நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/எம்.ஆர். ராதா பேசுகிறார்!

எம்.ஆர். ராதா பேசுகிறார்!

1971ம் ஆண்டு மே 1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியான வீடுபோல் ‘கலகல’ வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது:

“என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பாாத்தாச்சா?... போங்க ... மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ ... சரிசரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!”

ராதாவின் குரலா இது, இத்தனை சன்னமா யிருக்கிறதே!...

வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது:

“உங்கள் குரல் முன்னைப் போல்...”

“அஞ்சி வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா ? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!” என்கிறார் ராதா. மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொணடிருக்கிறார். “உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்துவிட்டேனோ?” என்கிறேன்.

“டிஸ்டர்ப் என்ன, டிஸ்டர்ப்? நான் என்ன, பெரிய சையன்டிஸ்ட்டா? விண்வெளி ஆராய்ச்சி சேஞ்சிக்கிட்டு இருக்கேனா? சாதாரண ஆக்டர் நீங்களெல்லாம் பேசற பேச்சுக்குக் கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையிலே பேசறவன். அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஒவரா நினைச்சிடாதீங்க... ஆ!... தொண்டை கட்டிக்கிச்சி... இப்ப நான் ‘ரத்தக் கண்ணீர் ராதா’ வாயிட்டேன்... ஏய், காந்தா!... யார் அங்கே...?”

ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், “வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே?” என்கிறார் டாக்டர்.

“அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?” என்கிறார் ராதா.

“அது எப்படிச் சொல்ல முடியும்?” என்கிறேன் நான். சக பத்திரிகையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறார். வினயத்துடன்.

“என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!” என்று ராதா ‘பட்’ டென்று பதிலளிக்கிறார். "ஜெயில்லே...” என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன். ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்:

“எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்!... அங்கே வேலை கெடைக்குது, கூலி கிடைக்குது, இட்லி சாம்பார், சாப்பாடு எல்லாம் கெடைக்குது... ‘இன்னிக்கு உனக்கு விடுதலைடா'ன்னு ஜெயிலர் சொன்னாக்கூட ‘அதுக்குள்ளேயா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போறேனே!'ங்கிறான்... அதைப் பத்தியெல்லாம்தான் உங்க கதிர்லே தொடர்ந்து வரப் போவுதே ?... அப்போ சொல்றேன்!”

சொன்னபடி அவர், ‘கதிருக்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததைத்தான் நீங்கள் இப்போது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.


சென்னை-30

விந்தன்

15. 3.72.