தேன்பாகு/நம்பிக்கை

கங்கைக் கரையில் ஒருபிராமணர் கங்கையின் மகாத்மியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். "கங்கையில் நீராடினால் எல்லா விதமான பாவங்களும் போய்விடும். கைலாசம் போவது ஏன்? என்று சொன்னார்.

கைலாசத்திலிருந்த பரமசிவனைப் பார்த்துப் பார்வதி, "கங்கையில் முழுகினவர் எல்லோரும் பாவங்கள் நீங்கிக் கைலாசத்துக்கு வந்து விட்டால் இங்கே இடம் கொள்ளாதே!" என்றார்.

பரமசிவன், "போடி, பைத்தியக்காரி! கங்கையில் குளிப்பவர்கள் எல்லோரும் நம்பிக்கையுடன்

குளிக்கிறார்களா? யார் உண்மையான நம்பிக்கையுடன் நீராடுகிறார்களோ, அவர்களுக்குத்தான் கைலாசம் கிடைக்கும்' என்றுசொன்னார். "அதை உனக்குக் காட்டுகிறேன் வா, நாம் இருவரும் கிழவன் கிழவியைப்போல அங்கே போய் ஒரு திருவிளையாடல் பண்ணலாம்" என்றார்.

அப்படியே அவ்விருவரும் கிழவன் கிழவி யாகக் கங்கைக்கரைக்கு வந்தார்கள், நீராடினாாகள். அப்போது கிழவர் நீரோடு போய் விட்டார். கிழவியாக வந்த பார்வதி, "ஐயோ! யாராவது என் கணவரை மீட்கமாட்டிர்களா?" என்று கதறினாள்.

ஒருவர், "இதோ நான் நீந்திப்போய் இழுத்து வருகிறேன்" என்றபொழுது கிழவியாக இருந்த பார்வதி, "ஒரு பாவமும் செய்யாதவர் யாரோ அவர்தாம் அவரை மீட்க முடியும், மற்றவரால் முடியாது" என்றாள். அதைக் கேட்டவர் தாம் செய்த பாவங்களை எண்ணிச் சும்மா இருந்து விட்டார். இப்படியே வேறு சிலரும் வந்து கிழவி சொன்னதைக் கேட்டுப் பிரமித்து நின்றுவிட்டாாகள்,

அப்போது பலசாலியான ஒருவன் வந்தான். தான் கிழவரை மீட்டு வருவதாகச் சொன்னான். அவனிடமும் "ஒரு பாவமும் செய்யாதவர்களே அவரை மீட்க முடியும்" என்றாள். அவன் "அப்படியா? இப்போதுதான் புராணம் வாசித்தவர் சொன்னார், கங்கையில் மூழ்கினால் எல்லாப்

பாவங்களும் போய்விடும் என்றார். இதோ நான் ஒரு முழுக்குப் போடுகிறேன்." என்று சொல்லி மூழ்கி எழுந்தான். இப்போது என் பாவமெல் லாம் போய்விட்டன. இதோ அவரை மீட்கிறேன். என்று கங்கையில் குதிக்கப் போனான்.

அப்போது பார்வதியும் பரமசிவனும் தம் சுய உருவத்தில் தோன்றி அவனுக்கு அருள் பாலித்தார்கள், பிறகு கைலாசம் போய்ச் சேர்ந்தார்கள்.

அங்கே பார்வதியிடம் "பார்த்தாயா? புராணம் கேட்ட எத்தனை பேருக்கு நம்பிக்கை இருந்தது. அந்தப் புராணத்தைச் சொன்னவர்க்கே இல்லையே ஒருவன்தானே முழு நம்பிக் கையோடு வந்தான்" என்று பரமேசுவரன் திருவாய் மொழிந்தருளினான். பார்வதி சிரித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேன்பாகு/நம்பிக்கை&oldid=1637317" இலிருந்து மீள்விக்கப்பட்டது