தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/கதர் சிறந்ததா? மில் துணி சிறந்ததா?

16. கதர் சிறந்ததா? மில் துணி சிறந்ததா?
தந்தை பெரியார் - நாயுடு போட்டி!

ஒரு முறை தந்தை பெரியாரும், பிற்காலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட இரா. நெடுஞ்செழியனும், கோவை இரயில் நிலையத்தில் சென்னை மாநகர் போகும் இரயில் நிற்கும் நடை மேடையில், அதாவது பிளாட் பாரத்தில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரா. நெடுஞ்செழியன் தந்தை பெரியாரிடம் நெருக்கமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்குப் பிறகுதான் இரா. நெடுஞ்செழியன் இளம் தாடியை வைத்துக் கொண்டு, இளம் தாடி பெரியார் என்று மக்கள் அவரை அழைக்கும் வகையில் தோற்றமளித்தார். தனது நா வன்மையை தமிழர் மத்தியில் நிலை நாட்டிடும் சொற்பொழிவாளர் ஆனார்.

'நா' வன்மை உடைய நெடுஞ்ழியன் உரைகள், கோடை இடி போல் திராடர் இயக்கத்தின் சுயமரியாதைக்குரிய தன்மான உணர்வுகளை மழையாகப் பொழிந்தார். அதனால், அவரைத் திராவிட இயக்கக் கண்மணிகள் நாவலர் நெடுஞ்செழியன் என்று மதித்து மகிழ்ந்தார்கள்.

அந்த நெடுஞ்செழியனும் - தந்தை பெரியாரும் தான் சென்னை வருவதற்காக, கோவை இரயில் நிலைய நடை மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கோவை தொழிலியல் விஞ்ஞானி என மக்களால் போற்றப்பட்ட திரு. நாயுடு அவர்கள், சென்னைக்குப் போவதற்காக, அதே இரயில் வண்டியின் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடை மேடைக்கு வந்தார்.

தந்தை பெரியாரும் - இரா. நெடுஞ்செழியனும் அந்த நடை மேடையில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஜி.டி. நாயுடு அவர்கள், "நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று தந்தை பெரியாரைக் கேட்டார்.

அதற்கு பெரியார் அவர்கள், சென்னைக்குப் போகிறோம், என்றதும், 'எந்த வகுப்புக்கு டிக்கெட் வாங்கி இருக்கிறீர்கள்? என்று நாயுடு கேட்டார்.

'நாங்கள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யப் போகிறோம்', என்று பெரியார் கூறியதும், "நான் முதல் வகுப்பில் போகிறேன். நீங்களும் முதல் வகுப்பில் வாருங்கள் போவோம்' என்று கூறி விட்டு, இரண்டு பேர்களுக்கும் உரிய முதல் வகுப்புப் பயணச் சீட்டுக்குரிய கட்டணத்தைச் செலுத்தி, இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுக்களை நாயுடு அவர்கள் சென்று வாங்கி வந்து தந்தை பெரியாரிடம் கொடுத்து விட்டு, அவருக்காக ரிசர்வ் செய்து வைத்திருந்த முதல் வகுப்புப் பெட்டியில் நாயுடு ஏறி உட்கார்ந்து கொண்டார்.

உடனே தந்தை பொரியார் அவசரம் அவசரமாக நெடுஞ் செழியன் அவர்களிடம் அந்த இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்து, இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுகளையும் வேண்டாம் என்று ரத்து செய்து விட்டு, மூன்றாம் வகுப்பு டிக்கட்டுகள் இரண்டை வாங்கிக் கொண்டு, மீதி பணத்தையும் பெற்றுக் கொண்டு ஓடி வரும்படி கூறி விட்டு, தந்தை பெரியார் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்து விட்டார்.

அதற்குள் வேகமாய் ஓடிய நெடுஞ்செழியன் டிக்கெட்டு களையும், மீதி பணத்தையும் வாங்கிக் கொண்டு, ஓடி வந்து அய்யாவுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

கோவை விரைவு இரயில் வண்டி சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்து நின்றதும். ஜி.டி. நாயுடு அவர்கள் பெரியார் ஏறிய முதல் வகுப்பு பெட்டித் தொடர் வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து காத்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரும் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலே இருந்து இறங்குவதைக் கண்ட ஜி.டி. நாயுடு, 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று செல்லக் கோபமாய் பெரியாரைக் கேட்டார்.

அதற்குப் பெரியார், எனக்கெதற்கு முதல் வகுப்புப் பெட்டி? மூன்றாம் வகுப்பில் ஏறி வந்த பணம் போக; மீதி காசு கட்சித் தொண்டுக்குப் பயன்படாதா? என்ற அக்கரைதான் - என்ற காரணத்தைக் கூறி, பெரியார் அன்று நாயுடுவிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.

1924-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் கோவை மாநகரில், ஒய்.எம்.சி.ஏ. சார்பாக நடைபெறும் கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக கோவை நகர் வந்தார்.

அந்த நேரம், தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கின்ற நெருக்கடியான நேரம், தீபாவளி விழா வந்தால் ஜி.டி. நாயுடு அவர்கள், கண்ணம்பாளையம் மல் வேட்டிகளைத் தான் வாங்குவது வழக்கம். அந்த வேட்டி கோயம்புத்தூர் மக்கள் இடையே அவ்வளவு புகழ் பெற்றதாக அப்போது விளங்கி இருந்ததால், அந்த ஊர் மில் வேட்டிகள் தானா என்று மக்கள் பார்த்து வாங்குவார்கள்.

தந்தை பெரியார் அப்போது இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் பேரவைத் தலைவராக இருந்தார். அவர் கதர் துணிகளை, அதுவும் கைராட்டையில் நூற்ற நூல்களைக் கொண்டு நெய்யப்பட்ட கதராடைகளைத்தான் அணிவார். காங்கிரஸ்காரர்கள் எல்லாருமே அத்தகைய கதர் துணிகளை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார்கள்.

தீபாவளி நேரமல்லவா? தந்தை பெரியார் கோவை நகர் கண் காட்சியைத் திறந்து வைக்கவும், விழா முடிந்ததும் தீபாவளி விழாவுக் கான கதராடைகளை, வேட்டிகளை வாங்கவும் எண்ணினார்.

தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவும் - தந்தை பெரியாரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இருவருக்கும் பேச்சுவாக்கில் ஒரு போட்டி எழுந்தது. அதாவது, மில் வேட்டி சிறந்ததா? கதர் சிறந்ததா? என்பதைப் பற்றி நாம் விவாதம் செய்ய வேண்டும் என்று திரு. ஜி.டி. நாயுடு பெரியாரைக் கேட்டுக் கொண்டார்.

'என்ன நாயுடு பந்தயம்?' என்றார் பெரியார் நாயுடுவிடம். அதற்கு நாயுடு, ' நான் உமது வாதத்தில் தோற்றால், கதர் கட்டிக் கொள்கிறேன். நீங்கள் தோற்றுவிட்டால் ஒன்பது முழம் மில் வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்து, கண்காட்சிச் சாலையைத் திறந்து வைக்க வேண்டும். சம்மதமா?' என்றார்.

இருவரின் வாதம் நீண்ட நேரம் நடந்தது? இரத்தின சபாபதி முதலியார் இந்த விவாதத்தைக் கவனித்து வந்தார். வாதம் அனலானது! இறுதியில் தந்தை பெரியார் அவர்களே, தான் தோற்றுவிட்டதை பலர் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

திரு. நாயுடு அவர்கள் எடுத்துக் கொடுத்த மில் வேட்டியைத் தந்தை பெரியார் கட்டிக் கொண்டு நாயுடுவுடன் கண்காட்சி சாலையைத் திறந்து வைக்கச் சென்றார்.

கண் காட்சிக்குள்ளே பெரியார் காலடி வைத்ததும், 'இந்த வாதப் போட்டியில் வெற்றி எனக்குத்தான்' என்று தந்தை பெரியார் பெருமையோடும், பெருமிதத்தோடும் கூறியதைக் கேட்ட ஜி.டி. நாயுடு அவர்கள் அதிர்ச்சி அடைந்து, "அது எப்படி?” என்று கேட்டார்.

“எனக்கு இனாமாக மல் வேட்டி கிடைத்தது அல்லவா?" என்று தந்தை பெரியார் மகிழ்ச்சிப் பொங்கக் கூறினார்! அவர் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு அவர்கள், "இருந்தாலும் பெரியார் பெரியார்தான்" என்றார்:

தான் தோற்றுப் போனதைப் பற்றியோ, காங்கிரஸ் கட்சியின் இலட்சியமான 'கதராடை அணிதல்' என்ற கொள்கை தோற்றுவிட்டதே என்ற கவலை ஏதும் படாமல், இனாமாக வேட்டி கிடைத்ததைப் பற்றிப் பெருமையாகப் பேசினர் பெரியார்!

அந்தப் பெரியார்தான், பின்னாளில் காங்கிரஸ் இயக்கத்தை வீழ்த்திட, காங்கிரஸ் கட்சியை விட்டே வெளியேறினார்: கதர் துணிகளை அணிவதையும், அவர் கைவிட்டு விட்டார். கருப்புச் சட்டையோடே இறுதியில் காலம் ஆனார்! இதுவும் ஒரு தீர்க்க தரிசனமான அரசியல்தானே!