தேவாரம்/முதலாம் திருமுறை

சைவப்பக்தி இலக்கியமான பன்னிருதிருமுறைகளுள் முதலாக அமைந்தது, முதலாம் திருமுறை. இதனுள் அமைந்த பாடல்களைப் பாடியவர் திருஞான சம்பந்தர். பதினாறு வயதே இவ்வுலகினில் வாழ்ந்துமறைந்த அப்பெருமகனார் தமிழில் செய்த புரட்சிகள் பல. அவர்பாடிய பாடல்கள் அனைத்தும் முதல்மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதனைத்தொகுத்து அருளியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இவர் திருநாரையூரைச் சார்ந்தவர். திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரின் உதவியால் தேவாரத்திருமுறை ஏடுகளைக் கண்டுபிடித்துத் தொகுத்தார்.

திருஞான சம்பந்தப்பெருமான் இறைவியின் திருமுலைப்பால் அருந்திச் சிவஞான்ம் கைவரப்பெற்று அருட்பாடல்களான இத்திருப்பாடல்களைப் பாடினார் .அவர் பாடியவை பதிகங்கள் எனும் அமைப்பை உடையவை. அவர் பாடிய பதிகங்கள் பதினாறாயிரம் என்பது மரபுவழிச்செய்தியாகும். ஒருபதிகம் என்பது பத்துப்பாடல்கள் அமைந்த ஓர்அலகு, தொகுதி; சிலவற்றுள் பதினொரு பாடல்களும், இன்னும் சிலவற்றில் பன்னிரண்டு பாடல்களும் அமைந்திருக்கும். பதிக வரலாற்றுள் திருஞான சம்பந்தரின் பங்கு பெரிதும் குறிப்பிடத்தக்கது. திருஞான சம்பந்தரைப் 'பதிகப்பெருவழிகாட்டிட வந்தவர்' என்று போற்றுவர் நம்பியாண்டார்நம்பி.

இனி இங்கு அவர் அருளிய திருமுறைப்பாடல்களைக் காண்போம்.