210. செல்வமும் செய்வினைப் பயனும் !

பாடியவர் : மிளைகிழான் நல்வேட்டனார்.
திணை : மருதம்.
துறை : தோழி, தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது.

[(து-வி.) பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன், மீன்டும் தன் வீட்டிற்கு வருகிறான். தலைவி புலந்துகொள்ள, அவள் புலவியைத் தணிவிக்க உதவுமாறு தலைவன் தோழியிடம் வேண்டுகின்றான். அவள், அவன் செயலைக் கண்டித்து உரைத்துப், பின் தலைவியைப் புலவிதீரச் செய்கின்றனள். அவள் உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]


அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் 5
செல்வம் அன்று, தன் செய்வினைப் பயனே!
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புண்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வம்என் பதுவே!

தெளிவுரை : தலைவனே! நெல் அறுத்து நீங்கப்பெற்றதான அழகிய இடமகன்ற வயலினிடத்தே, மீளவும் உழுத ஈரத்தையுடைய சேற்றிலே, விதைக்கும் பொருட்டாக வித்தோடும் போயின உழவர், வட்டியினிடத்தே, பற்பலவகையான மீன்களோடும் திரும்பிக் கொண்டிருக்கின்ற, புதுவருவாயினைக் கொண்ட ஊரனே! எதனையும் பெரிதாக நெடுநேரம் பேசுதலாகிய பேச்சுவன்மையும், தேர் யானை குதிரை முதலாயவற்றை விரைவாக ஏறிச் செலுத்துதலாகிய உடல்வலிமையும் 'செல்வம்' என்று கொள்ளப்படுவதன்று. அவை வாய்த்தல் முன் செய்த நல்வினைப் பயனாலேயே யாகும் என்று அறிவாயாக. இனிச்சான்றோர் 'செல்வம்' என்று சொல்வதுதான், தன்னை அடைக்கலமாகச் சேர்ந்தோரது துயரத்தை நினைத்து அச்சங்கொள்ளும் பண்பினைக் கொண்டாயாய், அவர்பால் இனிய தகையாளனாயிருந்து உதவும் பண்புச் செல்வமே 'செல்வம்' என்று சொல்லப்படுவதாகும். நீதான் அதனை இல்லாதானும் ஆயினமையின், நின்பால் எதனையும் கூறிப் பயனின்று காண்.

சொற்பொருள் : அரிகால்–பயிர் அறுத்துவிட்ட பின்னுள்ள தாளடி நிலம். மறுகால் உழுதல் – மீளத் தாளடிப் பயிர் செய்யக் கருதி உழுதல். செறு–சேறு. வட்டி–வட்டமான கடகப்பெட்டி. பற்பல மீன்– வயலில் கலித்துப் பெருகியிருந்த பல்வகையான மீன்கள். யாணர்–புதுவருவாய். நெடிய மொழிதல் – தன் பெருமிதம் புலப்படக் கூறுதலும் ஆம். ஆடிய – விரையச் செல்வன ; அவை மாவும் தேரும் களிரும் போல்வன. சான்றோர்–சான்றாண்மையாளராகிய மறமாண்பினர். புன்கண் – துயரம். மென்கண்–இனிதான செயல்கள் செய்யும் தன்மை.

உள்ளுறைபொருள் : தாளடியிலே விதைப்பதற்கு விதையோடுஞ் சென்ற பெட்டியானது, மீனொடும் திரும்பும் என்றனள். இது தலைவியோடு இல்லறம் நிகழ்த்தும் நின்பால், அதன் பயனைச் செறிவுடன் பெறுவதற்குரிய மனநிலையில்லாதே, பரத்தையர்பாற் பெறலாகும் இழிந்த இன்பத்தினை நாடும் புல்லிய ஒழுக்கம் உண்டாயிருக்கிறது எனக்கடிந்து கூறியதாம்.

விளக்கம் : தலைவியை நெற்பயனுக்கும், பரத்தையை மீன்பயனுக்கும் உவமித்தனள். குலமகளிர்போலக் குலமரபு பேணும் மகப்பெற்றுத் தருவதற்குப் பரத்தையர் உரிமையற்றார். ஆதலின், அவர் உறவு இழிந்ததாயிற்று என்று கொள்க. இவ்வாறு தோழியாற் கடிந்து கூறப்பெற்ற தலைவன், தன் செயலுக்கு நாணி நிற்க, அதுகண்டு இரங்கிய தோழி, அவனுக்கு உதவக் கருதித் தலைவியை இசைவிக்க முற்படுவாள் என்பதாம். புன்கண் – வருத்தம் ; மென்கண்–அருள். நெடிய மொழிதல்–ஆண்மையான பேச்சுப் பேசுதல் எனினும் ஆம். செய்யானது நெல்விளைத்துப் பயன் கொள்ளுதலுக்கு உரியது; அதனிடைய மீன் கலித்துப் பெருகுதல் இடைவரவே யாகும். இவ்வாறே தலைவனுக்கு உரியவள் மனைவி எனவும், இடைவரவேபோல வந்தவள் பரத்தை என்பதும் கொள்க.

உரிமை கடமையோடு இன்பமும் தருபவள் மனைவி என்பதும், இன்பமாகிய ஒன்றான் மட்டுமே தருபவள் பரத்தை என்பதும் கருதுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/210&oldid=1698370" இலிருந்து மீள்விக்கப்பட்டது