நற்றிணை - தொகுதி 2/கடவுள் வாழ்த்து

(நற்றிணை-2/கடவுள் வாழ்த்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓம்

நற்றிணை தெளிவுரை

கடவுள் வாழ்த்து

பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்.

அனைத்துக்கும் ஆதியான பரம்பொருளின், எண்ணற்ற தோற்றங்களுள்ளே ஒன்றையேனும் உறுதியாக மனங்கொண்டு போற்றி, வாழ்வுக்கு வகைகாண முயல்வது சான்றோர் மேற்கொண்ட மரபாகும். அம்மரபினைப் பின்பற்றியே, இத்தொகை நூலிற்கான கடவுள் வாழ்த்தையும் செய்துள்ளனர் ஆசிரியர் பெருந்தேவனார் அவர்கள். இது, திருமாலைப் போற்றும் செய்யுள். காத்தற்கடவுளான அவனை நினைந்து போற்றுதல், இத்தொகைக்கு அவனே என்றும் காப்பாளனாவான் என்று நிறுத்துவதாகவும் அமையும்.

'மாநிலம் சேவடியாக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்பு மெய் யாக, திசை கையாக,
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக,
இயன்ற வெல்லாம் பயின்றுஅகத் தடக்கிய 5
வேத முதல்வன், என்ப—
தீதற விளங்கிய திகிரி யோனே!

உலகினிடத்தே உளதான தீயவை அனைத்தும் முற்றவும் விலகிப் போகுமாறு நன்மை செய்தலினாலே, 'இவ்வுலகினைக் காத்தற்கு உரியோன்' என்னும் புகழோடு விளக்கம் பெற்றவன் சக்கரப் படையினைத் தரித்தவன் ஆகிய திருமால்—

இந்தப் பெரிதான நிலப்பரப்பையே தனது இரு சிவந்த திருவடிகளாக உடையவன்; தூவுகின்ற அலைநீரைக் கொண்டதும் சங்கினம் ஒலித்தபடி இருப்பதுமான கடலையே தான் உடுத்தும் உடையாக உடையவன்; நீல வண்ணமான அகன்ற ஆகாயப் பரப்பே தன் திருமேனியாக உடையவன்; நான்கு திசைகளுமே தன் கைகளாகக் கொண்டவன்; பசுமையான கதிரோடு விளங்கும் சந்திரனோடு ஞாயிற்றுச்சுடரையும் தன் இரு கண்களாகக் கொண்டவன்; இவ்வுலகிடத்தே உள்ளனவெல்லாம் ஈன்றருளித் தன்னகத்தே அடக்கியவாறு காத்தும் வருபவன்; வேத முதல்வன் என்று போற்றப் படுகின்றவன்; அவனே இவ்வுலகத்திலே தீமைகள் அற்றுப்போகுமாறு விளக்கம்பெற்ற சக்கரப்படையினைக் கைக்கொண்டவனான திருமால். அவன் இந்நூலினையும் என்றைக்கும் காத்தருள்வானாக என்பதாம்,

[நற்றிணைச் செய்யுட்கள் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டு திகழ்வன. அவற்றுடன் சேராமல் ஏழடியே கொண்டு இலங்குவது இக்கடவுள் வாழ்த்துச் செய்யுள். திகிரியோன் — சுதரிசனம் என்னும் சக்கரப்படையினை உடையவன். அந்தப் படைக்கலம் உலகத்தின் தீது அறச்செயற்பட்டு விளங்கிய சிறப்புடையது. ஆகவே, அவன் துணையாக, எந்தத் தீதும் இன்றி இந்நூலும் என்றும் வையத்து நிலவி நிற்கும் என்பதாம். இல்வாழ்த்து திருமாலின் 'விஸ்வரூபம்' போற்றுகிறது. அனைத்தும் தானாக நிற்கும் தன்மை இது. வேத முதல்வன் — வேதங்களாலே முதல்வன் என்று தெளியப்பட்ட இறைவன். ஆகவே, ஞானமும் வலிமையும் அவனருளாலே வந்தடையும் என்று காட்டி, இந்த அறிவுச்செல்வத்துக்குக் காப்பு வழங்குகின்றார் ஆசிரியர் என்று கொள்க. 'மா' என்னும் மங்கலச்சொல்லால் செய்யுளைத் தொடங்குவது, அன்னையாகிய சக்தியையும் நினைப்பூட்டுகின்றது.]