தேவிக்குளம் பீர்மேடு/முன்னுரை

முன்னுரை

—★—

'ஜனசக்தி'யில் (1955 டிசம்பர் 11, 18, 25, 1956 ஜனவரி 1-ந் தேதிய இதழ்களில்) வெளிவந்த நான்கு கட்டுரைகளின் தொகுப்பே இச்சிறு நூல். இந்தக் கட்டுரைகள், ராஜ்யச் சீரமைப்புக் குழுவின் சிபார்சுகளை 1955 நவம்பர் இறுதியில் சென்னைச் சட்ட சபை விவாதித்த பொழுது, தேவிகுளம் - பீர்மேடு பற்றி கம்யூனிஸ்டுகள் கடைப்பிடித்த நிலையின்மீது பல்வேறு கட்சிக்காரர்களும் எதிரொலித்த எதிரொலிகளுக்குப் பதில் கூறும் முறையில் தீட்டப்பட்டவை.

அன்றையச் சூழ்நிலை வேறு, இன்றையச் சூழ்நிலை வேறு. அன்று கமிஷன் சமர்ப்பித்த 'ரிப்போர்ட்'டின் மீது சட்ட சபைகளில் விவாதம் நடந்த சூழ்நிலை. இன்று, கமிஷன் சிபார்சு மீது மத்ய அரசாங்கம் தனது திட்டவட்டமான முடிவைத் தெரிவித்துவிட்ட சூழ்நிலை.

இந்தக் கட்டுரைகளில் ராஜ்யங்களைச் சீரமைக்க மொழியைப் பிரதான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறோம். எல்லையை ஜனநாயக ரீதியில் நிர்ணயிக்க தொடர்ச்சியான பிரதேசத்தையும் கிராமத்தையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறோம். இந்தக் கட்டுரைகளில், இந்த ஜனநாயகக் கோட்பாடுகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்காட்டி யிருக்கிறோம்.

இந்தக் கட்டுரைகளை எழுதிய பிறகு நிகழ்ந்துள்ள வளர்ச்சியைக் கணக்கிலெடுத்த பிறகும், மத்ய சர்க்காரின் தீர்ப்பு வந்த பிறகு இந்திய யூனியன் முழுவதிலும் ஏற்பட்ட, ஏற்பட்டு வருகிற பிரதிபலிப்புகளை நிதானமாக மதிப்பிட்ட பிறகும், நாம் எடுத்துக் காட்டிய ஜனநாயக முறையில் மொழிவழியாக ராஜ்யங்களைச் சீரமைப்பது என்ற வழி தான் ஒரே ஒரு சரியான வழி என்பது மென்மேலும் உறுதிப்படுகிறது.

அன்று, சட்ட சபை விவாதத்திலும், நாங்கள் கொடுத்த திருத்தத்திலும் பொதுவான ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் எல்லைத் தகராறுகளுக்குப் பைசல் காண வேண்டுமென்று கூறியதோடு, தேவிகுளம்-பீர்மேடு தாலூகாக்களின் தண்ணீர், மின்சாரம் ஆகியவைகளைப் பொறுத்தமட்டில், கேரளத்தின் நலனைக் குறிப்பாகக் கணக்கிலெடுத்துத் தீர்வு காண வேண்டுமென்றும் கூறினோம்.

இன்று இன்னும் ஸ்தூலமாகக் கூற வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எனவே,18—1—56ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தான் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறது:—

"தொடாச்சியான பிரதேசத்தையும், கிராமத்தையும் அடிப்படையாகக் கொண்டு, தேவிகுளம்-பீர்மேடு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அப்படி பரிசீலனை செய்யும்பொழுது தேவிகுளம் பீர்மேடு தாலூகாக்களில் பெரும்பகுதி தமிழ்நாட்டுக்கு சேரவேண்டும். ஒரு சிறு பகுதி கேரளத்திற்கு போகவேண்டும். இதேபோல் கூடலூர் தாலூகாவில் பெரும்பகுதி கேரளத்திற்கு சேரவேண்டும். சிறுபகுதி தமிழ்நாட்டுக்கு சேரவேண்டும். கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலுள்ள இதர எல்லா எல்லைகள்பற்றிய பிரச்சினைகளும் தொடர்ச்சியான பிரதேசத்தையும் கிராமத்தையும் அடிப்படையாக கொண்டு தீர்க்கப்படவேண்டும். தேவிகுளம்-பீர்மேடு தாலூகாக்களில் பெரும்பகுதி தமிழ்நாட்டுடன் சேருவதால் கேரளத்தின் பொருளாதார தேவைகளுக்கு (தண்ணீர், மின்சாரம் முதலியன) உதவி செய்வதற்கு சென்னை ராஜ்ய சர்க்காரும் கேரள சர்க்காரும் விவாதித்து முடிவுசெய்யவேண்டும்.

"இந்த அடிப்படையில் இந்திய சர்க்காரின் தீர்ப்பு மாற்றப்பட வேண்டும். இதற்கான ஒன்றுபட்ட கிளர்ச்சியை ஜனநாயகவாதிகள் அனைவரும் மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்".

சுதந்திர-முற்காலத்தில், ராஜ்யச் சீரமைப்பில், மொழிக்கு முதலிடம் கொடுத்த காங்கிரஸ் மேலிடம், சுதந்திர-பிற்காலத்தில் மொழிக்கு முதலிடம் கொடுப்பதைக் கைவிட்டுவிட்டது. தார் கமிஷன், ஜே. வி. பி. கமிட்டிகளின் கருத்தை ஆதார பீடமாகக்கொண்டு, சீரமைப்புக் கமிஷன் மொழிக்கு முதலிடத்தை மறுத்துவிட்டது. சுயதேவைப் பூர்த்திக்கு முதலிடம் கொடுத்தது. இந்திய முதலமைச்சர் நேரு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தையும், தேசீய முன்னேற்றத்தையும் மிகப் பெரிதாகக் காட்டி, அதற்கு தேசீய ஒற்றுமையே அவசர அவசியம் என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தி மொழிவழி ராஜ்யத்தின் முதலிடத்தை பின்வரிசைக்குத் தள்ளினார். நால்வர்குழு, பீர்மேடு விஷயத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி விளைத்தது. சீரமைப்புக் குழு சென்னை ராஜ்யத்திற்கென்று சிபார்சு செய்த செங்கோட்டைத் தாலூகாவின் மேற்குப் பகுதியை எக்காரணமும் இன்றி கேரள ராஜ்யத்தில் அநியாயமாக இணைத்துவிட்டது.

மத்திய சர்க்காரின் தீர்ப்பின் விளைவாக நாடு முழுவதும் கொந்தளிப்பு. கொந்தளிப்பைத் தணிக்க, மக்களை ஒற்றுமைப்படுத்தி, உணர்ச்சிப் பெருக்குடன் தேச முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்ல பிசகற்ற வகையில் மொழிவழி ராஜ்யங்களையும் எல்லைகளையும் அமைக்கவேண்டியது ஜனநாயக முறையாயிருக்க, மத்திய சர்க்கார் வேறு முறையைக் கடைப்பிடிக்கிறது. மக்களின் ஆவேச எழுச்சியைத் துப்பாக்கி முனையில் தணிக்க, விபரீத உறுதி கொள்கிறது. மொழிவழி ராஜ்யக் கிளர்ச்சியை ஒடுக்க, எதிர்ப் பிரரேபணையாக, "பிரதேச" யோசனையைத் தூண்டிவிட்டு வரவேற்கிறது. "பூர்வப் பிரதேச" (வங்காள -பீகார் இணைப்பு) பிரரேபணையைத் தூண்டிவிட்டு, நேருவும் காங்கிரஸ் மேலிடமும் பிரமாதமாக ஆதரிக்கிறார்கள். சென்னை ராஜ்யம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றை இணைக்கிற "தட்சண பிரதேச " யோசனையையும் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

தேசத்தின் ஒற்றுமையை, வளர்ச்சிக்கான தேவையை மத்திய சர்க்காரும், காங்கிரஸ் தலைவர்களும் கையாண்டு வருகிற மேற்கூறிய முறைகளால் ஏற்படுத்த முடியாது. இந்தியாவில் வாழும் எல்லா மக்களும் விரும்பும் மொழிவழி ராஜ்யங்களை அமைப்பதும், எல்லைப் பிரச்னைகளை கம்யூனிஸ்ட் கட்சி கூறிவருகின்ற கொள்கையின் வழியில் தீர்ப்பதுமே மக்களுக்கிடையில் இன்று உள்ள மனக்கசப்பை

நீக்கி சகோதர பாவத்தைப் பிறப்பிக்கும்; எல்லா இன மக்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்து அவர்களின் ஒத்துழைப்புடன் இந்திய ஐக்கியம் வலுவடையும் என்று கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.

இன்று தேவிகுளம் - பீர்மேடு, இதர தமிழ்ப்பகுதிகளை இணைக்க மட்டுமல்ல, 'தட்சண பிரதேசம்' என்ற அபாயம் உருவாகாமலும் தடுத்து முறியடிக்க வேண்டியது, ஐக்ய தமிழகத்திற்குப் போராடும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட, உறுதியான, தாய்க் கடமையாகும்.

தேவி குளம்- பீர்மேடு போராட்டம், ஐக்ய தமிழகப் போராட்டம், மலையாளி, தெலுங்கர் ஆகிய சகோதர மக்களோடு கொள்ளும் பகைமைப் போராட்டமல்ல : அவசர வாத குறுக்கு வழிப் போராட்டமல்ல; 'இவர்-அவர் ஒழிக' போராட்டமல்ல. நம்முடைய போராட்டம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கழகங்கள் ஆகிய எல்லாக் கட்சி மக்களையும் உள்ளிட்ட சர்வஜனப் போராட்டம்; அமைதியான, உறுதியான நீண்ட நெடும் போராட்டம்.

இது தான் கம்யூனிஸ்டுகளாகிய எங்கள் கருத்து.

இந்தக் கண்ணோட்டத்தோடு தான், தேவிகுளம்-பீர்மேடு பிரச்னை பற்றிய இதர கட்சியினரின் நிலையை கட்டுரைகளில் விமர்சித்திருக்கிறேம்.

சென்னை,
25—1—'56

ஜீவா