நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/செயற்கருஞ் செயல்கள்
2. செயற்கரும் செயல்கள்
இனி, பேச வேண்டிய பேச்சு எல்லாம் அவர்கள் செய்த செயற்கரும் செயல்களே. இந்த நல்ல நாளில் அவர்கள் பிறந்த நாளை எண்ணிப் போற்றுவது நல்லது. செயற்கரும் செயல், பிறராலே செய்ய முடியாத அரிய பெரிய செயல்கள். அதில் ஐம்பெருங் கடமைகள் முதலிடம் பெற்றவை.
ஐம் பெரும் கடமைகள்
ஐம் பெருங்கடமைகள் என்பவை நாயகம் அவர்கள் செய்த செயல்களில் எல்லாம் மிகப் பெரும் செயற்கருஞ் செயல்கள். அவற்றில் முதலிலே உள்ளது கலிமா. "லா இலாஹ இல்லல்லாஹ முகமது ரசுலில்லாஹி" என்பது. "வணக்கத்துக்குரியவன் ஆண்டவன் ஒருவனே. அவனது திருத்தூதரே முகமது நபி" என்பது அதன் பொருள். இது ஒரு போர் வீரன், படையின் உள்ளே நுழையும் போது எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு சத்திய வாக்குப் போன்றது. சட்டசபைக்கு செல்கின்ற உறுப்பினர்கள் எல்லாம் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வது போன்றது. இந்த உறுதிப்பாட்டை ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஆகவே, இதை முதலாக வைத்தார்கள். அது எண்ணி, எண்ணி மகிழக் கூடியதொன்று. நம்பிக்கை, உறுதி, கட்டுப்பாடு ஆகிய அத்தனையையும் சேர்த்துப் பின்னப் பெற்றது இந்தக் கலிமா. வேறு ஒரு வகையாகச் சொல்ல வேண்டுமானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் என்ற நான்கையும், நான்கு தூண்களாக வைத்தால், இந்தப் புனித கலிமா இதனுடைய கோபுரமாக இருந்து ஒளி வீசக் கூடியது என்று கூறலாம். அதைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்று தொழுகை.
தொழுகையை எல்லாரும் செய்கிறார்கள். எல்லாச் சமயத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம். ஆனால், பிற சமயத்தாருடைய தொழுகைக்கும், இஸ்லாத்தினுடைய தொழுகைக்கும் வேறுபாடு உண்டு. நாயகம் அவர்கள் தொழுகையைப் புகுத்தியதற்கு உயர்ந்த கருத்தும் ஒன்று உண்டு. கிறித்துவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தொழுகிறார்கள். இந்துக்களில் பலர் கார்த்திகைக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம், ஏகாதசிக்கு ஒரு தரம் தொழுகிறார்கள். சிலர் ஆண்டுக்கு ஒரு முறை தொழுகிறார்கள். இஸ்லாத்தில் அப்படி இல்லை. நாள்தோறும் தொழ வேண்டும். அதுவும் ஒரு முறை அல்ல, ஐந்து முறை தொழ வேண்டும். அதிகாலை, பகல், மாலை, அந்தி, இரவு ஆகியவைகளில் ஐந்து முறை தொழவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு அவர்களால் விதிக்கப் பெற்றது. அதனுடைய கருத்து என்னவென்றால், அடிக்கடி இறைவனோடு தொடர்பு வைத்துக் கொள்கிறவன் தீயவற்றை எண்ண மாட்டான். அவன் உள்ளத்திலே அதற்கு இடம் இராது. மனம்தான் அனைத்துக்கும் இருப்பிடம். மனம் தூய்மையாகி விட்டால் எண்ணமும், செயலும் தானே தூய்மையாகி விடும். அடிக்கடி உள்ளத்தை இறைவனிடத்திலே வைத்துக் கொண்டிருந்தால் தீய எண்ணங்கள், தீய செயல்களுக்கு இடமே இராது என்று அவர்கள் கண்டார்கள். அதைச் சமூகத்திலே புகுத்தினார்கள். இதைச் சொல்லுவதற்கு அவர்களுடைய வாழ்க்கையிலேயே நடந்த ஒரு நல்ல நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
ஒரு யூதன் குடிகாரன். நாயகம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, 'எனக்கு இஸ்லாத்தில் இடமுண்டா?' என்று கேட்டான். ஹஜரத் அபுபக்கர் அவர் கள் பக்கத்திலே இருந்து கொண்டு 'இஸ்லாத்தில் குடிகாரனுக்கு இடம் இல்லை' என்று சொன்னார்கள். நாயகம், அவர்களைக் கை அமர்த்தி வெகு அமைதியாக 'உனக்கும் இஸ்லாத்தில் இடம் உண்டு' என்று சொன்னார்கள். 'அப்படியா! இனி நான் இஸ்லாத்தில் சேரலாமா?’ என்றான். 'கட்டாயம் சேரலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. இறைவனைத் தொழப் போகும் போது மட்டும் நீ குடிக்கக் கூடாது'. அதற்கவன் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டான், கலிமா சொல்லப் பெற்றது; இஸ்லாத்தில் சேர்ந்தான், அவன் தொழப் போகும் போது குடிக்க இயலாதவன் ஆனான்,
கொஞ்ச நாள் ஆனதும், காலையில் மட்டும் தொழுதால் போதாது, மாலையிலும் தொழ வேண்டும் என்றார்கள். இரண்டு நேரம் போனான். இரண்டு நேரம் குடிக்காமல் இருந்தான். அப்புறம் பகலிலும், அப்புறம் அந்தியிலும், அப்புறம் இரவிலும், ஐந்துமுறை தொழ வேண்டுமென்று அவனிடம் கூறப் பெற்றது. ஐந்து முறையும் தொழப் போக ஆரம்பித்தான். ஐந்து நேரமும் குடிக்க முடியாமற் போய் விட்டது. அப்புறம் ஒரு நாள், இறைவனைத் தொழப் போகும் போது மட்டும், குடிக்காமல் இருந்து பயனில்லை; தொழுது விட்டு வந்த பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் ஒப்புக் கொண்டான். கடைசியில் அவனுக்குக் குடிக்கவே நேரமில்லாமற் போய் விட்டது. தொழ வேண்டிய நேரம் ஐந்து என்று வைத்து, பிறகு, இறைவனைத் தொழப் போகும் போது குடிக்கக் கூடாது. பிறகு, வந்ததும் குடிக்கக் கூடாது என்று வைத்தால், பிறகு எந்த நேரம் குடிப்பான்? இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இறைவனோடு அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டவர்கள். தீய சொற்களைச் சொல்ல மாட்டார்கள்; என்பதை அவர்கள் அன்றே எண்ணி, வரையறுத்துக் காட்டினார்கள். குறைவில்லாத நிறை மனமே, இறைவனின் இருப்பிடம் என்பது அவர்களது வாக்கு.
நோன்பு
தொழுகையை அடுத்தது நோன்பு. எங்கள் பாட்டி ஒருத்தி நோன்பு இருப்பார்கள். நான்கு இட்லி, மூன்று தோசை, இரண்டு கப் உப்புமா, ஒரு கப் பால் குடித்து விட்டு நோன்பு இருப்பாள். சோறு மட்டும் உண்பதில்லை. அது ஒரு வகையான நோன்பு. இஸ்லாத்தின் நோன்புக்கும், மற்றவர்கள் நோன்புக்கும் பெரிய வேறுபாடு உண்டு. வரையறுக்கப்பட்ட சில காலத்திலாவது, குடல் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு ஓய்வு வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். எத்தனையோ ஆலைகள் ஓய்வு பெறாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன. தேய்ந்து விடுகின்றன. ஓய்வு கொடுக்கிறோம். கடிகாரங்கள் ஓடுகின்றன. அதில் உள்ள கருவிகள் தேய்கின்றன. நாம் என்றைக்காவது எண்ணிப் பார்த்தோமா? ஆண்டவன் அமைத்த நமது உடலுறுப்புகள் தேய்வில்லாமல், நூறாண்டுகள் ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பார்த்தோமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடிகாரத்திலுள்ள நுணுக்கமான கருவிகளை விட, நம் வயிற்றில் அதிக நுணுக்கமான கருவிகள் இருக்கின்றன. எந்திரங்கள் செய்கின்ற வேலையை விட, அதிக வேலைகளை இவை செய்கின்றன. கடிகாரங்கள் எல்லாம் சாவி கொடுத்து ஓடுகின்றன. நமது உறுப்புகள் எல்லாம் சாவி கொடுக்காமலேயே, ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆலைகள் அனைத்தும் மின்சாரத்திலே ஓட்டப் பெறுகின்றன. நமது உறுப்புகள் எல்லாம் அது இல்லாமலே ஓடுகின்றன. ஆக, இத்தகைய குடல்களுக்கும், உறுப்புகளுக்கும் வரையறுக்கப்பட்ட சில காலத்திலாவது ஓய்வு இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். நீண்ட நாள் உயிர் வாழ உடல் நலத்திற்குத் துணை செய்கின்ற ஒன்று இது.
மற்றொன்று, சமயத் தொடர்பானது. குடல் சுத்தமாகும் போது, உடல் சுத்தமாகிறது. உடல் சுத்தமாகும் போது, எண்ணம் சுத்தமாகிறது. எண்ணம் சுத்தமாகும் போது, ஆன்மா சுத்தமாகிறது. சுத்தமடைந்த ஆன்மாதான், ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமாகிறது என்பதைப் பின்னிப் படிப்படியாக அமைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நோன்பிலிருந்து இறையருள் பெறுவது வரை. இது அவர்கள் புகுத்தியது.
ஜக்காத்
நான்காவது ஜக்காத். நான் எத்தனையோ மொழி பெயர்ப்பாளர்களிடம் இந்த ஜக்காத் என்ற சொல்லுக்குப் பொருள் யாது எனக் கேட்டேன். சரியான பொருள் கிடைக்கவில்லை. வடமொழியில் சொன்னால், தர்மம் என்கிறார்கள். நான் தமிழில் மொழி பெயர்த்தேன் கொடை என்று. ஒன்றும் பொருந்தவில்லை. இந்த ஒரு அரேபியச் சொல்லுக்கு, எந்த மொழியிலும் சரியான சொல் இல்லை. சொல்லவும் முடியவில்லை. ஏதேனும் சொல்ல வேண்டும். ஏழை மக்களுக்குப் பணக்காரன் கொடுத்துத் தீரவேண்டிய ஒரு கட்டாய வரி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
தன் சொத்தில் 40ல் ஒரு பங்கு உளமகிழ்ந்து வழங்குகின்ற இது பரிசுத்தத் தன்மை வாய்ந்தது. அதாவது அதன் மூலம் தன் சொத்தைத் தூய்மைப் படுத்திக் கொள்வது. இப்படிப் பிறர்க்கு வழங்குவதன் மூலம் 40ல் ஒரு பங்கு வரி கொடுத்து விட்ட பிறகு, இதனால் மற்ற 39 பங்கு தூய்மையாகிறது என்பது பொருள். 4 ஆயிரம் வைத்திருப்பவன் 100 ரூபாய், 40 ஆயிரம் வைத்திருப்பவன் 1 ஆயிரம் கொடுக்க வேண்டும். இது கட்டாய வரி. அது மட்டும் கருத்தில்லை. இந்த ஜக்காத், பணக்காரன் இரும்புப் பெட்டியிலே வைத்திருக்கும் பச்சை நோட்டுகளும், பணமும் ஏழையின் குடிசைக்கும், தகரக் குவளைக்கும் வந்து சேர, ஒழுங்காக வெட்டப்பட்டுள்ள ஒரு கால்வாய் மாதிரியும் தெரிகிறது. உலகம் முழுதும் உள்ள மக்கள் இம்முறையைக் கையாண்டு வருவதானால், பொதுவுடைமை இயக்கமே தேவையில்லை என நான் கருதுகிறேன். நாயகம் அவர்கள் தம்முடைய உள்ளத்தில் இதை எண்ணியே புகுத்தி இருக்கிறார்கள்.
ஹஜ்
கடைகியாக 'ஹஜ்'. 'ஹஜ்'ஜுக்கு நான் போனதில்லை. போக விரும்பியும் முடியவில்லை. ஆனால், நான் சிங்கப்பூரில் இருந்தேன். அங்கே ஒரு சைனா நண்பர். 'ஹஜ்'ஜுக்குப் போய் வந்தவர். அவருக்குத் தமிழ் தெரியாது. எனக்கு சீனம் தெரியாது. இரண்டு பேரும் மலாய் மொழியில் சிறிது உளறிக் கொள்வோம். அவர் சொன்னதை நான் கொஞ்சம் அறிந்து கொண்டு, இங்கு வந்த பிறகு அதை விசாரித்தறிந்து பார்த்தால், மக்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அங்குச் சென்றாக வேண்டும் எனத் தெரிய வருகிறது. ஆண்டு தோறும் அங்கு இலட்சக் கணக்கான மக்கள் தொழுகைக்காகக் கூடுகிறார்கள்.
கஃபா பள்ளி
தொழுமிடம் மக்கா நகரிலுள்ள கஃபா பள்ளி. மிகச் சிறிய பள்ளி. அதை ஹஜரத் இப்ராகீம் அவர்கள் கட்டினார்கள் என்பது வரலாறு. ஆனால் உண்மையான வரலாறு, அவர்களாலும் கட்டப்படவில்லை என்பது. 'அவருக்கு முன்பும் அந்த வணக்க ஸ்தலம் இருந்தது. ஹஜரத் இப்ராகீம் அவர்கள் அதைப் பழுது பார்த்துச் செப்பனிட்டார்கள்’ என்று இத்தாலி தேசத்து வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதி இருக்கிறார். அப்பள்ளிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு. மனிதனுக்குத் தெய்வ உணர்ச்சி உண்டானதும், அவன் ஆண்டவனைத் தொழுவதற்கு முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அது. அது அவ்வளவு தொன்மையானதும் பரிசுத்தமானதுமான இடம். பிறகு அதைப் பல்வேறு அரசர்கள் பழுது பார்த்து வந்திருக்கின்றனர். ஐந்து கண்டங்களிலும் உள்ள மக்கள் அனைவரும் ஆண்டுதோறும் அங்கு வந்து ஒன்று கூடுகிறார்கள்.
நாம் நினைத்திருக்கிறோம், இஸ்லாமியர் எல்லாம் மேற்கு நோக்கித் தொழுகிறார்கள் என்று. அதுதான் இல்லை, இந்தியாவில் உள்ளவர்கள் எல்லாம் மேற்கு நோக்கித் தொழுகிறார்கள். துருக்கியில் இருக்கிறவர்களெல்லாம் தெற்கு நோக்கித் தொழுகிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் எல்லாம் வடக்கு நோக்கித் தொழுகிறார்கள். வட ஆப்பிரிக்காவில் இருக்கிறவர்கள் எல்லாம் கிழக்கு நோக்கித் தொழுகிறார்கள். இப்படி உலகம் முழுதும் உள்ள மக்கள் இம்மாதிரித் தொழுகிறார்கள் என்றால், உலகத்தின் ஐந்து கண்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் அந்த ஒரே புண்ணியத் தலத்தை நோக்கியே தொழுகிறார்கள் என்பது பொருள். நாம் இருக்கும் இடத்திற்கு அது மேற்கே இருப்பதால், நாம் மேற்கு நோக்கித் தொழுகிறோம்.
பத்து லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் ஆண்டு தோறும் அங்கு கூடுகிறார்கள். நாடு வேற்றுமையோ, மொழி வேற்றுமையோ, நிற வேற்றுமையோ அங்கு இல்லை. அனைவருக்கும் ஒரே நேரத்தில் உணவு, ஒரே மாதிரியான உடை. ஆண்களுக்குத் தையல் இல்லாத உடை. இடுப்பில் ஒன்று, மேலே ஒன்று. ஒரே மாதிரியான நிறம். ஒரே நேரத்தில் ஒதுச் செய்வது. ஒரே நேரத்தில் தொழுகை, ஒரே ஒலி, 'அல்லாஹும்ம லப்பைக்' [கை தட்டல்]. "ஆண்டவனே உனது முன்னிலையில் நிற்கிறோம்" என்ற ஒரே ஒலி. இக்கண் கொள்ளாக் காட்சியை உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் மக்கள் காண இயலாது. இதனால் நல்லறிஞர்கள் பலர், இதைச் 'சமத்துவம் விளைவிக்கும் ஒரு பெருஞ் சந்தை' என்று சொல்லியிருக்கிறார்கள்.
வசதி படைத்த மக்கள் எல்லோரும் ஏன் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமென்றால், அனைவரும் அங்கு சென்று பார்த்து, எல்லாரும் ஒன்று என்பதை அங்கு கண்ணாற் கண்டு, ஆண்டவனைத் தொழுது, அவரவர் நாட்டுக்குச் சென்ற பிறகு, அவர்கள் இக்கொள்கையை ஆங்காங்கு அழுத்தமாகக் கடைப்பிடித்துப் பரப்பத் துணை செய்யும் என்று எண்ணியே அமைத்து இருக்கிறார்கள். கடைகளிற் போய்ப் பல சரக்குகளையும், வயல்களிற் போய் தானியங்கனையும் கொள்வது போலச் சமத்துவ மனப் பான்மையையும் மக்கள் கொள்ள வேண்டுமானால், அங்கு சென்றுதான் கொள்ள வேண்டியிருக்கும்.
ஜம் ஜம் தீர்த்தம்
ஜம் ஜம் என்ற ஒரு தீர்த்தம் அங்கு உண்டு. அது ஒரு சிறிய கிணறு. மிகப் பெரிய, கடுமையான அந்தப் பாலைவனத்தில் இருக்கிறது, அங்கு வேறு நீர் ஊற்றுகள் கிடையா. இங்கு ஓடுவது மாதிரி ஆறோ, குளமோ, வாய்க்காலோ இல்லை. இந்த சிறிய கிணறு 10 இலட்சம் மக்களுக்கு, வற்றாத ஊற்றாக இருந்து நீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. அது ஒரு பெரும் வியப்பு. 1941ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளன் ஒருவன் அக்கிணற்றின் நீரைக் கொண்டு போய் ஆராய்ச்சி செய்து, அதில் தங்கச் சத்து இருக்கிறதென்று கூறியிருக்கிறான். இது ஆராய்ச்சியாளர்கள் சமயத்துறைக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கவேண்டிய அரிய செய்தி.
ஆகக் கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகிய ஐந்தையும் இஸ்லாமியர்கள் அனைவரும் கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். அது மக்களின் பெருங்கடமை. ஆகவே இதை ஐம்பெருங் கடமைகள் என வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர் என்றால், இவற்றைச் செய்தாக வேண்டும். இல்லையானால், அவர்கள் உண்மையான இஸ்லாமியர் ஆக மாட்டார். நோய் வாய்ப்பட்டால், வறுமை வாய்ப்பட்டால், சூழ்நிலை அமையாதிருந்தால், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. செல்வமும் இருந்து, உடல் நலமும் நன்றாக இருந்து, அவர்கள் அந்தக் கடமையிலிருந்து தவறுவார்களேயானால், அவர்களுக்கு விதி விலக்கு இல்லை. கட்டாயம் செய்து தீர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஒரு ஐயப்பாடு உண்டு என்பதை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். இந்துகள் இஸ்லாத்தை அழிக்கிறார்கள்; அல்லது அழிக்க முற்படுகிறார்கள். கிறித்துவர் இஸ்லாத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்கிறார்கள்; பேசுகிறார்கள். இதனால் இஸ்லாம் அழிந்துவிடுமோ என்று ஐயப்படுகின்றவர்கள் சிலரை நான் பார்த்து இருக்கிறேன். அத்தகைய சொற்கள் என் காதிலே விழுந்திருக்கின்றன. இஸ்லாமியப் பெருமக்கள் இந்த ஐம்பெருங் கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டு வருவார்களேயானால், உலகத்தின் எந்தச் சக்தியாலும் இஸ்லாத்தை அழிக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன் [கை தட்டல்]. அந்த அளவிற்குப் பிணைக்கப் பட்டிருக்கின்றன நாயகம் அவர்கள் விதித்த ஐம்பெருங் கடமைகள்.