தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம்
தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம்
13.02.1949 அன்று மதுரை சௌராஷ்டிரா பெண்கள் பள்ளியில் மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருக்குறள் அஷ்டாவதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய தலைமை பேருரை –
....மனித வர்க்கத்தினர் பல்வேறு பிரிவினராய் பல வித்தியாசங்களுடன் வாழ்ந்து வரும் இற்றைய நிலையில் தெய்வத்தன்மை பெற்ற குறள் பற்றியும் விதவிதமான வியாக்யானங்கள் கூறுபவர் உண்டு. புலமையில் மூன்று விதங்கள் உண்டு. அவை கவிப்புலமை, கலைப் புலமை, தவப் புலமை என்பர். இம்மூன்று புலமையிலும் தேர்ந்து தெளிந்த நிலைபெற்ற புலவரே இக்குறளைச் செய்தவர். இத்தெளிவுபெற்ற அறிவோர்க்கு எப்பொருளும் சமநோக்குடனே தென்படும்.
பொருள் ஒன்றோயாயினும் அப்பொருளை காண்போர் பலருக்கும் பலவிதமான அர்த்தங்களைக் கூறக் கூடியதாய் அமைந்திருக்கிறது. உதாரணமாக மழைநீர் பொழிந்ததும் அந்நீரை கழிக்கும் தூம்புகள் பல யானை, சிங்கம், முதலை போன்ற வடிவங்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவ்வாறு வெளிப்படும் நீரை ஒரு சிறுவன் கண்டு சிங்கவாய் நீர், முதலை வாய் நீர் என்று கூறுகிறான். ஆனால் வயது முதிர்ந்த ஒருவனோ மேகத்திலிருந்து பெய்த மழை சிங்கம், முதலை போன்ற தூம்புகள் மூலம் வெளிவருகிறது என்பதைக் காண்கிறான். அதேபோல சாதாரண மனிதன் சில பெரியோர் வாக்கை கவியின் பெருமை என்று காண்கிறான். தெய்வீகம் உணர்ந்த ஒருவன் தெய்வம் தன் வாக்கை இம்மனிதன் ரூபமாக உலகுக்குத் தருகிறது என்பதை காண்கிறான். அவ்வாக்கே இத் திருவள்ளுவர் வாக்கு.
எவ்வாறு நீராகிய ஒரே பொருள் பலவிதமான வியாக்கியானத்துக்கு உள்ளாகிறதோ, அதே போன்ற மனிதனின் மனோ நிலையும் நான்கு வகைப்படும். அவை இருள், மருள், தெருள், அருள் என்பவையாகும். இவற்றுள் முதலாம் நிலை இருளாகும். இது எளிதில் எல்லாரையும் பீடிக்கிறது. மாய்கையின் பலத்தினால் உண்மை வழியறியாது. கண் தெரியாது தடுமாறும் நிலையே இருளாகும். இந்நிலையில் உலக பந்தம், மாயை இவற்றின்றும் விடுபட வேண்டும் என்ற உள்ளக் கிளர்ச்சி ஏற்படுவதே மருள் என்றழைக்கப்படும். அந்நிலையிலிருந்து பல அனுபவங்களைப் பெற பாடுபட்டு பல நோன்புகள் நோற்றுப் பின்னர் அடையும் பயன்தான் தெருள் என்னும் தெளிவு. தெருள் நிலையை அடைந்ததும் பூரண நிலையை அடைவதில்லை. அதிலும் பல அனுபவங்களைக் கற்றுத் தெளிந்த பின்னரே அருள் சுரக்கும். அந்நிலையை அடைந்தோருக்கு புறக்கண்களின் பார்வையைப் பற்றிய கவலையே ஏற்படுவதில்லை. ஞானக் கண் பெற்று அவன் இறைவனின் அருள் வடிவத்தைக் கண்டு ஆனந்தமடைகிறான். இந்நிலையே அருள்நிலை. இந்நிலையிலிருந்தே பரம் பொருளுடன் ஐக்கியமாகிவிடும் தன்மை ஏற்படுகிறது.
இந்நிலையை அடைந்த யோகியரின் மூளை அமைப்பில் மாறுதல் ஏற்படுகிறது. மூளை கீழ்மூளை, மேல்மூளை என்று தமிழிலும் Cerebellum, Cerebrum என்று ஆங்கிலத்திலும், லௌகீகம், பரமார்த்திகம் என்று யோக முறையிலும் காணப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு அடுக்குகளைக் கொண்ட மூளையின் மத்திய பாகத்திலிருக்கும் சவ்வு விடுபட்டு அதிலிருந்து பெருகும் அமுதச் சுவையை அடைகிறான் ஞானி. மனிதனை வாட்டும் 444 வியாதிகளில் எதுவும் இவனை அணுகாது. வஜ்ரகாயம் பெற்று விடுகிறான். மனிதச் சட்டையிலிருந்து தெய்வீக நிலையை அடைகிறான். அப்போது அவன் நோக்கு சமமாகிறது. பன்றியைக் கண்டபோதும் பார்ப்பானை கண்டபோதும் சமமான பொருளையே அவன் காண்கிறான்.
அவ்வாறு மனிதன் ஆன்ம முக்திக்கான நான்கு வகையான நிலைகளிலிருந்து தெளிந்த பின்னால் சித்தாந்த இன்பத்தைப் பெறுகின்றான். இவையனைத்தையும் பெற்ற அரசனையே இறை என்ற பெயரால் நம் முன்னோர் அழைத்தனர். இத்தகையோர் துறவு வேண்டும் என்று ஒதுங்கி வாழ்வதில்லை. தாம் கண்ட இன்பத்தை உலகும் காணட்டும் என்ற விரிந்த நோக்குடன் ஆண், பெண், விலங்கு, மனிதன், ஒளி, வெளி இவற்றில் பேதாபேதமற்ற பொருள் ஒன்றையே கண்ட மகா புருஷர்களில் ஒருவரே திருக்குறள் தந்த ஞானி.
‘பரிசு பெறலாம் என்று பாடிய நூல் அல்ல திருக்குறள்’. எம்மதத்தவர்க்கும், எக்குலத்தவர்க்கும், எந்நாட்டவருக்கும் பொதுவான நீதிகளை தரும் பெருமைபெற்ற நூல் குறள். பழமை, புதுமை இரண்டுக்கும் இடையே கடந்து போன இடைக்காலத்தில் எத்தகைய சிதைவுக்கும் உள்ளாகாது விளங்குவதிலிருந்தே இந்நூலின் பெருமையை உணரலாம்.
சிதைவு சக்திக்கு ஆளாகாது ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஞானிகள் உண்டு என்றும், அத்தகையோரில் ஒருவர் திருமூலர் என்றும் அவர் ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 வருடம் வாழ்ந்து 3000 பாடல்கள் பாடினார் என்றும் கூறப்படுவதை இன்றைய உலகம் அப்படியே நம்பிவிடாது. ஏனெனில் நாம் பெருமை பெற்ற அரசை பெறாது, புலைத்தன்மை பெற்ற அந்நிய நாட்டினரான, அதுவும் 6000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் அரசை தலைமையாகக் கொண்டு இடைக்காலத்திலே பெருமையின்றி வாழ்ந்திருக்கிறோம்.
மனிதச் சட்டையை விட்டு உதறிய பின்னரும் ஞானியர் ஆவி நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். அந்நிலையே பேதம் சிறிதுமற்ற பொதுநிலை. அதைக் குறித்தே,
"நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நடுவே
காணார்க்கும் கண்டார்க்கும்
கண்ணளிக்கும் கண்ணே"
என்று பெரியோர் பாடியிருக்கின்றனர். மண்ணுலகு, வானுலகு இவைகளில் சஞ்சரிக்கும் அஷ்டமா சித்தியைப் பெற்றிருந்தனர் என்று ஹிந்து வேதம் கூறுகிறது.
"அண்டம் சுருங்கிடில் ஆக்கைக்கு அழிவில்லை
பிண்டம் சுருங்கிடில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கிடில் உபாயம் பல உள
கண்டங்கருத்த கபாலியும் ஆமே"
என்றும்
"வளியினை வாங்கி வயித்திலிடக்கில்
பளிங்கொத்து காயம் பழுக்கினும் பிஞ்சாம்"
என்றும்
நீலநிறனுடை நேரிழையாளொடு
சாலவும் புல்லுசதமென்று இருப்போருக்கு
ஞாலமறிய நரை மாறிடும்
பாலனும் ஆவார் பராநந்தி ஆணையே
என்றும் திருமூலர் தாமடைந்த நிலைமை அடையும் பாதையைச் சொல்லியிருக்கிறார்.
புறா போன்று இறைவன் காட்சியளித்த்தாக கிருஸ்துவ வேதமும் கூறுகிறது.
இந்த நிலைக்கு வருவதுதான் சுத்த சைதன்ய நிலை. சுத்த சைதன்யமென்பது பிறப்பும் இறப்பும் அற்றநிலை. ஆதியிலிருந்து அந்தம் வரை சென்று பின்னர் தன்னிலை அடையும் நிலை. வான மேகம் சமுத்திர நீரையுண்டு பின்னர் மழை பொழியும்போது நீர் எவ்வாறு தானிருந்த சமுத்திரத்தையே மீண்டும் அடைகிறதோ அதேபோல ஆன்மாவும் தான் விடுபட்ட இடத்தையே மீண்டும் அடைகின்றது.
இதற்குச் சான்றாகவே-
அந்தம் ஆதி எம்மனார் புலவர் என்று சிவஞான போதம் சொல்லுகின்றது. எந்த சக்தியும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வரும் நோக்கத்தோடு பிரயாணம் செய்கிறது. ஆகையால்தான் எல்லா வடிவுகளும் அசைவு காலத்தில் பெரும்பாலும் வட்டமாக இருக்கின்றன என்பதை ரசாயானம் நிரூபிக்கிறது. உலகில் ஒவ்வொரு ஜீவனும் ஓங்கார வடிவமாக விளங்குகின்றன என்று திருமூலர் கூறுகின்றார். அகர முதல் எல்லாவற்றிலும் நான் இயங்குகின்றேன் என்று கீதையும் கூறுகின்றது. சத்தம் கடவுளிடம் இருந்தது. அது கடவுளின் வடிவமாகக் காட்சியும் சிருஷ்டியும் அளிக்கிறது. அதைத்தான் நாதம் என்றது யோகம். அதைத்தான் சவுண்டு என்று விஞ்ஞானம் கூறுகின்றது. அதுதான் நாதபிந்துகளாதி நமோ நம என்பதன் அர்த்தம்.
இவ்வாறு ஆதியிலிருந்து பிறந்த ஒலியை வடிவமாக்கி எழுத்து ரூபம் கொடுக்கப்பட்டது. எழுத்துக்கள் உருவ எழுத்து, கோட்டெழுத்து, கோளெழுத்து, சதுர எழுத்து என நான்கு வகைப்படும். உருவ எழுத்தாக தமிழ் இருந்த காலத்திலேயே சீனம் முதலிய பாஷைகள் பிரிந்தன. கோட்டெழுத்தாக இருந்த காலத்தில் சமஸ்கிருதமும் மற்றுமுள்ள பாஷைகளும் பிரிந்தன. வட்ட எழுத்தாயிருந்த காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பாஷைகள் பிரிந்தன. இன்றைய தமிழெழுத்து சதுர எழுத்தாயிற்று. இந்த எல்லாவகையான மாறுதல்களையும் பெற்ற ஆதிமொழி தமிழாகும்.
அன்றைய அரசு நிலை
தொகுஇனி அரசு அக்காலத்தில் எவ்வாறிருந்தது என்பதைத் கவனிப்போம். ஹிந்து மதம் துறவு என்னும் முடிவான பாகத்திலிருந்து அரசு என்பதற்கு வருவதில்லை. ஒன்றின் உள்ளே மற்றொரு பொருள் மறைந்து நிற்றல் போல் அரசன் தெய்வீகத்தை மறைத்து மனித ரூபமாய் மக்களுக்குச் சேவை செய்கிறான். சேவையின் முடிவில் தான் அடைய வேண்டிய தெய்வீக ஸ்தானத்தை அடைகின்றான். ஆகையால்தான் ‘மன்னன் மக்கட்கு இறை’ என்று குறள் கூறுகிறது.
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்"
என்றும் சொல்கிறது. பொருள் ஒன்று மற்றொரு பொருளில் மறைந்து நிற்பதை சிரமப்பட்டு தெரிந்து கொள்ளாத எவரும் அப்பொருள் இல்லை என்ற முடிவுக்கு வருதல் கூடாது. தோன்றும் காலம் தோற்றாக் காலம் என்ற இருவித காலங்களுண்டு. பகலில் நட்சத்திரங்கள் கண்ணில் படுவதில்லை என்ற காரணத்தால் நட்சத்திரங்களே இல்லை என்ற முடிவுக்கு வருவதுபோல் ஆகும் இது.
உடலிலேயே ஓங்கார வடிவத்தைக் காணமுடியும் அதைத்தான்
ஓங்காரத்துள்ளே உதித்த பூதம் ஐம்பூதம்,
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்,
ஓங்கா தீதத்துயிர் மூன்றும் உதித்த
ஓங்காரசஞ்சீல பரசிவரூபமே
என்கிறார் திருமூலர். கர்ப்பத்தினின்றும் சிறிதாக வெளிப்பட்டிருக்கின்றன. சாராய சீசாக்களிலே பேடப்பட்டிருக்கிற உருவங்களெல்லாம் ஓங்கார வடிவமாக இருப்பதைப் பார்த்திருக்கலாம். எந்தக் கருவிலும் எந்த சிருஷ்டியும் முதலில் அந்த வடிவத்தையே பெறுகிறது.
உண்மையை இருள் மறைத்து நிற்கிறது. மனித உருவத்தில் மூலக் கனலுக்கும் கபாலத்திடையே தோன்றும் ஜோதிக்குமிடையே இருள் பரவி நிற்கிறது. இந்த இருளைப் படிப்படியான சாதனைகளின் மூலம் அகற்றிவிட்ட பின்னர் யோகிகளுக்கு யோகக் கலை புறப்பட்டு உடலில் சஞ்சரிப்பதையே நாதசஞ்சாரம் என்று கூறுவர். அந்நிலை அடையாத எவனும் இருளைக் கடந்தவனாக மாட்டான்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
என்று சொல்லப்படுகிறது.
மூலக்கனல் புகைந்து நிற்கின்றது. நெற்றியில் ஜோதி சொரூபத்தில் ஒரு விளக்கு இருக்கின்றது. இந்த மூலக்கனல் படிப்படியாகச் சென்றேறி அந்த ஜோதியைத் தொட்டால் ஜோதி இறங்கி வெளிச்சத்தைத் தருகின்றது.
இதற்கு அறிகுறியாகத்தான் கோயில்களின் வாயிலில் சாம்பிராணிப் புகையையும் மூலஸ்தானத்தில் சூடத்தையும் கொளுத்திக் காட்டுகின்றனர். அது வணக்க வழிபாடாக உள்ளது.
உதாரணமாக, நீங்களே உங்கள் வீட்டுக்குச் சென்று குத்துவிளக்கு ஏற்றி அந்த எரிகிற விளக்கில் மற்றொரு திரியை பற்ற வைத்து சிறிது நேரம் எரிந்தபின் அணைத்துவிட்டு அந்த எரிகிற திரிக்கு நேராக இந்த அணைந்த திரியைக் கீழே வைத்து இந்தப் புகை அசையாமல் எரிகிற திரியில் போய்ப்படும்படி பிடித்தால் அந்த புகை எரியும் ஒளியில் பட்டவுடன் அச்சுடர் புகை வழியாகக் கீழே இறங்கி கீழே இருக்கும் திரியும் எரியும். இது காற்றில்லாத இடத்தில் ஜன்னல்களை அடைத்துக் கொண்டு செய்தால் சுலபமாயிருக்கும். இந்நிலையை யோகி தன் சரீரத்திலேயே காண்கின்றான். அவனுக்கு கபாலத்துள்ளேயுள்ள ஒளியானது மூலாதாரத்திற்கு இறங்குகின்றது. அப்பொழுது காபலத்திற்கும் மூலாதாரத்திற்கும் இடையிலிருந்த இருள் ஒளியாக மாறுகிறது. அந்த நிலையை அடைந்தவனைத்தான்
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்"
(பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு)
என்று குறள் சுட்டிக் காட்டுகிறது. யோகியர் தம் உடலில் கண்டு அனுபவிக்கும் நாத சஞ்சாரத்தையே புல்லாங்குழல் நாதஸ்வரம் போன்ற கருவிகளின் மூலம் உலகில் ஏனையோரும் அனுபவிக்கட்டும் என்று எடுத்துக் காட்டியிருக்கின்றனர். யோகியர் உடலில் ஏற்படும் இந்த நாத சஞ்சாரத்தின் முடிவிலேயே போதம் உண்டாகிறது. யோகாநந்தத்தின் முடிவு கலானந்தம். கலானந்தத்தின் முடிவு நாதாந்தம். நாதாந்தம் என்பவை பத்துவித நாதங்கள். அவை கடலிரைச்சல், சங்கின் தொனி, கண்டாமணியோசை, நாதஸ்வரம் புல்லாங்குழல், பேரிகை போன்ற பலதரப்பட்டவை. இவை அத்தனை சப்தத்தையும் பிரம்ம மந்திரத்தில் குண்டலிபுகும் காலத்தில் யோகி கேட்கிறான். கேட்கும் காலத்தில் மனதில் சாந்தம் நிலவுகின்றது. இதைக் கண்ட யோகிதான் வெளியில் மற்றையோரும் இம்மாதிரி நாதத்தை கேட்டு மனச் சாந்தியும் மகிழ்ச்சியும் அடையும் பொருட்டு கருவிகளை அமைத்து மக்களைக் கையாளச் செய்தான்.
அதைத்தான் திருவள்ளுவ நாயனார்-
"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகை தெரிவான்கட்டே உலகு”
என்று சூட்சுமமாகக் காட்டுகின்றனார்.
இத்தகைய தெளிந்த நிலையில் தன்னுள்ளே பரம்பொருளைக் கண்டு பின்னர் வீடு என்ற நிலையை அடைவதையே சித்தாந்தம் கூறுகிறது. குறள் இன்பத்தோடு நிற்கின்றது. வீடு கூறவில்லை என்று கூறுவாரும் உண்டு. இன்பமும் வீடும் வேறல்ல. அதைத்தான் “பெற்ற சின்றின்பமே பேரின்பமாய் அங்கே முற்றவரும் பரிசு உந்தீ பற-முனையாது மாய்கையின் உந்தீபற” என்று சொல்லியிருக்கின்றார். காமங்கடந்த இல்லறமும் காட்டினுள் புகுந்த துறவறமும் வித்தியாசப்பட்டதல்ல. அதைத்தான்,
“சன்னியாசி ஆனதிலும் மூடருண்டு
சம்சாரி ஆனதிலும் ஞானியுண்டு”
என்று சொல்லப்படுகிறது. அதையே திருவள்ளுவ நாயனார்,
“நீட்டலும் மழித்தலும் வேண்டாம் உலகம்
பழித்தது ஒழித்து விடின்”
என்கிறார்.
“கண்ணுளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணுயிர்எம் காத லவர்”
என்று சொல்கின்ற காமத்துப்பால் கவிக்கும், பிறவி ஞானியாகிய திருஞான சம்பந்தப் பெருமான் ஒழிவிலொடுக்கும் என்றும் நூலில்,
“கண்மணியில்’ ஆகாச நிழல் கலந்தாற்போல்,
புன்மையினை நீ உண்டென றுனையுணர்த்தி
துண்ணெனவே பார்த்திருந்த சித்த நம்போற் பார்த்தானை நாம்
பாவி
தோத்திரஞ் செய்யாப் பிறவிச் சொல்”
என்று முடிவான முற்றுந் துறந்த ஞானக் கவிக்கும் அறிவுடையோர் தொடர்பு காண்பர். வீடு என்பதும தமிழ் நூலில் பாடப்படாமலில்லை. அந்நூல் வேண்டுமென்று விரும்புவோர் ஔவைக்குறள் என்ற நூலை வாங்கிப் படியுங்கள். “எக்கருத்தும் எப்பொழுதும் தமிழலில் இல்லாமலில்லை.” இச்சைகளில் மூன்றுவிதம் இருக்கிறது. நல்ல ஆகாரத்தை விரும்பியுண்ண வேண்டும் என்பது ஒருவகை. மனதின்பால் சஞ்சரிக்கும் இச்சையோ ஆகாரத்தினின்றும் உயர்ந்ததாய் திரவியம் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் ஒருமித்து வைக்க வேண்டுமென்ற நோக்கமும் கொண்டதாய் வேலை செய்யும். அதற்கப்பால்பட்ட புத்தியுள்ள ஆசையோ பணத்தைத் தொலைத்து எதையும் செய்யத் தயாராகி கண்ணுக்கினிய காமாந்தகாரத்தை அனுபவிக்க வேண்டுமென்றும் தூண்டும். இவைகள்தாம் தூலம், சூட்சுமம், காரணம் என்று சொல்லப்படுகின்ற மூன்று சரீரக் கூறுகள். இதற்கப்பாலுள்ள சரீரம்தான் மகா காரண சரீரம். அந்த சரீரத்தை அடைந்தவன்தான் இந்த மூன்று ஆசையையும் கடந்தவன். இந்த இச்சையைத்தான்.
‘அன்ன விசாரம் அதுவே விசாரம்
சொன்ன விசாரம் தொலையா விசாரம்
பன்ன விசாரம் பலகால் விசாரம்
இப்பாவி நெஞ்சுக்கென்ன விசாரம்
வைத்தாய் இறைவா கச்சியேகம்பனே’
என்று தமிழ்நூல் சொல்லுகின்றது. இந்த மூன்றும் கடந்த இடம்தான் விசாரம் கடந்த இடம். வேஷம் பல. ஆனால் நாடகக்காரர் அனைவரும் மனிதரே. நான் என்ற பொருள் ஒன்று உடல் வித்தியாசங்களில் நான் என்ற பொருள் பலமாதிரியாக இயங்குகிறது. நியமநெறிப்படி தனது சாதனைகளின்படியே சென்று புறக் கண்களன்றி அக்கண்களின் நோக்கத்தைப் பெற்றவர்களில் திருவள்ளுவர் போன்றோர் முதன்மையானவர். இப்பொழுது உங்களில் ஒருவரை நீர் யார்? என்று கேட்டால் உங்கள் தகப்பனார் பெயரைச் சொல்லி இன்னார் மகன் இன்னார் என்பீர்கள். நீங்கள் பெண்டு பிள்ளைகளை உடையவர்களாயிருந்தால் எல்லாரிடத்திலும் உங்கள் அபிமானம் இருக்கிறது. தீப்பற்றி எரிகிற வீட்டிலோ உங்கள் பெண்டு பிள்ளைகள் சிக்குகிற காலத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்து வெளியிலிருந்து சத்தம் போடுவதைத் தவிர நெருப்பினுள் புகுந்து அவர்களை விடுவிக்கும் தைரியம் எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. காரணம் தன் பெண்டு பிள்ளைகளைக் காட்டிலும் தன்னிடத்தில் அபிமானம் அதிகம். அதே சமயத்தில் உங்கள் கையில் பிளவை (கட்டி) புறப்பட்டால் அந்தக் கையை எடுத்தால் ஒழிய உங்கள் உயிருக்குச் சேதம் வரும் என்று வைத்தியர் கூறினால் கையையும் இழந்து உயிர் வாழத்தயாராகும் இச்சை.
காரணம், அவையங்களைக் காட்டிலும் உயிரின்பேரில் அதிக அபிமானம். அச்சமயத்தில் பொறுக்க முடியாத நோயோ துன்பங்களோ வந்தால் நான் இப்படிக் கஷ்டப்படுவதைக் காட்டிலும் இறந்து போவதே மேல் என்று பிரார்த்தனை செய்து சாவதற்கும் பலர் தற்கொலை செய்யும் முடிவுகளும் செய்வதைக் காண்கிறோம். அப்போதுதான் உயிருக்கு அப்பாலிருப்பது நான், நான் உயிரல்ல என்பதை காணச் சந்தர்ப்பம் வருகிறது. அந்த இடம்தான் ஆன்மா சஞ்சரிக்கும் இடம். அதைத்தான் ஞானிகள் – கிருஷ்ணன் போன்றோர் பகவத் கீதையில்,
‘நான் உயிரல்ல, உயிருக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள், நான் சாவதுமில்லை, பிறப்பதுமில்லை. என்று சொல்லுகிற இடத்திற்கு வருகிறார்கள். இந்நிலையை அடைந்த மகான்தான்,
“கூற்றம் குதித்தலும் கைக்கூடும்” (நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்)
என்றும்
“சூலம் பிடித்து எமபாசஞ் சுழற்றி தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒரு காலமும் அஞ்சேன்”
என்று சொல்லுகிறதும், எமனை வென்றதாகக் கருதுகின்றதும் ஆகிய இடம். நான் உயிரல்ல என்பதைக் கண்டவன் சாவுக்கு அஞ்சமாட்டான். இறப்பும் பிறப்பும் ஒரு நாடகமெனக் காண்கிறான். சாவுக்குப் பயப்படாத அவன் எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான். ஆதி சக்தி பெற்ற மன்னர்களே மகான்களாக இருந்து பண்டைய தமிழுலகை நடத்தி வந்தார்கள்.
அக்காலத்தியவர்தான் திருவள்ளுவ நாயனார். அவர் அதற்கிணங்க படைச் செருக்கில், எமனே எதிர்த்து நின்றாலும் போர் செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டுமென்ற ராணுவத்தின் பெருமையை கூறுகின்றார். அத்தகைய சாதனையை இன்றைய தமிழில் வியாக்கியானம் செய்வது குறைந்து வருகின்றது. இநத் நிலையில் கடவுள் வணக்கத்தைக் குறை கூறும் குணம் ஏற்பட்டு வருகின்றது. பழமையின் பெயரால் ஆபாசங்கள் மலிந்து வருவதை யாரும் ஆதரிக்க முடியாது. அதற்காக பழமையின் நோக்கத்தை முற்றிலும் குறைகூறக் கூடாது. உதாரணமாக மதுரையிலுள்ள எழுகடலின் இன்றைய நிலையைக் கொண்டு, காலரா நோயை உண்டாக்குவதற்கே எழுகடல் அக்காலத்தில் தோண்டப்பட்டது என்று. கூறலாமா? வீடு ஒழுகல் என்று வீட்டையே அழிக்கலாமா?
அத்தகைய உண்மையான நிலையை உணர்ந்த மகான்கள் விரைவில் தோன்றுவர். இப்பெருமைகளை எல்லாம் உணரும் காலம் வரும். அப்போதைய சித்தாந்த நீதியைத் தன்னுள் கெண்ட தமிழின் மேன்மை இமயத்திலிருந்து குமரிவரையன்றி உலகமனைத்தும் ஆட்சி செலுத்தும் காலம் விரைவில் வருகின்றது. அத்தகைய அரசு நிலையே திருக்குறளில் காணும் அரசு நிலை.
ஞானிகள்
தொகுஞானிகள் அடக்கமாயிருப்பர். அவர்களின் நிலை சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானியரின் அறிவு அரசுக்குப் பயன்படும் காலத்தில்தான் உண்மையான அரசு ஆட்சியை வகிக்கும். ஜீவகாருண்யம் அரசுக்குத் தேவை. ஆனால் அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் அரசர்கள் பெற்றிருக்க வேண்டும். வீரமற்ற அஹிம்சையானது நாளடைவில் கபடமென்னும் மோசமானா நிலையை அடைந்து விடும். சமயம் வரும்போது யானையை எதிர்க்கும் திறமையும், எறும்பும் கடிக்கும்போது தடவிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் ஒருங்கே அமைந்திருத்தல் வேண்டும்.
மடாதிபதிகள்
தொகுஇவ்வாறு தமிழில் உள்ள உயர் நீதிகளை மக்களுக்குப் பரப்புவதற்கே மடாதிபதிகள் அக்காலத்தில் நியமிக்கப்பட்டனர். ஆனால் இற்றைய மடாதிபதிகளின் நிலைமையும் அதை வெளிப்படுத்த ‘சந்திரகாந்தா’ போன்ற கதை வெளிவந்திருப்பதும் உங்களுக்கு நன்கு தெரியும்.
மடமையை ஒழித்து அதே நிலையில் பழமையின் பெருமையைத் தெரிந்து பக்குவ நிலையை அடைய வேண்டும். சிவாஜி என்னும் மராட்டிய வீரன் சந்நியாசியாக இருந்து நிராசையுடன் சாம்ராஜ்யமனைத்தையும் தன் குருவுக்கே கொடுக்க முன் வந்தான். குரு தன் சிஷ்யனின் பெருங்குணத்தைக் கண்டு மகிழ்ந்து, குழந்தாய் இச்சை பற்றி இவ்வுலகை ஆள வேண்டாம். இம்மாதிரி இச்சையற்றோர் செங்கோல் பிடித்தால்தான் உலகம் ஒழுங்காக ஆட்சி புரியப்படும். ஆகையால் நான் உனக்கு ஆணையிடுகிறேன் – நீ எவ்வித இச்சையுமின்றி உலகை ஆட்சிபுரி என்றார். குருவின் கட்டளையைச் சிரமேற்றாங்கி வீரம் செறிந்த சிவாஜி நடத்திய வீரப்போர், ஆட்சி எல்லாம் அனைவரும் அறிந்ததே.
நேதாஜி
தொகுநேதாஜி 17 வயதுப் பையனாய் இருந் காலத்தில் தாய் தகப்பனாருக்குத் தெரியாது சந்நியாசியாக வேண்டுமென்ற வேட்கையில் மறைந்து போனவர், தேடியும் தென்படவில்லை. பல மாதங்களுக்குப் பின் வீடு வந்து சேர்ந்தார். அப்பொழுது அவரை வினவியதில் நான் ஒரு குருவை நாடிச் சென்றேன்- தென்படவில்லை, திரும்பினேன் என்று சொன்னார். அவருடைய பிற்கால அரசியல் வாழ்க்கை நீங்கள் நன்றாக அறிந்ததும், விரைவில் அறியப் போவதுமாகும்.
சிருஷ்டியின் கூறுகள்
தொகுசிருஷ்டியின் கூறுகள் பஞ்ச பூதப் பிரிவாக 5 வகைப்படும். பஞ்ச பூதங்கள், மண், நீர், கனல், காற்று, ஆகாயம் எனப்பட்டவைகள். மண்கூறால் ஏற்படும் சிறுஷ்டிதான் மரம், செடி, கொடி, புல், பூண்டு, முதலியன. நீரின் கூறாக உண்டாகும் சிருஷ்டிகள் ஆடு, மாடு, மிருகம், மனிதன் போன்றவைகள். இவைகளின் சிருஷ்டிக்குக் காரணம் சுக்கில சுரோனிதம். இதுதான் நீரின் கூறு என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அக்கினியின் கூறின்படி உண்டாகும் சிருஷ்டிகள் பேன், புழு போன்றவையாகும். இவைகள் தலையில் ஏற்படும் புழுக்கத்தாலும், சாணம், மண், மடித்த குப்பை இவைகளில் உண்டாகும் உஷ்ணத்தால் புழுக்களும் மற்றும் அனேக பிராணிகளும் உண்டாகின்றன. வாத்து, கோழி, குருவி போன்றவை முட்டையினின்றும் உற்பத்தியாகின்றன. அவை உஷ்ண வாயுவால் பொறிக்கப்படுகின்றன. அது அத்தனையும் சாதாரண சிருஷ்டியாகும். அசாதாரணைமானது ஆகாயத்தின் கூறில் சிருஷ்டிக்கப்படும் ஜென்மங்கள். ஆகாய ரீதியான வித்துக்கள் கருவில் நுழைந்து ஏற்படுகின்ற காரண சிருஷ்டிகள் மகான்களாக்கப்படுகின்றன. உலக சம்ரக்ஷணைக்காக மகான்களால் மகாபதிவிரதைகளின் கர்ப்பத்தில் இந்த ஆகாய கூறான கர்ப்பங்கள் உண்டாக்கப்படுகின்றன. அதற்குத்தான் மகா பதிவிரதைகளின் கூறு சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கவிதான்
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்”
(பெய்யெனப் பெய்யும் மழை)
என்பது.
மாயையால் ஏற்படும் உலக சிருஷ்டி ஒரேயொரு ஒழுங்கின் மூலம் இருந்தாலும் அசாதாரணமும் சிருஷ்டியில் இருக்கின்றன. உதாரணமாக எல்லா மரங்களும் செடிகளும் பூத்துக் காய்ப்பது ஒரு ஒழுங்காக இருந்தாலும் பலா மரம், அரச மரம், இத்தி, அத்தி போன்றவைகள் பூக்காமலேயே காய்க்கின்றன. எதையும் செய்யும் சக்தியுண்டு என்பதை மாய்கை காட்டுகின்றது. எல்லா பாம்பினங்களும் முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பது ஒழுங்கு. ஆனால் விரியன் பாம்போ தன் சரீரத்தையே இழந்து குட்டிகளை உற்பத்தி செய்கின்றது. பட்சிகளெல்லாம் முட்டை இட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் வௌவாலோ குட்டிபோட்டு பால் கொடுக்கின்றது. இதுவெல்லாம் சிருஷ்டியின் வேடிக்கைகள். இயற்கைக்கு ஒரு சட்டமுண்டு என்பவர் இம்மாதிரி புறம்பான செயல் என்ன என்பதையும் யூகித்தறிய வேண்டும். மேற் சொன்னவைகளெல்லாம் நிலத்தில் உள்ளவைகள். நீரில் வசிக்கும் பிராணிகளாகிய மீன்களெல்லாம் முட்டையிட்டுச் குஞ்சு பொறிக்கின்றன.அதில் வாழும் ஆமையோ கரையில் வந்து முட்டையிட்டு நினைத்த மாத்திரத்தில் அவையனைத்தும் குஞ்சாக ஓடிவர கரையில் வந்து தண்ணீருக்குள் போகின்றது. திமிங்கிலமோ சமுத்திரத்திற்குள்ளேயே குட்டிபோட்டு பால் கொடுத்து வளர்க்கின்றது.
சக்ரவாகம் என்ற ஒரு பட்சி ஆகாயத்திலேயே, பறந்தே சஞ்சரிக்கிறது. அது ஆகாயத்திலேயே முட்டையிடுகின்றது. அந்த முட்டை கீழ்நோக்கி வருகிறபோதே வரும் வேகத்தில் கரு முதிர்ந்து வெடித்து அதிலுள்ள குஞ்சு மேல்நோக்கி பறக்கிறது. அதைத் தாய்ப்பறவை கூட்டிச் செல்லுகின்றது. அவை பூமியைப் பார்த்ததே இல்லை. தொட்டதுமில்லை. இவையெல்லாம் சிருஷ்டியிலுள்ள பல ரகசியங்கள். இன்னும் சொல்லாததும், சாதாரண மனிதனுக்குத் தெரியாததும், ஏகதேசமாகத் தெரிவதும்தான் தேவகணம், அசுரகணம், பைசாச கணம் என்று சொல்லப்படுகிற மிருதுவான தெய்வீக தேவதூத வடிவங்களும், முரட்டுத் தனமான பெருங் காரியங்களைச் சாதிக்கக் தக்க முரட்டுக் கூறுகளும், பிறரைத் துன்புறுத்துதல் பயமுறுத்துதல் என்ற பிசாசுக் கூறுகளும் ஆகும். இவை பூலோக சிருஷ்டி, சூரிய மண்டலம், சந்திர மண்டலம், கிரக மண்டலம், நட்சத்திர மண்டலம் இவைகளிலுள்ள வசிப்பவைகள் பல. சிருஷ்டிகள் பலதரப்பட்டவை. இவைகளை விஞ்ஞானம் காண முயற்சிக்கிறது. ஒருபொழுதும் காண மாட்டாது. அது விஞ்ஞானத்தாலல்ல, அதற்கப்பாற்பட்ட மெஞ்ஞானத்தால்.
பதிவிரதைகள்
தொகுஉலக சம்ரக்ஷணைக்காக மகான்களால் மகா பதிவிரதைகளுடைய கர்ப்பங்களில் இந்த ஆகாயக் கூறான கர்ப்பங்கள் உண்டாக்கப்படுகின்றன. அதற்குத்தான் மகாபதிவிரதைகளின் கூறு சொல்லப்பட்டிருக்கின்றது. அதைத்தான் குறள்-
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்கிறது.
இது பதிவிரதைகளுடைய கண்ணுக்குப் புலப்படுகின்ற ஒரே பார்வையாகிய நாயகனே தெய்வம்-தெய்வமே நாயகன் என்கிற ஏகாக்கிரக சித்தத்தை காட்டுகின்றது. அவர்கள் நாயகனைத் தவிர யாரையும் தம் மனதில் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. மற்ற உருவம் அவர்கள் மனதில் பதியாது. அவர்களுடைய மனது ஒருமித்து நிற்கிறது. இம்மாதிரி நிலையிலுள்ள தெய்வீகத் திருமாதாக்கள்தான் ராமர், புத்தர், நபி, ஏசு, சங்கரர், ராமலிங்க சுவாமிகள் போன்ற திருக் குழந்தைகளைப் பெற்றடுத்த மாதாக்கள். இதில் ஆகாய பீஜம் திருவருளால் அவதரிக்கச் செய்த்து. இதன் மர்மம்தான் சங்கரர், ஏசு போன்றோர் ஜனனத்தில் கைம்பெண் இடத்தில் சிருஷ்டி என்றும் கன்னியிடத்தில் சிருஷ்டி என்றும் தர்க்க குதர்க்கங்கள் நடக்கின்றன.
இத்தகைய சிருஷ்டிகள் தெய்வப்புலமை பெற்ற திருவள்ளுவரை உண்டாக்கின. அவர், மனித குலம் வாழ மனிதன் மாண்பு பெற மகான்கள் சீடருக்கு மாத்திரம் தெரிவிப்பதற்கு வைத்திருந்த ஞானக் கலையையும் மன்னர்கள் ஆளுகைக்கு வைத்திருந்த அரசாங்க மந்திராலோசனை ரகசியங்களையும் யோகிகளும் மகான்களாகிய இல்லறவாசிகளும், முன்னவர் யோகத்தாலும், பின்னவர் போகத்தாலும் கண்ட பக்திரஸக் கூறுகளை- உடலின் வேறுபாடுகளையும் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்கிற கூறாக உலகம் உய்யக் கொடுத்தருளினார்.
உளவுத்துறை
தொகுபொருட்பாலில் அரசு என்ற நிலை குற்றமற்ற, குணமுதிர்ந்த, மகாபக்குவ, மயிரிழையும் பிசகாது நீதி செலுத்துகின்ற மன்னனுக்கு வேண்டிய கூறுகளை காட்டுவதாகும். அம்மாதிரி மன்னன்தான் மக்கட்கு இறை எனப்படுவான். அரசனுக்கு இற்றைக்கு ரகசிய இலாகா (சி.ஐ.டி.) நிர்வாகம் இருப்பதையும் அதனுடைய உயர்வுகளைப் பற்றியும் உதாரணமாக ஸ்காட்லாந்து யார்டு என்ற பிரிட்டிஷ் ரகசியப் போலீசாரைப் பற்றியும் சொல்லக் கேட்டிருக்கின்றீர்கள். இதை சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் பாடிய திருவள்ளுவ நாயனார் என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்.
“ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்”
என்கின்றார். இது ஒற்று என்ற உளவாளி மகா திறம்பட்டவனாய், அங்கு நடப்பவைகளையும் தேர்ந்து தெளிந்து அரசனுக்கு அறிவிப்பனாய் இருக்கின்றவனையும், நீதிகளைப் போதிக்கின்றன சாஸ்திரத்தையும் அரசன் இரண்டு கண்களாக – சமமாக பாவித்து பாதுகாக்க வேண்டும் என்கிறது. இரகசிய இலாகாவின் பெருமை- ஒற்றர்களின் உளவாளிகள் பெருமை எவ்வளவு தூரம் தமிழரசில் பக்குவப் பட்டிருக்கிறது என்பதை இந்தக் கவிதை நன்கு காட்டுகின்றது. அரசனுக்குத் தொழில் சொல்லுகிற காலத்தில்,
“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்”
எல்லா மனிதர்களிடத்திலும் ஏன் மற்றவர்களிடத்திலும் என்னென்ன நடக்கின்றது என்பவைகளை எல்லாம் எக்காலத்திலும் விரைந்து தாமதிக்காமல் தெரிந்து கொள்வது அரசன் தொழில் என்றால் அந்த நிர்வாகம் எப்படி இருந்திருக்க வேண்டும்? என்ன நீதி அங்கிருக்கும்? என்ன சாமர்த்திய முதிர்ச்சி அந்த மன்னனிடம் அமைந்திருக்க வேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். ஆங்காங்கு நடப்பவை அத்தனையும் ஆண்டவனிடம் ஒளிக்க முடியாது என்கிற தர்ம வழக்கத்திற்கும், அரசன் தன்னுடைய தொழிலாகத் தெரிந்து கொள்வான் என்ற அரசுப் போக்கிற்கும் என்ன தொடர்பு பாருங்கள். இதைப் பழமை என்றால், நவீனம் இந்த நிலையில் இன்று இருக்கின்றதா? என்று உங்களை கேட்கிறேன். இம்மாதிரி ஒற்றாடல் மாத்திரம் சொல்லப்பட்டிருக்கின்றதா?
நாட்டின் நிலை
தொகுநாட்டின் நிலையும் சொல்லப்பட்டிருக்கின்றது. நாட்டின் நிலை பற்றி சொல்லுகிற பொழுது,
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”
உறுபசியும், அந்த நாட்டில் பசி இருக்காது என்கின்ற பொழுது மக்களின் வாழ்க்கைத் தரம் என்ன? ஓவாப் பிணியும், என்கின்ற பொழுது அளவறிந்துண்டு உண்டது அத்தனையும் ஜீரணித்து, ஒழுங்கான நடையில் நடந்து, உடையவன் சோம்பேறியாயும், உழைப்பவன் அலுத்துச் சலித்துப் போனவனாயும் இல்லாத ஒரு சமுதாயத்தைக் காட்டுகிறது. இதைத்தான் இற்றைய நவீனம், பொருளாதாரம், சுகாதாரம் என்று பெருமையாகச் சொல்கின்றது. ஆனால், தன் மக்கள் செழிப்பாக வாழ சாப்பிட, நோயற்று வாழ, பிற நாட்டைச் சுரண்டுவதும், அடிமைப்படுத்துவதும்தான் இற்றைய நாகரீகப் போக்கு.
இம்மாதிரி மடையர்கள் அற்றைக்கு ஆளவில்லை. ஆண்டால், ஆளுகின்றவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் நீங்காது பகை இருக்கும். உதாரணமாக, பொருளாதாரம் ரஷ்யாவில் ஓரளவு சிறப்பாக இருக்கிறது. சுகாதாரம் ஓரளவு சுமாராக இருக்கிறது. ஏனென்றால் ஒழுக்கங்கள் எல்லாம் பணக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட சாகசங்கள் என்ற சித்தாந்தம் அந்த நாட்டை கொஞ்சம் கீழான பாதையில் தெய்வீகத்திற்குப் புறம்பான பாதையில் கொண்டுதான் போயிருக்கிறது. காரணம் ஆரம்ப சீர்திருத்தம். ஆகையால்தான் அந்த நாட்டிற்கு பகை நிறைய உலகத்திலிருக்கிறது. இதற்கு இடங்கொடாமல் திருவள்ளுவ நாயனார் அற்றைய காலத்திலேயே தன் மக்கள் செழிப்பிற்கும் நாட்டின் பெருக்கிற்கும் தவறான பாதையில் அரசன் போய்விடக் கூடாதென்றே “செறு பகையும் சேராதியல்வது நாடு” என்று குறிக்கின்றார். என்ன நுண்ணறிவு! தமிழரசின் பெருமைதானென்னே!!
பாதுகாப்பரண்
தொகுஇதோடு அல்லாமல் அரசாங்கத்திற்கு அரண் ஆகிய பாதுகாப்பு மிகவும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. உதாரணமாக, இற்றைய அரசாங்கங்கள் மலை, ஆறு, கடல், “சீக்பிரிட், மாகினாட் லைன்” என்று அரண்களை வைத்திருந்ததை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இத்தாலி தேசம் இயற்கையாக அமைந்த ஆல்ப்ஸ் மலையையும், பிரிட்டன் இயற்கையாக அமைந்த கடலையும், ஜெர்மனி சீக்பிரிட் அரணையும், பிரான்ஸ் தேசம் மாகினாட் அரணையும் வைத்திருந்தது உங்களெல்லாருக்கும் தெரியும். இதை சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பாடிய திருவள்ளு நாயனார்,
”மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்”
என்று சொல்லியிருப்பது குறிக்கத்தக்கது. மணிநீரென்றால் எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்று அர்த்தம். அது சமுத்திரத்திற்கும் ஜீவ நதிக்கும் பொருந்தும். மண்ணும் என்கின்ற இடம் பாலை, காடு, எதிரிகள் மறைந்திருப்பதற்குச் சாதகமாகிய இடங்களைக் குறிக்கும். மலையும் என்கின்றது இயற்கையான மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலை, ஆப்பிரிக்காவில் உள்ள, காங்கோ, வட அமெரிக்காவின் மேற்கு பாகத்திலுள்ள பெரும் காடுகளை ஒக்கும்.
இம்மாதிரி உள்ளவைகள் இயற்கை அரண்களாகும். செயற்கை அரண்களையும் வள்ளுவர் சொல்லாமலில்லை.
“உயர்வகலம் திண்மை அருமைஇன் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்”
என்றும்,
“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்”
என்கிறது. உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கும் உடையதாயும், “சிறுப்பிற் பேரிடத்த தாகி” காக்க வேண்டிய இடம் சிறியதாயும், அதற்குள் அணிவகுத்து நிற்கும் படை, இருப்பதற்கு இடம் பெரியதாயும், “உறுபகை ஊக்கமழிப்பதரண்”. எதிரியின் ஊக்கத்தை அழிக்கக் கூடியதாய் சிதைக்கக் கூடிதாய் இருக்க வேண்டும் அரண் என்று சொல்லுகிறார். இவ்விதமான அரண்கள்தான் சீக்பிரிட் போன்ற அரண்களாகும். இம்மாதிரி அரண்களெல்லாம் இருந்துவிட்டால் போதுமா? போதாது. அதற்கு ஜெர்மனியின் வீழ்ச்சியே சான்று. அதையும் வள்ளுவர் சொல்லாமல் விடவில்லை. அரண் எவ்வளவு வலிமையுடையதாயிருப்பினும் அதை நடத்தும் அரசனோ சேனையோ தடுமாறிவிட்டால் பிரயோஜசனமில்லையென்று சொல்கிறார். அதை
“எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க்கண் இல்லது அரண் ”
நமது ஆதித் திறன்
தொகுஎவ்வளவு வலியுடையதாய் அரண் இருப்பினும் அதை நடத்துபவர் சரியற்றவராய்- மனவலிமை குறைந்தவராய் இருப்பின் பிரயோஜனமில்லை என்கின்றது குறள். என்ன தெளிவான கருத்து. இற்றைய ரசாயன முறைகளைக் கண்டோர் முடிவாக அரை ஆராய்ச்சிக்கு வந்திருக்கின்றார்கள். இந்த அரை ஆராய்ச்சி வெள்ளையனின் விஞ்ஞானித்திற்குப் புதிதாக இருக்கலாம். தமிழர்களுக்கு இது பழசு. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உதாரணம் சொல்கிறேன். சில ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் என்னும் நூலில் மாதவியின் நடன காலத்தில் அவளுக்காக அரங்க சாலையமைக்க ஒரு அளவுகோல் குறிக்கிறார். அதாவது அணுவுக்கு வருகிறார். அளவின் விவரம்,
எட்டு அணுக் கொண்டது ஒரு தேர்த்துகள்
எட்டுத் தேர்த்துகள் கொண்டது ஒரு இம்மி
எட்டு இம்மி கொண்டது ஒரு எள்
எட்டு எள் கொண்டது ஒரு நெல்
எட்டு நெல் கொண்டது ஒரு பருவிரல்
இந்தப் பரு விரலைத்தான் சப்ரிஜிஸ்திரார் ஆபீஸில் ரேகை பதிகிற இடத்தில் கிட்டத்தட்ட இற்றைக்கு ஒரு அங்குலமென்று வைத்திருக்கிறார்கள்.
24 பருவிரல் கொண்ட ஓர் அளவுகோல் என்கிறார். அதுதான் கிட்டத்தட்ட 25 அங்குலம் கொண்ட இரண்டடி ஆகும். இந்த அளவுகோலால் சில நீளமும் அகலமுமாக அரங்கசாலை அமைக்கப் படுகிறது. விரிக்கிற் பெருகும். இதை சிலப்பதிகாரத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதோடு,
“அறியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை,
யார்க்கும் தெரியாத தத்துவனை...”
என்று ஆத்மார்த்திகள் கடவுளைக் குறிக்கிறபொழுது பாடியிருக்கும் பாட்டு உங்களுக்குத் தெரியும். இதை நோக்குகிற பொழுது தமிழன் அணுவை அறியாமல் இருந்தவனில்லை. ஆகையால் இற்றைய நீச ராஜாங்கத்தைப் போல கொலைபாதகக் கருவிகளுக்கு அவன் அவனுடைய அறிவைப் பாழ்படுத்தவில்லை.
நான் சிறு பையனாக இருந்த காலத்தில் ஒரு சமயம் உபாத்தியாயர்கள் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கிற சமயத்தில் நம் முன்னோர்கள் பூமி உருண்டை என்பதைத் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். இப்பொழுது பூகோள சாஸ்திரம் வந்து நமக்கு அதை அறிவித்து வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டபொழுது எனக்குப் பரிதாபமாக இருந்தது. நான் சிறு பையனாய் இருந்ததால் அவர்களிடமிருந்து சற்று தூரத்தில் நின்று கொண்டு, “பூமி உருண்டை என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். உங்கள் முன்னோர்கள் தெரியாதிருந்தார்கள் என்று தயவுசெய்து நீங்கள் சொல்லாதிருக்க வேண்டும். யாராவது இரண்டணா கொடுங்கள். கோபாலகிருஷ்ணா கோனார் கடையிலிருந்து சிறிய புத்தகமொன்று வாங்கி வருகிறேன். அதில் பூமியைப் பற்றி பாட்டுக்கள் வருகின்றபொழுது “அண்டகோளம்” என்று பாடப்பட்டிருக்கிறது. இது பல வருஷங்களுக்கு முன், பூகோளம் வருவதற்கு முன் பாடப்பட்டவை. அண்டம் என்றால் முட்டை. கோளம் என்றால் உருண்டை என்று அர்த்தம். இதுதான் ஆங்கிலத்தில் ஓவல் ஷேப் என்று இருக்கிறது.
பூகோளம் பையன்களுக்குப் போதிக்கிற பொழுது “கிச்சிலிப்பழ வடிவ உருண்டை” என்கின்றது” என்று சொன்னேன். அவர்கள் சற்று கோபத்தோடும் ஆச்சரியத்தோடும் நோக்கினார்கள். ஆனால், தாங்கள் சொன்னது தவறு என்று உணர்ந்தார்கள். நம்மில் வாத்தியார்களின் நிலைமையே இப்படி இவ்வாறிருந்தால் மாணவர்களின் நிலை என்ன? மாணவனின் நிலை அதுவாக இருந்தால் பொது ஜனத்தின் போக்கென்ன? தமிழின் கலையுணர்ச்சியை இன்றைய தமிழன் எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறான் என்பதை நாம் நினைக்கிற பொழுது வருந்தாமலிருக்க முடியவில்லை. மற்றும் ரேடியோ முதலிய ஒலிக்கருவி ஆராய்ச்சிக்கு வருவோம். அது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவை என்பது வெள்ளையர் கூற்று, பறைச்சாற்று. ரேடியோ வருவதற்கு முன் எந்த விஞ்ஞானியின் மூளையிலும் அது ஞாபகத்திற்கு எட்டாத காலத்தில் சுவாமி விவேகானந்தா அவர்கள் 1893-ம் வருஷம் செப்டம்பர் மாத வாக்கில் சிகாகோ என்னும் நகரில் செய்த பிரசங்கத்தில் “உங்கள் விஞ்ஞானம் கம்பி மூலமாகச் செய்தியை ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு அனுப்ப தெரிந்திருக்கிறது. ஆனால் இயற்கை தேவியோ கம்பி இல்லாமலேயே செய்தியை எங்கும் பரப்பும் சக்தி உடையவள்” என்றும் பேசி இருக்கிறார்.
பாரதியாரும்,
“காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்”
என்று பாடியிருக்கிறார். இதுவும் ரேடியோவிற்கு முற்பட்ட காலம். இன்னும் பல ரசாயனங்களெல்லாம் உரோமர் காண்டம் ஏழாயிரம் (7000) போகர் பன்னிரெண்டாயிரம் (12000) போன்ற நூல்களிலும் ஏராளமாக மலிந்து கிடக்கின்றன. விரிக்கிற் பெருகுமென விடுத்தோம்.
உத்தமஞானியே அரசன்
தொகுஅந்த மாதிரி உள்ள விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டையும் தெளிவறக் கண்ட மகாஞானிகளில் ஒருவர் திருவள்ளுவ நாயனார். அவரது வாயிலிருந்து வந்த மணிமொழிகளே திருக்குறள். முன்னால் ஞானிக்கும் கவிகளுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னேன். அரசனே ஞானி, ஞானியே அரசன் என்று சொன்னேன். ஞானி சோம்பேறியல்ல என்றும் சொன்னேன். இதன் மர்மம் என்ன? சற்று ஆராய்வோம். ரோடியோவிற்கு வருவோம். ரோடியோ என்பது காந்த சக்தியால் புறப்பட்ட சப்தம் காற்றின் அசைவால் சிதைந்து போகாமல் பல்லாயிரம் மைல்களுக்கு விரைந்து சென்று குவிந்து, கேட்பதற்கு உதவுகின்றது. வாயைவிட்டு புறப்பட்ட சப்தம் அழியாது சஞ்சரிக்கின்றது. அது இடைச் சிதைவால் அழிந்தது போல் காணப்படுகின்றது என்பதைக் காட்டுகிறது.
விஞ்ஞானம் சப்தத்தைக் கூட்டு விக்கவும் இயக்கத்தைக் கேட்க வைக்கவும் கண்டிருக்கிறது. மெஞ்ஞானமோ சப்தத்தை போல் எண்ணங்களும் சஞ்சரிக்கின்றன. அவைகள் மகான்களால் ஞானிகளால், தெய்வ நிலையமைந்த உத்தம புருஷர்களால் எண்ணப்படுகின்ற எண்ணங்கள் சஞ்சரித்து அதை நடத்துவதற்காக ஆன்மாக்கள் தோன்றிய காலத்தில் அவர்கள் உள்ளத்தில் புகுந்து அவர்களைக் கருவியாக வைத்துக் கொண்டு காரியத்தை நடத்துகின்றன என்பதை கண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உலகை இயக்கும் ஞானிகள். அந்த இயக்கத்திற்கு இணைந்து விடுகின்றவர்கள் உயிர்கள், அரசன் இவை இரண்டிலும் நடுநிலையாக நிற்கிற அஸ்திவாரம். உயர்ந்த அரசன் இந்த இயக்கத்தோடு இணைந்து உலகைப் பரிபாலிக்கிற உத்தமஞானி, இவன்தான்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.”
என்று சொல்லப்பட்ட பாட்டிற்கு இலக்காவான். அவன்தான் “மக்கட்கிறை” என்று சொல்லப்படும் மனிதனுக்குள் கடவுள் தன்மை பெற்றவன்! அம்மாதிரிக் காலமும், அம்மாதிரி அரசும் இருந்த காலத்தில் பாடிய நூல் திருக்குறளாகும். அம்மாதிரி காலமும் அம்மாதிரி அரசும் இருந்த காலத்தில் பாடிய நூல் திருக்குறளாகும்.
அஷ்டாவதானம்
தொகுஇற்றைய அஷ்டாவதானத்தை கேட்டீர்கள். இது குறளில் உள்ள விமர்சனம். முன் காலத்தில் நம் நாட்டுப் புலவர்கள் அஷ்டாவதானம் செய்வதுண்டு. அது எப்படியெனில்,
“வேலு மயிலுமெனச் சொன்னவுரை மாறாமற் சொல்ல
எதிர் சூதாட பண்ணு சதுரங்கத்திற் கடிபார்க்க,
சொற்புலவர் தங்கள் கவியை அவதானிக்க
எட்டெட் டெழுத்தாணிக்கேற்ற கவி சொல்லவும் யான்
அஷ்டாவதானியென ஆகினேன்”
என்று நடத்தப்பட்டது. இதிலும் எமகண்டம் பாடுவது என்ற மற்றொரு முறையும் உண்டு. அது எப்படி என்றால், யானையின் தந்தத்தில் மிகவும் கூர்மையான இரண்டு கத்திகள் கட்டப்படிருக்கும். ஒரு வித்துவான் அந்தக் கத்திகள் இரண்டிற்குமிடையே தன் கழுத்து இருக்கும் அளவிற்கு ஓர் உயரம் போட்டு நிறுத்தப்படுவான். யானையின் சுபாவம் அசைந்துகொண்டிருப்பது. அந்த அசைவுக்கு லாயக்காக இந்த வித்துவானும் அசைந்துகொண்டே நிற்கவேண்டும். தவறினால் கழுத்து இரண்டு துண்டாகும். இவ்வாறு எமகண்டம் பாடியவர் காள மேகமாவார். இன்னும் தசாவதானம் என்ற பத்துவித முறைகளும், சதாவதானம் என்ற நூறுவித முறைகளும் நடந்ததுண்டு, அவைகளை ஆராய்வதற்கு இது சந்தர்ப்பம் அல்ல.
தமிழின் பெருமை
தொகுதமிழின் பண்டைக்காலப் பெருமை இற்றைக்கு மிகவும் குறைந்திருக்கின்றது. மண்ணுலகு மட்டுமல்ல, விண்ணுலகையும் தேர்ந்து தெரிந்துகொண்டு களிக்க பாடிக் கொடுக்கப்பட்டது தமிழ். இற்றைக்கிருக்கிற வானுலக ஆராய்ச்சியில் சூரியனில் சில புள்ளிகளிருக்கின்றன என்பதைச் சிரமப்பட்டு கண்டுபிடித்திருக்கின்றனர். செவ்வாய் மண்டலத்தில் பிராணிகள் இருக்கலாம் என்ற சந்தேகக் குறிப்பிலிருக்கின்றது ரசாயனம்.
அற்றைய நிலையோ, அதுவல்ல, மண்ணுலகு, வானுலகு, வானோர்க்குகந்த உலகு என்கிறவை அத்தனையும் சிறப்பாக ஆராயப்பட்டிருக்கின்றன. அண்டம், பிண்டம், சாரசரம், அதலம், மத்திபம், பாதாளம் இவைகளிலுள்ள சஞ்சரிப்பு, இவை அத்தனையும் சிவஞான போதமென்றும் நூலைப் பார்த்து தெரிந்து கொள்க. இதைப்போல பல இடங்களிலுள்ள வசிப்பு உயிர்கள் இறப்புக்குப் பின் அவரவர்கள் குணங்கள், செய்கைக்குத் தக்கவாறு போய்சேருகிற இடங்கள் எல்லாம் குறளும் சொல்லுகிறது. உதாரணமாக,
“யானெனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.”
என்னும் குறளில் யான் எனது என்னும் அகங்காரமும் ஆசையும் அற்றவன் மண்ணுலகினின்றும் உயர்ந்த, வானுலகினின்றும் உயர்ந்த இடத்திற்குப் போய்ச் சேருகிறான் என்பதை நிச்சயப்படுத்தி சொல்வதிலிருந்து வானுலகிலும் சஞ்சரிப்பு இருக்கிறது என்பதை உறுதிப் படுத்துவதுடன், அது போக பாக்கிய சுவர்க்க நிலையே தவிர முக்தி நிலையில்லை என்பதையும் வானோர்க்குயர்ந்த உலகம் தான் மோட்ச நிலை என்பதையும் வெகு தெளிவாகக் காட்டுகிறது. பண்டைத் தமிழ் மக்கள் மூளைக் கலையில் மட்டுமல்ல, சிற்பத்திலும், சித்திரத்திலும், கணிதத்திலும், வான ஆராய்ச்சியிலும், கடலாராய்ச்சியிலும் கரைகடந்து நின்றிருக்கின்றனர். அவையனைத்தையும் தெளிவு படுத்த நேரம் போதாது. விஷயக் குறிப்பிற்கும் அப்பாற்பட்டது.
கலைத்திறன்
தொகுஉதாரணத்திற்கு ஒன்றிரண்டு குறிக்கிறேன். பழைய காலத்தில் இருந்த சிற்பங்கள், இற்றைக்கு இருக்கிற் கோவில்கள், மண்டபங்கள், கற்சிலைகள், அஜந்தாகுகை இன்னும் மற்றுமுள்ள மகாபலிபுரம் போன்ற இடங்களிலுள்ளவைகளைக் கண்டு தேர்ந்து தெளிக. மொகஞ்சதாரோ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிற பள்ளத்தில் காணப்படுகின்றவை பழமையான தமிழர்களால் ஆக்கப்பட்டது என்று ஆங்கிலேயர்கள் துருவி ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிற கட்டடங்கள், பாலக் கூண்டுகள், தண்ணீர் போகும் குழாய்கள், இற்றைக்கு உள்ள நவீன இஞ்சியனியரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைச் சுண்ணம். இந்தச் சாந்து எப்படி சேர்க்கப் பட்டவை என்று எடுத்து “மினரல் கெமிக்கல்” ஆராய்ச்சி மூலமாக பார்த்தும் கண்டு பிடிக்க முடியாமல் திகைக்கின்ற தன்மையெல்லாம் முன்னைய தமிழ் நாகரீகக் கலையை நன்கு நிரூபிக்கும்.
முற்காலத்தில் அரசர்களுக்கு அரசிகளுக்கு ஒருவருக்கொருவர் பார்ப்பதற்கு ஓவியங்கள் தீட்டுவதுண்டு. அந்த படங்களெல்லாம் ஒருவரை ஒருதரம் பார்த்த மாத்திரத்தில் எழுதப்பட்டவை. அரசிகள் படங்களெல்லாம் மெல்லிய சல்லாவுக்குப் பின்னால் அவர்களை நிறுத்தி, வெளியிலிருந்து அவர்கள் உருவை திரை மறைவில் நிழல்போலாடும் பிம்பத்தைத் கண்டு எழுதப்பட்டவைகள். ஒருவருடைய சிறு விரல் நகம் கிடைத்தால், அதை வைத்துக் கொண்டே இன்ன விரலுக்கு இந்த நகம் இருக்கும். அந்த விரல் சாமுத்திரிகா லட்சணப்படி இன்ன கையிலேயே அமையும் என்று முடிவு கண்டு உருவங்கள் சிலை ரூபமாகவும், படங்கள், சித்திர ரூபமாகவும் அமைக்கப்பட்ட காலமும் உண்டு. ஒரு மரத்திலுள்ள இலைகளை எண்ணிக் கொள்வதற்கும் கணித நூல் இருந்திருக்கின்றது.
இற்றைய தாவர வர்க்க சாஸ்திர வளர்ச்சிகள் மகரந்தங்களை வண்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எடுத்துச் செல்கின்றன என்று சொல்லுகிறதென்றால் அற்றைய காதல் நூல் பெண்ணை புஷ்பத்திற்கு ஒப்பிட்டு வண்டோய்ச்சி மருங்கணைதல் என்று காதலைச் சித்தரிக்கின்றது. மற்றும் கடல் ஆராய்ச்சியில் ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும், ஆயிரம் வலம்புச் சங்குகள் கூடிய இடத்தில் ஓர் சலஞ்சலமும், ஆயிரம் சலஞ்சலம் கூடிய இடத்தில் ஓர் பாஞ்ச்சன்யமும் இருக்குமென்று கூறுகிறது. அந்த பாஞ்ச்சன்யந்தான் கிருஷ்ணபகவான் கையிலிருக்கின்ற சங்கு என்று சொல்லப்பட்ட மர்மத்தின் முறை. அந்த சங்குதான் ஓங்காரத்தின் தொனியை ஒழுங்காக்க் கிளப்ப வல்லது. அதே தொனிதான் கருவிகளொடுங்கிய காலத்தில் காரணங்கள் ஓய்ந்த காலத்தில் இருதயத்தினின்றும் கேட்கப்படுகின்ற நாதம். இன்னும் ஆராய்ச்சிகள் பல, மற்றொரு முறை சமயங்கிடைத்தால் சொல்லுவோம்.
மருத்துவ சக்தி
தொகுமேலும் மருத்துவம் சம்பந்தமாகவோ பஸ்பம், சுண்ணம், திராவகம், கஷாயம், செந்தூரம் என்ற முறைகள் அத்தனையும் தேர்ந்து தெளிந்து, அதோடு மட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றுந்திறமையும் தங்கம் செய்யும் திறமையும் பெற்றிருந்தது தமிழ். அதைத்தான் தாயுமான சுவாமிகள் “கந்துக மதகரியை வசமாய் நடத்தலாம்” என்ற பாட்டில் “ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்” என்கிறார். விற்றுண்ணல் என்பது தங்கமாக்குவது. ரசத்தைக் கொட்டி குளிகைகள் உண்டாக்கி அக்குளிகை மூலம் ஆகாயத்தில் சஞ்சரித்த காலமும், அதிவிரைவில் பல ஆயிரம் மைல்கள் தனிச் சரீரத்தோடு சஞ்சரித்த காலமும் உண்டு. இன்றும் இருக்கிறது. இன்றும் அம்மாதிரி மகான்கள் குற்றால மலைக்கு மேல் அகஸ்தியர் ஆச்ரமத்திலும், சுருளி என்ற மேற்குமலைத் தொடரிலும், கதிர்காமம் என்ற இலங்கை மலையிலும் இமய மலையிலும் இருக்கிறார்கள். சஞ்சரிக்கிறார்கள்.
அக்காலத்திய வைத்தியர் ஒருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப் பார்த்து அவன் கீரையோ கீரை என்று கூறும் குரலைக் கேட்டு பக்கத்து மனிதரிடத்தில் “இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான். இவனை சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்” என்று சொன்னபடியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அவன் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தின் சிறப்பில் ஆதாரமிருக்கின்றது. இற்றைக்கு உயர்ந்த வைத்தியர்கள் என்று சொல்லுகிற டாக்டர்களெல்லாம் போதிக்கின்ற சுகாதாரத்தை ஆச்சாரக் கோவை என்ற சிறுநூல் அன்றே போதித்திருக்கின்றது. தமிழ் சங்கம், முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று இருந்த காலமும் அகஸ்தியர், நக்கீரர் போன்ற துறவிகளும், முருகன், சிவபெருமான் போன்ற தெய்வங்களும், அச்சங்கங்களை ஆக்குவித்தார்கள். ஊக்குவித்தார்கள். அவைகள் இன்று சீர்கெட்டு சிதைந்து கிடக்கின்றன. இவைகளுக்கு ஆக்க காலம் வருகின்றது.
தமிழின் எதிர்காலம்
தொகுஅதற்கு அறிகுறியாகத்தான் சமீபகாலத்தில் தோன்றிய மகான் ஜோதி ராமலிங்க சுவாமிகள்,
“கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆழ்க
தெருள் நிறைந்த நல்லோர் நினைத்த நலம்பெருக
எல்லாரும் இன்புற்று வாழ்க இசைந்து”
என்று சொல்லி மறைந்திருக்கிறார்கள். சீக்கிரம் திருவருள் செங்கோலாட்சி நடைபெறும் என்று அருளியிருக்கிறார்கள். அந்தக் காலம், தமிழ்த் தன்மை பெற்று வன்மை பெற்று வளமுற்று இந்தியாவை ஆளுங்காலம். அதைத்தான் மிகச் சமீபகாலத்தில் மறைந்த பாரதியார்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போலினிதாவ தெங்கும் காணோம்”
என்றும்,
“இந்நாடு சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”
என்றும் பாடியிருக்கிறார். இதை எவர் மறைப்பினும் எதிர்ப்பினும் தமிழ்மொழி தன் சிம்மாசனம் ஏறுங்காலம் சமீபிக்கிறது. தெய்வத்தின் திருவருளை எதிர்த்து நிற்க சிறு அரசுக்குச் சக்தி போதாது. அக்காலத்தில் குறள் அதன் மகிமையும் மாண்பும் உணர்ந்த மக்களைப் பெரிதும் உடைத்தாகி இயங்கும். இத்தனைக்கும் உலகம்மை மீனாட்சி உதவி புரிவாளாக! அந்நாள், திருக்குழந்தை முருகன் அகஸ்தியருக்குப் போதித் முழுத் தமிழும் முழங்கும்-முழு இந்தியாவிலும். வாழ்க தமிழ்!
(நன்றி- பசும்பொன் களஞ்சியம், தேவரின் சொற்பொழிவுகள்)
சிறந்த பேச்சாளர்
தொகுதேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன. [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://thevarthalam.blogspot.in/2010/03/3.html
- ↑ http://thevarthalam.blogspot.in/2010/03/blog-post_7472.html
- ↑ http://thevarthalam.blogspot.in/2010/03/2_16.html
- ↑ http://thevarthalam.blogspot.in/2010/03/4.html
- ↑ http://tamil.webdunia.com/miscellaneous/literature/history/0910/30/1091030124_1.htm
- ↑ http://www.youtube.com/watch?v=saqbxvnkTUY&feature=channel&list=UL
- ↑ http://www.youtube.com/watch?v=OkEaJPpKIDQ&feature=channel&list=UL
- ↑ http://www.youtube.com/watch?v=mTZDogaPw5E&context=C34abac9ADOEgsToPDskK0H-ndkA6aI-s62NUFb3i_
- ↑ http://mdmk.org.in/article/mar09/thevar-pugal-vaalga
- ↑ http://www.amsenthil.com/2012/02/blog-post_09.html
- ↑ http://www.youtube.com/watch?v=Si---T7v6ww&feature=related
- ↑ http://www.youtube.com/watch?v=fG6vuKEKdw4
- ↑ http://www.youtube.com/watch?v=n-ai_ghWv5M
- ↑ http://www.youtube.com/watch?v=aCEWsEbXmDw&feature=related
- ↑ http://www.youtube.com/watch?v=lA8Y9TUVHqE&feature=related
- ↑ http://www.youtube.com/watch?v=sYj8bQL0vG4&feature=related
- ↑ http://www.youtube.com/watch?v=PoJZ7te_-XY&feature=related