தேன்பாகு/அரசன் செய்த சோதனை

ஓர் அரசனுடைய சபையில் பல பணக்காரர்கள் இருந்து எப்போதும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் உண்மையான அன்பு உடையவர்களா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று அரசன் நினைத்தான்.

ஒரு நாள் அவன் ஏழையைப் போல வேடம் பூண்டு கந்தைத் துணியைக் கட்டிக் கொண்டு தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு புறப்பட்டான். ஒரு செல்வருடைய வீட்டுக்குப் போய்,

"ஐயர் பசிக்கிறது; கொஞ்சம் சோறு போடுங்கள்" என்றான். அந்தச் செல்வர், "உன்னைப் பார்த்தால் கொட்டாப்புளி மாதிரி இருக்கிறாய். எங்கேயாவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா? உனக்கு வெட்கமாக இல்லை; இங்கே சோறும் இல்லை; ஒன்றும் இல்லை போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அரசன் மற்றொரு செல்வர் வீட்டுக்குப் போய்ச் சோறு கேட்டான். அவரோ, "இது சத்திரமா, கண்டவர்களுக்கெல்லாம் சோறு போட போடா வெளியே' என்று துரத்தி விட்டார்.

அரசன் மூன்றாவது வீடு ஒன்றுக்குப் போனான். அவன் பிச்சை கேட்க வருகிறான் என்று எண்ணி அவனைக் கண்டவுடன் வாயிற் கதவைச் சாத்தி விட்டார்கள்.

அரசனுக்கு இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது, 'வாய் கிழியப் பேசினவர்கள் இப்படி இருக்கிறார்களே!' என்று வருந்தினான்.

பிறகு வேறு எங்காவது போகலாம் என்று கடந்து போய்க் கொண்டிருக்கையில் ஒரு கூலியாள் தான் கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்துக் கொண்டிருந்தான். அங்கே சென்ற அரசன், "ஐயா, மிகவும் பசியாக இருக்கிறது, கொஞ்சம் சோறு போடுங்கள்" என்றான்.

"இங்கே உட்காரப்பா!"என்று, சொல்லி அந்தக் கூலியாள் தான் கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்றை எடுத்து அரசன் கை நிறையக் கொடுத்தான். அரசன் அங்கேயே சுவைத்து உண்டான். "அப்பா, நீ பரம உபகாரி, பசித்து வந்தவருக்கு இல்லை என்னாமல் சோறு கொடுத் தாயே!" என்று சொன்னான். "நான் என்ன ஐயா செய்து விட்டேன்? ஒவ்வொருவர் பெரிய தர்ம சத்திரம் கட்டி வைத்திருக்கிறார்கள்.நான் ஏதோ கொண்டு வந்திருந்த இந்தப் பழஞ்சோற்றில் சிறிது கொடுத்தேன். இது ஒரு பெரிய காரியமா?" என்றான் அங்தக் கூலியாள்.

"நீ தந்த சோற்றினால் என் பசி ஆறி விட்டது. நீ நெடுங்காலம் வாழ்வாயாக" என்று வாழ்த்தி, அவன் எங்கே இருக்கிறான் என்ற விவரத்தையும் கேட்டுக்கொண்டு சென்றான்.

மறுநாள் அரசன் அந்தக் கூலிக்காரனிடம் ஒரு சேவகனை அனுப்பி, "உன்னை அரசர் வரச் சொன்னார்" என்று சொல்லச் செய்தார். அந்தச் சேவகன் அவனிடம் சென்று அழைத்தபோது அவன் வெலவெலத்துப் போனான். 'நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! அரசன் நம்மை எதற்காகக் கூப்பிடுகிறார்? என்று எண்ணி நடு நடுங்கிக் கொண்டே சேவகனுடன் சென்றான்.

அரசனுடைய அரண்மனைக்குள் சேவகன் அவனை அழைத்துச் சென்றான்.உள்ளே அரசன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான். அருகில் இரு புற

மும் சேவகர்கள் கையில் துப்பாக்கியுடன் நின்று: கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும் அவனுக்கு நடுக்கம் அதிகமாயிற்று.

அரசன் அவனைக் கண்டதும், "நேற்று நீ ஒர் ஏழைக்குச் சோறு கொடுத்தாயா?" என்று கேட்டான், .

"கொடுத்தேன், என்னிடம் பழைய சோறு தான் இருந்தது. அதைத்தான் கொடுத்தேன்" என்றான்.

"சரி, அப்படி உட்கார்" என்று சொன்னான். அந்தக் கூலிக்காரன் நடு நடுங்கியபடியே உட்கார்ந்தான்.

"கேற்று உன்னிடம் வந்த ஏழை நான் தான். நீ வஞ்சகம் இல்லாமல் உன்னுடைய சோற்றைப் பகிர்ந்து கொடுத்தாய். நீ செய்த உபகாரத்தை மெச்சுகிறேன். இனிமேல் நீ ஏழையாக வாழ வேண்டாம், உனக்கு நிலங்களைத் தருகிறேன்" என்று சொல்லிச் சில நிலங்களை அவனுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான்.

சபையில் இருந்த செல்வர்கள் எல்லாம் இதைக் கேட்டுத் திகைத்தார்கள். ஊரில் உள்ள வர்களோ அரசனுடைய பெருந்தகையைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.