தேன்பாகு/இட்டிலிக் குப்பன்

அந்தத் தாசில்தாரிடம் ஒரு சமையற்காரன் இருந்தான். அவனுக்குக் குப்பன் என்று பெயர். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சமையல் நன்றாகச் செய்வான்.

அவனுக்கு விசித்திரமான ஆசை ஒன்று தோன்றியது. தானும் ஏதாவது உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று எண்ணினான். ஒரு நாள் தாசில்தாரிடம் நாணிக்கொண்டு, "எனக்கு ஓர் உத்தியோகம் பண்ணி வையுங்களேன்!" என்று சொன்னான்.



தாசில்தாருக்கு அதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. "உனக்கா?" என்று கேட்டார்.

"ஆமாம் எனக்குத்தான். நீங்கள் மனசு வைத்தால் எனக்கு ஏதாவது உத்தியோகம் பண்ணி வைக்கலாமே!" என்றான்.

தாசில்தார் சிறிது யோசித்தார். பிறகு, "நான் ஒரு மணியக்காரருக்குக் கடிதம் தருகிறேன்,அதை அவரிடம் காட்டி அவர் சொல்கிற வேலையைச் செய்" என்றார். அப்படியே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அவன் ஆவலோடு அதை வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட மணியக்காரரிடம் காட்டினான். அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து, "இதைத் தின்னு" என்றார்,

குப்பன் உத்தியோகம் பார்ப்பதற்கு முன் இப்படித்தான் செய்யவேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி, அதை மிகவும் சிரமப்பட்டு பென்று விழுங்கினான். அதற்குள் அவனுக்கு விழி பிதுங்கிப் போய்விட்டது. இருந்தாலும் உத்தியோகம் பெறலாம் என்ற ஆசையில் எப்படியோ அந்தத் துண்டுகளில் ஒன்றுவிடாமல் மென்று விழுங்கி விட்டான்.

அதைக்கண்ட மணியக்காரருக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. 'இவன் படு முட்டாள்' என்று உணர்ந்து கொண்டார். "சரி, இன்னும் ஒரு மாதம் கழித்து வா" என்று சொல்லி அனுப்பிவிட்டார். 15

ஒரு மாதம் ஆயிற்று; இரண்டு மாதங்களும் ஆயின, உத்தியோகத்துக்கு உத்தரவு வரவில்லை, மறுபடியும் தாசில்தாரிடம் கெஞ்சினான். "வேறு மணியக்காரரிடம் சொல்லுங்கள்" என்றான்,

அவர் உடனே ஒரு காகிதத்தை எடுத்து எழுதத் தொடங்கினார். அப்போது குப்பன் உள்ளே ஓடிப்போய் ஒரு பெரிய இட்டிலியை எடுத்துக் கொண்டு வந்து, "இதன் மேல் எழுதித் தாருங்கள்" என்றான்.

தாசில் தாருக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏனப்பா இதன் மேல் எழுதச் சொல்கிறாய்?" என்று கேட்டார்.

போன தடவை அந்த மணியக்காரர் நீங்கள் கொடுத்த காகிதத்தைத் தின்னச் சொன்னார். நான் கஷ்டப்பட்டு மென்று விழுங்கினேன். இப்பொழுதும் அப்படிச் செய்யச் சொன்னால் சங்கடமாக இருக்கும், இந்த இட்டிலியின் மேல் எழுதித் தந்தால் இதைச் சுலபமாகத் தின்று விடலாம்" என்றான்.

தாசில் தாருக்குச் சிரிப்பாக வந்தது. 'இந்த முட்டாளை அவர் ஏமாற்றி விட்டார்' என்று உணர்ந்து கொண்டார்.

"போடா, இட்டிலிக் குப்பா! உனக்கு அந்த வேலையெல்லாம் வேண்டாம், உன்னால் அந்தக் காகிதங்களையெல்லாம் தின்ன முடியாது, பேசாமல் இங்கே சமையற்காரனாகவே இருந்து விடு உனக்குச் சம்பளம் கூடப் போட்டுத் தருகிறேன்” என்றார்.

அதுமுதல் அவனுக்கு இட்டிலிக்குப்பன் என்ற பெயர் கிலைத்து விட்டது,