நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/திருக் குர்-ஆன்
6. திருக்குர்-ஆன்
எம்பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் படிக்கவில்லை, அப்படிப் படிக்காத ஒருவர் வாயிலிருந்து நமது திருமறையாகிய திருக்குர்ஆன் தோன்றியுள்ளது. இது நடக்கக்கூடிய காரியமா? நீங்கள் இதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று என்னையே பலர் கேட்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குக் கூறிய விடை பைபிளில் உள்ள ஒரு கதைதான்.
சாலமோன் ஞானி என்று ஒரு பெரியவர் இருந்தார் என்பதை பைபிளைப் படித்த எவரும் நன்கறிவார்கள். அவர் வேறு யாரும் அல்லர். அவர் நமது 'ஹஜரத் சுலைமான்’ அவர்கள் தாம். திருக்குர்ரானையும் பைபிளையும் படிப்பவர்களுக்கு இரண்டிலும் காணப்படுகின்ற பெயர்கள் ஒரே பெயராகத் தோன்றும். திருக்குர்ரானில் யாக்கூப், தாவுத், இப்ரகீம், மூசா, சிக்கந்தர், சுலைமான் என்று வரும் பெயர்களெல்லாம் பைபிளில் ஜேகப், டேவிட், ஆப்ரகாம், மோசே, அலெக்சாந்தர், சாலமோன் என வரும்,
சாலமோன் மிகப் பெரிய ஞானி, அவருக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியது. "நல்லவன் வறுமை வாய்ப்பட்டுத் துன்பப்படுகிறானே ஏன்! கெட்டவன் செல்வம் படைத்து மகிழ்ச்சியோடு வாழ்கிறானே ஏன்? செல்வம் படைத்த பலருக்குக் குழந்தை இல்லையே ஏன்? அவர்கள் விரும்பியும் வேண்டியும் குழந்தை பிறக்காதது ஏன்? வறுமை வாய்ப்பட்ட ஏழை மக்களுக்கு அதிகப் பிள்ளைகள் பிறந்திருப்பதேன்? அவர்கள் விரும்பா விட்டாலும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றனவே! அது ஏன்? இது கடவுள் செயலா? சாத்தான் செயலா? கடவுள் செயல் என்றால் அது நியாயமாகுமா? சாத்தான் செயல் என்றால் கடவுளின சக்திக்கு மீறியும் சில செயல்கள் நடக்க முடியுமா?" என்பதே அவரது ஐயம்.
இதை அவர்கள் எண்ணி எண்ணிப் பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. பல நாள் சிந்தித்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. வீட்டிலிருந்தும், வீதியிலிருந்தும் நடந்தும், கிடந்தும் ஆலோசித்துப் பார்த்தார்கள். ஒன்றும் தோன்றவில்லை.
கடைசியாகக் கடற்கரைக்குச் சென்று, காலையிலிருந்து மாலை வரை கடல் அலை நீர் காலிற் படும்படிக் கரையோரமே நடந்து உலாவி யோசித்துப் பார்த்தார்கள். விடை கிடைக்கவில்லை.
சாலமோன் ஞானி தம் முயற்சியைக் கை விடவில்லை. எப்படியாகிலும் இதற்கு விடை கண்டே தீருவேன் என்று உறுதி பூண்டார். காலையில் எழுந்ததும், கடற்கரைக்குச் செல்வதும், அங்கு இது பற்றி ஆலோசிப்பதும், மாலையில் வீடு திரும்புவதுமாகிய இப்பணி பல நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் கடற்கரையில், இது பற்றி எண்ணி உலாவிக் கொண்டிருந்த பொழுது, ஒரு சிறுவன் தன் கையிற் சிறிய கொட்டாங்கச்சியை வைத்துக் கொண்டு கடல் நீரை முகந்து, மணலில் ஊற்றி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஞானி தெற்கேயிருந்து வடக்கே போகும் போதும், வடக்கேயிருந்து தெற்கே வரும் போதும், அச்சிறுவன் கிழக்கும் மேற்குமாக நடந்து, கடல் தண்ணீரை ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தான். ஞானி அதைப் பொருட்படுத்தாமல், தம் சிந்தனையிலேயே ஆழ்ந்து நடந்து கொண்டிருந்தார். ஒரு வித முடிவும் தோன்றவில்லை.
மாலைப் பொழுது மறையவே வீடு திரும்பலானார். சிறிது தூரம் நடந்ததும், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் நினைவு வந்தது. அங்கிருந்தே அவனைக் கூப்பிட்டார். சிறுவன் அதைச் சிறிதும் காதில் வாங்காமல் மேலும் விளையாடிக் கொண்டிருந்தான். சாலமோன் ஞானி அவனிடமே சென்று, "தம்பி பொழுது இருட்டுகிறதே. வீடு திரும்பவில்லையா?" எனக் கேட்டார். அதற்கு அவன் "ஹஜ்ரத், உங்கள் வேலை முடிந்து விட்டது போல் இருக்கிறது. நீங்கள் போகிறீர்கள். என் வேலை இன்னும் முடியவில்லை. அதை முடித்த பிறகுதான், நான் வீடு திரும்புவேன்" என உறுதியாகக் கூறினான். "தம்பீ! அது என்ன வேலை?" எனக் கேட்டார். அதற்கு அவன், "கடல் தண்ணீர் முழுவதையும் இந்தக் கொட்டாங்கச்சியால் இறைத்துக் கரையில் ஊற்றுகின்ற வேலை" என்றான். ஞானி வியப்புடன் சிரித்து, "தம்பி! நீ எவ்வளவு! கடல் தண்ணீர் எவ்வளவு! உன் கையில் உள்ள கொட்டாங்கச்சி எவ்வளவு! இதைக் கொண்டு அதை எப்படி இறைத்து, ஊற்ற முடியும்" எனக் கேட்டார். சிறுவன் சொன்னான், "ஹஜரத்! நீங்கள் எவ்வளவு! ஆண்டவன் எவ்வளவு!உங்கள் மூளை எவ்வளவு! இதைக் கொண்டு அவன் செயலை அறிய முடியுமானால், இந்தக் கொட்டாங்கச்சியைக் கொண்டு இக்கடல் தண்ணீரை இறைத்து விட முடியாதா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்; நானும் முயற்சிக்கிறேன்" என்று மறுபடியும் ஓடிக் கடல் தண்ணீரை முகக்கத் தொடங்கினான்.
சாலமோன் ஞானிக்கு விடை கிடைத்து விட்டது. கிடைத்த விடை என்ன? மனிதன் தன் மூளையைக் கொண்டு, ஆண்டவனுடைய செயல்களை அளக்க முயற்சிப்பது, கொட்டாங்கச்சியைக் கொண்டு கடல் தண்ணீரை இறைத்து விட முயற்சிப்பது போன்றது என்பதே. ஞானிக்கு ஐயம் மறைந்தது. அதே வினாடியில் சிறுவனும் மறைந்தான்.
படிக்காத ஒருவர் வாயிலிருந்து 'திருக்குரான்' எப்படித் தோன்றியிருக்க முடியுமென்று என்னைக் கேட்பவர்களுக்கு நான் கூறுகிற விடை சாலமோன் ஞானியினுடைய கதைதான்.