நம் நேரு/அத்தியாயம் 7

7

அத்தியாயம் 7.


1923 டிசம்பரில் காங்கிரஸ் காக்கிநாடாவில் கூடியது. மெளலான முகமதுஅலி தலைவரானார். ஜவஹர் லால் நேருதான் காங்கிரஸின் காரியதரிசி ஆகவேண்டும் என்று அவர் வற்புறுத்தினர். நேரு எவ்வளவோ மறுத்தும் பிரயோசனமில்லை. காரியதரிசிப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வது தவிர வேறு வழி இல்லாது போயிற்று. அவ் வருஷம் தான் அகில இந்திய ரீதியில் பணியாற்ற ஹிந்துஸ்தானி சேவாதளம் என்கிற தொண்டர் ஸ்தாபனம் நிறுவப்பட்டது. அம் முயற்சியில் நேரு அதிக அக்கறை செலுத்தினர்.

திடீரென்று நாட்டை ஸ்தம்பிக்க வைத்த கவலைச் செய்தி ஒன்று பிறந்தது. சிறையிலிருந்த காந்திஜீ கொடிய நோயுற்றுக் கஷ்டப்பட்டார் என்று தெரிந்தது. அவரைச் சிறையிலிருந்து ஆஸ்பத்திரிக்கு மாற்றினர்கள். ஆப்பரேஷன் நடைபெற்றது. எல்லோறும் கவலையோடும் பயத்துடனும் காத்திருந்தனர். ஆபத்து சுமுகமாக நீங்கிவிட்டது. காந்தியைத் தரிசிக்கும் ஆவலோடு வெள்ளம் போல் மக்கள் கூட்டம் பூனா நோக்கிச் சென்றனர். நேருவும் தந்தையோடு காந்திஜீயைக் காணச் சென்றார்.

ஆறு வருஷ சிறைத் தண்டனை விதிக்கப்பெற்றிருந்த காந்திஜீ இரண்டு வருஷங்களேத்தான் கடந்திருந்தார். எனினும், மீண்டும் அவரை ஜெயிலுக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் துணிய வில்லே. காந்தி உடல் நிலை தேறுவதற்காக பம்பாய் கடலோரத்திலுள்ள ஜுஹூவில் தங்கியிருத்தார். மோதிலாலும் குடும்பத்துடன் அங்கு சென்று சில வாரங்கள் வசித்தார். பல வருஷங்களுக்குப் பிறகு, மனதுக்கு இசைந்த வகையில், கடலில் நீந்திக் களிக்கவும். மணலில் ஓடி ஆடவும், குதிரை சவாரி செய்யவும் நேருவுக்கு நிறையச் சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

ஆனால் இத்தகைய ஒய்வு, கொண்டாட மட்டுமே நேருவும், மோதிலாலும் அங்கு குடியேற வில்லை. காந்திஜீயுடன் விரிவாகப் பேசி விளக்கம் பெற விரும்பினார்கள் தந்தையும் மகனும்.

காந்திஜீயின் பலத்தை சுயராஜ்யக் கட்சிக்குச் சம்பாதிக்க முயன்றார் மோதிலால். அவர் வெற்றி காணவில்லை.

நேருவும் ஏமாற்றம் தான் அடைந்தார். அவர் கொண்ட சந்தேகம் எதையும் தெளிவுபடுத்தி விடவில்லை காந்திஜீ. தமது கொள்கைகளிலும் நம்பிக்கைகளிலும் தவறுகள் உண்டு என அங்கீகரிக்கவும் அவர் தயாராக இல்லே. நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கவோ, காங்கிரஸின் லட்சியங்களுக்கு எல்லைகட்டிக்காட்டவோ காந்திஜீ முன்வரவுமில்லை. இதனால் எல்லாம் நேரு அதிருப்தியுடன் தான் திரும்ப நேருந்தது.

1928-ம் வருஷம் பிற் பகுதியில் நேரு முதன்முதலாக நோய்ப் படுக்கையில் விழுந்தார். நாபா சமஸ்தான சிறை வாசம் அளித்த பரிசு அது. அவருக்கு டைபாய்டு கண்டு விட்டது. நேரு தனது உடலின் வலிவையும். நோய் நொடி இன்றி வாழும் நிலையையும், மழை வெயில் பனி முதலியவைகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் எண்ணிப் பெருமை கொண்டிருந்தார். இளம் பிராயம் முதலே தவறாது தேகப் பயிற்சி செய்து வந்தது தான் வியக்கத் தகுந்த இந்த உடல் நிலையின் அஸ்திவாரம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே, நோயுற்று படுத்தபடுக்கையாகக் கிடந்தது நேருவுக்கு முற்றிலும் புதியதோர் அனுபவமாகவே இருந்தது.

அவருடைய இளமையும் உடலுறுதியும் நோய்க்கு விரைவிலேயே முடிவு கட்டி விட்டன என்றாலும் அசதியைப் போக்கி, ஆரோக்கியம் பெறுவதற்காக அவர் பல வாரங்கள் படுக்கை வாசியாக வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த நாட்களில் அவர் அரசியல் பரபரப்புகளிலிருந்து ஒதுங்கியிருந்து சகல பிரச்னைகளைப் பற்றியும் தெளிவாகச் சிந்திக்க முடிந்தது. "இந்த அனுபவம் மனோபாவத்தில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தின. இன்ன ரகத்தது என விவரிக்கவொண்ணா ஆத்ம அனுபவம் இது" என்று நேரு எழுதியிருக்கிறார்.

அரசியல் வானில் நம்பிக்கை ஊட்டும் ஒளிபரவ வில்லை. ஆனால் கவலை தரும் கார்மேகங்கள் கவிந்து வந்தன. மதத்தையும் அரசியலையும் ஒன்று படுத்தி, குட்டை குழப்பிக்கொண்டிருந்தார்கள். ஜாதி வேற்றுமை பல கிளர்ச்சிகளுக்கு வித்து ஆயிற்று. இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்து வந்தன. பிரித்து ஆளும் சூழ்ச்சிக் கலையில் கைதேர்ந்த பிரிட்டிஷார் மறைமுகமாக இவற்றை ஆதரித்துத் தூண்டிவிட்டனர்.

ஜவஹர்லால்நேரு சுவாரஸ்யமற்ற முறையில் பணியாற்றிக் காலம் கழித்தார். அலகாபாத் முனிசிபல் சேர்மனாக அவர் மூன்று வருஷம் நிர்வாகம் நடத்த வேண்டியிருந்தது. ஆனால், இரண்டாவது ஆண்டிலேயே பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஆசை அவருக்கு எழுந்தது. அதற்காக அவர் கடமையில் குறைகள் புக அனுமதித்தாரில்லை. அவரது தலைமையில் விளங்கிய முனிசிபல் நிர்வாகம் பிரிட்டிஷ் சர்க்காரின் பாராட்டுதலைப் பெற்றது. எனினும் பலனுள்ள ஆக்க வேலை எதிலும் ஈடுபட வழியில்லாமல் காலம் பாழாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஏக்கமே நிலைத்து நின்றது அவர் உள்ளத்தில்.

தனது ஆற்றலுக்கும் செயல் துடிப்புக்கும் முனிசிபல் நிர்வாகம் மிகவும் குறுகிய எல்லை என்பதை உணர்ந்து. நேரு சேர்மன் பதவியை ராஜிநாமாச் செய்ய முயன்றார், அவரிடம் அதிக அன்புகாட்டிய அங்கத்தினர்கள் அனைவரும் முதல் தடவை நேருவைத் தடுத்துத் தங்களிடையே நிறுத்திக் கொண்டார்கள். எனினும். அவரது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டு இறுதியில் அவர் ராஜிநாமா செய்தே தீர்த்தார்.

அது நடந்தது 1925-ல் அவ் வருஷம். நேருவின் மனைவி நோயுற்று பல மாதங்களாக லக்ஷ்மணபுரி ஆஸ்பத்திரியில் கிடந்தாள். அப்பொழுதும் நேரு காங்கிரஸின் பொதுக் காரியதரிசியாக இருந்ததால், அவர் அலகாபாத்துக்கும், கான்பூருக்கும், லக்ஷ்மணபுரிக்குமிடையே ஓடி அலைந்து சிரமப்பட்டார். கமலாவின் உடற்சிகிச்சைக்காக ஸ்விட்ஸர்லாந்து செல்ல வேண்டியது அவசியம் என்று டாக்டர்கள் சிபார்சு செய்தார்கள்.

அந்த அபிப்பிராயத்தை உற்சாகமாக வரவேற்றார் நேரு. தெளிவான பாதையோ புலனாகவில்லை. அவருடைய உள்ளம் ஒரே குழப்பமயமாக இருந்தது. இந்தியாவிலிருந்து விலகி வெகுதொலைவில் இருந்து பிரச்னைகளைக் கவனித்து ஆராய்ந்தால் அக இருள் நீங்கி ஒளி ரேகை தோன்றலாம் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது. அயல்நாடு செல்வதற்கு இப்போது நல்ல சாக்கு கிடைத்தது என்று மகிழ்ந்தார் நேரு.

ஆகையினால், நேரு 1926-மார்ச் மாதத்தில், தனது மனைவியுடனும் மகளோடும் வேனிஸ் நகருக்குக் கப்பலேறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_7&oldid=1377001" இலிருந்து மீள்விக்கப்பட்டது