தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/தொழில் துறை வளர்ச்சி ஒன்றே
நாட்டின் வறுமையை நீக்கும் வழி!
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகர் ஆட்டோ மேட்டிவ் இஞ்ஜினியர் சங்கம், ஜி.டி. நாயுடு அவர்களைத் தனது சங்கத்தில் ஒரு நிர்வாக உறுப்பினராகப் பதிவு செய்து அவரைப் பெருமைப் படுத்தியது. அதே நியூயார்க்கில் உள்ள மெக்கானிக் இஞ்சினீயர் சங்கமும் அவரை உறுப்பினராக்கி மகிழ்ந்து பாராட்டியது.
பத்து பொறியியல் சங்கங்கள்
உறுப்பினராக்கி மகிழ்ந்தன!
இந்தியா திரும்பிய ஜி.டி.நாயுடுவை ஆந்திரா நாட்டிலுள்ள சிறு தொழிலாளர் சங்கம் உறுப்பினராக்கிக் கொண்டது. சென்னை சிறு தொழிலாளர் சங்கமும் அவரை ஓர் உறுப்பினராக்கியது.
மெட்ராஸ் ஸ்டேட் எனப்படும் சென்னை அரசாங்கமும் ஜி.டி. நாயுடுவைத் தொழில் வளர்ச்சிக் கழகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டது. சென்னைத் தொழில் நுட்ப சங்கம் அவரை ஓர் ஆலோசகராக ஏற்றுக் கொண்டது.
அகில இந்திய இஞ்சினியர் கழகம், இந்திய இயந்திரத் தயாரிப்பாளர் சங்கம், அனைத்திந்திய இயந்திர உற்பத்தியாளர் கழகத்திலும் ஜி.டி. நாயுடு உறுப்பினரானார்.
ஏறக்குறைய பத்து இந்திய இயந்திரப் பொறியாளர் சங்கங்கள் ஜி.டி. நாயுடு அவர்களை வரவேற்றுப் பாராட்டி உறுப்பினராக்கிக் கொண்டன. ஏன் தெரியுமா?
இந்திய நாட்டைத் தொழில் இந்தியாவாக்க வேண்டும் என்ற ஜி.டி.நாயுடுவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டதால், அவரை வலிய அழைத்து அந்தச் சங்கங்கள் உறுப்பினராக்கி அவரது முயற்சியை ஊக்குவித்ததுதான் காரணமாகும்.
அத்துடன் அவர் ஒரு பிறவி தொழிலியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவராக இருந்தார் என்பதாலும், சிறந்த தொழிற் பிரமுகராக விளங்கியதாலும், திறமையான தொழிற்துறை மேதையாக உலகைச் சுற்றி வந்த அனுபவத்தைக் கண்டதாலும் மேற்கண்ட சங்கங்கள் நாயுடுவைத் தங்களது சங்கங்களில் உறுப்பினர்களாக்கிக் கொண்டு அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி வந்தன.
அமெரிக்கா சென்று அங்குள்ள கைத் தொழில் பள்ளியில் மாணவராகப் பயிற்சி பெற்ற நாயுடுவின் அனுபவத்தையும், காலத்தைக் கடந்து எதையும் சிந்திக்கும் தொழில் விஞ்ஞானச் சிந்தனையாளர் அவர் என்பதாலும், ஜி.டி. நாயுடுவுக்கு இந்தியாவில் புகழ் பெருகியது.
ஜி.டி. நாயுடு தொழில் துறையில் முன்னேறிய நாடுகளையும் - நகரங்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்த அனுபவமும் பெற்றிருந்தார்.
உலக நாடுகளின் புதுமையான தொழில் வளர்ச்சிகளை அவர் நேரில் பார்த்து அறிந்தவர், அனுபவமுள்ளவர், என்று இந்தியத் தொழிற் சங்கங்களால் பாராட்டப்பட்ட ஓர் அதிசய மனிதராகவும் திகழ்ந்தவர்.
கோவையைத் தொழிலறிவு
நகரமாக்கியது - ஏன்?
ஒரு முறைக்கு மூன்று முறையாக உலக நாடுகளைச் சுற்றி வந்த தனது தனித் திறமையைக் கொண்டு, ஜி.டி. நாயுடு கோயம்புத்தூர் நகரில் எண்ணற்ற தொழிற் சாலைகளை உருவாக்கினார்
உருவாக்கியதுடன் நில்லாமல், அந்தத் தொழிற்சாலை நிருவாகங்களை மற்றவர்கள் பார்த்து வியக்குமாறும் அவற்றை நடத்திக் காட்டினார் ஜி.டி. நாயுடு.
மேற்கண்ட தொழிற்சாலைகளைக் கோவை நகரில் உருவாக்குவதற்கு முன்பு, அந்த நகர் தொழிற்துறை அறிவோ. தொழில் ஆர்வமோ பெற்ற நகராக இருக்கவில்லை என்பது தான் குறிப்பிடத் தக்க நிலையாகும்.
அத்தகைய நேரத்தில் ஒரு தனி மனிதர் துணிவாக எண்ணற்றத் தொழிற்சாலைகளை உருவாக்க, இயக்க, காரணராக இருந்தார் என்பதே பாராட்டுக்குரிய சம்பவமாகும்.
இவ்வளவையும் நாயுடு ஏன் கோவையில் செய்தார்? தமிழ் இனம், தமிழ்ச் சமுதாயம் தொழில் துறையில் மேல் நாடுகளுக்குச் சமமாக வாழ்ந்து வளம் பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தால் தானே!
இதே ஜி.டி. நாயுடு உலக நாடுகளில் எங்கோ ஓரிடத்தில் பிறந்து தொழிற்சாலைகளை உருவாக்கி இருந்தால், அறிவுடையார் எங்கிருந்தாலும் பாராட்டத் தக்கவர்களே என்ற தத்துவச் சிறப்பிற் ஏற்ப, நோபல் பரிசுகள் தேடி வந்து அவரிடம் அடிமையாகி இருக்குமா - இருக்காதா என்பதை நாம் தான் சிந்திக்க வேண்டும். அந்த நிலை நாயுடுவுக்கு ஏன் உருவாகவில்லை?
அறிவுக் கேற்ற தகுதியை
அவர் பெறாதது ஏன்?
தமிழ் நாட்டு மக்களிடத்தில், ஏன் இந்திய மக்களிடத்தில், அந்தக் காலக் கட்டத்தில் தொழில் அறிவு அதிகம் இல்லாமல் இருந்ததுதான் காரணமோ அல்லது, தொழிற் புரட்சியற்ற மண்ணில் அவர் எண்ணற்ற தொழில் நுட்பங்களைத் தொழிற்சாலைகளாக்கிக் கொட்டிக் குவித்ததால் தானோ புரியவில்லை நமக்கு!
ஜி.டி. நாயுடு வாழ்ந்த கால கட்டத்தில் அவரால் துவக்கப் பட்ட தொழிலகங்கள், இப்போது ஆரம்பிக்கப் பட்டிருக்குமானால், இக் கால அரசியல்வாதிகள், தொழிலறிஞர்கள், தொழில் நுட்ப வரவேற்புகள் அவரைத் தேடி நாடி ஓடி வந்து பட்டம் பதவிகளை வலிய வலிய வழங்கி, ஒஹோ. என்று போற்றித் திரு அகவல்களைப் பாடிப் புகழ்ந்திருக்குமோ - என்னவோ, காலம்தான் கணக்கிட வேண்டும் பராபரமே!
ஜி.டி. நாயுடு அவர்கள், அப்படி என்னென்ன தொழிற்சாலைகளைத் தோற்றுவித்து விட்டார் என்று எவராவது கேட்பார்களேயானால் - அவர்களுக்கு இதோ சில தக்கச் சான்றுகள்.
கோவை மின்சார
மோட்டார் தொழிற்சாலை:
தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு 1939-ஆம் ஆண்டில் - கோவை நகரில், மின்சார மோட்டார் தொழிற்சாலை ஒன்றை, நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ் என்ற பெயரில் துவக்கினார்.
அந்த மோட்டார் உற்பத்தித் தொழிற்சாலையை, அப்போது சென்னை அரசுத் தொழில் ஆலோசகராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சர்.ஜார்ஜ் போக் என்பவர் திறப்பு விழா செய்தார்.
அந்த நேரம் இரண்டாம் உலகப் போர் துவக்கப்பட்ட நெருக்கடியான காலம். அதனால் - வெளிநாடுகளிலே இருந்து மின்சார மோட்டார்களை வரவழைப்பது மிகக் கஷ்டமாக இருந்தது.
அதுமட்டுமன்று இதற்குக் காரணம். இந்திய நாட்டில் வேறு எங்கும் மின்சார மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படாத நேரமாகும்.
அப்படி இருந்தும், அப்போதைய இந்திய ஆட்சி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் திரு. ஜி.டி. நாயுடுவுக்கு வழங்கியது. அதனால், அவர் மின்சார மோட்டார் தொழிற் பற்றிகரமாகத் துவக்கி மின்சார மோட்டார் தொழிற்சாலையை வெற்றிகரமாகத் துவக்கி மின்சார மோட்டர்களைத் தயாரித்து வந்தார்.
யூனிவர்சல்
ரேடியேட்டர்ஸ்:
இந்த தொழிற்சாலையில் கார்கள், இஞ்சின்கள் ஆகியவற்றுக்கு தேவையான ரேடியேட்டர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
யு.எம்.எஸ். வானொலி;
தொழிற்சாலை:
மேற்கண்ட யு.எம்.எஸ். வானொலித் தொழிற் கூடம் 1941-ஆம் ஆண்டில் கோவை நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையைத் துவக்கி வைத்தவர் யார் தெரியுமா?
மத்திய முதல் நிதியமைச்சர்
சர். ஆர்.கே. சண்மூகம் திறந்தார்!
இந்திய அரசாங்கத்தின் முதல் நிதியமைச்சரும், கோயம்புத்தூர் நகரிலேயே வாழ்ந்து வந்த தொழில் அதிபருமான சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள்தான், இந்தத் தொழிற்சாலையின் துவக்க விழாவை நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
அந்தத் தொழிற்சாலையில், வானொலிப் பெட்டி, வானொலிக் கிராமம், டேப் ரிக்கார்டர், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வானொலிப் பெட்டிகளை ஏழை மக்களும் உபயோகப் படுத்தக் கூடிய அளவுக்கு விலை குறைவானவை ஆகும்.
நூறு ரூபாய் அல்லது நூற்றைம்பது ரூபாய்க்கு, ஏழைகள் வாங்கக் கூடிய வகையில் இவை விலை குறைவானது மட்டுமன்று; இந்த வானொலிப் பெட்டியின் ஐந்து வால்வும், 3 பேண்டுகளும், எந்த அலையைத் திருப்பினாலும் பாடக் கூடியதாகவும், அதே நேரத்தில் குளு குளு தன்மையான ஏ.சி. பெட்டிகளாகவும் தயாரிக்கப்பட்டு அதே விலைக்குக் கிடைக்க வழி செய்தவர் ஜி.டி. நாயுடு.
ஏழைகளுக்காகத் தானே தயாராகின்ற வானொலிகள், என்று, ஏதோ - ஏனோ தானோவாக உருவாக்கப்பட்டதன்று ஜி.டி. நாயுடு நிறுவனம் உற்பத்தி செய்த இந்தப் பெட்டிகளின் தரம்!
இந்தத் தொழிற்சாலையில் தயாராகும் வானொலி பெட்டிகளுக்குரிய பாகங்களில் 30 முதல் 35 சத விகிதப் பொருட்கள் வரை; இதே தொழிற்சாலையிலேதான் தயாராகின்றன. மிகுதி உள்ள 65, 70 சத விகித பாகங்கள் மேற்கொண்டு அங்கேயே தயாராகிடுவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டு ஆய்வுக் குழுவின் ஆய்வுக்குச் சென்றிருந்தன.
கார்பானிக் பொருட்கள்
தொழிற்சாலை :
கோவைக்கு அடுத்துள்ள நகரம் போத்தனூர். இந்த ஊர் தொழிற்சாலை நடத்திட எல்லா வசதிகளும் பொருந்தியதாக இருந்ததைக் கண்ட ஜி.டி. நாயுடு, இங்கே கார்பானிக் பொருட்கள் தொழிற்சாலை ஒன்றைத் துவக்கினார். டைப் ரைட்டர் இயந்திரங்களுக்குத் தேவையான கார்பன் தாள்கள், நாடாக்கள், பேனாக் கார்பன், பென்சில் கார்பன் தாள்கள், இங்க் பேடுகள் போன்றவை இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.
யு.எம்.எஸ்.
பிளேடு தொழிற்சாலை :
கோவை நகரில் மலிவான சவர பிளேடுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை சிறு அளவில் ஏற்படுத்தினார். தமிழ் நாட்டுக்குத் தேவையான பிளேடுகள் விற்பனைக்காக இங்கே தான் தயார் செய்யப்பட்டன.
கோவை டீசல்
புராடக்ட்ஸ்
பெட்ரோலில் கார்களை ஓட்டும் இஞ்சின்கள் அப்போது பொருத்தப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக டீசல் எண்ணெயில் ஒட்டும் இஞ்சின்களைத் தயாரிப்பதில் ஜி.டி.நாயுடு ஈடுபட்டார்.
அதற்குரிய இஞ்சின்களைக் கோயம்புத்துரிலேயே தயாரிக்கும் வகையில் இஞ்சின்களைப் புதுப்பித்தார். அவை பழுது பார்க்கும் பணிகளை இந்த தொழிற்சாலையிலே செய்தார். இந்தத் தொழிற்சாலையை ஜெர்மானியத் தொழில் நுட்ப அறிஞர்கள் பார்த்துப் பாராட்டினார்கள்.
இஞ்சினியரிங்
பிரைவேட் லிமிடெட் :
மேற்கண்ட டீசல் இஞ்சின்களுக்குத் தேவைப்பட்ட நாசில்கள், Nozzles, டெலிவரி வால்வுகள், பம்ப் - எலிமெண்டஸ் Pump-Elements ஆகியவை - தொழிற்சாலையில் உருவாயின.
கோவை பு:எம்.எஸ்.
ஒர்க்ஸ் நிறுவனம்:
கார்களைப் புதிதாக உருவாக்குவதற்கான பாகங்கள், இயந்திரக் கருவிகள், சிறு சிறு உதிரிப் பாகங்கள், பெளண்டரி காஸ்டிங்ஸ் முதலிய வேலைகள் இந்த நிறுவனத்தில் தயாராயின.
செட்ரைட் இந்தியா
பிரைவேட் லிமிடெட் :
பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றின் உதவியால் இந்த செட்ரைட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஜி.டி. நாயுடு துவக்கினார். இந்த நிறுவனத்தில் பேருந்துகள் - போக்குவரத்து நிறுவனங்களுக்கும், திரையரங்குகளுக்கும், ரயில்வே நிலையங்களுக்கும், ஒட்டல்கள் போன்றவற்றுக்கும் உரிய டிக்கட்டுகள், இரசீதுகள் அனைத்தையும் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்த டிக்கட்டுகளும் - இரசீதுகளும் அச்சடிக்க தானியங்கி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அந்த இயந்திரங்கள் எவ்வளவு வேலைகளைச் செய்தன என்ற கணக்கையும் அந்த இயந்திரங்களே காட்டுமளவுக்கு மெஷின்களில் பொருத்தப்பட்டிருந்தன.
இந்தத் தொழிற்சாலையில் 16 மில்லிமீட்டர் அளவு படம் ஒடும் புரொஜெக்டர்கள், டயல் காஜ் முதலியவை திட்டமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்டன.
கோபால் கடிகாரம்
தொழிற்சாலை:
தனது தந்தை திரு. கோபால்சாமி நாயுடு நினைவாக இந்த நிறுவனம் ஜி.டி.நாயுடுவால் உருவாக்கப்பட்டது. இங்கே தயாராகும் நான்கு முகக் கூண்டு சுவர்க் கடிகாரங்கள், அதாவது - Tower Clocks திரு. ஜி.டி.நாயுடு அவர்களது தொழில் நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம் ஆகும்.
இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள் சில, பொது நிலையங்களின் உபயோகத்திற்கான அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.
கோவை நகராட்சிக்கு ஒரு கடிகாரத்தை ஜி.டி.நாயுடு தயாரித்துக் கொடுத்துள்ளார். அந்தக் கடிகாரம் கோவை நகரில் அவினாசி சாலையையும், சிறைச் சாலை சாலையையும் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
இன்று வரை அந்தக் கடிகாரம் எந்தப் பழுதும் அடையவில்லை. இது போன்ற மேலும் சில கடிகாரங்களை சென்னை நகருக்கும் அன்பளிப்பாக நாயுடு வழங்கியுள்ளார். இந்தத் தொழிற்சாலையில் பெருமளவில் கடிகாரங்கள் தயார் செய்யப்பட்டன.
கோவை ஆர்மச்சூர்
வைண்டிங் ஒர்க்ஸ் :
இந்தத் தொழிற்சாலையில் செப்புக் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பல வகை அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கம்பிகள் எதற்குப் பயன்படுகின்றன தெரியுமா?
டைனமோக்கள் உருவாக இந்தக் கம்பிகள் தேவை. அதற்காகவே இங்கே பல அளவுகளில் செப்புக் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த செப்புக் கம்பிகளுக்கு எனாமல் பூசும் இயந்திரங்களை நிறுவவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இங்கே தேனிப் பெட்டிகளுக்குத் தேவையான பொருட்களும் தயாராகின்றன.
சத்து மாவு
தொழிற்சாலை :
மக்கள் உணவுகளுக்காகப் பயன்படுத்தும் கேழ்வரகு சோளம் போன்ற உணவு தானியங்களை, இங்கே சத்துணவு மாவுகளாகத் தயாரிக்கின்றார்கள். இங்கே தயாரான சத்துணவு மாவைச் சோதனை செய்துப் பார்த்த சென்னை அரசாங்கத் தின் விவசாய ரசாயன அதிகாரி, அந்த மாவுகள் உயர்ந்த ரகமாகவும், சத்து நிறைந்ததாகவும் இருப்பதாகச் சான்றிதழ் தந்துள்ளார்.
வேறு சில
தொழில்கள் :
பேருந்துகளுக்கான பாகங்களை இணைக்கவும், டயர்களைப் புதுப்பித்து உருவாக்கவும், தனித்தனி தொழிற் சாலைகளை திரு. ஜி.டி. நாயுடு உருவாக்கினார்.
வெளிநாடுகளில் இருந்து மற்ற தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் ஜி.டி. நாயுடு தொழில் நிலையங்களை அமைத்தார்.
தொழிற்சாலைகளைப் புதியதாக அமைக்க யாராவது முன் வந்தால், அவர்களுக்கான உதவிகளை யோசனைகளை இலவசமாகவும் செய்தார் திரு. நாயுடு.
இவ்வளவு அக்கரையோடு கோவையை ஏன் தொழில் நகரமாக்கிட வழி வகைகளைச் செய்தார்?
தொழில் வளர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்டால்தான் மக்களுடைய வறுமைகள் ஒழியும் என்ற ஒரே காரணத்திற் காகத்தான் ஜி.டி.நாயுடு அதில் அவ்வளவு அக்கரைகளைக் காட்டினார்.