203. கானல் இயைந்த கேண்மை!

பாடியவர் : உலோச்சனார்.
திணை: .....

துறை : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிதலைமகட்குச் சொல்லுவாளாய் வரைவு கடாயது.

[(து. வி.) தலைமக்களின் களவுறவை மணவுறவாக்க விரும்பினாள் தோழி; தலைவன் கேட்டு உணருமாறு, தலைவிக்குச் சொல்லுவாள்போல, அவள் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.]


முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த்
தடந்தாள் தாழை முள்ளுடை நெடுங்கோட்டு
அகமடற் பொதுளிய முகைமுதிர்பு அவிழ்ந்த
கோடுவார்ந் தன்ன தோடுபொதி வெண்பூ
எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாதுசோர்பு 5
சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலால் மறுக்கும்
மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை
ஒருநாள் கழியினும் உய்வரிது என்னாது
கதழ்பரி நெடுந்தேர் வரவாண் டழுங்கச்
செய்ததன் தப்பல் அன்றியும் 10
உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே!

தெளிவுரை : முழங்கும் கடலலைகளாலே கொழித்து இடப்பெற்ற, பெரிய மணல்மேட்டிலே நிற்கின்றது, பெரிய தாளையுடையதான தாழை. அத்தாழையினது, முள்ளுடைய நெடிய கிளையினிடத்தேயுள்ள அகமடற்கண்ணே, முகையானது, தான் முதிர்தலாலே கட்டவிழ்ந்தது. அதுதான் சங்கு நீண்டாற்போன்ற தோடுகளாலே மூடப்பெற்ற, வெண்பூவாகவு மானது. மோதுகின்ற அலையினது தாக்குதலாலே அப்பூத் தான் சிதைவுற்றுத் தாது உதிர்ந்தும் போயிற்று. அதனின்றும் எழும் நறிய மணத்தாலே, அதுதான் சிறிய குடியிருப்பையுடைய பாக்கத்துத் தெருக்களிலுள்ள புலால் நாற்றத்தைப் போக்கும். அத்தகைய தாழை மணம் கமழுகின்ற கானற்சோலையிலே ஏற்பட்டது நம்முடைய காதல் உறவு. இவ் உறவானது, ஒருநாள் தலைவனைக் காணாதே போயினும், அதன்பின் உய்தல் அரிது என்னும் தன்மையது. இதன் உண்மையைக் கருதாமல், விரைந்த செலவையுடைய குதிரைகள் பூட்டிய நம் காதலரது நெடிய தேரினது வரவைத், தாம் தூற்றிய அலருரைகளாலே, அவன் ஊரிலேயே அழுங்கச் செய்தனர் நம் ஊரவர். அத் தவற்றோடும் அமையாதாராய், இவ் ஆரவாரத்தையுடைய ஊரவர், அவரைப் பிரிந்ததனாலுண்டாகிய நம் மெலிவுகண்டு வருத்தங்கொண்டு இரங்குதலும் உடையராயினரே! இதுதான் எதனாலோ தோழீ?

சொற்பொருள் : கொழீஇய – கொழித்த தெள்ளித் தூற்றிய. மூரி எக்கர்–பெரிதுயர்ந்த மணல்மேடு. கொஞ்சங் கொஞ்சமாக மணல் சேரச்சேரத் தான் உயர்வதுபற்றி 'எக்கர்' என்றனர். தடந்தாள்–பெரியதாள்; தாள்–அடிமரப் பகுதி. அகமடல்–மடலகத்து உள்ளிடப் பகுதி. பொதுளிய–பூத்துத் தோன்றிய. முகை–மொட்டு. முதிர்பு–முதிர்ச்சி பெற்று. அவிழ்தல்– கட்டவிழ்தல். கோடு–சங்கு. வார்தல்–வளர்தல். தோடு–புறவிதழ். உதைத்தலின்–மோதித் தாக்குதலினால். சிறுகுடிப் பாக்கம்–சிறுகுடியாகிய பரதவர் பாக்கம். பாக்கம்–கடற்கரை சார்ந்த ஊர். மறுகு–தெரு. புலால்–புலால் நாற்றம்; மீனுணங்கப் போடலால் உண்டாவது. கானல்–கடற்கரைக் கானற்சோலை. கேண்மை–நட்புறவு. கழியினும்–வாராதே கழிந்தாலும். உய்வு–உயிர் பிழைத்தல். கதழ்வு–விரைவு. ஆண்டு–அவ்விடத்தே; அவர்தம் ஊரிடத்தே. தப்பல்–தவறு. உயவு–மேனி மெலிவு; இது தலைவனைப் பிரிதலால் வந்தது. அழுங்கல் ஊர்–அலருரைத்து

. ஆரவாரிக்கும் தன்மைகொண்ட ஊர்; அலர் உரைப்பார் பெரிதும் மகளிர் என்று கொள்க.

விளக்கம் : 'மணங்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை' எனக் கானற்சோலையிடத்தே நேர்ந்த தலைவன் தலைவியரின் முதற்சந்திப்பையும் பிறவற்றையும் கூறினாள், தலைவன், ஊழ்கூட்டிய அந்த உறவின் சிறப்பை நினைவுகொளற்கும், அதுபோது கூறிய உறுதிமொழிகளை நினைத்தற்கும். 'ஒரு நாள் கழியினும் உய்வரிது என்னாது' என்றது, அவன் பிரிவைப் பொறாத கழிபெருங் காதலள் தலைவி என்றற்கு. 'தேர்வரவு கண்டு அழுங்க' என்றது, அவன் வரையக் குறித்துச்சென்ற காலத்துக் கழிவினும் வராதேபோயினமை குறித்துப் புனைந்து சொல்லியதும், ஊரலர் ஏற்பட்டதை உணர்த்தியதும் ஆம். 'உயவுப் புணர்ந்தன்று' என்றது தலைவியின் மெலிவைக் குறிப்பிட்டது. தலைவியின் மெலிவு கண்ட முதுபெண்டிர் முதலியோர் வெறியாடல் முதலாயின மேற்கொள்ளலைக் குறித்துக் கூறியதும் ஆம். இதனால், இனிக் களவில் தலைவியை அடைதல் அரிது என்பதும், வரைந்து மணந்துகொள்ளலே தக்கதென்பதும் உணர்த்தினள். ஊர் மேல் பழியைச் சார்த்திக் கூறினாலும், தலைவியை விரைந்து மணந்து கோடலே தலைவன் இனிச் செயத்தக்கது என அவன் கடமையை உணர்த்தியதுமாம்.

உள்ளுறை உவமம் : தாழையின் வெண்பூத் திரைமோதுதலாலே பொங்கித், தாது சொரிந்து, சிறுகுடிப் பாக்கத்தே உளதாகிய புலால் நாற்றத்தைப் போக்கும். அது போக்குமாறு போலத், தலைவனும், களவை நீட்டித்தலால் உண்டாகும் அலரைப் போக்க முன்வந்து, தலைவியின் பெற்றோர்க்கு வேண்டும் வரைபொருளைத் தந்து, தலைவியை வரைந்துவந்து மணந்து கொள்வதன் மூலம், ஊரலரைப் போக்குதல் வேண்டும் என்பதாம். தலைவியின் மேனி மெலிவால் அவள் இனியும் பிரிவு நீட்டிப்பின் இறந்து படுவாள் ஆதலின், அதனைப் போக்குவதற்குக் கருதினையாயின் விரைய மணம்வேட்டு வருதலைச் செய்வாயாக என்றனள்.

பயன் : இதனைக் கேட்டலுவானாகிய தலைமகன், விரைந்து வந்து மணந்து கோடலிலே, தீவிரமாகத் தன் மனத்தைச் செலுத்துவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/203&oldid=1698363" இலிருந்து மீள்விக்கப்பட்டது