213. புனம் காவலும் நுமதோ?

பாடியவர் : கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்.
திணை : குறிஞ்சி.
துறை : மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.

[(து.வி.) இயற்கைப் புணர்ச்சி பெற்றதன்பின்னர், ஒருநாள், தலைமகளும் தோழியும் ஓரிடத்தே இருப்பதனைக் கண்டானாகிய தலைமகனின் உள்ளத்திலே வேட்கை பெருகுகின்றது. ஆயினும், தோழிக்குத் தம் உறவை வெளிப்படக்காட்டவும் துணியானாய், அவர்பால் வரும் புதியவன் ஒருவன் போல வந்து, அவரோடு உறவுடையான்போல் இவ்வாறு வினவுகின்றான். தன் கருத்தோடு அவர் கருத்தையும் ஒன்றுபடுத்து உணரக் கூறுதலின் 'மதி உடன்படுத்தல்' ஆயிற்று.]


அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்
கன்றுகால் யாத்த மன்றப் பலவின்
வேர்க்கொண்டு தூங்கும் கொடுஞ்சுளைப் பெரும்பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும் 5
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதுஎனச்


சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக்
கொய்புனம் காவலும் நுமதோ?—
கோடேந் தல்குல் நீள்தோ ளீரே! 10

தெளிவுரை : பக்கம் உயர்ந்த அல்குல் தடத்தையும், பருத்த தோள்களையும் உடையவரான பெண்களே! அருவியின் ஒலியானது கேட்டபடியே இருக்கின்ற பெரிய மலையிடத்தே சென்று சேர்ந்து, இளங்கன்றைக் காலிலிட்ட கயிற்றால் பிணித்துள்ள மன்றிடத்துள்ள பலாமரத்தினை இளங்கன்றையுடைய சிவந்த நிறப்பசுவும் சென்று அடையும். அவ்விடத்தே, அப்பலாவினது வேர்ப்புறத்தே பழுத்துக் கிடக்கும் கொழுவிய சுளைகளைக் கொண்ட பெரிய பலாப்பழத்தையும் அப்பசு தின்னும். தின்றபின், மூங்கில்கள் நெருங்கிய சிறுமலைப் பக்கத்தேயுள்ள குளிர்ந்த நீரையும் பருகும். இத்தகைய வளமுடைய பெருமலைகளே வேலியாகவுள்ள இம்மலைநாட்டிடத்தே அமைந்துள்ள நமது சிற்றூர் தான் யாதோ?' என யான் கேட்டேனாயினும், அதற்கு யாதொரு சொல்லும் விடையாகச் சொல்லாதே இருக்கின்றீர். ஆயினும், தொகுதி கொண்ட கார்மேகங்கள் கல்லென்னும் இடிமுழக்கோடும் பெயலைச் செய்தலினாலே விளைந்துள்ள, செழுமையான செந்நிறம் பொருந்திய கதிர்களைக் கொண்ட சிறுதினையின், கொய்தற்கான பருவத்தைக் கொண்ட இத்தினைப்புனத்தின் காவலும் உமது தானோ? இதையேனும் கூறுவீராக!

சொற்பொருள் : மன்றப் பலா–மன்றிடத்துள்ள பலா; அல்லது, தழைத்துப் படர்ந்து மன்று போல் விளங்கும் பலாவும் ஆம். குழவிச் சேதா–இளங்கன்றையுடைய செந்நிறப் பசு. அறல்–அறல்பட்ட நீர். கல்லென–ஒலி முழக்கோடுங் கூடியதாக. கருவி–தொகுதி. செங்கேழ்–செந்நிறம்.

விளக்கம் : கன்றின் பேரிலுள்ள பாசத்தாலே அதனை நாடிவந்த சேதாவுக்கு, பலாப்பழமும் பருகுதற்கு அறல் நீரும் வாய்த்ததுபோலே, வேட்டையாடலைக் கருதியே வந்தவனாகிய எனக்கும், தலைவியைக் காணலும் அவளோடும் இன்புறுகின்ற வாய்ப்பும் கிடைத்தது என்கின்றான் தலைவன். இது தம் உறவு ஊழானது கூட்டுவித்ததனாலே வாய்த்தது என்றதாம்; இதனால் தெய்வீக வுறவை வலியுறுத்தினான். தலைவியது நாட்டின் வளமையை கூறிப் புகழ்ந்ததும் ஆம்.

'கோடேந்து அல்குல்' என்றது, முன்னர்த் தான் தலைவியோடு கொண்ட களவுறவை நினைவுபடுத்தியது. 'நீள்தோளீர்' என்றது தோழிக்கும் தலைவிக்கும் இடையேயிருந்த வேற்றுமையற்ற அன்புச் செறிவைச் சுட்டியது. இதனாலே, தலைவியது கருத்துக்கு உதவுவதே தோழியின் செயலாக வேண்டும் என்றதாம்.

'கொய்புனம்' என்றது புனம் அழிந்தாற் கூட்டம் நிகழாது எனக் குறித்துப் பகற்குறி வேட்டது; புனம் அழிந்தபின் தலைவியும் மனையகம் புகுதல் நிகழுமாதலின் இரவுக்குறி வேட்பவன் சிறுகுடி யாதெனவும் வினவினான் எனக் கொள்க.

உறவுடையாளாகிய தலைவி உட்பொருளை உணர்ந்து களிக்க, அஃதறியாதாளாகிய தோழி அதனை அன்பினால் மட்டுமே வினவியதாக முதலிற் கொள்ளினும், தலைவன் தலைவியரின் மெய்ப்பாடுகளைக் கண்டதும் உண்மையினை உணர்வாள் என்று கொள்க.

உள்ளுறை பொருள் : 'கன்றையுடைய செந்நிற பசுவானது, பலாப்பழத்தைத் தின்று இறும்பின் அறல் நீரைப் பருகும்' என்றது, தலைவியை முன்பே இயற்கைப் புணர்ச்சியாலே பெற்றவனாகிய யானும், இனிப் பகற்குறியும் இரவுக்குறியும் பெற்றுக் கூடி மகிழ்வேன்' என்றதாம்.

மேற்கோள் : 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் நூற்பாவின் உரைக்கிடையிலே (தொல்.பொருள். 99), 'ஊரும் பேரும் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்' என்பதற்கு இச்செய்யுளைக் காட்டி, இதனை 'ஊர் வினாயது' என்பர் இளம் பூரணனார்; 'ஊரும் பிறவும் வினாயது' என்பர் நச்சினார்க்கினியர். இவ்வாறு பொருந்தக் கொண்டு பொருள் காணலும் இனிமை தருவதே.

'செங்கேழ் ஆடிய' என்பதற்குத் தலைசாய்ந்த கதிர்கள் மழையால் செந்நிறப் புதுநீர் பட்ட தரையிலே படிய எனவும் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/213&oldid=1698373" இலிருந்து மீள்விக்கப்பட்டது