215. தங்கினால் என்னவோ?

பாடியவர் : மதுரைச் சுள்ளம் போதனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) பகற்குறி வந்து மீள்வானை, 'அவள் ஆற்றுந்தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற்பாலீர்; எமரும் இன்னதொரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. (2) இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.

[(து.வி.) பகற்குறி இரவுக்குறி வருவானை மண முயற்சிகளிலே மனஞ்செலுத்துமாறு தோழி தூண்டுவதற்குச் சொன்னதாக இச்செய்யுளைக் கொள்க.]


குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப்
பகல்கெழு செல்வன் குடமலை மறையப்
புலம்புவந் திறுத்த புன்கண் மாலை
இலங்குவளை மகளிர் வியனகர் அயர,
மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் 5
நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக்
சுரைசேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்றுநீ இவணை யாகி எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய? செங்கால்
கொடுமுடி அவ்வலை பரியப் போகிய 10
கோட்சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே!

தெளிவுரை : சேர்ப்பனே! கீழைக் கடலினின்றும் எழுந்து வந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பியவனாகப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய செல்வனாகிய ஆதித்தனும் மேலைத்திசைக்கண் மலையிடத்தே போய் மறைவானாயினன். துன்பத்தை முற்படுத்தியதாக வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலையும் வந்தது. இலங்கியவளையணிந்த இல்லுறை மகளிர்கள் தத்தம் மாளிகையிலே இருந்தபடியே இம்மாலைப்போதினை விரும்பி வரவேற்று இன்புறுவர். மீன் கொழுப்பை உருகச் செய்து தொகுத்த ஊனாகிய நெய்யினை வார்த்து ஏற்றியுள்ள ஒள்ளிய விளக்குச் சுடர்களின் ஒளியினை, நீலநிறக் கடற்பரப்பிலே அசையும் அலைகள் மோதிமோதி அலைக்கின்றன, இவ்வண்ணமாகிய இப்பொழுதிலே, கடற்கரையைச் சார்ந்தபடியே சென்று பலரும் காத்திருந்த கல்லென்னும் ஒலியையுடைய தான் இப்பாக்கத்திலேயே, இன்று நீயும் இவ்விடத்தேயே இருந்தவனாகி எம்மோடும் தங்கியிருந்தால், அதனால் நினக்கேதும் குறை உண்டாகுமோ? சிவந்த கோல்களோடும் பிணித்த, வளைவாக இடப்பெற்ற முடிகளையுடைய அழகிய வலையானது கிழியும்படியாக, அதனை அறுத்துத் தப்பிச்சென்ற, கொல்லவல்ல சுறாமீனைக் கருதியபடி, மிகுந்த வலிமையுடனே சென்றுள்ளவரான எமரும், அதனைப் பிடித்துக் கொணராதே கரைநோக்கி வருவார் அல்லர்காண்!

சொற்பொருள் : இவர்ந்து – எழுந்து தோன்றி. குரூஉக்கதிர் – நிறம் அமைந்த கதிர்; செந்நிறக் கதிரும் ஆம். 'பகல் கெழு செல்வன்' என்பதற்குப் பதிலாகப் 'பகல் செய் செல்வன்' எனப் பாடபேதம் கொள்வர் சிலர். புலம்பு – தனிமைத் துயரம். புன்கண் – புன்கண்மை; வருத்தும் தன்மை. நகர் – மாளிகை. ஊன்நெய் – ஊனாகிய நெய். நீல் நிறப்பரப்பு – நீலநிறத்தையுடைய கடற்பரப்பு. 'ஒண்சுடர்' என்பது, கரையோரத்தே, கடலில் மிதக்குமாறு, பாக்கத்தை அடையாளம் காணற்பொருட்டாக ஏற்றிவிடப் பெற்றுள்ள திமில் விளக்குகள் அல்லது மிதவை விளக்குகள் எனினும் ஆம். அன்றிப் பாக்கத்தே ஏற்றியுள்ள விளக்கு நிழல்களை அலைகள் அசைக்கும் என்பதும் ஆம். 'தெய்ய' அசை. பரிய – கிழிய. முன்பு – மிகுந்த வலிமை.

விளக்கம் : மாலையும் வந்து அடுத்து இருளும் வரப்போகின்றது; வலையறுத்துப் போன சுறாமீனைப் பற்றிக் கொணரக் கருதி எம்மவரும் கடலிடைச் சென்றுள்ளனர். அவர் வெற்றி வருகையை நோக்கிப் பாக்கத்தவரும் கரை சேர்பு கல்லென்னும் ஆரவாரத்தோடு கூடியுள்ளனர். எனவே, நீதான் எவ்விதப் பயமுமின்றி எம்மோடு இன்றிரவு தங்கிப் போவாயாக. இவள் மாலையை நோக்கி வருந்தும் பிரிவுத்துயரைத் தணிப்பாயாக என்கிறாள் தோழி. இதனால், தலைவி இரவிற்படும் துயரை நினைந்து, தலைவன் அவளை வரைந்து கோடற்கே முயல்பவன் ஆவான் என்பதாம். 'ஒண்சுடர் தயங்கு திரை உதைப்ப' என்பதுபோல், நம் உண்மைக் காதலுறவையும் குறிப்பான் உணர்ந்து அலவற் பெண்டிர் பழிதூற்றலும் நிகழும் என்றதுமாம்.

இனி, இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதற்கு, 'மணஞ் செய்து கொண்டால் அன்றித் தலைவியின் இல்லத்தே வைகுதல் நினக்கு இயலாதது ஆதலினாலும், வேட்டம் வாய்ப்பின் எமர் எந்நேரமும் திரும்புதல் கூடுமாதலானும், அவர் வந்து நின்னைக் காணின் ஏதம் உண்டாதல் கூடுமாதலானும், மாலை புன்கண் உடையதாகலின் தலைவியும் ஆற்றியிருப்பாள் அல்லள் ஆகலானும், இவை எல்லாம் இல்லாதிருக்க, இவளை நீதான் மணந்து கொள்ளலே இனிச் செய்வதற்கு உரியது எனக் குறிப்பால் உணர்த்தினள் என்றும் கொள்க.

மெய்ப்பாடு – பெருமிதம். பயன் – வரைவு கடாதல், இவை இரு துறைகட்குமே கொள்ளுக. ஒன்றை உணர்த்தும் போதும் குறிப்பால் நயமாக உணர்த்தும் நுட்பத்தை அறிந்து இன்புறுக.

'இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை' (அகம் 90), "கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை' (அகம் 340) எனப்பிற சான்றோரும் உரைத்தலைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/215&oldid=1698375" இலிருந்து மீள்விக்கப்பட்டது