நற்றிணை-2/201
நற்றிணை
இரண்டாம் தொகுதி
201. திருநல உருவின் பாவை!
- பாடியவர் : பரணர்.
- திணை : .....
- துறை : கழறிய பாங்கற்குத் தலைமகன் உரைத்தது.
[(துறை விளக்கம்): தலைமகன், ஒரு தலைவிபால் காதலுற்றான். 'அது பொருந்தாது' எனப் பாங்கன் அதனை மறுத்து உரைக்கின்றான். அப்பாங்கனுக்குத் தனது காதல் நிலையைத் தெளிவுபடுத்தி உரைப்பதுபோலத், தலைவனின் கூற்றாக அமைந்த செய்யுள் இது.]
மலையுறை குறவன் காதல் மடமகள்
பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள்
சொல்லெதிர் கொள்ளா இளையள் அனையள்
உள்ளல் கூடா தென்போய்-மற்றும்
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்
5
தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு
அவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்
கால்பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும்
உருமுடன் றெறியினும் ஊறுபல தோன்றினும்
பெருநிலம் கிளறினும் திருநல வுருவின்
மாயா இயற்கைப் பாவையின்
10
போதல் உள்ளாள்என் நெஞ்சத் தாளே!
தெளிவுரை : "மலைக்கண்ணே வாழ்கின்றவனான குறவனின் அன்புக்குரிய இளமகள் அவள். அவள் நின்னால் பெறுவதற்கு அரியவள்; நின்னால் நெருங்குவதற்கும் அரிதான காவலிடத்தே இருப்பவள்; நின் சொல்லைக் கேட்டு எதிரேற்றுக் கொள்ளுதற்கு ஏற்றவாறு முதிர்ச்சியடையாத சிற்றிளம் பருவத்தினள். அத்தன்மையளாகிய அவளை நீயும் காமுற்று அடைவதற்கு நினைத்தல் பொருந்தாது" என்கின்றவனாகிய பாங்கனே!
செவ்விய பழங்கள் பொருந்திய வேர்ப்பலா மரங்களையுடையது கொல்லிமலை. அதன்கண், தெய்வக்காவலையுடையதனாலே தீமையில்லாத, நெடிய கோட்டினின்றும் வீழுகின்ற அழகிய வெள்ளிய அருவியினது மேற்குப் பக்கத்ததான பாறையிடத்தே அமைந்திருப்பது, கொல்லிப் பாவை. காற்று மோதி இடித்தாலும், மிக்க மழைத்துளிகள் விரைய வீழ்ந்தாலும், இடிகள் சினந்து உருமித் தாக்கினாலும், இத்தகைய இயற்கையினாலான ஊறுகள் வேறு பலவும் தோன்றினாலும், அன்றி இந்தப் பெருநிலப் பகுதியே நிலநடுக்கத்தால் நடுங்குமாயினும், தான் கொண்டுள்ள, கண்டாரைக் கவர்கின்ற தன் உருவப் பேரழகினின்றும் என்றும் அழியாதிருக்கின்ற நிலைத்த தன்மையைக் கொண்டது அக்கொல்லிப் பாவை. அதனைப் போலவே, நீ யாது கூறினும், அன்றி யாது நேரினும், அவளும் என் நெஞ்சத்தே நீங்காதாளாகி நிலை பெற்றனள்; அதனைவிட்டு எக்காலத்தும் போவாள் அல்லள். இனி, யான்தான் யாது செய்வேனோ?
சொற்பொருள் : காதல் மகள்—அன்புக்குரிய மகள்; அருந்தவமிருந்து பெற்ற செல்வ மகள்; பேரன்பு காட்டிப் பேணி வளர்த்த மகளும் ஆம். மடமகள்—இளமகள்; மடப்பத்தை உடைய மகளும் ஆம்; மடமாவது நன்மை தீமை தெளியாப் பேதைமை. பெற லருங் குரையள்—பெறுதற்கு அரியவள். கடி—காவல், காப்பினள்—காவலுக்கு உட்பட்டவள். எதிர்கொள்ளல்—எதிரேற்று விடை கூறல், செவ்வேர்ப் பலா—சிவந்த வேர்ப்பலா; சற்றே சிவந்த சுளைகளைக் கொண்ட இது பலாவிற் சிறந்தது; பயம்—பழம். கோடு—மலைமுகடு. குடவரை—மேற்குப்பகுதி மலைச்சாரல். கால்—காற்று. உடன்று—சினந்து. பெருநிலம்—பெரிய நிலவுலகம். கிளரினும்—நடுக்கமுற்றாலும். 'பாவை' என்றது, கொல்லிப் பாவையை.விளக்கம் : குறவன் விருப்பத்தோடு மணஞ்செய்து தரினன்றி, அவளை வேறுவழியாக அடைதல் இயலாது என்பவன், 'காதல் மடமகள்' என்றனன். அவனை மீறி, அவளைப் பெறுதலும் இயல்வதன்று என்பவன் 'பெறலருங் குரையள்' என்றனன். அவள் வெளிப்போந்து நின்னைக் காண்பதும், அன்றி நீதான் சென்று அவளைக் காண்பதும் கைகூடா தென்பவன், 'அருங்கடிக் காப்பினள்' என்றனன். அரிதின் முயன்று அவளைச் சந்திப்பினும், நின் பேச்சைக் கேட்டு நினக்கு இசைவு தருவதற்குத் துணியும் தகைமையில்லா இளம் பருவத்தாள் என்பவன், 'சொல்லெதிர் கொள்ளா இளையள்' என்றனன். அத்தன்மையள் ஆதலின் அவளை நீ தான் உள்ளல் கூடாது என்றும் பாங்கன் வலியுறுத்தினன். இதனைக் கேட்டுத் தலைமகன் கலங்கினான் அல்லன். 'கால்பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், பெருநிலம் கிளறினும், தன் திருநல உருவின் மாயா இயற்கையுடைய கொல்லிப் பாவையை அறிவாயே! அதனைப்போலவே அவளும் என் உள்ளத்தாள்; இனி எதாலும் போதல் செய்யாள்' என்கின்றான். இதனால், பாங்கன், அவளைத் தலைவன் பாற் கூட்டுவிக்கவே இனித்துணை நிற்பானாதல் வேண்டும் என்பது தலைவன் முடிவாகும். கொல்லிப் பாவை அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடுவான், 'நெடுங்கோட்டு அவ்வெள் அருவிக் குடவரை யகத்து' என்றனன். இதன் சிறப்பும், கண்டாரைத்தன் பெருங்கவினால் தன்பால் ஈர்க்கும் வனப்பும், எவரும் அறிந்தது; அத்துணை வனப்பு மிக்க அழகியள் தலைவி என்பதும் இதனால் விளங்கும்.
தெய்வம் காத்தலால் தீதின்றியும், பலவின் பழம் பொருந்தியும் விளங்கும் கொல்லியைப் போலத் தெய்வத் துணையாலே தன் காதலும் தீதின்றி இனிது நிறைவெய்தும் என்றானும் ஆம். கொல்லியைச் சிறப்பாகக் குறித்தது தலைவன் அப்பகுதியைச் சார்ந்தவனாதலாலும் ஆம்.
கண்டார், தாமே அதன் அழகிலே பித்துற்று அடிமையாகும் பெருவனப்புக் கொண்ட கொல்லிப் பாவையைப் போலவே, அவளும் அத்துணை வனப்பினள் என்பதும் இதனால் விளங்கும். வரை—மலை; பெரும்பாலும் இரு நாடுகளின் எல்லையாக மலையே அமைதலால் 'வரை' என்றனர்.
'பாங்கன்' தலைவனின் துணையாக உடன் செல்லும் இளைஞன். தோழனின் நெருக்கம் பாங்கனுக்கு இல்லை.