நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/30. தருமம் தலை காக்கும்
30. தருமம் தலை காக்கும்
“இந்த நாட்டிலே மனுஷனா வாழறதை விட நாயா வாழறது நல்லதுன்னு சிலர் நின்னைக்கிறாங்க; நாயா வாழறதைவிட மனுஷனா வாழறது நல்லதுன்னு சிலர் நினைக்கிறாங்க. நானோ நாயா வாழறதை விட மனுஷனா வாழறதுதான் நல்லது'ங்கிற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வர ஒரு காரணம் ரெண்டு காரணம் இல்லே, எத்தனையோ காரணங்கள் இருந்தன...”
“அந்தக் காரணங்களை... ?”
“இப்போ நான் சொல்றதும் ஒண்ணுதான். சொல்லாம விடறதும் ஒண்ணுதான்...”
“சரி, விடுங்கள்; அப்புறம்?”
“அதுக்கு மேலே என்ன நடந்தது, நான் ஏன் ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் உங்களுக்கும் தெரியும்; இந்த உலகத்துக்கும் தெரியும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மேலே மேலே கசப்பை வளர்த்துக்கிட்டிருக்க நான் விரும்பல்லே. அப்படிச் சொல்லச் சொல்லி என்னை வற்புறுத்தறவங்களுக்கெல்லாம் நான் சொல்ற பதில் இதுதான்-'தயவு செஞ்சி என் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொஞ்சம் விரிவா வெளியிட்டிருக்கிற பேப்பருங்களை எடுத்து வைச்சிக்கிட்டு இன்னொரு தடவை ஊன்றிப் படியுங்க என்கிறதே அது. அதுங்களிலே இருக்கிற என் வக்கீல்களின் வாதங்கள் உங்களுக்கு உண்மையை ஓரளவாவது எடுத்துக் காட்டும். ‘சட்டம் ஓர் இருட்டறை; வக்கீலின் வாதம் விளக்கு'ன்னு சொன்னார் பேரறிஞர் அண்ணா. என் வழக்கைப் பொறுத்த வரையிலே வக்கீலின் வாதம் விளக்காயிருந்ததோ என்னவோ, உண்மைக்கு அது ஓரளவு விளக்காவே இருந்தது. ஆனாலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே நான் மனம்விட்டுச் சொல்லி விடணும்னு நினைக்கிறேன். அதாவது, நெற்றிப் பொட்டில் குண்டடி பட்டு நினைவை இழந்தவன் நான்தான். அந்த நிலையிலே என்னையும் முதல்லே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்கிறாங்க. அங்கே நினைவு திரும்பி நான் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கீதா மட்டும் என் பக்கத்திலே இல்லே; அண்ணா, கலைஞர் கருணாநிதி எல்லாருமே இருந்தாங்க. அவங்களிலே யாரும் அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, என்னைக் கண்டிச்சி ஒரு வார்த்தை சொல்லல்லே; அதிலே எனக்கு ஒரு திருப்தி. ‘ அதைவிட திருப்தியளிக்கிற விஷயம் ஒண்னு ஜெனரல் ஆஸ்பத்திரியில்லே நடந்தது...”
“அது என்ன விஷயம் ?”
“அங்கேதான் என் நெற்றிப் பொட்டிலிருந்து தலைக்குள்ளே பாஞ்சியிருந்த குண்டை ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க. எடுத்தப்புறம் டாக்டர் சொன்னார், ‘நல்ல வேளை, மூளை வரையிலே போயிட்ட குண்டு அதைத் தொடாம’ நின்னுடிச்சி. தொட்டிருந்தா ஆளே அவுட்டாயிருப்பார். தருமம் தலை காக்கும்னு பெரியவங்க சொல்வாங்க. இவரைப் பொறுத்த வரையிலே அது உண்மையாப் போச்சு'ன்னு. அது போதும் எனக்கு.”
“நீங்களும் தருமம் கிருமம் செய்வதுண்டா, என்ன ?”
“ஏதோ, என்னாலே முடிஞ்ச வரையிலே செஞ்சிக்கிட்டுத் தான் இருக்கேன். ஆனா, உங்களைப் போலிருக்கும் பேப்பர்காரர்களையெல்லாம் கூட்டி வைச்சிக்கிட்டு நான் எதையும் செய்யறதில்லே. நான் செய்யற தருமம் எனக்கும், என்னாலே உதவப்படறவங்களுக்கும். மட்டும் தெரிஞ்சாப் போதும்னு நான் நினைக்கிறேன்.”
“உங்கள் சிறைச்சாலைச் சிந்தனைகளைப் பற்றி..." “இது வரையிலே சொல்லிக்கிட்டு வந்ததெல்லாம் என் சிறைச்சாலைச் சிந்தனைகள்தானே? இன்னும் என்ன இருக்கு, சொல்ல? ஒண்ணு வேணும்னா சொல்லலாம். ஜெயில்லே நான் ஒரு படம் பார்த்தேன்; கே.ஆர்.விஜயா எடுத்திருந்தது அது.”
“என்ன படம், ‘சபத'மா ?”
“ஆமாம். அந்தப் படத்தின் கதை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது. அதிலே ஒரு பெரிய மனுஷன் வர்றான். உள்ளே அவன் செய்யாத அக்கிரமமில்லே; வெளியிலே இருக்கிறவங்களுக்கோ அவன் சாக்ரடீசாகவும், காந்தியாகவும், இயேசுவாகவும் காட்சியளிக்கிறான். அந்த வேஷத்தை பகவதி ஏத்து ரொம்ப நல்லா செஞ்சிருந்தார். அந்த மாதிரி நாலு படங்க வந்தா நல்லவன் வாழ்வான், நாடும் வாழுங்கிறது என் கருத்து.”
“பொதுவாக சிறைவாழ்க்கை.”
“நல்லாத்தான் இருந்தது. அன்னியன் இந்த நாட்டை ஆண்டகாலத்திலே வேணுமானா அங்கே கொடுமை கிடுமை நடந்திருக்கலாம்; இப்போ அதெல்லாம் ஒண்ணும் இல்லே. அங்கே இருக்கிற அதிகாரிங்களும் நம்மவங்களாப் போயிட்டாங்க; கைதிங்களும் நம்மவங்களாப் போயிட்டாங்க. அதாலே நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு புரிஞ்சிக்கிட்டு, அதுக்கேற்றபடி நடந்துக்கிறாங்க.”
“உங்களை அங்கே நல்லவன் என்று நினைத்தார்களா, கெட்டவன் என்று நினைத்தார்களா ?”
“நல்லவன்னே நினைச்சாங்க!”
“அங்கே உங்கள் பொழுது போக்கு...”
“டென்னிஸ் ஆடினேன். மற்ற நேரங்களிலே இங்கிலீஷ் படிச்சேன்; அதிலிருந்து தமிழிலே வர்ற சமூகக் கதைகளிலே பாதிக்கு மேலே இங்கிலீஷிலிருந்து திருடறதுன்னு தெரிஞ்சது. பிரெஞ்சு படிச்சேன். அதைச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கிட்டே தமிழிலே திட்றதுக்கு இருக்கிற வார்த்தை களையெல்லாம் சொல்லிக் காட்டி, அந்த மாதிரி பிரெஞ்சிலே ஏதாவது இருந்தா, அதை முதல்லே சொல்லிக் கொடுங்கன்னேன். ‘அப்படி எதுவும் பிரெஞ்சிலே இல்லே'ன்னார். அப்போ அந்தப் பிரெஞ்சே எனக்கு வேணாம்'னு விட்டுட்டேன்.
“பிறமொழி படிப்பது பிறரைத் திட்டுவதற்குத்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, என்ன ?”
“அப்படி நான் நினைக்கல்லே; ‘திட்றதிலேகூடத் தமிழை மிஞ்ச இன்னொரு மொழி இல்லாதப்போ, அதைப் படிப்பானேன்?’னு நினைச்சித்தான் விட்டேன்;”
“சிறைக்குச் செல்லும் குற்றவாளிகளில் யாரும் அதை விட்டு வெளியேறும்போது திருந்தி வெளியேறுவதில்லை என்கிறார்களே, அது உண்மைதானா ?”
“உண்மைதான். எதிரி மேலே வைச்ச வஞ்சத்தை மறக்கத்தான் ஜெயில் உதவுது; திருந்த உதவல்லே.”
“உங்கள் அனுபவமும் அப்படித்தானா?”
“என் அனுபவம் வேறே: மற்றவங்க அனுபவம் வேறே. அது சொன்னாப் புரியாது; நீங்களும் ஒரு தடவை ஜெயிலுக்குப் போய் விட்டு வந்தால்தான் புரியும். ஆனா, கெட்டகாரியம் செய்துட்டுப் போய் வராதீங்க; ஏதாவது நல்ல காரியம் செய்துட்டுப் போயிட்டு வாங்க!”
ராதா சிரிக்கிறார்; “பக்தனுக்கு இந்த உலகமே சிறைச்சாலையாயிருப்பதுபோல என் வீடே எனக்குச் சிறைச்சாலையாயிருக்கிறது. அந்த அனுபவம் போதும் “ என்று நானும் பதிலுக்குச் சிரித்தபடி அவரிடமிருந்து விடை பெறுகிறேன்.
முற்றும்.