நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/5. காந்தியார் மேல் வந்த கோபம்

5. காந்தியார் மேல் வந்த கோபம்

ங்க கம்பெனி அப்போ மாயவரத்திலே முகாம் போட்டிருந்தது. காந்தியார் வந்தார்....

“அப்போது நீங்களும் காங்கிரஸ்காரரா யிருந்தீர்களா ?”

“இல்லே, ஆனா அதுக்காக எனக்குத் தேசபக்தி இல்லேன்னு நெனைச்சுடாதீங்க... வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து இந்தியா விடுதலையடையறகுக்கு அப்போ காந்தி காட்டிய வழியைவிட பகத் சிங் காட்டிய வழிதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதாலே அவர் கோஷ்டியிலே நான் இருந்தேன். அண்ணன் சாரங்கபாணி மட்டும் அன்னிக்கும் காந்தி பக்தர்தான்; இன்னிக்கும் பக்தர் தான். அவரும் நானும் காந்தியாரைப் பார்த்துட்டு வரலாம்னு கொட்டாங்கச்சிச் செட்டியார் வீட்டுக்குப் போனோம்...”

“யார் அந்தக் கொட்டாங்கச்சிச் செட்டியார் ?”

“அந்த நாள் மாயவரம் பெரிய மனுஷனுங்களிலே அவரும் ஒருத்தர். அவர் வீட்டிலேதான் காந்தி தங்க ஏற்பாடு சேஞ்சிருந்தாங்க. அங்கே நாங்க போறப்போ ஒரே கலாட்டா...!

“ஏன்?”

“தியாகி வள்ளியம்மை பிறந்த தில்லையாடியைப் பார்த்துட்டுப் போகக் காந்தியார் வந்திருந்ததுதான் அதுக்குக் காரணம்..." "எந்த வள்ளியம்மை பிறந்த தில்லையாடி... தென்னாப்பிரிக்காவிலே வெள்ளையரின் நிறத் திமிரை எதிர்த்துக் காந்திஜி சத்தியாக்கிரகம் செய்தபோது அவருக்குப் பக்க பலமாயிருந்து உயிர்த் தியாகம் செய்தார்களே, அந்த வள்ளியம்மை பிறந்த தில்லையா ?”

“ஆமாம், மாயவரத்துக்குப் பக்கத்திலேதானே அந்த ஊரு ? அதைப் பார்த்துட்டுப் போறதுக்காகக் காந்தி வந்திருந்தாரு...”

“அதற்கு ஏன் கலாட்டா செய்ய வேண்டும்?”

“தென்னாப்பிரிக்காவிலே நிறத் திமிர் இருந்தா, இங்கே ஜாதித் திமிர் இருக்குன்னு காட்டிக்க வேண்டாமா, அதுக்கு.”

“அது என்ன ஜாதித் திமிர் ?”

“வள்ளியம்மை ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவங்களாச்சே! அவங்கப் பிறந்த தில்லையாடியை பார்க்க வந்த காந்திக்குக் கொட்டாங்கச்சிச் செட்டியார் தங்க இடம் கொடுக்கலாமா ?... அதுக்காக மேல் ஜாதிக்காரங்க கலாட்டா சேஞ்சாங்க!”

“அப்புறம் ?”

“சாஸ்திரம்தான் யார் எப்படி வேணும்னாலும் வளைச்சிப் பேச இடம் கொடுக்குமே?.."தொட்டாதோஷம்"பான்; ‘குளிச்சிட்டா அது போக்சு'ம்பான் ....அதை வைச்சி, ‘அந்த அம்மா ஊருக்குப் போயிட்டு வந்து இங்கே தங்கினாத்தான் தோஷம், போறதுக்கு முந்தி தங்கினாத் தோஷமில்லே'ன்னு சொல்லி, அந்தக் கலாட்டாவைச் சமாளிச்சாங்க.”

“பாவம், கொட்டாங்கச்சிச் செட்டியார் படாத பாடு பட்டிருப்பார்.”

“அதைச் சொல்லணுமா ?....அன்னிக்குச் சாயந்திரம் மாயவரத்திலே ஒரு கூட்டம் நடந்தது...கூட்டம்னா அந்தக் காலத்திலே ஆயிரம் பேரு, பத்தாயிரம் பேருன்னு சேர மாட்டாங்க; அம்பது பேரு சேர்ந்தா அதுவே ஜாஸ்தி. காந்தியார் பேசினார். அவர் பேசியதை டி.எஸ்.எஸ்.ராஜனோ, யாரோ ஞாபகமில்லே, தமிழிலே மொழி பெயர்த்துச் சொன்னாங்க. அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பத்தி அவர் பேசினப்போ, அங்கே இருந்த அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டோம். கட்டியிருந்த துணியை அங்கேயே அவுத்துப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்திட்டோம். கூட்டம் முடிஞ்சது; அப்பத்தான் நான் வெறும் கோவணத்தோடு நிற்கிறது எனக்குத் தெரிஞ்சது.”

“பழனியாண்டவர் வேண்டுமானால் அப்படி நிற்கலாம்; நீங்கள் நிற்கலாமா ?”

“நான் சாரங்கபாணி அண்ணனைத் தேடினேன், அவர் எப்படி இருக்கார்னு பார்க்க...ஆளைக் காணோம். அந்தக் கோலத்துடனேயே நாடகக் கொட்டகைக்குப் போனேன். அங்கே புதிய கதர்த்துணி வாங்கிக் கட்டிக்கிட்டு அவர் ஜம்முன்னு உட்கார்ந்துக்கிட்டிருந்தாரு. அந்த வசதி அப்பவே அவருக்கு இருந்தது; எனக்கு இல்லே..என்ன செய்வேன்? அய்யர்கிட்டே வேறே துணி வாங்கிக் கட்டிக்கிறதும் அவ்வளவு சுலபமில்லே. அதை நெனைக்க நெனைக்க எனக்குக் காந்தி மேலேயும் கோபம் வந்தது; அண்ணன் சாரங்கபாணி மேலேயும் கோபம் வந்தது. அதைத் தீத்துக்க ஒரு வழி கண்டுபிடிச்சேன்...”

“அது என்ன வழி ?”

“சும்மாவாச்சும் ‘ஓ’ ன்னு அழுதுக்கிட்டே சாரங்கபாணி அண்ணன்கிட்டே போய், “அண்ணேண்ணே, காந்தி செத்துப் போயிட்டார், அண்ணே அவரை யாரோ அடிச்சிக் கொன்னுட்டாங்களாம், அண்ணே ; ன்னேன்,...அவ்வளவு தான்; எப்போடா, எங்கேடா? ன்னு பதறிக்கிட்டே அவர் நிஜமாவே கேவிக் கேவி அழ ஆரம்பிச்சிட்டாரு, ‘அழறியா, நல்லா அழு ‘ன்னு நான் உள்ளுற நெனைக்சிக்கிட்டே தில்லையாடியைப் பார்க்கப்போற வழியிலே அவரை யாரோ அடிச்சிப் போட்டுட்டாங்களாம். அண்ணே!ன்னேன். ‘அட, பாவிகளா!ன்னு அவர் தலையிலே கையை வைச்சிக்கிட்டுக் கீழே உட்கார்ந்துட்டாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்; கோவணத்தை மறந்து அவர் அழறதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன்.”

“அய்யர் இல்லையா ?”

“இல்லே, வெளியே போயிருந்த அவரு அப்பத்தான் வந்தாரு என்னடா சங்கதி?ன்னாரு அவர்கிட்டேயும் காந்தி செத்துட்டாராம். அண்ணன் அழிறாரு, நானும் அழறேன்ன்னேன். அவர் யார் சொன்னார்கள் அப்படி? னாரு. கடைத் தெருவிலே எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்களாம்னு நான் சமாளிச்சேன். போடா, போ ? நான் இப்போ கடைத் தெருவிலேயிருந்துதானே வரேன் ? அங்கே யாரும் அப்படிப் பேசிக்கல்லே, காந்திஜியும் எந்த ஆபத்தும் இல்லாமல் போய்த்தான் தில்லையாடியையும், வள்ளியம்மையின் சொந்தக்காரர்கள் சிலரையும் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கார்ன்னு சொல்லி, சாரங்கபாண்ணி அண்ணனைச் சமாதானம் சேஞ்சி வைச்சாரு; என்னையும் சமாதானம் சேஞ்சி வைச்சாரு. எனக்குக் கட்டிக்க வேறே துணியும் கொடுத்தாரு அண்ணன் சாரங்கபாணியின் காந்தி பக்தி அப்பவே அப்படி இப்போ கேட்கணுமா?”

“அவருடைய சேவைக்காக இங்கே காங்கிரஸ் ஆட்சி நடந்த காலத்திலேயே ஒரு எம்.எல்.சி. சீட்டாவது அவருக்குக் கொடுத்து அவரைக் கெளரவித்திருக்கலாம்; தவறி விட்டார்கள்”.

‘தப்பு அவங்க மேலே மட்டும் இல்லே, சாரங்கபாணி அண்ணன் மேலேயும் இருக்கு...”

“அது என்ன தப்பு ?”

“எடுத்ததுக்கெல்லாம் ‘நான், நான்’னு முந்திரிக் கொட்டை மாதிரி தலையை நீட்டாம இருந்தது அவர் தப்புதானே ?" "அடக்கமாயிருப்பது தப்பு என்றால் அவர் அப்படியிருந்ததும் தப்புத்தான்’

“ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை...”

“என்ன நம்பிக்கை ?”

“இப்போ நடக்கிற கலைஞர் ஆட்சியும் எல்லாருக்கும்! பொதுவான ஆட்சியாத்தானே இருக்கு ? நாமக்கல்லா கவனிக்கும் அவர் சாரங்கபாணி அண்ணனையும் கவனிப்பாருங்கிற நம்பிக்கைதான் அது.”

“கலைஞர் ஆட்சியிலே சாரங்கபாணி கெளரவிக்கபட்டா, அது கலைஞர் ஆட்சிக்கே ஒரு பெருமையாயிருககாதா?..ம்..அப்புறம் ?”

“மாயவரத்திலேயிருந்து தஞ்சாவூருக்குப் போனோம். அங்கே தான் அய்யர் கம்பெனி கொஞ்சம் கலகலக்க ஆரம்பிச்சது...”

“ஏன் ?”

“நவாப் ராஜமாணிக்கமும் அண்ணன் சாரங்கபாணியும் அய்யர் கம்பெனியிலேயிருந்து விலகித் தனிக் கம்பெனி ஆரம்பிச்சாங்க. அந்தக் கம்பெனிக்கு நானும் எம்.ஆர்.எஸ். மணியும் அய்யர்கிட்டே சொல்லிக்காமப் போயிட்டோம். புதுக் கம்பெனிக்குப் பாட ஆள் வேண்டாமா ? அதுக்காக சி.எஸ். ஜெயராமனைக் கூப்பிட்டோம். அவருக்கு வர இஷ்டந்தான்; ஆனா அய்யர் அவரை விடறதாயில்லே. ஜெயில்லே அடைச்சி வைக்கிற மாதிரி அவரைக் கம்பெனியிலேயே அடைச்சி வைச்சிருந்தாரு அங்கிருந்து ஜெயராமனை எப்படிக் கிளப்பறதுன்னு நான் யோசிச்சேன், யோசிச்சேன், அப்படி யோசிச்சேன். கடைசியிலே அஞ்சாம்படை ஆசாமி ஒருத்தனைப் பிடிக்சேன். அவன்கிட்டே சொல்லி ஒருநாள் ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம் சி.எஸ்.ஸை ‘ஜூலியட்’ மாதிரி மாடிக்கு வரச் சொன்னேன். நான் நூலேணியும் கையுமா ‘ரோமியோ’ மாதிரிப் போய் அவரை இறக்கிக் கொண்டு வந்துட்டேன். “

“அய்யர் உங்களைச் சும்மா விட்டாரா ?”

“விடுவாரா? எல்லார் மேலேயும் டேமேஜ் க்ளெய்ம் பண்ணி உடனே நோட்டீஸ் விட்டுட்டாரு அதைப் பார்த்ததும் நானும் மணியும் அலறியடிச்சிட்டுப் போய் அவர்கிட்டே சரண்டர் ஆயிட்டோம்...”

“மற்றவர்கள்.... ?”

“வசதியிருந்தது; அவரை எதிர்த்து நின்று அப்பவே காலை ஊனிக்கிட்டாங்க.”

“இத்தனை துடுக்குத்தனம் இருந்தும் அய்யர் உங்களை எப்படி விடாமல் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்?”

“சும்மாவா?... ஆக்டர், எலெக்ட்ரிஷன், மெக்கானிக், டிரைவர் இத்தனை வேலைகளுக்கும் சாப்பாடு போட்டு மாசம் அஞ்சி ரூபாதானே சம்பளம்? இந்தச் சம்பளத்துக்கு என்னை விட்டா சாந்த சொரூபியான மகாத்மாவா வேலைக்கு வருவாருன்னு அவர் நெனைச்சிருக்கலாம்.”

“ஆமாம், உங்களுக்கு ‘அகராதி’ என்று கூட ஒரு பெயர் உண்டாமே ?”

“அதை யார்சொன்னது உங்களுக்கு ?” “கேள்விப்பட்டேன்....”

“யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையும் சம்பந்தம் அண்ணனும் எனக்கு வாத்தியாரா யிருந்தாங்க. அவங்க சொல்லிக் கொடுக்கிறாப் போல நான் செய்ய மாட்டேன்; எனக்கு எது சரின்னு படுதோ அப்படித்தான் செய்வேன். அவங்களுக்குக் கோபம் வந்துடும்; அகராதியைத் தூக்கி என் கையிலே கொடுத்துட்டுப் போயிடுவாங்க...’

“ஏன், தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கவா ?" "என்னைப் பொறுத்த வரையிலே அதைத் தவிர வேறே எதுக்கு அது பிரயோசனம்?”

“அரிச்சுவடியையே பார்க்காத உங்களுக்கு அகராதின்னு பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறதே, அது போதாதா ?”

“நீங்க அதை வேறே பேப்பரிலே எழுதி வைக்காதீங்க; அப்புறம் என்னைப் பார்க்கிற பொடிப் பயலுங்கெல்லாம், இதோடா, அகராதி’ ம்பானுங்க!”

“எவனாவது அப்படிச் சொன்னால் அவன் கையிலே நீங்களும் ஒரு அகராதியைத் தூக்கிக் கொடுத்து விடுங்கள்."