நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/10. வஸ்தாதுக்குப் பெண் பார்த்த வஸ்தாது

10. வஸ்தாதுக்குப் பெண் பார்த்த வஸ்தாது

சென்னைக்கு வந்ததும் மறுபடியும் ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் சேர்ந்திருப்பீர்கள். சின்னப்பா, எம்.ஜி.ஆரை யெல்லாம் சந்தித்திருப்பீர்கள்...”

“எங்கே சந்திக்கவிட்டார் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை ? அவர் பெரம்பூரிலே, யாரோ ஒரு ரொட்டிக் கடைக்காரர் தயவிலே ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பிச்சி வைச்சுட்டு, அதை நடத்த சரியான ஆள் இல்லாம தவிச்சுக்கிட்டிருந்தார்....”

“ஏன், அவர் கம்பெனியை அவரால் நடத்த முடியாதா?”

“அந்தக் காலத்திலே நாடகக் கம்பெனி நடத்தறது அவ்வளவு சாதாரண விஷயமில்லே, ரொம்பப் பெரிய விஷயம்.... மொதல்லே நாடகக்காருங்கன்னு சொன்னா, உள்ளூரிலே யாரும் தங்க இடம் கொடுக்க மாட்டாங்க. அதாலே நாங்க ஊருக்கு வெளியே உள்ள சத்திரம், சாவடியிலேதான் தங்குவோம்...”

“கலையை வளர்க்க வந்த கலைஞர்களுக்கா இந்தக் கதி ?”

“இந்த மாதிரி ‘டூப்’பையெல்லாம் அப்போ யாரும் நம்பமாட்டாங்க; ‘கூத்தாடி வயித்தை வளர்க்க வந்த கோமாளிங்க'ன்னு சொல்லி, எங்களை ஆதித் திராவிடரை ஒதுக்கி வைக்கிறாப்போல ஒதுக்கி வைப்பாங்க. ஊருக்குள்ளே ஏதாவது ஒரு பாழடைஞ்ச வீடு இருந்து, அந்த வீட்டுக்கும் யாராவது ஒரு பெரிய மனுஷர் சிபாரிசு சேஞ்சா, அது எங்களுக்குக் கிடைக்கும். அந்த வீட்டையும் எதுக்காகக் கொடுப்பாங்கன்னா, அதுக்குள்ளே இருக்கிறதா அவங்க நம்பிக்கிட்டிருக்கிற பேயும் பிசாசும் எங்களை அடிச்சித் திங்கிறதா, இல்லையான்னு ‘டெஸ்ட்” பண்ணிப் பார்த்துக்கிறதுக்காகக் கொடுப்பாங்க!”

“அப்படி யாரையும் அடித்துத் தின்னவில்லையென்று தெரிந்தால் உடனே வீட்டைக் காலி செய்து விடச் சொல்வார்களா?”

“அவங்க காலி செய்ய சொல்றதுக்கு முந்திதான் நாங்களே காலி சேஞ்சிடுவோமே!”

“ஏன் ?”

“ஊரூராய்ப் போய்க்கிட்டிருக்கிறதுதானே எங்க வேலை?. எல்லா ஊரும் ஒரே மாதிரியாயிருந்தா யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையே கம்பெனியை நடத்திவிடலாம்... அப்படி இருக்காது... சில ஊருக்குப் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கிட்டா போதும்; சில ஊருக்கு ரவுடியாய் மாறினாத்தான் முடியும். மொத்தத்திலே ‘அஷ்டாவதானியாயிருக்கிறவன் தான் அந்தக் காலத்திலே நாடகக் கம்பெனி நடத்த முடியும்...”

“அந்த ‘அஷ்டாவதானி'யாக நீங்கள் இருந்தீர்கள் போலிருக்கிறது...”

“ஆமாம். ஆக்டிங், மெக்கானிக், எலெக்ட்ரிக்... இதோடு நான் நிற்கல்லே; சிலம்ப வித்தைங்க எத்தனை உண்டோ, அத்தனையும் கத்து வைச்சிருந்தேன். பாக்ஸிங், ரஸ்லிங்,.... என்ன, நான் சொல்லச் சொல்ல நீங்க பின்னாலேயே நகர்ந்துக்கிட்டிருக்கீங்க?”

“எதிர்த்தாற்போல் நான் அல்லவா உட்கார்ந்திருக்கேன்?... ‘இதுதான் பாக்ஸிங், இது தான் ரஸ்லிங் என்று நீங்கள் என் முகவாய்க் கட்டையிலேயே ஒரு ‘நாக்கவுட் விட்டு, என்னையே ஒரு ‘நண்டுப் பிடி பிடித்துக் காட்டிவிடக் கூடாதே”

“நான் சும்மா ஒரு ‘ஆக்ஷனுக்காகக் கையைக் காட்டினா, அதுக்குப் போய் நீங்க இப்படிப் பயப்படறீங்களே ?”

“உங்களுக்குத் தெரியாது. இன்ஷ்யூரென்ஸ் கம்பெனிக்காரன் பிரீமியத்தைக் கூட என்னாலே ஒழுங்காக் கட்ட முடியறதில்லே.”

“சண்டைன்னா, யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையும் உங்களைப் போலத்தான் ஒதுங்கிக்கப் பார்ப்பார். நாடகக் கம்பெனிக்காரன் எல்லா இடத்திலும் அப்படி ஒதுங்கினா நாடகம் நடத்த முடியாது... ஜகந்நாதய்யரும் சண்டைக்குப் பயந்தவர்தான்; ஆனா வர சண்டையைச் சமாளிக்க அவர் எப்பவும் இருபது முப்பது அடியாட்களைக் கூடவே வைச்சுக்கிட்டிருப்பார். அந்த வசதி பொன்னுசாமிப் பிள்ளைக்கு இல்லே; அதாலே என்னைப் பிடிச்சித் தன் க்ம்பெனியிலே போட்டுக் கிட்டார்...

“அப்படியானால் சின்னப்பாவைப் பற்றியும் எம்.ஜி.ஆரைப் பற்றியும் இப்போது சொல்ல மாட்டீர்களா ?”

“சொல்றேன், சொல்றேன்.... என்னிக்குப் பொன்னுசாமிப் பிள்ளை என்னைப் பிடிச்சாரோ, அன்னியிலேயிருந்து நான் அவருடைய கம்பெனிக்கு ‘ஆர்கனைச'ரானேன். சக நடிகர்களிலே சிலர் படற கஷ்டத்தைப் பார்க்க முடியாம அவர் கம்பெனி ஆரம்பிச்சிட்டாரே தவிர, அதை நடத்தப் போதுமான பணம் அவர்கிட்டே இல்லே, மனம் தான் இருந்தது...”

“அதை வைத்து நூறு வால் போஸ்டர் கூடப் போட முடியாதே”

“அதுக்காக அவர் யார்கிட்டவாவது அப்பப்ப நூறு இருநூறுன்னு கடன் வாங்கிப் போட்டுக்கிட்டே இருப்பார்: அப்படிக் கொடுத்து உதவியவர்களிலே ஒருத்தர்தான் பெரம்பூர் ரொட்டிக் கடைக்காரர்.”

“பெயர் ?”

“ஞாபகமில்லை. இந்த நாடகக் கம்பெனிங்க இருக்கே, அதுங்க கொடுத்தா கொடுத்துக்கிட்டே இருக்கும்; கேட்டா கேட்டுக்கிட்டே இருக்கும். நான் போய்ச் சேர்ந்த காலம் கேட்டுக்கிட்டே இருந்த காலம். பெரம்பூர் ரொட்டிக் கடைக்காரராலே ஒரு அளவுக்கு மேலே கொடுத்து உதவ முடியல்லே.... ராணிப் பேட்டையிலே வரதராஜுலு செட்டியார்னு ஒருத்தர்; பெரிய ஜவுளிக் கடை வைச்சிருந்தார். அவர்கிட்டே பணமும் இருந்தது; கொடுக்க மனமும் இருந்தது. அவருடைய உதவியைக் கொண்டு ராணிப்பேட்டையிலே கொஞ்ச நாள் நாடகம் போட்டுவிட்டுச் சோளிங்கப்புரத்துக்குப் போனோம். அங்கே நாடகம் நடக்கல்லே...”

“வேறு என்ன நடந்தது?”

“கலகம்!”

“கலகமா ?”

“ஆமாம். அந்த நாளிலே அப்படித்தான். எந்த ஊருக்குப் போனாலும் ஒண்ணு நாடகம் நடக்கும். இல்லேன்னா, கலாட்டா நடக்கும்.”

“தேவலையே, கலாட்டாவையும்,அந்தக் காலத்து மக்கள் காசு கொடுத்துப் பார்த்திருக்கிறார்களே, அதற்காக அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.”

“காசு கொடுத்துப் பார்க்க வர்றவங்களாலே எந்தக் கலாட்டாவும் இருக்காது; காசு கொடுக்காமப் பார்க்க வர்றானுங்களே, அவனுங்களாலே தான் எல்லாக் கலாட்டாவும் வரும்.”

“அன்றைக்கு என்ன கலாட்டா ?" “ஹெட் கான்ஸ்டபிள் ஒருத்தர் வந்து கேட்டண்டை நின்னுக்கிட்டார். பொன்னுசாமிப் பின்ளையையோ, என்னையோ கேட்காமலேயே தனக்கு வேண்டியவங்களையெல்லாம் ‘நீ போ, நீயும் போ’ ன்னு உள்ளே விட்டுக்கிட்டே இருந்தார். நாங்க படற கஷ்டத்திலே கொஞ்ச நஞ்சம் கலெக்ஷன் ஆவறதையும் இவர் இப்படிக் கெடுத்துக்கிட்டிருந்தா எனக்கு எப்படி இருக்கும்?... நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்; பொறுக்க முடியல்லே. கிட்டே போய், ‘நியாயத்தை நிலை நாட்ட வேண்டியர்களே இந்த அநியாயத்தைச் செய்யலாமா?ன்னேன். ஷட் அப்'ன்னு அவர் ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தார். ‘அப்படின்னா என்ன அர்த்தம்? உங்களை வெளியே தள்ளிக் கேட்டை மூடச் சொல்றீங்களா ? இல்லே, என் வாயை மூடச் சொல்றீங்களா ?ன்னேன். யூ ஷட் அப்'ன்னு அவர் நீட்டி முழக்கினார். அவ்வளவுதான், ‘யூ கெட் அவுட்'னு நான் அவர் கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிட்டேன். அதுக்கு மேலே கேட்கணுமா ? அவர் அடிக்க, நான் அடிக்க, ஒரே அடி தடிச் சண்டை, கலாட்டா எல்லாம் வந்துட்டுது. அதோடு ‘அரெஸ்ட் ஹிம், அரெஸ்ட் ஹிம்’னு கூச்சல் வேறே!”

“யாரை யார் அரெஸ்ட் செய்யச் சொன்னார்கள் ?”

“என்னைத்தான் ஹெட் கான்ஸ்டபிள் அரெஸ்ட் செய்யச் சொன்னார். ஆனா அவரோடு வந்திருந்த போலீஸ்காரர்களோ அவருக்கு அடி விழுந்ததும் ஓடிட்டாங்க!”

“அப்புறம் ?”

“போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயா இருக்கு, வேறே போலீஸ்காரர்களைக் கூட்டிக்கிட்டு வந்து என்னை அரெஸ்ட் செய்ய?... அது இப்போதைக்கு முடியாது, பொழுது விடிஞ்சாத்தான் முடியுங்கிற நிலைமை.”

“ஹெட் கான்ஸ்டபிள் என்ன செய்தார் ?" “வேறே என்ன செய்யறது? இரு. இரு’ என் அப்பாகிட்டே சொல்லி உன்னை என்ன செய்யறேன்னு பார்’னு கையாலாகாத சின்ன பயலுங்க கறுவதாப்போல கறுவிக்கிட்டே போனார்!”

“பொன்னுசாமிப் பிள்ளை ஒண்னும் சொல்ல வில்லையா ?”

“சொல்லாம இருப்பாரா? என்ன ராதா, இப்படிச் சேஞ்சிட்டியே?'ன்னார். ‘சும்மா இருங்க, துணிந்தவனுக்குத் துக்கமில்லே, துணியாதவனுக்கு எப்பவும் துக்கம்தான்'னேன். ‘பொழுது விடிஞ்சதும் அவன் சப் இன்ஸ்பெக்டரோடு வந்து உன்னையும் என்னையும் அரெஸ்ட் செய்து இழுத்துக்கிட்டுப் போயிடுவானேன்னார். “அவங்க வர்றத்துக்கு முந்தி நாம் ராணிப்பேட்டைக்குப் போய் வரதராஜுலு செட்டியாரிடம் விஷயத்தைச் சொல்வோம்; அவர் எப்படியாவது தம்மைக் காப்பாத்தி விடுவார்'ன்னேன். அவர் ‘சரின்னார். அப்படியே கிளம்பிட்டோம்.”

“செட்டியார் என்ன சொன்னார் ?”

“ஒண்ணும் சொல்லல்லே... பெத்தவங்களிலேயே ரெண்டு ரகம் உண்டு. சிலருக்குச் சோணிப்பயல்களைப் பிடிக்கும்; சிலருக்குப் போக்கிரிப் பயல்களைப் பிடிக்கும். ரெண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் செட்டியார். அவர் விஷயத்தைக் கேட்டதும், ‘அவனை இவனை அடிக்க ஆரம்பிச்சிக் கடைசியிலே போலீஸ்காரனையே அடிக்க ஆரம்பிச்சிட்டியா ? பொறு தம்பி, பொறு! உன் துடுக்குத் தனத்தை அடக்கற விதத்திலே அடக்கி வைக்கிறேன்'னு சொல்லிக்கிட்டே போய், சப் இன்ஸ்பெக்டர் செளந்தர ராஜனைப் பார்த்தார். எனக்கும் அவரைத் தெரியும். எப்போ பார்த்தாலும் ரெண்டு பக்கெட் நிறையப் பழைய செருப்புகளைப் போட்டுத் தண்ணி ஊத்தி அவர் ஊற வைச்சிக்கிட்டிருப்பார்....”

“எதற்கு ?"

“குற்றவாளிகளைக் கட்டி வைச்சி அடிக்க!”

“சட்டப்படி ‘செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்னாலே குற்றம் என்பார்களே ?”

“அந்தச் சட்டம் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு இல்லையோ, என்னவோ!”

“அப்புறம் ?”

“அவர் கொஞ்சம் சங்கீதப்பைத்தியமுங்கூட. ஒஞ்ச நேரத்திலே சி.எஸ்.ஜெயராமனைக் கூப்பிட்டுப் பாடச் சொல்லிக் கேட்பார்....”

“அப்படியா ? அவர் உங்கள் ஆள் என்று சொல்லுங்கள்!”

“ஒரேயடியா அப்படிச் சொல்லிவிடவும் முடியாது. அன்னிக்கு என்னவோ ஹெட் கான்ஸ்டபிள் செய்தது சரியில்லேன்னு அவர் மனசிலே பட்டிருக்கு என்னையும். அவரையும் கண்டிச்சி விட்டுட்டார்!”

“செட்டியார் ?”

“விடல்லே: அன்னிக்கே எனக்கு ஒரு கால் கட்டைப் போட்டால்தான் ஆச்சுன்னு கடலூர் வஸ்தாது நாயுடுவை விட்டு எனக்குப் பொண் பார்க்கச் சொல்லிவிட்டார்.”

“சரிதான், வஸ்தாதுக்கு வஸ்தாதே பெண் பார்த்தார் போலிருக்கிறது!”