித்தான அரசியல் சாதுர்யத்தாலும்
◯ விவேகமான புத்திக் கூர்மையாலும்,
◯ நாட்டின் நெருக்கடியைத் தீர்த்த
◯ தீரர் திரு காமராஜர்!
◯ திருமதி இந்திரா காந்தி
◯ இன்று பாரதத்தின் பிரதமர்.
◯ இவ்வெற்றி, தலைவர் திரு காமராஜ்
◯ அவர்களுக்குக் கிட்டிய
◯ மற்றுமொரு மாபெரும் வெற்றியன்றோ!...
◯ அப்போது திரு காமராஜ்
◯ தமிழ் நாட்டின் அமைச்சர் தலைவராகப்
◯ பணி செய்து வந்த பொன்னான தருணம்.
◯ பொது ஜனங்கள் அவரைப்
◯ பூரணமாகப் புரிந்து கொண்ட
◯ நம்பிக்கை மிகுந்த நல்ல வேளையுங்கூட.

தென்னாட்டுக் காந்தி
தென்னாட்டுக் காந்தி!

முதல் உலக யுத்தம் சூடு பிடித்தது, சூடி காட்டி நடந்து கொண்டிருந்த நேரம் அது!

பாரதத்தாய் அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, தொல்லைப் பட்டுக் கொண்டிருந்த வேளை அது! உலக அரங்கத்தில் ‘மண் ஆதிக்க வெறி’ மூண்டது.

இந்திய நாட்டிலே ‘சுதந்திர வெறி’ மூண்டது.

பாரதத் திரு நாட்டின் தவப் புதல்வர்கள் சுதந்திர வேட்கை மிகக்கொண்டு, நாட்டுப் பற்றையே உயிர்ப்பாகக் கொண்டு, விடுதலை வேள்வித் தீயில் குதிக்க அணி வகுத்துப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையின் நிகழ்ச்சிகளை நாளிதழ்களில் படித்து அதன் விளைவாக, ஆவேச உணர்ச்சி கொண்டு இயங்கத் தலைப்பட்டது ஓர் உள்ளம்; அந்த உள்ளம், தமிழ்ப் பண்பில் பண் பட்ட உள்ளம். அக்கணமே, காங்கிரஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் தன்னைக் காணிக்கை வைத்துக் கொண்டது: முழு நேரப்பணிக்குத் தன்னை ஆளாக்கிப் பெருமையும் நிறைவும் கண்டது!

தமிழ் நாட்டுக் காந்திஜி என்று ஏற்றிப் போற்றப்பட்டு வருகின்ற முதல் அமைச்சர் திரு காமராஜ் அவர்கள் நமது அறுபதாம் ஆண்டு ஆரம்ப விழாவை தாம் கொண்டாடுவதற்குப் பதிலாக, அன்னாரது விழாவினை. தமிழ் கூறு நல்லுலகம் கொட்டு முழக்கோடு, கோலாகலப் பெருமிதத்தோடு, ஒட்டி வந்துள்ள நன்றியுணர்ச்சிக் கலவையோடு கொண்டாடியது.

தியாகத்தில் வாழ்ந்து, தியாகத்தினால் உயர்ந்து, தியாகத்தையே உயிர்ப்பாகக் கொள்ளும் மனிதனே சிறப்புடையவன் ; அவனைச் சரித்திரம் வாழ்த்தும்; வாழவைக்கும்.

இத்தகைய மாண்புடைத் தலைவர் ஒருவர் தமிழ் மண்ணுக்குக் கிட்டியிருப்பதில், நன்றியுள்ள தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டுமல்லவா! தனக்கென வாழாது, பிறந்த பொன் நாட்டுக்கென அனைத்தையும் ‘சர்வபரித்தியாகம்’ செய்த தியாக சீலராயிற்றே நம் தலைமை அமைச்சர்!

“திரு காமராஜ் அவர்கள் கொள்கை வீரர். அவரது அடக்கமான தேசப்பணியும், அறிவாற்றல் மிக்க ஆட்சி முறையும், பொதுமக்கள் பால் அவர் கொண்டிருக்கக் கூடிய பாசம், அன்பு, இரக்கம் போன்ற குணச்சேகரமும் அவரை என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டவை. அவர் தமிழகத்திற்கு மாத்திரம் சொந்தமானவரல்ல. இந்தியா பூராவுமே உரியவர்,” என்று அன்று நேருஜி புகழ்ந்தார். இன்று திரு. சாவன் பாட்நாயக் போன்ற பாரதத் தலைவர்கள் புகழ்கிறார்கள்.

அரசியல் உலகம் மிகவும் விந்தையானது: வேடிக்கையானது.

இன்று ஒருவரை உயர்த்துவார்கள்; நாளை தாழ்த்துவார்கள்.

ஆனால், கருத்து மாறுபாடு உடையவர்கள் ஒவ்வொருவரையும் அணுகி, காமராஜரைப்பற்றி அபிப்பிராயம் கேட்டால், “ஆஹா! அவர் பெருந் தியாகியல்லவா? அல்லும் பகலும் பாரதத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவரைப் போல. கவலைப்படு பவர்கள் அவரைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்?” என்றுதான் சொல்வார்கள் அவ்வாறுதான் சொல்ல முடியும்!

திரு காமராஜ் உண்மைத் தியாகி!

“தன்னைத்தானே தூய்மைப் படுத்திக் கொள்பவனும், சுயமாகத் தியாகம் செய்யக் கூடியவனுமான இந்தியனே, தான் பிறந்த நாட்டுக்கு உற்ற துணையாக இருக்க முடியும்,” என்ற காந்தியத் தத்துவத்திற்கே ஓர் உண்மைத் தத்துவமாக விளங்கி வருபவர் திரு காமராஜர்

ஒத்துழையாமை, நாகபுரிக் கொடிப்போர், சைமன் எதிர்ப்பு, உப்பு அறப்போர் போன்ற பலதரப்பட்ட கட்டங்கள் அவரைச் சிறைப்படுத்தின. சிறையே அவரது தாய் நாட்டுக் கோயில்!

தெய்வத் தமிழ்மறை கூறுகிறது:

“கொடை அளி செங்கோல் குடிஓம்பல், நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி.”

கொடைத்தன்மை, காருண்யம், நடுநிலை ஆட்சி முறை, குடிகளைப் பேணல் போன்ற குல நலன்களைக் கைக்கொண்டவன் மற்ற அரசர்களுக்கு ஒளிபோன்றவன் என்ற வள்ளுவத்திற்கு வாய்த்த பிரதிநிதியாக இன்று இந்த ‘ஏழைப் பங்காளன் காமராஜர்’ திகழ்ந்து வருகிறார். கண்ணற்ற சேய்களாகத் திகழ்ந்த ஏழைப் பிள்ளைகளுக்குக் கண் கொடுத்து, கல்வி கொடுத்து, உணவு, உடை கொடுத்துக் காத்து வருகின்ற மனித தெய்வம் அவர். ‘நீதிநெறி விளக்கம்’ புகலும் அனைவருக்கும் தெய்வமான் இலைமுகப் பைபூண் இறை’யின் வடிவமாக விளங்குபவரும் இவரே! அரசியல் விழிப்புப் பெற்ற மக்களிடையே ஒன்றுபட்ட- உணர்ச்சி பூர்வமான ஐக்கியப் பான்மையைத் தழைக்கச் செய்து நாட்டையும் நாட்டுமக்களையும் குறித்தே சதா, சிந்தித்துச் செயற்பட்டுவரும் கர்மவீரரை இன்று தமிழகப் பொதுமக்கள் பூர்ணமாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். இதுவே அன்னாரது வெற்றி; அவரது நாட்டுப் பணியின் வெற்றி!

சிந்தனை மேதை திரு கே. ஏ. அப்பாஸ், ‘பிளிட்ஸ்’ ஏட்டிலே, நம் முதலமைச்சரைப் புகழந்து,” விடுதலைப் பெரும் இயக்கத்தின் பழம் பெருந் தலைவரான உங்களை தமிழகத்தின் மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்கள் எல்லோருமே மிகுந்த அன்புடன் போற்றுகிறார்கள்,” என்று வாழத்துதல் உரைத்திருக்கிறார். இவ்வுரை, அடக்க சீலரான நம் தேசீயத் தலைவரது சமதர்மக் கொள்கைக்குக் கிட்டிய மற்றொரு வெற்றியன்றோ!

“நாடுதான் என் குடும்பம்; இக் குடும்பத்தைக் கட்டிக் காத்து, நல்லபடியாக வாழவைத்தே தீருவேன். நம்மை இனி யாரும் அடிமை கொள்ள முடியாது. நமது சக்திகளை ஒன்று திரட்டி, நம் காலத்திலேயே ஏழ்மையை ஒழிப்போம். மற்ற தலைவர்கள் ஒத்துழைப்புடன் பிரிவினைப் பேயை விரட்டுவோம்; மக்கள் அனைவரையும் வாழ்விப்போம்!”

காந்திவழி மெய்த் தொண்டரின் இத்தகைய சீரிய நற் கருத்துக்களை நாம் என்றென்றும் நினைவிற்கொண்டு, அன்னாரது வாழ்வைப் பெருக்கி அருளவும், அதன் மூலம் நாட்டுப்பணி சிறக்க வழிகாட்டவும் எல்லாம் வல்ல இறைவன் அவரை வாழ்த்தி அருளுமாறு தொழுகின்றோம்!