தேன்பாகு/நரியின் தந்திரம்

 ஒரு கிழவி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். காக்கை ஒன்று அவள் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வடையைக் கொத்திக் கொண்டு பறந்து போய் விட்டது.

அந்தக் காக்கை ஒரு மரத்தில் அமர்ந்து வடையை வாயில் பற்றிக் கொண்டு தின்னத் தொடங்கியது. அப்போது ஒரு நரி அங்கே வந்தது. அந்தக் காக்கையினிடமிருந்து அந்த வடையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அது எண்ணியது.

"காக்காயே, காக்காயே, நீ நன்றாகப் பாடு வாய் என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன் பாட்டைக் கேட்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், ஒரு பாட்டுப்பாடு” என்று நரி சொல்லியது. காக்கை பாட்டுப்பாட வாயைத் திறக்கும்போது வடை கீழே விழுந்துவிடும் என்றும் அதை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்றும் எண்ணியது.

காக்கை கொஞ்சம் தந்திரசாலி. தன் வாயில் வைத்திருந்த வடையைக் காலின் கீழ் வைத்து அமிழ்த்திக்கொண்டு, “கா,கா"என்று கரைந்தது. தான் செய்த தந்திரம் பலிக்கவில்லையே என்று எண்ணிய நரி மற்றொரு தந்திரம் செய்ய எண்ணியது.

"காக்காயே, நீ எவ்வளவு அழகாகப் பாடுகிறாய்! நானும் எவ்வளவோ பாட்டைக் கேட் டிருக்கிறேன். இப்படி இனிமையாகப் பாடுவதைக் கேட்டதே இல்லை" என்று நரி காக்கையைப் புகழ்ந்தது, அதைக் கேட்ட காக்கைக்கு உச்சி குளிர்ந்து விட்டது.

"நீ நன்றாகப் பாடுகிறாயே! உனக்கு நடனம் செய்யக்கூடத் தெரியும் என்று சொல்கிறார்கள்.உன் பாட்டைக்கேட்டு மகிழ்ச்சி பெற்ற எனக்கு உன் ஆனந்த நடனத்தைக்கண்டு களிக்கவும் ஆசையாக இருக்கிறது. கொஞ்சம் நடனம் ஆடிக் காட்டு பார்ப்போம்"என்றது.

அந்தப் புகழ்ச்சியினால் மயங்கிய காக்கை உடனே காலைத் துக்கித்துக்கி நடனம் செய்யத்


தொடங்கியது. அப்போது அதன் காலின் கீழ் இருந்த வடை கீழே விழுந்துவிட்டது.

நரி அதை வாயில் கவ்விக்கொண்டது "காக்கையே உன் நடனம் மிகவும் நன்றாக இருக்கிறது. நான் போய்வருகிறேன்"என்று ஓடிப் போய்விட்டது.

ஏமாந்த காக்கை விழித்து விழித்து ஒடும் நரியைப் பார்த்தது.